Published:Updated:

நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்து எழுத்தில் சாதித்த தி.ஜ.ரங்கநாதன்! கதை சொல்லிகளின் கதை-14

நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்து எழுத்தில் சாதித்த தி.ஜ.ரங்கநாதன்! கதை சொல்லிகளின் கதை-14

நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்து எழுத்தில் சாதித்த தி.ஜ.ரங்கநாதன்! கதை சொல்லிகளின் கதை-14

Published:Updated:

நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்து எழுத்தில் சாதித்த தி.ஜ.ரங்கநாதன்! கதை சொல்லிகளின் கதை-14

நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்து எழுத்தில் சாதித்த தி.ஜ.ரங்கநாதன்! கதை சொல்லிகளின் கதை-14

நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்து எழுத்தில் சாதித்த தி.ஜ.ரங்கநாதன்! கதை சொல்லிகளின் கதை-14

முந்தைய பாகங்கள்:

பாகம்-2- ஆ.மாதவய்யா

பாகம்-5- மௌனி

பாகம்-6 - கு.பா.ரா

பாகம் - 13 - எஸ்.வி.வி

`மூவி மார்ட் சொந்தக்காரர் காக்கய்யா செட்டியார் என் நண்பர். என்னுடைய நண்பர் என்றவுடனே ஏதோ பொரி, கடலை விற்கும் வியாபாரியாகத்தான் இருக்க வேண்டும் என யாரும் நினைக்கவேண்டியதில்லை. காக்கய்யா லட்சாதிபதி. மூவி மார்ட் பிரமாண்டமான கடை' என்று ஆரம்பிக்கிறது தி.ஜ.ர-வின் `கன்னிகையின் பிரார்த்தனை’ கதை.

ஒரு பத்திரிகையாளரும் (அவர்தான் கதை சொல்பவர்) காக்கய்யாவும் நெருங்கிய நண்பர்கள். அந்த ஊரில் மனப்பூர்வமாக நாகரிக வாழ்க்கை நடத்த முயலக்கூடிய எந்த மனிதனும் காக்கையா செட்டியாரின் கடைக்கு வந்துதான் தீர வேண்டும்.

`காருக்கு நல்ல டயர், நவீன பாதரட்சைகள் முதல் மனிதனுடைய நாகரிகத்தை எந்தவிதத்திலும் மலிவமடையாமல் காக்கக்கூடிய ரெஃப்ரிஜிரேட்டர் முதல் சேஃப்டி பின், சில்க்  ரிப்பன்கள் வரை சகல சாமான்களும் காக்கையா கடையில் எந்நேரத்திலும் விற்பனைக்குத் தயார்.

தவிர, காக்கையாவும் ஒரு வியாபார நிபுணர். அமெரிக்காவிலிருந்து வந்துவிட்டுப் போன ஒரு துரை, அவருக்குச் சொல்லிக்கொடுத்த ரகசியம், ஒரு பிச்சைக்காரனிடம் நாற்பது ரூபாய்க்கு சாமான் விற்கும் சாமர்த்தியம். (அது ஒரு ஆர்மோனியப்பெட்டி என்றும் அதை வாங்கியதன் மூலம் அந்தப் பிச்சைக்காரனின் வருமானம் பெருகியது என்றும் சொல்கிறார்.)

ஒருநாள் `கேமரா' எனச் சொல்லப்படும் `ஒற்றைக்கண்’ சாமான்கள் கண்சிமிட்டிக்கொண்டு இருந்தன. ``பம்பாயிலிருந்து பிளேனில்  வந்தது. இந்தப் படம், இந்த கேமராவால் என் எட்டு வயது பையன் எடுத்தது'' என்றெல்லாம் கூறுகிறார் காக்கையா. `வியாபாரம் என்றாலே புளுகுதான்' என்று அவரே கூறுவாராம்.   

`மிகவும் உபயோகமாக இருக்கும் வெள்ளைக்காரன் தேசத்திலெல்லாம் போட்டோ எடுக்கத் தெரியாதவன் பத்திரிகைத் தொழிலுக்கே லாயக்கில்லாதவன்' என்றெல்லாம் சொல்லி, தன் பத்திரிகைக்கார நண்பரிடமே ஒரு கேமராவை விற்றுவிடுகிறார். `கேமராவின் விலை இருபத்து நாலே மூணுவீச அரை வீசமாய் திகைந்தது. அதோடு போயிற்றா பிளேட், தட்டு, தங்க மருந்து, பிம்பம் திரட்டும் திரவகம் என்று, வேறு என்ன என்னவோ சாமான்களையும் சுமத்திவிட்டார்’. குழந்தை கோகிலத்துக்கு, காப்பு வாங்க வைத்திருந்த பணம் அம்பேல்.

தொடர்ச்சியாகப் பத்திரிகைகளில் வெளியாகும் புகைப்படப் போட்டிகளில் கலந்துகொண்டு, போட்ட பணத்தை எடுத்துவிட முடிவுசெய்துகொள்கிறார்.

இவரது போட்டோ பிடிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள, இவரின் குடும்பத்தினரைப் படம்பிடிக்கிறார். இருட்டு அறை ஒன்றைத் தயார்செய்துகொள்கிறார். கேமராப் புத்தகத்தின் படம் அலம்பும் அத்தியாயத்தை பல முறை படித்து செல்லுலாயிடு மருந்துத் தண்ணீரில் பிளேட்டை வைத்து, ஊஞ்சலாட்டுவதுபோல் அசைத்து... கடைசியில் படம் இரண்டும் ஒரே சூன்யம்.

தவறு இவருடையதல்ல. அந்தப் புத்தகத்தில் வீட்டுக்குள் எடுக்கலாகாது என்று எங்கும் காணோம். `வெளியில் வைத்து எடுக்க வேண்டும் என்ற வாக்கியம் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்துகிடந்தது. காக்கையாவின் அறிவுரையின் பேரில் ஒரு நல்ல போட்டோக்காரனை வைத்து பிளேட்டுகளை அலம்பித் தரவைக்கிறார்.

மல்லிகைப் புதர் அருகே வைத்து எடுத்த குழந்தை கோகிலத்தின் படத்தைக் கழுவிக் கொடுக்க போட்டோக்காரரிடம் கொடுக்கிறார்.  

``குழந்தையை நீங்கள் கரையான் புற்றருகில் நிறுத்தியிருக்கலாகாது சார். குழந்தை பயந்துகொண்டு ஒரே ஆட்டமாய் ஆடியிருக்கிறது'' என்றார் அந்தக் கைதேர்ந்த போட்டோக்காரர்.

அது தூர நிர்ணயத்தின் விஷயம் என்று புரிகிறது இவருக்கு. தீபாவளி வந்துவிடுகிறது. குழந்தைக்கு வாங்கவேண்டிய காப்புக்கான பணம்தான் கேமரா ஆகிவிட்டதே. வருவது வரட்டும் என்று இரண்டு ரூபாய்க்கு அருமையான கில்ட் காப்பு வாங்கி வைத்துவிடுகிறார். அந்தத் தீபாவளிக்குக் காரியங்கள் செய்வதற்கு, மனைவியின் பிடிவாதத்தின்பேரில் உதவிக்கு ஒரு பாட்டியை ஏற்பாடு செய்துகொள்கிறார்கள்.

``அந்தப் பாட்டியை ஒரு படம் எடுக்கலாமே!'' என்கிறாள் மனைவி.

இந்தக் குறும்புவார்த்தையைக் கேட்டு வருத்தப்படவேண்டியவன் நானா, அந்தப் பாட்டியா? நான்தானே! ஆனால், இதற்கு நேர்மாறாக பாட்டிக்குக் கோபமுண்டாகி, அவளைc சமாதானப்படுத்துவது பிரம்மப்பிரயத்தனமாகிவிட்டது. படமெடுத்தால் ஆயுசு குறைந்துபோகுமாம். நிச்சயமாகப் படமெடுக்கப்போவதில்லை என்ற உறுதியின் பிறகுதான், பாட்டி வேலைசெய்யச் சம்மதிக்கிறாள்.

களேபரத்தில், கேமராவை மூடிவைக்க மறந்துபோகிறது. `இரவு இருட்டுதானே அறையில்' என்று சும்மா இருந்துவிடுகிறார். காலையில் பாட்டியைக் காணவில்லை. கேமர வெறும் பிளேட்டில், பாட்டி அந்தக் காப்பை கையில் மறைத்துக் கிளப்பிக்கொண்டுபோவது அவளது கை மத்தாப்பு வெளிச்சத்தில் படமாகியிருந்தது. பேசிய சம்பளமும் இரண்டு ரூபாய்... காப்பும் இரண்டு ரூபாய். அதனால் நஷ்டமொன்றும் இல்லை.

ஒரு தமாஷுக்காக அந்தப் படத்தைப் போட்டிக்கு அனுப்பிவைக்க, அது முதல் பரிசாக நூறு ரூபாய் பெறுகிறது. மேலும் அந்தப் படத்தைக் குறித்து அந்த போட்டோ நிபுணர் எழுதியிருந்த மதிப்புரையின் சுருக்கமாவது... `இதற்கு முதல் பரிசு ரூபாய் நூறையும் அப்படியே கொடுத்துவிடுவது எனத் தீர்மானித்திருக்கிறோம். இந்த விஷயம் ஏழு ஜட்ஜுகளால் ஏகமனதாய் முடிவுசெய்யப்பட்டது. படத்தில் ஒளியும் நிழலும் அற்புதமானதோர் இசைவுடன் விழுந்திருக்கின்றன. ஒரு வாலிபப் பெண்ணின் எந்த நிலை மிக நேர்த்தியாக இருக்குமோ, அந்த நிலையில் எடுக்கப்பட்டிருக்கிறது. கன்னியின் ஹஸ்த மறைவு, அவள் காதலின் எல்லையில்லாத் தன்மை வாய்ந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மொத்தத்தில் இது நமக்கு சில முதல் தர வங்காள ஓவியங்களை ஞாபகமூட்டுகிறது. இதற்கு ஏற்ற தலைப்பு `கன்னியின் பிரார்த்தனை' என்பதேயாகும்.'

அந்தப் பரிசுத்தொகை இவருடையதா...  பாட்டியுடையதா? சர்ச்சைக்குப் பிறகு மனைவி சொல்லியபடி, அது கோகிலத்தின் காப்புப்பணம் என்று முடிவாகிறது.  

(தி.ஜ.ர-வின் `கன்னியின் பிரார்த்தனை' கதைச் சுருக்கம்)

கதையின் போக்கில் தன் கேமரா வியாபாரத்தை அறிவித்ததும் அவருடைய மனைவி வீணா, தன்னையும் மகள்களையும் படமெடுக்கச் சொல்கிறாள். வீணா கேமரா முன் நிற்க, சிங்காரிப்புக்கும் மாற்றுப்புடவைக்கும் தயாராகையில் அந்த நிலையிலேயே வேகமாக ஒரு படம் எடுத்துவிடுகிறார் காக்கையா.

`நானா ஏமாறுகிறவன்? அவள் திரும்புவதற்குள் ஒரு `ஸ்நாப்' (சரேல் படம்) எடுத்துவிட்டேன்' என்று தி.ஜ.ர எழுதுகிறார். `ஸ்நாப்’ என்ற ஆங்கிலச் சொல்லை `சரேல் படம்’ என, என்ன ஒரு கச்சிதமாகக் காட்சிரூபமாக மொழிபெயர்த்திருக்கிறார்! ஆம். அவர் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளரும்கூட. லூயி ஃபிஷரின் `காந்தியின் வாழ்க்கை’ என்ற நூலை இவர்தான் மொழிபெயர்த்தார். டால்ஸ்டாயின் `குழந்தைகள் அறிவு’, ஜிம் கார்பெட்டின் `குமாவும் புலிகளும்’ ராஜாஜியின் `அபேதவாதம்’, லூயி காரல்லின் `அலமுவின் அற்புத உலகம்’, லெனின் கதைகள் போன்றவை அவருடைய மொழிபெயர்ப்பில் சில.

சிறந்த சிறுகதைகள் பல  எழுதியிருந்தாலும், இவரது `பொழுதுபோக்கு’, `ஆசிய ஜோதி ஜவஹர்’, `இது என்ன உலகம்’, `புதுமைக்கவி பாரதியார்’ போன்ற  கட்டுரைத் தொகுதிகள் மிகப் பிரபலம். பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவுக்கு `ஆசிய ஜோதி ஜவஹர்’  கட்டுரைத் தொகுப்பை, தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து (பிரசுரத்துக்காக  அல்ல. தமிழ் தெரியாத நேரு படிப்பதற்காக) அனுப்பியிருக்கிறார் என்பது வியப்பூட்டும் செய்தி!

``தி.ஜ.ர என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன், 1901-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்து, 1974-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 74 ஆண்டுகள் வாழ்ந்தவர். நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் மூத்தவர். சிறுகதை, மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள் எனப் பல துறைகளிலும் தன் ஆளுமையின் பதிவுகளை விட்டுச்சென்றுள்ளவர். தான் செயலாற்றியது எந்தத் துறையானாலும் அந்தத் துறைக்கு வளம் ஊட்டிச் சிறப்பித்தவர். தேசியப் போராட்டத்திலும் பங்குகொண்டு சிறைக்குச் சென்றவர். எவ்வளவு சிறப்பான ஆளுமையானபோதிலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர்; அடக்கம் மிகுந்தவர்” என்று குறிப்பிடுகிறார் இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர். பட்டங்களோ, விருதுகளோ பணமுடிப்புகளோ அவரை வந்தடைந்ததில்லை; அதை அவர் எதிர்பார்த்ததுமில்லை. அந்தக் காலத்தில் அவரைச் சூழ்ந்த பலரையும்போல தம் இயல்பில் வாழ்ந்தவர். நாடு சுதந்திரம் பெற்றதும் தியாகிகளுக்கு ஐந்து ஏக்கர் நிலம் மாதாந்திர ஊதியம் என்றெல்லாம் தரப்பட்டபோதிலும், காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள் எல்லோரையும் நன்கு தெரிந்தபோதிலும் தம் இயல்பில் வாழ்ந்த வாழ்வுக்கு `தியாகம்' என்று பெயர் சூட்டி அங்கீகாரமும் பிரதிபலனும் கோரவில்லை.

அவர் 1974-ம் ஆண்டில் இறந்தபோது அவர் சொத்து எதுவும் விட்டுச்செல்லவில்லை. குடும்பம் வறிய நிலையில்தான் இருந்தது. அவரின் குமாரர்கள் தம் வழி சென்றுவிட்டனர். இது எங்கும் அநேகமாக நேர்வதுதான். அவரது இரண்டாவது மகள் பாப்பாதான் வீடுகளில் சமையல் வேலைசெய்து தன் தந்தையையும் தாயையும் காப்பாற்றி வந்திருக்கிறார். தி.ஜ.ர-வின் மறைவுக்குப் பிறகும் இதே நிலை. 2008-ம் ஆண்டில் தமிழக அரசு தி.ஜ.ர-வின் எழுத்துகளை நாட்டுடமையாக்கி, ஆறு லட்சம் ரூபாய் வழங்கியது. அதை பங்குபோட்டுக்கொண்டனர், திடீரெனத் தோன்றிய தி.ஜ.ர-வின் சட்டபூர்வமான வாரிசுகள். இதுவும் அநேகமாக எங்கும் நடப்பதுதான். அதில் தி.ஜ.ர-வையும் தாயையும் காப்பாற்றிவந்த பாப்பாவின் பங்கு மிகச் சிறியது. அதுவும் தான் இருந்த வறிய நிலையில் கடன் கொடுத்தவர்களுக்குப் போயிற்று. அந்தக் குடும்பத்துக்காக இலக்கிய நண்பர்கள் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபடும் நிலை இருந்தது.

தஞ்சை மாவட்டம் திங்களூரைச் சேர்ந்த ரங்கநாதன் படித்தது, நான்காவது வரைதான் என்பது குறிப்பிடத்தக்கது. கணிதத்திலும் அறிவியலிலும் ஏற்பட்ட ஆர்வத்தால் ஆங்கிலம் பயின்றவர். திண்ணைப்பள்ளி ஆசிரியர், வக்கீல் குமாஸ்தா எனப் பல பணிகள் செய்தவர்.

ஒரு கட்டுரையாளராகத் தொடங்கிய தி.ஜ.ர., கவிதைகள் கதைகளும் எழுத ஆரம்பித்தார். தன்னுடைய 23-வது வயதில் தஞ்சையிலிருந்து வெளிவந்த `சமரபோதினி’-யில் உதவி ஆசிரியராக அமர்ந்தார். பிறகு, `ஊழியன்' என்ற பத்திரிகையில் அமரர் வ.ரா-வுடன் இணைந்து பணியாற்றினார். திரு.வி.க. `நவசக்தி’ ஆரம்பித்தபோது அதில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். ``உன் வேலைக்கான கடிதத்தில் `க்' `த்' பிழைகள் இல்லை என்பதால்தான், உன்னை வேலைக்கு அழைத்தேன்” என்றாராம் திரு.வி.க.

அடுத்து வந்த இருபது ஆண்டுகாலம் இடைவெளியின்றி சுதந்திரச்சங்கு, ஜயபாரதி, தமிழ்நாடு, ஹனுமான், சக்தி, பாப்பா இந்துஸ்தான் ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்துள்ளார். பிறகு `நவமணி' இதழ் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் ஆசிரியராகவே சேர்ந்தார். சக்தி கோவிந்தன் அவர்கள் `சக்தி' இதழை ஆரம்பித்தபோது அதிலும் பங்காற்றியுள்ளார். 1940 முதல் 1946 வரை சக்தியின் ஆசிரியராக தி.ஜ.ர பணியாற்றினார்.

உலகப் புகழ்பெற்ற `ரீடர்ஸ் டைஜஸ்ட்' பாணியில் தமிழில் வந்த ஒரே இதழ் `மஞ்சரி’தான். இந்த இதழ் ஆரம்பித்ததிலிருந்து சுமார் 40 ஆண்டுகள் அதன் ஆசிரியராக தி.ஜ.ர இருந்தார். மஞ்சரி இதழின் பெருமைகளில் ஒன்று, அதில் வெளியான புத்தகச் சுருக்கங்கள். அவற்றைச் செய்தது தி.ஜ.ர. மூலநூலைப் படிக்கவில்லையே என்ற குறையே ஏற்படாத அளவுக்கு மூலநூலின் சுருக்கத்தை அதன் அழகியல் அம்சங்களும் மிளிரும்வண்ணம் மொழிபெயர்ப்பார். 

`கார்ல் மார்க்ஸின் `தாஸ் கேப்பிடல்' படித்து கிரகித்துக்கொண்டு சுருக்குவது என்பது பகவான் வாமன அவதாரமாகத் தோன்றுவதுபோல, `மூலதனம்' புத்தகச் சுருக்கம்  தி.ஜ.ர-வின் பெருமைக்கு உதாரணம்' என்று குறிப்பிடுகிறார் விட்டல்ராவ். (`தி.ஜ.ரா-வின் எழுத்தும் தேசிய உணர்வும்’ என்னும் நூலில்) சந்தனக்காவடி, காளி தரிசனம், நொண்டிக்கிளி, விசை வாத்து, மஞ்சள் துணி, சமத்து மைனா ஆகிய சிறுகதைத் தொகுதிகளில் அவரது கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் எவையும் இப்போது கிடைக்கவில்லை.

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சேகரத்திலிருந்த `சந்தனக்காவடி' தொகுப்பும் அல்லையன்ஸ் வெளியிட்டுள்ள `பொழுதுபோக்கு' என்னும் கட்டுரைத் தொகுப்பு மட்டுமே எனக்கு வாசிக்கக் கிடைத்தன. அல்லயன்ஸ் மீண்டும் அவருடைய கதைத் தொகுதிகளைக் கொண்டுவரப்போவதாக ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி  சொன்னார். `பொழுதுபோக்கு' கட்டுரைத் தொகுதி குறித்து க.நா.சு. தன்னுடைய `படித்திருக்கிறீர்களா?' என்கிற கட்டுரைத் தொகுப்பில் பாராட்டிக் கட்டுரை எழுதியுள்ளார்.

``மூன்று நாள்களாக ஏன் வரவில்லை?'' என்று என்னை வினவினார் வைத்தியநாதய்யர்.

`அதற்கு ஏதோ சமாதானம் சொன்னேன். சொன்ன பதில் இப்போது ஞாபகம் இல்லை. ஆனால், பின்வரும் விஷயங்கள் மட்டிலும் என்னவோ மிக நன்றாக ஞாபகத்தில் இருக்கின்றன' என்று தொடங்கும் `சந்தனக்காவடி' என்ற கதை, கடவுள், கடவுள் நம்பிக்கை, கடவுள் நிகழ்த்தும் அதிசயம் இவை பற்றிய விவாதத்தை முன்வைக்கும். அந்த ஊரில், ஆண்டுதோறும் சாமுண்டித்தேவன் காவடி எடுப்பது ரொம்பவே பிரசித்தம். அவன் கூழாங்கற்களைக் கட்டிக்கொண்டு காவடி எடுத்தால், அது கோயில் வாசலுக்குப் போகும்போது கற்கண்டாக மாறி இருக்கும். இதைக் கண்ணாரக் கண்டவர் வைத்தியநாதய்யர். ஆனால், அதை நம்ப மறுப்பவர் கதை சொல்லி. தவிர, உடலை வருத்திக் கடவுளை வணங்குபவர் தாமச குணம்கொண்டோர் என்பது அவரது வாதம். உடன் நிற்கும் கிட்டா அய்யருக்கோ சாமுண்டித்தேவன் மீது சந்தேகம். ஆனால், `இம்மாதிரி அதிசயங்கள் எல்லாம் தூரத்து ஊர்களில் உள்ள கோயில்களில்தான் நடக்க முடியும். உள்ளூரில் நடக்காது. ஆகவே, வைத்தியநாதய்யர் சொல்வதை நம்ப முடியாது' என்கிற கட்சி.

இந்த வருடம் சாமுண்டித்தேவன் `சந்தனக்காவடி' எடுக்கிறான். கவடியில் ஒரு செம்பு நிறைய சேறு அள்ளிக்கொண்டு போனால் கோயில் வாசலில் அது சந்தனமாகிவிடும் என்பது நம்பிக்கை. ஆகவே, விவாதித்த மூன்று பேரும் அதைக் கண்ணாரக் கண்டுவிடுவது என்று தீர்மானிக்கிறார்கள். சாமுண்டித்தேவன் கொண்டுபோகும் சேறு உண்மையிலேயே சந்தனமாகிவிடுகிறது. இவர் தோல்வியை ஒப்புக்கொள்கிறார். ஆனால், மறுநாள் குளத்தில் குளிக்கும்போது இவர் காலில் ஒரு செம்பு தட்டுப்படுகிறது. எடுத்தால் அது சேறு நிறைந்த செம்பு. சாமுண்டி எல்லோர் முன்னிலையில் கட்டிய சேற்றுச் செம்பு அது. ஸ்நானம் செய்ய குளத்தில் மூழ்கும்போது அதைக் கழற்றி வைத்துவிட்டு உள்ளே ஏற்கெனவே வைத்திருந்த சந்தனச் செம்பைக் கட்டிக்கொண்டுவிட்டான் என்ற குட்டு வெளிப்படுகிறது. இது நாத்திகம் பேசும் கதை அல்ல.

``கடவுளுக்குக் கூறப்படும் இலக்கணத்தின்படி, அவர் என் உள்ளத்தையும் இயற்கையையும் அறியாதவராக இருக்க முடியுமா? உள்ளத்தை, தன் சொந்த உள்ளத்தைக்கூட அளந்தறிய முடியாத மனிதனுக்குத்தான் அன்பைக்காட்டும் அறிகுறிகள் வேண்டும். எல்லாம் வல்லவரென்று கருதப்படும் இறைவனுக்கும் அப்படியா? எல்லாம்வல்ல கடவுளுக்கு நம்மாலாக வேண்டியது ஒன்றுமில்லை. கடவுளிடம் பக்தி எனக்கு உண்டா இல்லையா என்பதை வெளி உலகுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. வெளி உலகம் அதை என்னிடம் தெரிந்துகொள்ள உரிமைகொண்டதும் இல்லை. கடவுளிடம் பக்தியற்ற நாஸ்திகனாகவும் பொய்யனாகவும் நான் இருப்பேனானால், அதை வெளி உலகம் அறிந்துகொள்ளத்தான் முடியுமா?”

இந்தக் கடவுள் கொள்கையைச் சொல்லவருவதுதான் இந்தக் கதை. இதேபோன்ற கருத்தை `பைத்தியக்காரி' கதையில் வரும் பசுபதி கதாபாத்திரம் வழியாகவும் தி.ஜ.ர சொல்கிறார்.

`` `நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்துறீர்’ என்ற பாட்டைப் பாடி இதனாலெல்லாம் ஒன்றுமில்லை. மனத்தில் சுத்தம் வேண்டும். வாக்கில் சத்தியம் வேண்டும். தேகம் செய்யும் காரியங்களுக்கு ஆத்மா ஜவாப்தாரியல்ல. நாம் தாமரை இலை நீர்த்துளிபோல் இருக்க வேண்டும்.” பொதுவாக அன்றைக்கு நடுத்தரவர்க்கத்தின் மீது அழுத்தமான தாக்கம் செலுத்திய காந்தியத்தின் ஒரு பகுதியாகத்தான் இந்தத் தேகம்-ஆத்மாவைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சந்தனக்காவடி கதையின் போக்கில் சரஸா ஒரு பாடலைப் பாடுகிறாள். அது `லாலா கொலைச்சிந்து’. அந்த இடத்தில் இந்தச் சிந்துகள்குறித்த சரித்திரத் தகவலை கதையின் ஓட்டத்தோடு தி.ஜ.ர சொல்லிவிடுகிறார்...

``அது சிந்துகள் காலம். எதற்கெடுத்தாலும் சிந்துகள் கட்டி தெருவில் காலணா, அரையணா புத்தகங்களாக விற்க ஆரம்பித்துவிடுவார்கள். சந்தனத்தான் சிந்து’, `வீராணம் ஏரி உடைப்பு சிந்து’ `பாப்பாத்தியம்மாள் பூனைக்குட்டி பெற்ற சிந்து' `திருப்பதி வெங்கடாசலப் பெருமாள் சாட்சி சொன்ன சிந்து' இப்படிப் பல சிந்துகள் தாண்டவமாடிய காலம். இப்போதல்லவா  மூலை முடுக்கிலெல்லாம் தமிழ்ப் பத்திரிகைகள் இறைகின்றன. அந்தக் காலத்தில் இந்தச் சிந்து புத்தகங்கள்தாம் சமாசாரப் பத்திரிகைகளின் வேலையைச் செய்தன.” (மதுரை மீனாட்சியம்மன் கோயில் நுழைவுப் போராட்டத்தைக் கண்டித்து அக்கிரஹாரத்துப் பெண்மணி ஒருவர் எழுதி அன்று விற்பனைக்கு வந்த `சிந்து' புத்தகம் இவ்விடம் நினைவுக்குவருகிறது.)

இப்படி, கதைக்குள் சமகாலத்தைச் சொல்வது தி.ஜ.ர-வின் பாணி. அது பற்றி `சந்தனக்காவடி' தொகுப்பின் முன்னுரையில் அவரே குறிப்பிடுகிறார். ``நமது கதைகளில் நமது பழக்கவழக்கங்கள் நிறைந்திருக்க வேண்டும். நமது நடை உடை பாவனைகள் நிரவியிருக்க வேண்டும். தேசிய மணம் கமழ வேண்டும். இதைவிட்டு அந்நிய நாட்டுப் பழக்கவழக்கங்களைப் புகுத்தி எழுதுவது அசம்பாவிதமாகும். அதனால் பயனுமில்லை. இப்படிச் செய்வதைவிட அயல்நாட்டுச் சிறந்த கதைகளை மொழிபெயர்ப்பதே மேலாயிருக்கும்.”

சிறுகதையின் லட்சணம் குறித்த அவரது கருத்துகள் மனம்கொள்ளத்தக்கவை. பிரசாரம் என்ற வாதம் பற்றிய நிதானமான பார்வை அவருக்கு இருந்ததைக் காண முடிகிறது.

``கதை என்னடா கதை? ஒருமுறை திறந்த கண்களோடு உன் வீட்டுத் தெருவில் நடந்துவிட்டு வா. கதைக்கோ கட்டுரைக்கோ விஷயம் கிடைச்சாச்சு! ஊர்வலம், கறுப்புக்கொடி, சட்டத்தின் தடை, எதிர்ப்பு, லத்திசார்ஜ், துப்பாக்கிச் சூடு இவையெல்லாம் தெருவில் நடக்கும் சரித்திரமின்றி வேறென்ன?

கதைகளையெல்லாம் பொதுப்படையாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று, பிரத்தியட்ச வாழ்க்கைச் சித்திரம்; மற்றது அமானுஷ்ய கற்பனை. மேதைகள்தாம் சுவை குறைவு இல்லாத அமானுஷ்ய கற்பனைகளைப் படைக்க முடியும். என்னைப் போன்றோருக்கு பத்திரமான வழி, பிரத்தியட்ச வாழ்க்கைச் சித்திரங்களே. எங்களைச் சூழ்ந்த உலக அரங்கத்தை நாங்கள் போட்டோ எடுப்போம். எங்களுடைய வாழ்க்கை ஆதர்சங்களும் லட்சியங்களும் அந்த போட்டோவுக்கு மெருகு கொடுத்திருக்கும். எங்களுக்கும் பல கனவுகள் உண்டு. ஆனால், அவற்றில் ‘மண்’ வாசனை வீசும்; சுகந்தமான வாசனைதான். அஜந்தா ஓவியங்களையே நினைத்துக்கொண்டிருப்பவர்கள், போட்டோக்களில் கலைச் சுவையைக் காண முடியாது என்று நினைப்பது சகஜம். மீனுக்கு ஒரே சொர்க்கம்தான் உண்டு – தண்ணீர். அதில் வியப்பென்ன? போட்டோக்களிலும் ஒருவித கலைச் சுவையை அனுபவிக்க முடியும் என்று நம்பும் கோஷ்டியைச் சேர்ந்தவன் நான். எனவே, என் கதைகள் அத்தனையும் பெரும்பாலும் முழுவதுமோ அல்லது பெரும்பகுதியோ பிரத்தியட்ச நிகழ்ச்சிகள்.

கலைஞன் நமக்கு அழகைக் காட்டுவது மாத்திரம் அல்ல, அநேக சமயங்களில் அதைக் காண நம்மைச் சித்தப்படுத்தியும்விடுகிறான். குதிரையின் கண்களில் ஒரு மறைப்பைப் போட்டு ஓட்டுகிறார்கள் பாருங்கள். அதே மாதிரி கலைஞனும் நம் கண்களை நேர்வழியில் திருப்புகிறான். மறைக்க வேண்டியதை மறைத்து, விளக்க வேண்டியதை விளக்கி, திருத்த வேண்டியதைத் திருத்தி, மெருகு கொடுப்பது கலைஞனின் நுட்பம்.

கலையிலே பிரசாரம் இருக்கலாமா... கூடாதா? இதைப் பற்றி ஒரு பெரிய விவகாரம் இருந்தாலும் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம்.; இருந்தாலும் இல்லாவிட்டாலும், கலை கலையாகவே இருப்பது அவசியம்.  நாம் எழுதும் கதை, கதையாயிருக்க வேண்டும். அதாவது சுவாரஸ்யம் நிறைந்திருக்க வேண்டும். இப்படி எழுதப்படாததால்தான் அநேகக் கதைகளை ஜனங்கள் ரசிக்காமல் தள்ளுகிறார்கள். கேட்கக் கேட்க, படிக்கப் படிக்க ரசமாக இருந்ததா என்ற ஒரே பரீட்சைதான், நல்ல கதைக்கு முக்கியம். மற்ற லட்சணங்கள் எல்லாம் அதற்கு உதவுபவையே.

கதையின் ஒவ்வோர் அம்சமும், ஆரம்பம் நடு முடிவு. ஒவ்வொர் அமைப்பும், ஒவ்வொரு சொல்லும் கதையின் சுவாரஸ்யத்துக்கு, திட்டத்துக்கு உதவ வேண்டும். கதை முழுவதையும் படித்த பிறகு, `ப்பூ! இவ்வளவுதானா... இதை ஏன் படித்தோம்?’ என்ற உணர்ச்சி, படிப்பவருக்கு ஏற்படக் கூடாது. கதையின் முடிவு ஏமாற்றமாக இருந்தால், அந்த ஏமாற்றமும் ஓர் இன்பமாக இருக்க வேண்டும். இதுதான் முக்கியம்.

பிரத்தியட்சம் என அவர் குறிப்பிடும் யதார்த்தம்தான் அவர் கதைகளின் பலம். அவர் சென்னை வாழ்க்கையில் அன்றாடம் காணும் கைரிக்‌ஷா இழுக்கும் அவலம் அவரை மிகவும் பாதித்து, அது பற்றிக் கதைகளும் கட்டுரையும் எழுதியிருக்கிறார்.

அவரது `பொழுதுபோக்கு' கட்டுரைத் தொகுப்பில் `ரிக்‌ஷா வாகனம்’ என்கிற கட்டுரையில்...

`வண்டியை, மாடு இழுத்துப் பார்த்திருக்கிறேன்; குதிரை இழுத்தும் பார்த்திருக்கிறேன். மாடு, குதிரைக்குக்கூடக் கஷ்டமில்லாமல் இன்ஜின் இழுத்தும் பார்த்திருக்கிறேன். மனுஷனை உட்காரவைத்து மனுஷன் இழுக்கும் ஒரு வண்டியும் உண்டா? அப்படியும் ஒன்று உண்டு. `ரிக்‌ஷா' என்று அதன் பெயர் என்பதை ஒரு பத்திரிகையில் படம் வர்ணனைகளின் மூலம் முதல் தடவையாக அறிந்தபோது, என்னை அறியாமலே திடுக்கிட்டேன். அதன் தர்மத்தைப் பற்றியோ, வேறு அம்சங்களைப் பற்றியோ யோசித்து அப்படி நான் திடுக்கிடவில்லை. தன்னிச்சையாய், என்னை அறியாமல், அதிலே ஒரு வெறுப்பு ஏற்பட்டது. `ஒரு மனிதனுக்கு நடக்க முடியாத... மற்றொரு மனிதன் அவனை வைத்து இழுக்கிறானாம் - அந்த எண்ணமே என் மனத்தை வாட்டியது. இது ஏதோ ஓர் அநாகரிகக் குரூரம்போல் தோன்றியது' என்று குறிப்பிடும் தி.ஜ.ர., கட்டுரை எழுதியும் மனம் ஆற்றாமல் `ரிக்‌ஷாக்கார வேலன்' என்ற கதையையும் எழுதுகிறார்.

`கல்யாணப் பெண்' என்ற கதையில் பால்யவிவாகம் குறித்துத் தீவிரமாகப் பேசுகிறார்.

செல்லம் கூறுகிறாள்...

`பவானிக்கு பன்னிரண்டு வயசு நிறைந்துவிட்டது. இன்னும் கல்யாணம் செய்யாமல் வைத்திருக்கலாமா? பெரியவளாகிவிட்டால் என்ன செய்கிறது? ஊர் சிரிக்குமே... அப்புறம் சாதிக் கட்டுப்பாடு வந்துவிடாதா?”

நடேசய்யருக்கு ஆத்திரம் பொங்கியது. ``என்னடி சாதி? என்னை சாதியைவிட்டுத் தள்ளட்டும். இந்தச் சாதிக்கட்டு இல்லாவிட்டால், நான் கொத்தனார் வேலை, தச்சு வேலை செய்தாவது மானமாய் வாழ்வேனே!” 

பேனா பிடிக்கலாம், கரண்டி பிடிக்கலாம். மற்ற எந்த உடல் உழைப்பிலும் பிராமணர்கள் ஈடுபடக் கூடாது என்பது இன்றுவரை நடப்பில் உள்ள யதார்த்தமாக இருக்கையில், 40-களில் இப்படியான பாத்திரங்களை அவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தியம் முன்வைத்த சமூக சீர்திருத்தம், உயர் சாதிகளுக்கிடையில் நடக்க வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றிப் பேசியது. அதுவே தப்பெனப் பேசியவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த காலத்தில் தி.ஜ.ர போன்ற காந்தியவாதிகளின் குரல் மதிக்கத்தக்கது.

நான்காம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிப் படிப்புப் பெற்ற ஒரு மனிதர், தன் சொந்த உழைப்பாலும் ஆர்வத்தாலும் விடாமுயற்சியாலும் தமிழின் தரமான பத்திரிகையாக விளங்கிய `மஞ்சரி'யின் ஆசிரியர் என்கிற நிலை வரை அடைந்தது, அன்றைய நாள்களில் அபூர்வமாக நிகழக்கூடிய ஒன்று. மனிதாபிமானமும் தேசாபிமானமும் அடிச்சரடாக அவருடைய கதைகளில் ஓடுவதைக் காண முடிகிறது. அமானுஷ்யமான கற்பனைகளை நிராகரித்து, சக மனிதர்களின் துயரங்களையும் மேன்மைகளையும் கீழ்மைகளையும் விமர்சனப் பார்வையோடு (அதில் நமக்குக் கருத்து மாறுபட்டாலும்) பேச முற்படும் அவருடைய சிறுகதைகள் வாசிக்கப்பட வேண்டியவை. குழந்தைகளுக்காகவும் தொடர்ந்து கதை எழுதிய முன்னோடி என்கிற பெருமையும் அவருக்கு உண்டு.

-