Published:Updated:

இந்த சீஸன்ல நாங்கதான்!

இந்த சீஸன்ல நாங்கதான்!
பிரீமியம் ஸ்டோரி
News
இந்த சீஸன்ல நாங்கதான்!

பு.விவேக் ஆனந்த்

இந்த சீஸன்ல நாங்கதான்!

கிளப், டிவிஷன், ஃபர்ஸ்ட் கிளாஸ் என படிப்படியாக ஆடி, இந்திய அணிக்குள் நுழைந்தது பழைய ஃபார்முலா.

இந்த சீஸன்ல நாங்கதான்!

ஐபிஎல் டு இந்திய அணி என்பதுதான் இப்போதைய ரூட் மேப். உலகின் தலைசிறந்த வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பு, சர்வதேசத் தரத்தில் கோச்சிங், கோடிகளில் சம்பளம், மீடியா வெளிச்சம்... என இளம் கிரிக்கெட்டர்களுக்கு ஐபிஎல் மிகப் பெரிய அனுபவக் களம். தேர்வாளர்களின் நேரடிப் பார்வையில் விளையாடுவதால், இந்திய அணிக்குள் ஐபிஎல் ஸ்டார்ஸ் உடனடியாக இடம்பிடித்துவிடுகிறார்கள். அப்படி இன்னும் சில மாதங்களில் இந்திய அணியில் இடம்பிடிக்கப்போகும் ஐபிஎல் வைரல் பாய்ஸ்களின் இன்ட்ரோ இங்கே!

ஷ்ரேயாஸ் ஐயர்

‘யங் வீரு’ என அழைக்கப்படும் மும்பை பையன். கடந்த ஐபிஎல் தொடரில் 2.6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஷ்ரேயாஸ், டெல்லி அணிக்காக விளையாடினார். யுவராஜ், டுமினி போன்ற டி20 ஸ்பெஷலிஸ்ட்களையே ஓரங்கட்டி சிக்ஸரும் பவுண்டரியுமாக நொறுக்கி, ஒரே தொடரில் 439 ரன்களைக் குவித்தார். எப்பேர்ப்பட்ட பந்துவீச்சாளருக்கும் பயப்பட மாட்டார். கடந்த ரஞ்சி சீஸனில் தனி ஒருவனாக மும்பை அணியைத் தூக்கி நிறுத்தி, ரஞ்சி கோப்பையைக் கைப்பற்ற உதவினார் ஷ்ரேயாஸ். ஷேவாக் போலவே டெஸ்ட் போட்டிகளைக்கூட ஒருநாள் போட்டி பாணியில் ஆடுகிறார். வெகு விரைவில் இந்திய அணியில் இடம்பிடிக்க இருக்கிற நம்பிக்கை நட்சத்திரம்.

யுஸ்வேந்திர சாஹல்

இந்த சீஸன்ல நாங்கதான்!

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர், இன்னும் சர்வதேசப் போட்டியில் காலடி எடுத்து வைக்காத சாஹல்தான். பிரமாதமாக கூக்ளி வீசக்கூடிய லெக் பிரேக் பவுலர். சர்வதேச மாஸ்டர் பேட்ஸ்மேன்களைக்கூட இவரால் எளிதில் வீழ்த்த முடிகிறது. 25 வயதாகும் ஹரியானாவைச் சேர்ந்த சாஹல், இந்திய செஸ் அணியிலும் விளையாடியிருக்கிறார். `ஒரு பந்துவீச்சாளராக, கிரிக்கெட்டில் சூழ்நிலைக்கு ஏற்ப உத்திகளை மாற்றுவதும், சமயோசிதமாக சில மூவ்களைச் செய்வதும் அவசியம். செஸ் போட்டிகளில் விளையாடுவது எனக்கு கிரிக்கெட்டுக்கும் உதவுகிறது’ என்கிறார் சாஹல். இந்திய அணியில் ஜடேஜா, அமித் மிஸ்ரா இடத்தைப் பிடிப்பதுதான் சாஹலின் உடனடி இலக்கு.

இஷான் கிஷன்

இந்த சீஸன்ல நாங்கதான்!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டன் இஷான் கிஷன். வயசு 17-தான். ஆனால், `இந்தியாவின் அடுத்த தோனி’ என இப்போதே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். இடதுகை பேட்ஸ்மேனான இஷான், விக்கெட் கீப்பரும்கூட. தோனியும் கில்கிறிஸ்ட்டும்தான் இவரது ரோல்மாடல்கள். சமீபத்தில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒரு நாள் உலகக்கோப்பையில் இஷானின் கேப்டன்ஸி பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது ஐபிஎல்-ல் குஜராத் அணிக்காக விளையாடுகிறார். பீஹாரில் இருந்து இதுவரை இந்திய அணிக்கு பெரிய அளவில் கிரிக்கெட் வீரர்கள் வந்தது கிடையாது என்பதால், இஷான் கிஷனை ஒட்டுமொத்த பீஹாரும் கொண்டாடுகிறது.

தீபக் ஹூடா

இந்த சீஸன்ல நாங்கதான்!

ஒரே ஒரு மேட்ச், தீபக் ஹூடாவின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக ஐபிஎல் விளையாடினார் ஹூடா. டெல்லிக்கு எதிரான ஒரு போட்டியில் 185 ரன்களை சேஸ் செய்ய வேண்டும் என்கிற நிலை. 11 ஓவரில் 78/4 என ராஜஸ்தான் தடுமாறிய நிலையில் களமிறங்கினார் தீபக். தொடர்ந்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் சிதறவிட்டவர், அதிரடியாக 25 பந்துகளில் 54 ரன்கள் குவித்து, அணியை வெற்றிபெறச் செய்தார். ராஜஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக இருந்த டிராவிட், ஹூடாவை நல்ல பேட்டிங் ஆல் ரவுண்டராக மாற்றினார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு தீபக் ஹூடாவை 4.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது ஹைதராபாத் அணி. காரணம், ‘பவர் ஹிட்டிங்’. ரெய்னா, யுவராஜ் சிங்கின் இடத்தை ஹூடா நிரப்புவார் என எதிர்பார்க்கலாம்.

சர்ஃபராஸ் கான்

இந்த சீஸன்ல நாங்கதான்!

`இந்தியாவின் டிவில்லியர்ஸ்’. அப்பா ஒரு கிரிக்கெட் கோச் என்பதால், சிறு வயதில் இருந்தே முறையாக டெக்னிக்குகளைக் கற்றுக்கொண்டு கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த சர்ஃபராஸ் கானுக்கு வயது 18. ஆனால், உலகின் முன்னணிப் பந்துவீச்சாளர்களையே கண்ணீர் விடவைக்கும் அளவுக்கு அடித்து நொறுக்குகிறார். நடப்பு ஐபிஎல்-லில் பெங்களூரு அணியின் முதல் போட்டியிலேயே பிரித்துமேய்ந்துவிட்டார் சர்ஃபராஸ். பத்தே பந்துகளைச் சந்தித்து 35 ரன்களை விளாசித் தள்ளினார். டிவில்லியர்ஸ் போலவே பந்தை எப்படிப் போட்டாலும் மைதானத்தின் 360 டிகிரியிலும் வெளுத்துக்கட்டுவார்.  விராட் கோஹ்லியைப் போலவே பந்தை ஃபீல்டர்களுக்கு இடையே ப்ளேஸ் செய்வதிலும் கெட்டிக்காரர். அணியின் தேவைக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ளும் பக்குவமும், இக்கட்டான தருணங்களில்கூட கூலாக விளையாடும் அனுபவமும் பெரிய ப்ளஸ். இந்த ஐபிஎல்-ல் சர்ஃபராஸின் அதிரடிக்காகக் காத்திருக்கலாம்.

கருண் நாயர்

இந்த சீஸன்ல நாங்கதான்!

களத்தில் அதிக நேரம் நின்று விளையாடும் திறன்பெற்றவர். 2014-15ம் ஆண்டு ரஞ்சி சீஸனில் தமிழ்நாடும் – கர்நாடகாவும் இறுதிப் போட்டியில் மோதின. கர்நாடகாவைச் சேர்ந்த கருண் நாயர் கிட்டத்தட்ட இரண்டரை நாட்கள் களத்தில் நின்று 560 பந்துகளில் 46 பவுண்டரிகள் விளாசி 328 ரன்களைக் குவித்து சாதனை படைத்தார். ரஞ்சி கோப்பை வரலாற்றிலேயே இறுதிப் போட்டியில் அதிக ரன்களைக் குவித்தவர் என்ற குல் முகமதுவின் 68 ஆண்டுகால சாதனையை முறியடித்து, புது சரித்திரம் படைத்தவர் கருண். ஷார்ட் ஃபார்மெட் கிரிக்கெட்டில் செம ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பதால், நான்கு கோடிக்கு ஏலத்தில் எடுத்த டெல்லி அணிக்காக இப்போது விளையாடிவருகிறார் கருண் நாயர்.

சஞ்சு சாம்சன்

இந்த சீஸன்ல நாங்கதான்!

இந்திய அணியில் எதிர்கால நட்சத்திரம். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். ராஜஸ்தான் அணிக்காக கடந்த இரண்டு வருடங்களாக விளையாடி வந்தவரை, 4.2 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறது டெல்லி டேர்டெவில்ஸ். அப்படி என்ன ஸ்பெஷல் சஞ்சுவிடம்? பொறுப்பான பேட்டிங்தான். இக்கட்டான சூழ்நிலைகளில் தனது மாஸ்டர் ஸ்ட்ரோக்குகளால் பந்துகளை சிக்ஸருக்குப் பறக்கவிடுவது சஞ்சுவின் வாடிக்கை. ` `டி20-க்கு என ஸ்பெஷலாக ஷோ காண்பிக்க முயற்சி செய்யாதே. பதற்றப்படாமல், வீசப்படும் பந்துகளைப் பொறுத்து அதற்குரிய ஷாட்டை ஆடினால் போதும். எல்லாம் சரியாக நடக்கும்' என டிராவிட் சார் அடிக்கடி அறிவுத்துவார்’ என்கிற சஞ்சு சாம்சனுக்கு டிராவிட்தான் உலகமே!

முருகன் அஷ்வின்

இந்த சீஸன்ல நாங்கதான்!

`அவரு பெரிய அஷ்வின்; இவரு சின்ன அஷ்வின்' என `காக்கா முட்டை’ கணக்காக மீம்ஸ் போடுகிறார்கள் நெட்டிசன்ஸ். முருகன் அஷ்வினும் சென்னைப் பையன்தான். ரவிச்சந்திரன் அஷ்வின், ஆஃப் ஸ்பின்னர். முருகன் அஷ்வின், லெக் ஸ்பின்னர். ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலையாக 10 லட்ச ரூபாய் அஷ்வினுக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அவர் ஏலம் எடுக்கப்பட்டது 4.5 கோடி ரூபாய்க்கு! சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளமிங் மற்றும் தோனி இருவரும், முருகனின் அருமையான கூக்ளிகளில் இம்ப்ரஸ் ஆனதுதான் புனே அணியின் 4.5 கோடி ரூபாய் டீலுக்குக் காரணம். தற்போதைய ஐபிஎல் சீஸனில் புனே சார்பில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் முருகன் அஷ்வினும் ஒருவர். தொடர்ந்து இந்த சீஸனில் கலக்கினால் விரைவில் சென்னைப் பசங்களான இரண்டு அஷ்வினையும் ஒரு சேர இந்திய அணியிலும் பார்க்கலாம்!