Published:Updated:

இ.எம்.ஐ -யில் நிம்மதி கிடைக்குமா?

இ.எம்.ஐ -யில் நிம்மதி கிடைக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
News
இ.எம்.ஐ -யில் நிம்மதி கிடைக்குமா?

கார்க்கிபவா, ஓவியம்: ஹாசிப்கான்

முதலில், சில கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்?

1. உங்களுடைய மாதச் சம்பளத்தில் எத்தனை சதவிகிதம் இ.எம்.ஐ செலுத்துகிறீர்கள்?

2. உங்கள் வீட்டில் உங்களைச் சுற்றியுள்ள பொருட்களில் எவை எல்லாம் இ.எம்.ஐ-யில் வாங்கியவை...


எவை எல்லாம் இ.எம்.ஐ-யில் கிடைக்கின்றன?

இந்தக் கேள்விகளுக்கான விடையில் இருக்கிறது, நம்முடைய தனிப்பட்ட பொருளாதார வலிமை! இன்றைய தேதியில் நாம் இருக்கும் வீட்டில் தொடங்கி, டி.வி., பைக், கையடக்க மொபைல் வரை கிட்டத்தட்ட எல்லா பொருட்களுமே தவணைமுறையில் கிடைக்கின்றன. தேவை இருக்கிறதோ... இல்லையோ எதைக் கண்டாலும் வாங்கிக் குவிக்கிறோம். பாட்டு கேட்பதற்கு மட்டும் வீட்டில் 10 சாதனங்கள் வைத்திருக்கிறோம்.

90-களின் ஆரம்பத்தில், `ஷாம்பூ' என்பது இந்தியாவில் ஆடம்பரமான பொருட்களில் ஒன்று. 100 மில்லி ஷாம்பூ பாட்டிலின் விலை அப்போது இரண்டு லிட்டர் பெட்ரோலைவிட அதிகம். ஷாம்பு வாங்குவதை, அப்போது நடுத்தர வர்க்கத்தால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அப்போது நடந்த ஆச்சர்யங்களில் ஒன்று சாஷே. ஒரே ஒரு ரூபாயில் ஷாம்பூ, கடைக்கோடி வரை ரீச்... பிரில்லியன்ட் ஐடியா!

இ.எம்.ஐ -யில் நிம்மதி கிடைக்குமா?

இந்த சாஷேக்களின் சற்றே பெரிய நிதியாதார வடிவம்தான் `ஈக்குவேட்டட் மந்த்லி இன்ஸ்டால்மென்ட்ஸ்’... சுருக்கமாக EMI அல்லது தவணைமுறைத் திட்டம்.

`ஒருவருடைய வாங்கும் திறனுக்கு அதிகமாக விலை உள்ள ஒரு பொருளை வாங்கவைக்கும் எளிய வழி, இந்த இ.எம்.ஐ' என்றே இன்று வரை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், எண்ணிக்கையில் அதிகமான நடுத்தரவர்க்கத்தினர் தலையில், விலை உயர்ந்த பொருட்களைத் திணிக்கும் இன்னொரு டெக்னிக் என்றும் இதைக் கருதலாம். அது மட்டும் அல்ல, வாங்கும் பொருளின் விலைக்கு மேல் வட்டிபோட்டு, அதையும் சேர்த்து நுகர்வோரின் தலையிலேயே சுமத்தும் `ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' டெக்னிக்.

பாஸ்கரன், சென்னையில் முன்னணி ஐ.டி நிறுவன ஊழியர். மாதம் 50,000 ரூபாய் சம்பளம். ஆனால், அதுதான் தனது பிரச்னை என இப்போது சொல்கிறார். பணம் எடுக்கச் செல்லும் ஏ.டி.எம்-மில் இருந்து தெருமுனை மளிகைக் கடை அண்ணாச்சி வரை எல்லோரும் அவருக்கு லோன் தரத் தயாராக இருந்தார்கள். முதலில் குடியிருந்த வாடகை அறைக்கு, கிரெடிட் கார்டில் ஏ.சி வாங்கினார். `ஆறு மாத இ.எம்.ஐ-ஆக மாற்றிக்கொள்கிறீர்களா?’ என்றதும், `சரி’ என்றார். ஏ.சி-யைத் தொடர்ந்து எல்.இ.டி டி.வி வந்தது. சைடு எஃபெக்ட்டாக ஹோம் தியேட்டர் சேர்ந்தது. இந்தப் பட்டியல் கடைசியில் ஆப்பிள் ஐபோனில் வந்து நின்றது. 50,000 ரூபாய் சம்பளம், இ.எம்.ஐ போக 13,000 ரூபாயாகச் சுருங்கியது.

ஒருகட்டத்தில் ஐ.டி துறை வீழ்ச்சியைச் சந்திக்க... பாஸ்கரனின் சம்பளத்தை 40,000 ரூபாயாகக் குறைத்துவிட்டார்கள். வேலை தப்பித்ததே பெரிய விஷயம் என்ற சூழலில் பாஸ்கரனால் எதுவும் பேச முடியவில்லை. செலவுகளைச் சமாளிக்க முடியாமல், தவணைகளில் சிலவற்றைக் கட்டாமல் இருந்தார். அதனால் வங்கிகள் அவரை தொடர்ந்து நெருக்க ஆரம்பித்தன. வீட்டில் அப்பாவுக்கு ஓர் அவசர அறுவைசிகிச்சை... அதிகமான தொகை தேவைப்பட, பெர்சனல் லோனுக்கு விண்ணப்பித்தார். அவசியமான அந்த நேரத்தில் கடன் தர மறுத்துவிட்டன வங்கிகள். காரணம், `சிபில் ஸ்கோர்’!

அது என்ன சிபில் ஸ்கோர்?

ஒவ்வொருவரும் வங்கிகளுடன் பல வகைகளில் நுகர்வோராக இருக்கிறார்கள். வீட்டுக்கடன், வாகனக்கடன்... எனப் பல்வேறு கடன்களில் தொடங்கி கிரெடிட் கார்டு, சேமிப்புக் கணக்கு எனப் பல சேவைகளை வங்கிகள் வழங்குகின்றன. அதற்குச் செலுத்தவேண்டிய பணத்தைச் சரியாகச் செலுத்துகிறோமா இல்லையா என்பதை வைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஸ்கோர் போடுவார்கள். குறிப்பிட்ட தேதியில் செலுத்தத் தவறியவர்கள், செலுத்தாமல்விட்டவர்கள் என ஒவ்வொரு குறைக்கும் மார்க் குறைந்துகொண்டே வரும்.  இப்படி குறைவான ஸ்கோர் பெற்றவர்களுக்கு அடுத்து எந்த வங்கியும் எந்த லோனும் கொடுக்க முன்வராது. இதை முறைப்படுத்தப்பட்ட சிஸ்டம் மூலம் கண்காணிப்பதால் எந்த வங்கியில் என்ன பேலன்ஸ் இருந்தாலும், அதை மற்ற எந்த வங்கியும் தெரிந்துகொள்ள முடியும். அதனால் ஒரு வங்கியை ஏமாற்றி, இன்னொரு வங்கியில் வாங்கிவிடவும் முடியாது. இப்படி சிபில் ஸ்கோரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இதனால், வாழ்க்கையின் பிற்பகுதியில் திருமணத்துக்கும், பிள்ளைகள் படிப்புக்கும், இன்னும் பல முக்கியமான அத்தியாவசியச் செலவுகளுக்கும் கடன் வாங்க வங்கியை நாடினால், நம்முடைய பழைய ட்ராக் ரெக்கார்டைக் காட்டி கடன்தர மறுத்துவிடுவார்கள்.

நம் வசதிக்காகத்தான் தவணைமுறையில் வீடு தொடங்கி டி.வி வரை சகலத்தையும் வாங்குகிறோம். கோடைகாலத்தைச் சமாளிக்க ஏ.சி., நெரிசலைத் தவிர்க்க கார்... என வரிசையாகச் சொல்லலாம். ஆனால், அதற்காக நாம் செலவழிக்கும் தொகை நம்மை நெருக்கடியில் தள்ளுகிறது என்றால், அதைக் கவனித்து மாற்றிக்கொள்ள வேண்டாமா?

ஒவ்வொருவரும் அவரவர் வருமானத்துக்கு ஏற்ப இ.எம்.ஐ-யை எப்படிச் சமாளிப்பது?

`டேக் ஹோம்’ எனச் சொல்வார்கள். அதற்கு, `எல்லா பிடித்தங்களும் போக ஒருவரின் கைக்கு வரும் சம்பளம்’ என அர்த்தம். அந்தச் சம்பளத்தில் 20 முதல் 25 சதவிகிதம் மட்டுமே இ.எம்.ஐ-க்காக ஒதுக்கலாம். 25 முதல் 40 சதவிகிதத்தைத் தொட்டாலே, கொஞ்சம் உஷாராகிவிட வேண்டும். ஏதேனும் ஒரு இ.எம்.ஐ-யை முடிக்கப்பார்க்க வேண்டும். `40 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டால், கூடவே ஸ்ட்ரெஸ் சேர்ந்துகொள்ளும்’ என்கிறார்கள். `50 சதவிகிதத்தைத் தொட்டால் அலாரம் அடிக்கிறது’ என அர்த்தம். ஆனால், இன்று வங்கிகளோ ஒருவரின் சம்பளத்தில் 60 சதவிகித அளவுக்குக்கூட இ.எம்.ஐ கட்டும் அளவுக்கு கடன் தருகின்றன.

இ.எம்.ஐ என்பதில், எதிர்பாராத செலவுகளும் உண்டு. பெரும்பாலும் வீடு வாங்குவதற்காகத்தான் பெரிய அளவில் கடன் வாங்கப்படுகின்றன. அதற்கான வட்டி அவ்வப்போது மாற்றியமைக்கப் படுவதும் உண்டு. அப்படி மாறும்போது இ.எம்.ஐ தொகையும் மாறும். புதுச்சேரியைச் சேர்ந்த செந்தில் இதனால் பாதிக்கப்பட்டவர்.

இ.எம்.ஐ -யில் நிம்மதி கிடைக்குமா?

“நான் ஆட்டோமொபைல் கம்பெனியில வேலைசெய்றேன். மிடில் கிளாஸ்தான். கையில இருந்த காசையும் நகையையும் வெச்சு சின்னதா ஒரு ஃப்ளாட் வாங்கினேன். என் மாசச் சம்பளம் 22,000 ரூபாய். அதுல 11,500 ரூபாய் வீட்டு இ.எம்.ஐ-க்குப் போயிடும். மீதியை வெச்சுத்தான் குடும்பம் நடத்தணும். திடீர்னு வட்டி ஏத்திட்டாங்கனு பேங்க்ல இருந்து லெட்டர் வந்தது. `இனி மாசம் 14,000 ரூபாய் கட்டணும்'னு சொன்னாங்க. எனக்கு வயசும் அதிகம்கிறதால லோன் கட்டுற காலத்தையும் அதிகரிக்க முடியாதுனு சொன்னாங்க. நிம்மதியா வாழலாம்னு வீடு வாங்கிட்டு, கடைசியில அது முடியாம வீட்டை என் தம்பிக்கு வித்துட்டேன்” என்கிறார் செந்தில்.

அப்படியெனில், இ.எம்.ஐ ஏமாற்று வேலையா? நிச்சயம் இல்லை. முறையான நிதி மேலாண்மை செய்பவர்களுக்கு இது வரம். சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த லாவண்யா, காதல் திருமணம் புரிந்தவர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி உடன் வேலைசெய்தவரைத் திருமணம் செய்தபோது அவர்களிடம் இருந்தது வேலை மட்டுமே. மாதம் 45,000 ரூபாய் அவர்கள் இருவரின் மொத்த வருமானம். அதில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை கிரெடிட் கார்டில் வாங்கி, அதை இ.எம்.ஐ-ஆக மாற்றிக்கொண்டார். 23,000 ரூபாய் போக, மீதிப் பணத்தில் அன்றாடச் செலவுகளைப் பார்த்துக்கொண்டனர்.

எடுத்தவுடன் ஏ.சி., டி.வி என வாங்காமல் அவசியத் தேவைகளான ஃப்ரிட்ஜ், கிரைண்டர் போன்றவற்றை வாங்கினார்கள். சம்பளம் ஏறியபோதும் மாதம் 23,000 ரூபாய்தான் இ.எம்.ஐ-க்கு என்பதில் தெளிவாக இருந்தது இந்த ஜோடி. ஐந்தே வருடங்கள்... தாம்பரத்தில் ஒரு ஃப்ளாட் வாங்கி குடிபோய்விட்டார்கள். இப்போது அவர்கள் மாத வருமானம் ஒரு லட்ச ரூபாயைத் தாண்டிவிட்டாலும், இ.எம்.ஐ தொகை 40,000 ரூபாய்தான். இதைப் புரிந்துகொண்டால் அதை நம் வசதிக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதை எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால்... `கையில் கொஞ்சம் இ.எம்.ஐ இருந்தால் அதற்கு நாம்தான் முதலாளி. கழுத்துவரைக்கும் உயர்ந்து சென்றால் அதுதான் நமக்கு முதலாளி.’

இ.எம்.ஐ

இ.எம்.ஐ -யில் நிம்மதி கிடைக்குமா?

`தமிழகத்தின் முதல் இ.எம்.ஐ திட்டம் எதுவாக இருக்கும்?' என விசாரித்தோம். பிரபல தொழிலதிபர்களான வி.ஜி.பி சகோதரர்களைத்தான் நிறையப் பேர் சொல்கிறார்கள். வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்றுவிட்டு, மாதா மாதம் வந்து பணம் வாங்கிச் செல்வார்கள். பொருளின் விலை 100 ரூபாய் என்றால், 12 மாதங்கள், மாதம் 10 ரூபாய் வீதம் செலுத்தலாம் என்ற அவர்களது பிசினஸ் ஐடியா அப்போது செம ஹிட்.

இ.எம்.ஐ - சில டிப்ஸ்...

1) குறைந்தகால இ.எம்.ஐ எடுப்பது பெஸ்ட். `கட்டுவதற்குச் சிரமம் என்றாலும், இதுதான் சிறந்தது’ என்கிறார்கள் நிதி வல்லுநர்கள்.

2) கடன் வாங்கி, இன்னோர் இடத்தில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். தங்கமோ, மியூச்சுவல் ஃபண்டோ தரும் ரிட்டர்னைவிட, நாம் லோனுக்குக் கட்டும் வட்டி அதிகமாகத்தான் இருக்கும்.

இ.எம்.ஐ -யில் நிம்மதி கிடைக்குமா?

3) லோன் மதிப்பு அதிகமாக இருக்கும்போது இன்ஷூரன்ஸையும் சேர்த்து எடுத்துக்கொள்வது நலம். அசம்பாவிதம் ஏதும் நடந்தால், உங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற அந்தப் பணம் உதவும்.

4) பெரும்பாலும் லோன்களில், ஆரம்பகால இ.எம்.ஐ-களிலே மொத்த காலத்துக்கும் வட்டி வசூலிக்கப்பட்டுவிடும். கடைசி இ.எம்.ஐ-களில் வெறும் அசல் மட்டுமே போகும். எனவே, லோனை முன்கூட்டியே முடிப்பது என்றால், அசல் எவ்வளவு, வட்டி எவ்வளவு என்பதைக் கவனித்துவிட்டு முடிக்கலாம்.

5) தேவை இருக்கும்போது மட்டுமே ஒரு பொருளை, கடனில் வாங்க வேண்டும். இல்லையென்றால், பொருளின் மதிப்பில் பாதியையாவது பணமாகச் சேர்த்துவிட்டு பிறகு வாங்கலாம்.

6) உங்கள் இ.எம்.ஐ பற்றிய விவரங்களை மனைவி, பிள்ளைகளோடு பகிர்ந்துகொள்ளுங்கள். அப்போதுதான் அவர்களுக்கும் வீட்டு நிதி நிலவரங்கள் புரியும்.

இ.எம்.ஐ -யில் நிம்மதி கிடைக்குமா?

``இன்றைய இளைஞர்கள் லைஃப்ஸ்டைல்ல இ.எம்.ஐ முக்கியமானது. எந்த ஒரு பொருளையும் வாங்குற அளவுக்குப் பணம் சேர, அவங்க வெயிட் பண்ணுவதே இல்லை. நம்ம பணத்துக்கு வட்டி வாங்கினது போன தலைமுறை. இப்ப இருக்கிறது, பணம் வாங்கிட்டு அதுக்கு வட்டி கட்டுற கிரெடிட் கார்ட் ஜெனரேஷன். சரியா  ஹேண்டில் பண்றவங்களுக்கு இ.எம்.ஐ வரம்தான். இல்லைன்னா சிக்கல்தான். திடீர்னு வேலை போயிடுறப்ப இ.எம்.ஐ கட்ட முடியாம கஷ்டப்படுற சிலரைப் பத்திதான் எங்க கதையே”  என்கிறார் `இ.எம்.ஐ' நெடுந்தொடரின் இயக்குநர் இனியன் தினேஷ். சன் டி.வி-யில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது இ.எம்.ஐ.