Published:Updated:

“இதெல்லாம் டூமச்... த்ரீமச் கொஸ்டீன்ஸ்...”

“இதெல்லாம் டூமச்... த்ரீமச் கொஸ்டீன்ஸ்...”
பிரீமியம் ஸ்டோரி
News
“இதெல்லாம் டூமச்... த்ரீமச் கொஸ்டீன்ஸ்...”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: பா.காளிமுத்து

“இதெல்லாம் டூமச்... த்ரீமச் கொஸ்டீன்ஸ்...”

``நாலுபேர் பாராட்டுற மாதிரி ஈஸியான கேள்வியா கேளுங்க ஜீ''  - ரிக்வஸ்ட் தட்டுகிறார் `சரவணன் மீனாட்சி' ரச்சிதா.

``கொஞ்சம் சுலபமாகக் கேளுங்க தம்பி. என்னைவெச்சு ரொம்பக் கலாட்டா பண்ணிடாதீங்க'' -சிரிக்கிறார் எழுத்தாளர் சு.வெங்கடேசன்.

``நீங்க கால்பண்ணும்போதே `ஜாலி கேள்விகள் தான் கேட்கப்போறீங்க'னு  நினைச்சேன், ம்ம் ஆரம்பிங்க... லுங்கியைத் தூக்கிக்கட்டிக்கொண்டு ரெடியானார், அரசியல் நையாண்டி கலைஞர் `பூபாளம்' பிரகதீஸ்வரன்.

``ஜாலி கேள்வியா... நான் படிச்சிருக்கேனே... நானும் கொஞ்சம் ஜாலியாவே பதில் சொல்றேன்'' என கூலாகப் பேசுகிறார் எழுத்தாளர் சல்மா.

``தே.மு.தி.க-வில் இருந்து பிரிந்துசென்ற அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தொடங்கிய புதிய கட்சியின் பெயர் என்ன?''

விடை : மக்கள் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்.

ரச்சிதா: விடாமல் சிரித்தவர் ``ஏங்க... டப்புனு பொலிடிக்கல் சப்ஜெக்ட் கேட்டுப்புட்டீங்களே. கேப்டனோட பார்ட்டி டி.எம்.டி.கே-னு தெரியும். அதுல இருந்து பிரேக் பண்ணிக்கிட்டுப்போனவங்க மக்கள் டி.எம்.டி.கே-தானே?'' என்று சந்தேகமாகக் கேட்டவரிடம் `சரி' என்றதும், ``முதல் கேள்வியிலேயே அடிச்சான் பாருங்க அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்'' எனக் கலகலவெனச் சிரிக்கிறார்.

சு.வெங்கடேசன்: ``ஹா... ஹா... தம்பி, உங்களுக்கே இது அநியாயமா தெரியலை? பதில் ரொம்ப சுலபம். மக்கள் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம். இந்த ம.தே.மு.தி.க-வும் கலைஞரின் கைவண்ணம்தான்''

“இதெல்லாம் டூமச்... த்ரீமச் கொஸ்டீன்ஸ்...”

பிரகதீஸ்வரன்: ``மாடு தே.மு.தி.க ஸாரிங்க... மக்கள் தே.மு.தி.க. அதுதான் இவங்க எம்.எல்.ஏ-வாக மக்கள் தானா ஓட்டு போட்டாங்க. மாடா ஓட்டு போட்டுச்சு? அதுதான் `மக்கள்'னு முன்னாடி போட்டுட்டாங்கபோல. இந்த குரூப் கோயம்பேடுல இருந்து ஒரே பஸ் பிடிச்சு நேராக கோபாலபுரம் போகாம, ரெண்டு பஸ் மாறினால்தான் நல்லா இருக்கும்னு போயிருக்காங்க.''

சல்மா: ``மக்கள் தே.மு.தி.க, சரியா? இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கே யாரு வேணும்னாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.''

 ``சிலநாட்களுக்கு முன்னர் இந்தியாவில் எந்த மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது?''

விடை: பீஹார்

ரச்சிதா: வேகமாகப் பதில் வருகிறது... ``கேரளா. அங்கேதான் முதலில் டாஸ்மாக் கடையை மூடினாங்க. அதுக்கு அப்புறம் குஜராத். அப்புறம் ஏதோ ஸ்டேட்னு படிச்சனே... மனசுல இருக்குதுஜி வெளியே வர மாட்டேங்குது. ஆங்... பீஹார். இதுல எந்த ஸ்டேட் வேணுமோ நீங்களே செலெக்ட் பண்ணிக்கோங்க?''

சு.வெங்கடேசன்: ``பீஹார். இப்ப தமிழகத்துல படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் எனச் சொல்வதைக் கேட்கும்போது, அவர்களை சசிபெருமாள் ஆவிகூட மன்னிக்காதுனுதான் தோணுது. வாக்கு வேணும்னு அப்பட்டமா இப்ப திடீர்னு மக்கள் முன்னாடி தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் சொல்வது எல்லாம் தேர்தல் மோசடி.

பிரகதீஸ்வரன்: ``நம்ம பீஹார் மாநிலம்தான். அங்கே சாராயக் கடையை மூடுறது ஈஸி. அங்கே ஆளும் கட்சியாக இருப்பவனுக்கோ, எதிர்க்கட்சியாக இருப்பவனுக்கோ சாராயக் கடை இல்லை. அதுனால டக்குனு மூடிட்டாங்க. இங்கே மிடாஸ், அது இதுனு இருக்குல்ல. அதுனால படிப்படியாகத்தான் மூடுவாங்க''

சல்மா: கேள்வியை முடிக்கும் முன்னரே, ``பீஹார் மாநிலம். ஆனா, இங்கு `படிப்படியாகக் குறைக்கிறேன்'னு தேர்தல் சமயத்துல சொல்றாங்க. என்னங்க நியாயம் இது? கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாதவர் ஜெ.''

“இதெல்லாம் டூமச்... த்ரீமச் கொஸ்டீன்ஸ்...”

`` `தெறி' படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் நடித்த விஜய்யின் மகள் பெயர் என்ன?''

விடை: திவ்யா சாஷா

ரச்சிதா: ``விஜய்யின் மகள் நடிச்சிருக்காங்கனு கேள்விப் பட்டேன். அதுவும் க்ளைமாக்ஸ்ல ஒரே ஒரு சீன்ல வருவாங்களாமே. நல்லா நடிச்சிருந்தாங்களா? பேரு எனக்குத் தெரியும் நீங்க டக்கு டக்குனு கேட்கிறீங்களா, அதுதான் பதற்றத்துல பதிலே வரலை. ம்ம்.... திவ்யா வா... சீயர்ஸ் சூப்பர் ப்ரோ'' - ஹைஃபை போடுகிறார்!

சு.வெங்கடேசன்: ``கடைசியாக நான் பார்த்த விஜய் படம் `கத்தி'. அந்தப் படம் எனக்குப் பிடிச்சிருந்தது. `தெறி' படம் இன்னமும் பார்க்கலையே.''

பிரகதீஸ்வரன்: ``பல கூட்டங்களுக்குப் போயிட்டு வந்ததுனால இன்னமும் படம் பார்க்க நேரம் கிடைக்கலை. எப்படி இருந்தாலும், இன்னொரு திரை வாரிசு உருவாக்குறாங்கனு சொல்லுங்க.''

சல்மா: ``மீனா பொண்ணுதான் நடிக்கிறாங்கனு படிச்சேன். ஆனா, விஜய் மகளும் நடிச்சிருக்காங்களா? விஜய்க்கு ஒரு பொண்ணு இருக்காங்கனு நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியும்.''

“இதெல்லாம் டூமச்... த்ரீமச் கொஸ்டீன்ஸ்...”

``ஜெயலலிதா பேசும் பிரசார மேடைகளில் எவ்வளவு ஏ.சி மற்றும் ஏர்கூலர்கள் இருக்கும்?''

விடை: 10-க்கும் மேல்.

ரச்சிதா:  சிரித்தவர்... ``அய்யோ! ஏங்க, இதெல்லாம் டூ மச், த்ரி மச் கொஸ்டீன்ஸ். அதை எல்லாம் எப்படிங்க கவுன்ட் பண்ண முடியும்? ஒரு கெஸ்ல சொல்றேன் 3 அல்லது 4  ஏ.சி வெச்சிருப்
பாங்களோ?'' என்றவரிடம் பதிலைச் சொன்னதும் ``அச்சச்சோ! அவ்வளவு ஏ.சி வெச்சிருக் காங்களா? வெயிலுக்காக வெச்சிருப்பாங்க. நாம அடுத்த கேள்விக்குப் போவோமே...''

சு.வெங்கடேசன்: ``ஒரு சராசரி நபர் பயன்படுத்துற ஏ.சி-யைவிட 10 மடங்கு ஏ.சி-யை அவருக்குப் பயன்படுத்துவாங்கனு மட்டும் தெரியும். இதுல நம்பராங்க முக்கியம்?''

பிரகதீஸ்வரன்: `` `மேடையில எத்தனை ஏ.சி இருக்கு?'னு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் கேட்டீங்கனா உடனே பதில் சொல்லிடுவாங்க. இந்த ஏழைக்கு என்ன தெரியும்?''

சல்மா: கேள்வியைக் கேட்டதும் சூடாகிறார்... ``மேடையில 12 ஏ.சி வெச்சிருக்காங்கனு படிச்சேன். ஆனா, அந்தக் கூட்டத்துக்கு வரும் மக்கள் கொதிக்கும் வெயில்லதானே நின்னாங்க. மேடையில இருந்து பார்த்தாலே அது தெரியும்தானே? ஆனா, அதை எல்லாம் கண்டுக்காத தலைவராக இருக்கிறார் ஜெயலலிதா. எங்க வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு பாட்டி 200 ரூபாய் கொடுக்கிறாங்கனு அந்தக் கூட்டத்துக்குப் போய், வேகாத வெயிலில் நின்னு வீட்டுல வந்து `முடியலே'னு படுத்துருச்சு'' - சோகமாகிறார்.

``சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி போட்டியிடுவது இது எத்தனையாவது முறை?''

விடை : 13-வது முறை (2016-ம் ஆண்டு தேர்தல் உள்பட).

ரச்சிதா: ``எனக்கும் அரசியலுக்கும் பல கிலோமீட்டர் தூரம், இருந்தாலும் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி. வெயிட்... (யோசிக்கிறார்) கருணாநிதி, நான் பிறப்பதற்கு முன்னாடியிருந்தே போட்டிபோடுறார்னு நினைக்கிறேன். சரியா? அப்படி கணக்கு போட்டுபார்த்தால்... 6, 7, 8-வது முறை.''

சு.வெங்கடேசன்: ``தமிழகத்தில் 1952-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் தி.மு.க-வே போட்டியிடவில்லை. அதன் பிறகு 1957-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இருந்து தொடர்ந்து போட்டியிட்டு இருக்கிறார். அப்படிப் பார்த்தால் இந்த முறை திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவதையும் சேர்த்து 13-வது முறையாக இருக்கலாம்.''

பிரகதீஸ்வரன்: ``அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டிபோடாம இருந்ததே இல்லையே. எல்லா தேர்தல்களிலும் போட்டிபோட்டார், எல்லா முறையும் ஜெயிச்சுட்டார். அவர் ஜெயிச்சுட்டார் நாமதான் தோத்துப்போயிக்கிட்டிருக்கோம்.''

சல்மா: ``இந்தச் சட்டமன்றத் தேர்தலையும் சேர்த்தால் 12-வது முறையாகப் போட்டி போடுறார்னு நினைக்கிறேன். உலகத்துல எந்தத் தலைவரும் இவ்வளவு காலம் தீவிரமாக அரசியலில் இருந்தது கிடையாது. அவரை நினைச்சாலே பிரமிப்பாகத்தான் இருக்கு.''