Published:Updated:

சிந்துசமவெளியில் இருக்கிறது தமிழனின் வேர்கள்!

சிந்துசமவெளியில் இருக்கிறது தமிழனின் வேர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்துசமவெளியில் இருக்கிறது தமிழனின் வேர்கள்!

டாக்டர் சங்கர சரவணன்

சிந்துசமவெளியில் இருக்கிறது தமிழனின் வேர்கள்!

சிந்துசமவெளி நாகரிகம்தான், பழந்தமிழர்களின் பண்பாட்டுத் தொட்டில்' என்கிறது ஆர்.பாலகிருஷ்ணனின் சமீபத்திய ஆய்வு. இதுவரை நாம் படித்துக்கொண்டிருந்த வரலாற்று உண்மைகளைப் புரட்டி போடுகின்றன அவர் முன் வைக்கும் தரவுகள். சங்க இலக்கியங்களின் வேர்கள் சிந்துசமவெளி என்றும் ஹரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் வாழ்ந்தவர்கள் தமிழ் தொல்குடிகளே என்றும் ஆணித்தரமாக மட்டும் அல்ல, அறிவியல்பூர்வமாகவும் நிரூபிக்கிறார் இந்த ஐ.ஏ.எஸ். அவருடைய இந்த ஆய்வு `சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்' என்கிற பெயரில் நூலாக சமீபத்தில் வெளியிடப் பட்டுள்ளது.

தமிழர்களின் தோற்றம் குறித்து உலக அளவில் நான்குவிதமான கொள்கைகள் உண்டு. அதில் முதலாவது, கனகசபை பிள்ளை முன்வைத்த `மங்கோலிய கொள்கை', அடுத்து எமன்டர்ப் என்கிற வெளிநாட்டு அறிஞருடைய `இரும்புகால கொள்கை'. மூன்றாவது கில்பர்ட் சிலேட்டரும் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரும் முனைந்து விளக்கிய `லெமூரியா கொள்கை'. நான்காவதாக வருவதுதான் சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சிகளால் உருவான `சிந்துசமவெளிக் கொள்கை'. அந்த வகையில்தான் 2010-ம் ஆண்டில் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் இலச்சினையில்கூட சிந்துசமவெளி முத்திரைகள் சிறப்பிடம் பிடித்தன. அந்த மாநாட்டில்தான் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஆர்.பாலகிருஷ்ணன் சிந்துசமவெளி நாகரிகத்தின் திராவிட அடித்தளம் பற்றிய ஆய்வுக்கட்டுரையை முதன்முதலாக வெளியிட்டார்.

சிந்துசமவெளியில் இருக்கிறது தமிழனின் வேர்கள்!

மொழியியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் தென்னிந்தியாவில் பேசப்படும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளையும் இந்தியா முழுவதிலும் பேசப்படும் வேறு பல பழங்குடியினரின் மொழிகளையும் பகுத்து ஆராய்ந்தவர். தென்னிந்திய மொழிகள், வடஇந்திய மொழிகளில் இருந்து இலக்கணரீதியில் மாறுபட்டவை என்பதை விளக்கி, திராவிட மொழிக் குடும்பத்தின் பண்புகளைப் பட்டியலிட்டவர். அவருடைய ஆய்வில் பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் பேசப்படும் `ப்ராகுயி' என்கிற மொழியும் திராவிட மொழியாக இருக்கும் எனக் கருத்து தெரிவித்திருந்தார். காரணம், ப்ராகுயி மொழியில் எண்களின் பெயர்கள் ஒட், இரட், முசிட் என திராவிட மொழிகளில் இருப்பதைப்போலவே அமைந்து இருந்தது (வடமொழியில் இந்த எண் பெயர்கள் ஏகம், துதம், திரிதம் என அமையும்). எனவே, சிந்துசமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமாக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு எனக் கருதி கால்டுவெல் வைத்த தொடக்கப்புள்ளிதான் `ப்ராகுயி'.

கால்டுவெல் வைத்த புள்ளியில் பயணித்து சிந்துசமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம்தான் எனவும், ஆனால் அவர்கள் பேசிய மொழியும் வாழ்ந்த இடங்களும் மூத்த திராவிட மொழியான தமிழோடு மிக நெருங்கிய தொடர்புகொண்டவை என்பதையும் அறிவியல்பூர்வமாக நிரூபித்திருக்கிறது ஆர்.பாலகிருஷ்ணனின் ஆய்வு. 

சிந்துசமவெளியில் இருக்கிறது தமிழனின் வேர்கள்!

`` `சிந்துசமவெளி மக்கள் யார்?' என்ற கேள்வியும், தமிழர்களின் தோற்றம் பற்றிய கருத்துக்கான முடிவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்'' என்கிறார் ஆர்.பாலகிருஷ்ணன். அவருடைய ஆய்வு நூலில் இடம்பெற்றுள்ள தனது ஆய்வு முடிவுகளை கருதுகோள்கள் (HYPOTHESIS) என்றே குறிப்பிடுகிறார். ஆனால், சிந்துவெளி ஆராய்ச்சி முன்னோடி ஐராவதம் மகாதேவன் இந்த நூல் குறித்து பேசும்போது, “திராவிட மொழியியலையும் சிந்துவெளிப் புவியியலையும் பிணைத்து ஒரு புதிய கருதுகோளை பாலகிருஷ்ணன் உருவாக்கியுள்ளார், அதன் மூலம் சிந்து நகர மக்கள் திராவிட மொழிகளையே பேசியிருக்க வேண்டும் என்ற வரலாற்று உண்மையை அறிவியல் அடிப்படையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்வண்ணம் மீண்டும் நிரூபித்துள்ளார்” என்று குறிப்பிடுகிறார்.

சிந்துசமவெளியில் இருக்கிறது தமிழனின் வேர்கள்!

`இந்தியாவில் வழங்கப்படும் நான்கு வகை மொழிக் குடும்பங்களில் 25 சதவிகித மக்கள் பேசும் மொழியாக இருப்பவை திராவிடக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகள்தான். திராவிடக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழ். திராவிடம் என்ற சொல்லே தமிழ்-தமிளம்-திரமிளம்-திராவிடம் எனத் திரிந்து உருவானதுதான்' என்கிறார் இராமசந்திர தீட்சிதர். வேத கால நாகரிகத்துக்கு ஏராளமான இலக்கியச் சான்றுகள் உண்டு. ஆனால், தொல்பொருள் சான்றுகள் குறைவு. மாறாக, சர்.ஜான் மார்ஷலால் 1924-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு உலகுக்கு அறிவிக்கப்பட்ட சிந்துவெளி நாகரிகத்துக்கு ஏராளமான தொல்பொருள் சான்றுகள் (ஹரப்பா தானிய களஞ்சியம், மொகஞ்ச தாரோ பெரிய குளம், கைவினைப்பொருட்கள், முத்திரைகள்) உண்டு. ஆனால், இலக்கியச் சான்று என எதுவும் இல்லை. சித்திர எழுத்து வடிவில் அமைந்த சிந்துசமவெளி முத்திரைகளை திராவிட மொழிகளோடு நெருங்கிய தொடர்புடையவை என்று ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பார்போலா போன்ற அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனாலும், இதை முடிந்த முடிவாக ஆய்வுலகம் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், ஆர்.பாலகிருஷ்ணனின் இடப்பெயர் ஆய்வுகள் சங்க இலக்கியங்களே சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய ஆகச்சிறந்த இலக்கியப் பதிவுகள் என்ற முடிவுக்கு இட்டுச்செல்கின்றன.

ஆர்.பாலகிருஷ்ணனின் ஆய்வில் இருந்து முக்கியமான சில குறிப்புகள் மட்டும் இங்கே...

•   கிள்ளி, நள்ளி, சேரன் போன்ற சங்க கால மன்னர் பெயர்களும், குறிஞ்சி, முல்லை, பாலை, காஞ்சி, வாகை போன்ற சங்க காலத் திணைப் பெயர்களும் குடம், கற்கா, பூழி போன்ற பன்னிரு நிலப் பெயர்களும் கொண்ட ஊர்கள் சிந்துவெளி பகுதியில் இன்றும் இருக்கின்றன.

சிந்துசமவெளியில் இருக்கிறது தமிழனின் வேர்கள்!

•   கொடும் பசியில் வாடும் ஒட்டகம் எலும்பைத் தின்று உயிர் வாழும் என்கிற செய்தியை, ஒட்டகத்தையே பார்க்க வாய்ப்பு இல்லாத சங்க கால தமிழ்ப் புலவன் அகநானூறில் பதிந்துவைத்திருப்பதை எடுத்துக்காட்டுகிறார் பாலகிருஷ்ணன். இதன் மூலம் இந்தியாவின் வடக்கை, வட இலக்கியங்களைவிட சங்க இலக்கியமே சரியாகப் பதிவுசெய்துள்ளது என்கிறார்.

•   கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற சங்க காலத்து தமிழ் நகரங்களின் பெயர்கள் சிந்துவெளியிலும் அதற்கு அப்பாலும்கூட எப்படி நிலைபெற்றுள்ளன என்ற புதிருக்கு பாலகிருஷ்ணன் அறிவியல்பூர்வமான விளக்கத்தையும் அளித்துள்ளார். மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குக் குடிபெயரும்போது தம்முடைய பழைய இடப்பெயர்களையும் தம்முடன் எடுத்துச்சென்று புதிய குடியிருப்புகளுக்கு அந்தப் பழைய பெயர்களை சூட்டி மகிழ்வது உலகெங்கிலும் காண முடியும். சிந்துவெளி மக்கள் இடம்பெயர்ந்து தெற்கே புதிய நகரங்களை அமைத்தபோது முன்னர் சிந்துவெளியில் வழங்கிய பழைய இடப்பெயர்களையே அவற்றுக்கும் இட்டனர் என்றும், அதேபோன்று பழமை வாய்ந்த பெயர்கள் பழைய இடங்களிலும் தொடர்ந்து நிலைத்திருப்பதும் உலகெங்கிலும் காணப்படுகிறது என்பதும் இவர் தரும் விளக்கங்கள்.

•   தமிழ்நாட்டில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிற ‘ஊர்’, ‘பட்டி’, ‘மலை’, ‘சேரி’, ‘காடு’, ‘கோட்டை’, ‘பாடி’, ‘பாக்கம்’, ‘வாடி’, ‘கரை’, ‘நேரி’, ‘தாங்கல்’, ‘துறை’, ‘கோயில்’, ‘மணி’, ‘பாறை’ என்பன போன்ற ஊர்ப்பெயர்கள் வடமேற்குப் பகுதிகளில் இன்றும் வழக்கில் உள்ளன.

•   ஆதிச்சநல்லூர் ஆய்வுகளில் பெருந்தாழிகளை புதைப்பதற்காகத் தோண்டப்பட்ட புதைகுழிகள் பற்றி பலவிதமான கருத்துகள் உண்டு. ஆனால், உண்மையில் அந்தப் புதைகுழிகள் தாழி புதைப்பதற்காகத் தோண்டப்பட்டவை அல்ல, செம்பு எடுப்பதற்காகத் தோண்டப்பட்டவை என்றும் சிந்துவெளியில் எடுக்கப்பட்ட செம்பில் இருந்த ஆர்சனிக் அளவும், ஆதிச்சநல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட செம்பில் இருந்த ஆர்சனிக் அளவும் ஒரே மாதிரியானவை என்றும் சமீபத்திய அகழாய்வில் தெரியவந்துள்ளது. இந்த அடிப்படையில் `செம்மை' என்ற சொல் செப்பு, செம்பு, செம்மொழி, செந்தண்மை, செங்கோல், செம்பாதி, செம்மை, செப்பம், சிவன், சேயோன், சேய், சேயோள் என்று சங்கத்தமிழிலும் அதற்குப் பின்னும் தமிழ்ப் பாரம்பர்யத்தில் தொடர்வதை விளக்குகிறார் பாலகிருஷ்ணன். 

•   சிந்துவெளி நகரங்கள் அனைத்துமே மேற்குப் பகுதி மேலாகவும் (அதாவது உயரமாகவும்), கிழக்குப் பகுதி கீழாகவும் (அதாவது தாழ்வாகவும்) வடிவமைக்கப்பட்டன. இவ்வாறு நகரங்களை இரு பகுதிகளாகப் பிரித்து வடிவமைக்கும் மரபின் தொடர்ச்சியை புறநானூற்றின் 202-வது பாடலும் பதிவுசெய்கிறது. தமிழ்நாட்டில் மேலக்கோட்டை - கீழக்கோட்டை, மேலக்குளம் - கீழக்குளம், மேலமாத்தூர் - கீழமாத்தூர் போன்று 168 ஜோடிப் பெயர்கள் கொண்ட ஊர்கள் உள்ளன என்பதை விளக்கியுள்ளார். அத்துடன் சிந்துசமவெளியில் இருப்பதைப்போலவே இங்கும் இந்த ஊர்கள் கடல்மட்டத்தில் இருந்து மேல் கீழாக இருப்பதையும் துல்லியமாகக் கண்டுபிடித்திருக்கிறார்!

சிந்துசமவெளியில் இருக்கிறது தமிழனின் வேர்கள்!

இந்த நூல் வெளியீட்டு விழாவை முன்னிட்டு, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் புகைப்படக் கண்காட்சி நடந்தது. அதில்  வைக்கப்பட்ட வண்ணத் தட்டி ஒன்று,  தமிழர் மரபில் கோழியும் சேவலும் பெறும் முக்கியத் துவத்தை, சிந்துசமவெளி முத்திரை தொடங்கி அகநானூறு பாடல், அரசலாபுரம் கல்வெட்டு வழி பயணித்து வெற்றி மாறனின் `ஆடுகளம்' வரை விளக்கியது!.