
கடமை உணரும் நேரம்!

234 தொகுதிகள், பல்லாயிரக்கணக்கான தேர்தல் அலுவலர்கள், ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள்... தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் என்ற மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
‘100 சதவிகித வாக்குப்பதிவு’ என்பதை இலக்காகக்கொண்டு செயல்படும் தேர்தல் ஆணையம், அதற்கான பல்வேறு விழிப்புஉணர்வுப் பிரசாரங்களைச் செய்துவருகிறது. சுவரொட்டிகள் முதல் மின்னணு ஊடகங்கள் வரை விளம்பரம் செய்துவரும் ஆணையத்தின் முயற்சியை முழுமனதுடன் வரவேற்று ஒத்துழைப்பு அளிக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.
ஜனநாயகம் என்னும் உடலின் உயிர்நரம்பாக இருக்கும் தேர்தல், சுயேச்சையாகவும் சுதந்திரமாகவும் நடத்தப்பட வேண்டும். அரசியல் கட்சிகளின் அதிகாரத் தலையீடு தடுக்கப்பட வேண்டும்.
முறைகேடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். முதலமைச்சர் ஜெயலலிதாவின் விருத்தாசலம் தேர்தல் பிரசாரத்தில், வாட்டி எடுக்கும் வெயிலில் மக்களை மந்தைகள்போல அடைத்துவைத்ததும், அதில் இரண்டு உயிர்கள் பலியானதும் தேர்தல் ஆணவக் கொலைகள் அல்லவா? காவல் துறையினரை கட்சிக்காரர்களைப்போல நடத்துவது அதிகார அத்துமீறல் அல்லவா?
தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்படுவதை, தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்கிறது. அதனால்தான் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசெல்லப்படும் பணத்தைப் பறிமுதல் செய்கின்றனர். எனில், அந்தப் பணத்தை விநியோகம்செய்ய முயற்சித்த கட்சியின் மீது அல்லது வேட்பாளரின் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? ‘ஓட்டுக்களை விற்கக் கூடாது’ என மக்களிடம் சொல்லும் அதேநேரம், அந்த ஓட்டுக்களை வாங்குவதற்கு முயலும் வியாபாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதுதானே சரி? பண விநியோகத்தைத் தடுத்து நிறுத்தும் மிகக் கறாரான நடவடிக்கைதான், அந்த முயற்சியில் ஈடுபடும் மற்றவர்களைத் தடுத்து நிறுத்தும்.
பண விநியோகம் மட்டும் அல்ல... பொருட்கள் விநியோகம், அதிகாரத் துஷ்பிரயோகம், அச்சுறுத்தல் என அந்த விஷப்பல் எந்த வடிவத்தில் வெளிப்பட்டாலும் வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டும்.
இவற்றை தேர்தல் ஆணையம் மட்டும்தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. இது சமூக ஊடகங்களின் காலம். கண் முன்னால் நிகழும் அத்துமீறல் எதுவானாலும் அதை எதிர்த்து குரல்கொடுங்கள்; தட்டிக்கேளுங்கள். உங்கள் கையில் இருக்கும் கைபேசியே அதற்கு ஆயுதம்தான். அதைக் காட்சிப் பதிவாக்கி உலகத்தின் பார்வைக்குக் கொண்டுவாருங்கள். `எந்த ஒரு சாமானியனும் தட்டிக்கேட்பான்' என்ற அச்சம் ஆட்சியாளர்களின் மனதில் வர வேண்டும். தேர்தல் ஆணையம் இந்த நம்பிக்கையை உறுதிசெய்ய வேண்டும்.
இது ஒரு நல்வாய்ப்பு. மக்களாட்சியின் மகத்துவத்தை நிலைநிறுத்த, ஜனநாயகத்தை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றி அமைக்க இதுவே சரியான தருணம். இது நம் கடமை உணரும் நேரம்!