Published:Updated:

மைல்ஸ் டு கோ - 10

வெற்றிமாறன்
பிரீமியம் ஸ்டோரி
News
வெற்றிமாறன்

படம்: ஸ்டில் ராபர்ட்

நான் என் ரிசப்ஷனுக்குப் போகாமல் ஏ.எம்.ரத்னம் சாருக்காகக் காத்திருந்தது அவருக்குத் தெரியாது. ஆர்த்தியும் என்னுடன்தான் வருவேன் என ட்ரெய்னில் போகாமல், வீட்டுக்குச் சென்று விட்டார்.

ரத்னம் சார் அப்போது ஒரு தெலுங்குப் பட வேலையில் இருந்தார். இரவு 10:30 மணிக்கு வந்ததும் அவரிடம் விஷயத்தைச் சொன்னேன். “நீங்க போய் ரிசப்ஷனை நல்லபடியா முடிச்சிட்டு வாங்க. நிச்சயம் நம்ம கம்பெனில உங்க படத்தைப் பண்ணுவோம். நம்ம ஆபீஸ்லயே டிஸ்கஷனுக்கு உட்காரலாம்’’ என்றவர், 25 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தார். அந்தக் காலக்கட்டத்தில் சூர்யா மூவிஸில் புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது அரிது. எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது எனக்கும் மணிக்கும் சந்தோஷமாக இருந்தது.   நானும் மணியும் வீட்டுக்குச் சென்று ஆர்த்தியை அழைத்துக்கொண்டு காரில் நாகர்கோவிலுக்குச் சென்றோம்.

ரிசப்ஷன் நல்லபடியாக முடிந்தது. நாகர்கோவிலில் சில நாட்கள் தங்கியிருந்தோம். அப்போது அருகில் இருந்த மார்த்தாண்டம் ஊரில் செல்லன் என்பவர் நாய்களை வளர்த்து, விற்றுக்கொண்டிருந்தார். எனக்கு பிராணிகள் எல்லாமே பிடிக்கும் என்றாலும், நாய்கள் மீது தனிப் பிரியம் உண்டு. ராட்வெய்லர் ரக நாய்கள் வளர்க்க வேண்டும் என ஆர்த்தியிடம் அடிக்கடி சொல்வேன். அவர் விளம்பரம் பார்த்துவிட்டு செல்லனுக்கு கால்செய்து பேசியிருந்தார். இருவரும் நாயைப் பார்க்க மார்த்தாண்டம் சென்றோம்.

கன்றுக்குட்டியைவிடப் பெரியதாக ஒரு நாயும், அதன் சில பிள்ளைகளும் இருந்தன. எனக்கு பெண் நாய்தான் வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். ஆண் ராட்வெயிலர் மூர்க்கமானவை. அதனால் முதல்முறை நாய் வளர்ப்பவர்கள் பெண் நாயை வளர்ப்பது உசிதமானது. இருந்தது ஒரே ஒரு பெண்குட்டிதான். அது எங்களைப் பார்த்ததும் ஓடி வர, யோசிக்காமல் எடுத்துக்கொண்டோம். டி.டி.ஆரிடம் சண்டை போட்டு, ஒரு கூடையில் வைத்து ட்ரெய்னிலேயே சென்னைக்கு அழைத்துவந்தோம். சென்னைக்கு நானும் ஆர்த்தியும் அம்மாவும் அழகியும் வந்து சேர்ந்தோம். (அழகி - ராட்வெயிலருக்கு நாங்கள் வைத்த பெயர். `அப்பா எங்கே?' எனக் கேட்டால் அழகி ஓடிவந்து என் மடியில் உட்கார்ந்துக்கொள்ளும்) அதுவரை என் அக்காவுடன் இருந்த அம்மா, பின்னர் எங்களு டனேயே வசித்துவந்தார். விருகம்பாக்கம் ராமலிங்கம் நகரில் வீடு வாடகைக்குப் பிடித்து செட்டிலானோம். பின்னர், ரத்னம் சார் அலுவலகத்தில் மணி மற்றும் விக்ரம் சுகுமாரனுடன் கதை டிஸ்கஷனைத் தொடங்கினேன்.

மைல்ஸ் டு கோ - 10

நான் படம் இயக்குவேனா என்ற சந்தேகம் எப்போதும் அம்மாவுக்கு இருந்தது இல்லை. நான் சினிமாவுக்குப் போறேன் என்றதுமே `நீ நல்லா படம் எடுப்ப... தேசிய விருது வாங்குறதை முதல் வரிசையில் உட்கார்ந்து பாக்கணும்’ என்றார். `ஆடுகளம்’ படத்துக்காக நான் தேசிய விருது வாங்கியபோது அது எனக்கான விருதாகத் தோன்றவில்லை; என் அம்மாவின் நம்பிக்கைக்கான விருதாகத் தோன்றியது. அப்போது அவருக்கு என் திருமணம் பற்றி மட்டும்தான் கவலை. அவருக்குப் பிடித்த மாதிரி ஆர்த்தி வந்ததில், அம்மாவுக்கு சந்தோஷம். ஆர்த்திக்கும் அம்மாவுடன் ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் உண்டு. அந்தக் காலக்கட்டத்தில் ஆறு தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கி, ஒரு முறை போட்டோஷூட் வரை சென்று, மற்றொரு முறை இரண்டு நாட்கள் படப்பிடிப்பு வரை சென்று படம் நின்றுபோனது. அப்போது எனக்குப் பெரிய பலமாக உடன் இருந்தது மணிதான். நான் எப்போதும் சோர்ந்ததே இல்லை.

``கதையை மட்டும் சொல்லி ஒரு தயாரிப்பாளரை கன்வின்ஸ்செய்து ஷூட்டிங் வரைக்கும் வந்துட்டோம். இனி இதைக் காமிச்சே இன்னொரு வாய்ப்பு வாங்கிடலாம்’’ என்றுதான் சொல்வேன். என்னை அத்தனை தயாரிப்பாளர்களிடமும் அனுப்பியது தனுஷ்தான். குரூப் கம்பெனி கதிரேசன் சாரைச் சந்திக்கும் வரை எனக்குத் தடைகள் தொடர்ந்தன. அவரிடம் `தேசிய நெடுஞ்சாலை' என்ற கதையைச் சொன்னபோது, `வேற கதை இருக்கா?’ என்றார். ரத்னம் சார் ஆபீஸில் அமர்ந்து தயார்செய்த  `பொல்லாதவன்’ படக் கதையைச் சொன்னேன். `அதைப் படமாக எடுக்கலாம்' எனச் சொன்னார். இவ்வளவு இன்னல்களையும் பொறுமையுடன் கடந்துவந்த பக்குவம், கதிர் சாருடன் வேலைசெய்ததால்தான் எனக்குக் கிடைத்தது என நினைக்கிறேன்.  பாலு மகேந்திரா சார் நம்மை நம் குறைகளோடு ஏற்றுக்கொள்பவர். அதனால் நம்மை மாற்ற அவர் எப்போதும் முயற்சிசெய்ய மாட்டார்.

மைல்ஸ் டு கோ - 10
சாருடன் வேலைசெய்வது அப்பாவுடன் இருப்பதுபோல. கண்டிப்பு இருக்கும், தண்டனைகள் இருக்காது. தண்டனைகள் கிடைத்தாலும், அவை மாற்றி எழுதப்படும். ஆனால், கதிர் சாருடன் வேலைசெய்வது அண்ணனுடன் வேலைசெய்வதுபோல.

அங்கே எந்தச் சலுகையும் மன்னிப்பும் கிடைக்காது. ஒருமுறை தவறுசெய்தாலும் அவ்வளவுதான். அன்றோடு அவர் அலுவலகத்தில் உதவி இயக்குநராக இடம் கிடையாது.  அவரிடம் வேலை செய்வது, ‘கன் பாயின்ட்’டில் வேலைசெய்வதுபோல சிரமமான காரியம்தான். நான் வேலைக்குச் சேர்ந்த அன்றே கதிர் சார்,  “என் ஆபீஸ்ல வேலைசெய்றது மிலிட்டரியில வேலைசெய்ற மாதிரி. அதுக்கு ஓகேன்னா வாங்க” என்றார். நான் அதற்குத் தயாராகவே இருந்ததால் `சரி’ எனச் சொல்லி வேலைக்குச் சேர்ந்தேன்.

அப்போது கதிர் சாரிடம் ஜெகதீஷ், ஆண்ட்ரூ, தியாகராஜன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் உதவி இயக்குநர்களாக இருந்தார்கள். ஜெகதீஷ், ஜே.கே அவர்களிடம் உதவி கலை இயக்குநராகப் பணிபுரிந்தவர்.அதன்பின் ஃபிலிம் இன்ஸ்டிட் யூட்டில் டைரக்‌ஷன் படித்துவிட்டு கதிர் சாரிடம் சேர்ந்தார். அப்போது அங்கே எல்லாமே ஜெகதீஷ்தான்.  ஆண்ட்ரூவின் பைக் தொலைந்து அதை அவர் தேடி  அலைந்த கதைதான் `பொல்லாதவன்’ படத்துக்கு இன்ஸ்பிரேஷன். (பலரும் நினைப்பதுபோல `பைசைக்கிள் தீவ்ஸ்’ அல்ல). தியாகு, ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர். அந்த வருடம் அவரது குறும்படத்துக்காக மாநில விருது வாங்கியிருந்தார். அந்தப் படம் பிடித்துபோய்தான் கதிர் சார் அவரைச் சேர்த்துக்கொண்டார்.  (தியாகு இப்போது `முப்பரிணாமம்’ என்ற படத்தை அதிரூபன் என்ற பெயரில் இயக்கிக்கொண்டிருக்கிறார்). ஜெயக்குமார் அந்த செட்டில் சிறியவர். ஜேக்கப் என்பவர் படப்பிடிப்பு அன்றுதான் வந்துசேர்ந்தார். ஜேக்கப், எம்.பி.ஏ பட்டதாரி. வேலைக்குச் சேர்ந்ததுமே கதிர் சார் என்னிடம் `காதல் வைரஸ்’ ஸ்கிரிப்ட்டைப் படிக்கச் சொல்லியிருந்தார். படித்ததும் அவரிடம் சென்று `கதை ரொம்ப எமோஷனலா இருக்கு சார். ஹீரோவோட வேலை, சினிமா டைரக்டருக்குப் பதிலா, வேற புரொஃபஷன் வெச்சுக்கலாமா சார்?’ என்றேன். ‘இந்தக் கதை இதுதான் வெற்றி. இதுக்கு கான்ட்ரிப்யூட் பண்ண முடியும்னா பண்ணுங்க’ என்றார். நான் ஸாரி சொல்லிவிட்டு டீமுடன் வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட்டேன். கதிர் சார் மற்றவர்கள் கருத்துக்கு இடம்கொடுப்பவர். டிஸ்கஷன் அறையில் நாங்கள் நால்வரும் பேசிக்கொண்டிருப்போம். திடீரென கதவைத் திறந்துகொண்டு வந்து ஒரு சீன் சொல்வார். அவர் சீன் சொன்னால், எங்களுக்கு மூன்று சாய்ஸ்தான். `நல்லாருக்கு, நல்லால்ல, வேற சீன் சொல்வது’. எதுவாக இருந்தாலும் அதை நியாயப்படுத்தக் காரணங்கள் சொல்ல வேண்டும். இல்லை என்றால், திட்டு விழும். நியாயமாக இருந்தால், உடனே சீனை மாற்றிவிடுவார்.

கதிர் சாருக்கு ஒரு சீன்கூட வேறு ஒரு படத்தின் சாயலில் இருப்பது பிடிக்காது. ஒரு கதையை ஏதாவது ஒரு சம்பவத்தில் இருந்தோ, நாவலில் இருந்தோ இன்ஸ்பையர் ஆகி எடுக்கலாம்.

ஆனால், அந்த சீன்கள் தனதாக இருக்க வேண்டும் என மெனக்கெடுவார். `நம்ம படம் எப்படி வேணும்னாலும் இருக்கலாம். ஆனா ஒரிஜினலா இருக்கணும்’ என்பார்.  அவருடன் டிஸ்கஷன் ஆரம்பித்தால், மாரத்தான் ஓடுவதுபோலதான் இருக்கும். காலையில் ஆரம்பித்தால், லன்ச் பிரேக்கூட இல்லாமல் தொடரும். திடீரென 4 மணிக்கு `நீங்களாம் சாப்பிடலை. போய் சாப்ட்டு வாங்க’ என்பார். மீண்டும் ஆரம்பித்தால், அதிகாலை வரைகூடத் தொடரும். அதன் பின்னரும் ஆளுக்கு ஒரு வேலை தந்துவிட்டுச் செல்வார். அதை முடித்துவிட்டு வருவதற்குள், அவர் அடுத்த நாள் டிஸ்கஷனுக்குத் தயாராகிவிடுவார். நாங்கள் சோர்ந்துபோகிறோம் என்பது தெரிந்தால்  ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துச்செல்வார். ஆனால், கதிர் சாருடன் எங்கு சென்றாலும் கையில் பேடும், இரண்டு பேனாக்களும் அவசியம். திடீர் திடீர் என சீன் சொல்வார். அதை எழுதிக் கொள்ள வேண்டும். `அந்த ஹோட்டல் சீனுக்கு முன்னாடி என்ன சீன்டா?’ என்பார். இதைச் சமாளிப்பதற்காகவே ஜெகதீஷ் எங்கள் எல்லோருக்கும், ஒன்லைன் ஆர்டரை சின்ன பேப்பரில் எழுதி, லேமினேட் செய்துதந்திருந்தார். அது எப்போதும் பாக்கெட்டில் இருந்தால்தான் கதிர் சாருடன் வெளியே செல்லவே முடியும்.

மைல்ஸ் டு கோ - 10

`காதல் வைரஸ்’ படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். கதிர் சாரிடம் சிச்சுவேஷனை மெயில் செய்யச் சொல்லிவிடுவார் ரஹ்மான். நான்தான் ஆங்கிலத்தில் எழுதித் தருவேன். `அவர் எவ்ளோ பெரிய கலைஞன்? அவரை இன்ஸ்பையர் செய்ற மாதிரி சொல்ல வேணாமா?’ என ஐந்து பக்கங்களுக்கு முழுக்கதையைச் சொல்வார். கடைசிப் பத்தியில் நான் எழுதியதில் வந்து முடிப்பார். சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும் என்பார்.  இரவுகளில் கதிர் சாருடன் ரிக்கார்டிங் சென்றால், எப்படியும் விடிந்துதான் வருவோம். அதற்காகவே ஜெகதீஷ் பையில் பேஸ்ட், பிரஷ், ஜட்டி என ஒரு செட் எப்போதும் தயாராக இருக்கும்.

அவரைப் பார்த்து நானும் அதை கற்றுக்கொண்டேன். இப்போதும் என் காரில் ஒரு செட் டிரஸ் எப்போதும் இருக்கும். கதிர் சார் ஆபீஸ் எதிரிலேயே ஒரு `பேசிக்ஸ்’ ஷோ ரூம் இருந்தது. திடீர் என எங்களை அழைத்துச்சென்று ஆளுக்கு ஒரு ஜீன்ஸ், டிஷர்ட் வாங்கிக்கொள்ளச் சொல்வார். அவரது உதவியாளர்கள் நன்றாக உடை உடுத்துவதைப் பார்த்துச் சந்தோஷப்படுவார். தனது உதவி இயக்குநர்களுக்காகப் பேசுவதில் கதிர் சாரைப்போல ஒருவரைப் பார்க்க முடியாது. `காதல் தேசம்’ வெற்றிக்குப் பிறகு, ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் இவரிடம் படம் பண்ண வந்தார். அதற்கு முன்னர் அவர்கள் இயக்குநர் கருணாகரனிடம் கதை கேட்டிருந்தார்கள். கருணாகாரன், கதிர் சாரிடம் `காதல் தேசம்’ படத்தில் வேலை செய்திருந்தார். அப்போது `என்னை வெச்சு படம் எடுக்கிறதும், கருணாகரன வெச்சு எடுக்கிறதும் ஒண்ணுதான். `காதல் தேசம்’ வெற்றியில் எனக்கு என்ன பங்கு இருக்கோ, அதே அளவுக்கு கருணாகரனுக்கும் பங்கு உண்டு’ என கதிர் சார் சொன்னதாக அவரது உதவியாளர்கள் சொல்லிக் கேட்டது உண்டு. ஆனால் கதிர் சார் இதையெல்லாம் சொன்னதே இல்லை.

ஒருநாள் ஆபீஸுக்கு ஹேண்டில் பார் மீசையுடன் ஒருவர் வந்தார். `இவர் ராஜா. இவரும் திவாகரும்தான் கதிர் சார் சொல்ல `காதல் வைரஸ்’ ஃபர்ஸ்ட் டிராஃப்ட் எழுதினாங்க. இப்ப வின்சென்ட் செல்வாவிடம் வேலைசெய்றார்’ என ஜெகதீஷ் அவரை அறிமுகப்படுத்தினார். கதிர் சாரிடம் வேலைசெய்தோம் என்றால் `எந்த பேட்ச்?’ என்று கேட்பார்கள். ஏனென்றால் ஒரே படத்தில் கதை எழுத,  ஷூட்டிங்குக்கு, போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு என ஆட்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். `காதல் வைரஸ்’ முதல் பேட்ச்சில் வேலைசெய்த அந்த ராஜாதான், இப்போது இயக்குநர் மிஷ்கின்.

மைல்ஸ் டு கோ - 10

`காதல் வைரஸ்’ பட டிஸ்க ஷனே ஒரு வருடத்துக்கும் மேல் நடந்தது. அப்போது ஆர்த்தி அமெரிக்காவில் இருந்தார்.அலுவலக போனில்தான் பேசுவோம். ஒருமுறை ஆர்த்தியிடம் கோபமாகப் பேசிக்கொண்டி ருந்தேன். சத்தம் கேட்டு வந்தவர், `பொறுமை வெற்றி. எதுக்குக் கோபப்படுறீங்க? லவ் பண்ற பொண்ணுகிட்ட சண்டை போடலாமா?’ என்றார். `இல்லை சார். புரிஞ்சிக்க மாட்றாங்க.அந்த டென்ஷன் தான். அடுத்த கால் பண்றப்ப சரியாயிடும்’ என்றேன். சிறிது நேரம் யோசித்தவர்,  `காதல் படமா பண்றேன். ஆனா பொண்ணுங் களைப் புரிஞ்சிக்கிறது கஷ்டமாதான் இருக்கு' எனச் சிரித்தார்.

பல மாதங்களுக்கு பின்னர் ஷூட்டிங் ஆரம்பிக்க இருந்தோம். பட பூஜைக்கு இன்விட்டேஷன் வந்திருந்தது. அதற்கு முன்தினம்தான் ஆர்த்தி சென்னைக்கு வந்திருந்தார். (பைக் வாங்கிக்கொண்டு பாலு மகேந்திரா சாரைப் பார்த்ததும் அன்றுதான்.)  பட பூஜையின் இன்விட்டேஷனை ஆர்த்தியிடம் கொடுத்த கதிர் சார் `உங்களுக்குத்தான் முதல் இன்விட்டேஷன். கண்டிப்பா வந்துடுங்க’ என்றார். ஆர்த்திக்கு அத்தனை சந்தோஷம்!

- பயணிப்பேன்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan