
ஓவியங்கள்: ஸ்யாம்
நீர் சேவை!

‘குடிநீரை வீணாக்காதீர்’ என்ற வாசகத்துடன் தெரு முழுவதும் நீர் தெளித்துப்போகிறது, மாநகராட்சி குடிநீர் வண்டி.
- ரவீந்திரன்
ஆயுள்

`புகைப்படம் எடுத்தால் ஆயுசு குறையும்’ என்ற சினிமா வசனத்தைக் குழப்பமாகப் பார்த்தான் செல்ஃபி எடுக்கும் சிறுவன்.
- அ.மணிமாறன்
முடிவு!

எதிர்க்கட்சியை உடைக்க ஏற்பாடு செய்துவிட்டு வீட்டுக்கு வந்த தலைவரிடம் மகன் சொன்னான்... ``அப்பா, நாங்க தனிக்குடித்தனம் போறோம்!''
- பூங்கதிர்
பேச்சுலர்... சாமி!

`இந்த வருஷமாவது திருமணம் நடக்க வேண்டும்’ என, பிள்ளையாரிடம் வேண்டிக்கொண்டிருந்தான் முருகன்.
- அபிசேக் மியாவ்
இருக்கு... ஆனா இல்லை!

நாய் வாங்காமல், `நாய்கள் ஜாக்கிரதை’ போர்டை கேட்டில் மாட்டினார் கஞ்சன் கணேசன்.
- அபிசேக் மியாவ்
கஜானா காவலர்

`மாசக் கடைசி... பயங்கர பணக் கஷ்டம்’ - புலம்பிக்கொண்டிருந்தார் ஏ.டி.எம் காவலாளி!
- ரியாஸ் அஹமத்
அவரவர் நியாயம்

“என்னங்க இது... அவ பேச்சைக் கேட்டுக்கிட்டுப் போயிட்டானே...” - அழுது புலம்பியவளிடம் சொன்னார், “அப்படித்தானே நான் உன்கூட வந்தேன்!”
- கி.ரவிக்குமார்
தானே... தன்னைத்தானே...

`ஒரு நாளைக்கு எத்தனை முறைதான் கண்ணாடி பார்ப்பே?' என அம்மா தன்னைக் கேட்டது மனதுக்குள் மின்னலடித்துப்போனது சுகந்திக்கு, `ஒரு நாளைக்கு எத்தனை முறைதான் செல்ஃபி எடுத்துப்பே?’ என்று மகளிடம் கேட்டபோது.
- அஜித்
கைங்கர்யம்

கோயில் திருவிழாவில் சாமி ஊர்வலம் வந்தபோது, எல்லோரும் மறக்காமல் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர்.
- அபிசேக் மியாவ்
ஆள் வேட்டை

டச் விட்டுப்போன தோழிகளை எல்லாம் தேடித் தேடி பிடித்தாள் ரோகிணி... தன் எம்.எல்.எம் பிசினஸுக்கு ஆள் சேர்க்க!
- பெ.பாண்டியன்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ` 500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!