மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 37

கலைடாஸ்கோப் - 37
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - 37

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 37

“காலம், உருவம் இல்லாதது என எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்... முட்டாள்கள்” எனச் சிரித்தார் புரொஃபசர் நானா. அந்த மலைக்கிராமத்தில் தனிமையில் இருந்த ஆய்வகத்தின் மரச் சுவர்களில் அவர் சிரிப்பு, முட்டிமோதிச் சுழன்றது.

 புதிதாக வேலைக்குச் சேர்ந்த பணியாளன், அவரை அப்பாவியாகப் பார்த்தான். கரிய முகத்தில் அவன் கண்கள் ஆச்சர்யமாக விரிந்தன.  

 “டேய்... என்ன பார்க்கிற? உன் பெயரை மறந்துட்டேன். நீ மலைக்கிராமத்தான். உனக்குப் புரியுமானு தெரியாது” என நிறுத்திய நானா, அவன் அருகில் முகத்தைக் கொண்டுவந்து, “ஆனாலும் சொல்றேன்... காலத்தை சிறு சிறு உருண்டைகளாக மாற்றிச் சேமிக்கும் நுட்பத்தை வெற்றிகரமாக இன்று கண்டுபிடித்திருக்கிறேன். சில நூறு வருடங்கள்கூட சின்ன குலோப்ஜாமூன் அளவுக்கே பாட்டிலுக்குள் கிடக்கிறது பார்” என்றார்.

அவன் பார்த்தான்.

பாட்டிலை அவன் கைகளில் கொடுத்தார். அவன் அப்பாவியாக வாங்கிக்கொண்டான்.

புரொஃபசர் சிரித்தபடி ஜன்னலுக்கு வெளியே தெரியும் மலைகளைப் பார்த்தபடி சொன்னார், “இந்த வருட நோபல் பரிசு எனக்குத்தான். நவ், தி டைம் இஸ் இன் மை கன்ட்ரோல். என் உள்ளங்கையில் காலம்.”

திரும்பிப் பார்த்தபோது பணியாளன் கடைசி உருண்டையையும் வாயில் போடுவதைக் கண்டு எகிறி, அவன் அருகில் வந்தார் நானா.

“அடேய்…” என்றபடி சட்டை அணியாத அவன் கரிய தோள்களை எட்டி உலுக்கியபடி கத்தினார்... “என் கண்டுபிடிப்பு எல்லாம் போச்சே. யார்டா நீ… உன் பேர் என்ன சொன்ன..?”

அவன், அவரை விடுவித்துக்கொண்டு நிதானமாக ஏப்பம் விட்டான். பிறகு, தன் உயரமான உடலைக் குனிந்து நானாவைப் பார்த்துவிட்டுச் சொன்னான்... “என்னை ஊரில் எல்லோரும் `காலன்'னு சொல்வாங்க!”

விஷுவல் கார்னர்

கலைடாஸ்கோப் - 37

போஸ்ட் கார்டுகள்

`Hildebrand' என்கிற ஜெர்மன் சாக்லேட் கம்பெனி, 1900 -ம் ஆண்டில் `இன்னும் நூறு வருடங்களில் உலகம் எப்படி இருக்கும்?’ என தங்கள் விளம்பரத்துக்காக போஸ்ட் கார்டுகளை வெளியிட்டிருந்தது. அதன் வின்டேஜ் ஆர்ட் என்னைக் கவர்ந்தது. 21 -ம் நூற்றாண்டை அவர்கள் கற்பனை செய்ததைவிட, வேகமாக நாம் கடந்துகொண்டிருக்கிறோம் என்பது தெரிகிறது.
 
எதிர்காலத்தைப் பற்றிய மனிதனின் கற்பனை, எப்போதும் அதீதமானது. தொழில் நுட்பத்தில் நாம் எங்கோ சென்று விடுவோம் என நம்பிக்கொண்டிருப்போம். ஆனால், அது முழு உண்மை அல்ல. அழிவுகளால் மனிதகுலம் ஆதிமனிதர் களைப் போல, மறுபடியும் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். இதுபோன்ற ஒரு கருத்தை எனக்குப் பிடித்த அறிவியல் எழுத்தாளர் ராஜ்சிவாவும் எழுதி யிருந்ததை, அவருடைய கட்டுரை ஒன்றில் வாசித்தேன்.

காட்டில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்தபோதே, உலகில் பல நகரங்கள் தொழில்நுட்பத்தில் முன்னேறியும் அழிந்தும்போயிருக் கின்றன என்பதை அகழ்வராய்ச்சிகள் சொல்கின்றன. காட்டில் இருந்து நகரத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் மனிதகுலம் ஏதோ நேர்க்கோட்டில் வளர்ந்துவந்தது என்பதைப் போன்ற தத்துவங்களை இன்று கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். வானத்துக்கு நேராக முஷ்டி உயர்த்துவதுபோல ஃபேக்டரிகளைக் கட்டிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்திலும், காட்டில் மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

கலைடாஸ்கோப் - 37

நல்லவேளை, இந்த போஸ்ட் கார்டுகளில் அவர்கள் சொல்வதில் பல நடக்கவில்லை. உதாரணத்துக்கு... `நகரும் அப்பார்ட்மென்ட் வீடுகள்’. நடந்திருந்தால் `சென்னைக்கு மிக அருகில்’ என நம்மிடம் விற்றுவிட்டு, தூங்கி எழுந்தால் திண்டிவனத்தைத் தாண்டி எங்கோ இருந்திருப்போம்!

கலைடாஸ்கோப் - 37

`பேபி வாக்கரு’க்குள் குழந்தையை நுழைத்து, கட்டில் காலோடு கட்டிப்போட்டுவிட்டு அம்மாக்கள் கிச்சனில் மல்லுக்கட்டுகிறார்கள். அம்மாக்களைச் சொல்லி குற்றம் இல்லை... அன்று கூட்டுக்குடும்பங்களில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள தாத்தாக்களோ பாட்டிகளோ இருப்பார்கள். இன்று பெரும்பாலும் `நியூக்ளியர் ஃபேமிலி' (பெயரே டெரராக இருக்கிறது) எனத் தனியாகக் கழன்று இ.எம்.ஐ ஃப்ளாட்களில் வசிக்கிறார்கள். இதில் பேபி வாக்கர்தான் வசதி.

சில வருடங்களுக்கு முன்னர், சென்னையில் `நடை வண்டி’ வாங்க, நானும் மனைவியும் நடையாய் நடந்தது ஞாபகம்வருகிறது. பின்னர் பாரிமுனையில் ஒரு கடையில் அதைப் பார்த்தபோது, ஹரப்பாவைக் கண்டடைந்த சார்லஸ் மாஸானைப்போல பரவச நிலை அடைந்தோம். 

முன்னர் எல்லாம் மூன்று சக்கர வண்டிகளான நடைவண்டிகள் அழகிய வேலைப்பாடுகளுடன் எளிதாகக் கிடைக்கும் அல்லது தச்சர்களிடம் சொன்னால் சிம்பிளாகச் செய்துதருவார்கள். எந்தப் பிடிமானமும் இல்லாமல், குழந்தைகள் அதைப் பிடித்தபடி நடைபயின்று, விழுந்து எழுவார்கள், சொந்த காலில் நிற்கப் பழகுவார்கள்.

`பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும், முக் கால் சிறு தேர் முன் வழி விலக்கும்’என பட்டினப்பாலையில் ஒரு பாடல், நடைவண்டிகளை `சிறு தேர்' என அழகாக வர்ணிக்கிறது. கடியலூர் உருத்திரங்கண்ணனார் `பேபி வாக்கர்’களைப் பார்த்தால் என்ன சொல்லியிருப்பாரோ?

கலைடாஸ்கோப் - 37

தமிழும் `அவதார்’ குதிரையும்!

நான் வேலைசெய்த ஒரு விளம்பர நிறுவனத்தில், புதிதாகச் சேர்ந்த அண்ணாமலை என்கிற இளைஞர் தமிழில் வாசிப்பதைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தேன். விளம்பர உலகில் நீள முடி, கடுக்கன், குறுந்தாடி, நுனிநாக்கு மட்டும் அல்லாது முழு நாக்கும் ஆங்கிலம் என்ற நமது சூழலுக்கு சம்பந்தம் இல்லாமல், வேற்றுலகவாசிகள்போல பாவனை காட்டுவார்கள்; `ற்றமில்’ என இழுப்பார்கள்.

அகமதாபாத்தின் முத்ரா இன்ஸ்டிட்யூட்டில் மார்க்கெட்டிங் கம்யூனிக்கேஷன் படித்துவிட்டு வந்திருக்கும் அந்த இளைஞனிடம், `தமிழ் படிக்கிறீங்களே!’ என ஆச்சர்யப்பட்டபோது அவர் சொன்னார்...

`காரைக்குடிதான் பூர்வீகம். சின்ன வயசில் இருந்தே ஆங்கிலத்தில்தான் படிச்சேன். கடந்த ரெண்டு வருஷங்களாத்தான் தமிழில் புத்தகங்கள் படிக்கிறேன். இப்போதான் படிக்கும் விஷயங்கள் ஆழமா எனக்குள் போகுது’ என்றவர், அதற்கான விளக்கத்தையும் சொன்னார்... `ஆங்கிலம் என்பது எனது சில தலைமுறைகளுக்குக் கொஞ்ச காலம் முன்னர்தான் பழக்கமாகியிருக்கும். தாய்மொழி என்பது பல்லாயிரம் வருஷங்களா நம் மரபணுக்கள்ல கலந்திருக்கும். `அவதார்’ படத்துல வர்ற நாவிகள், குதிரையில் பயணிக்கிறதுக்கு முன்னாடி குதிரையுடன் பயாலஜிக்கலா தங்களைப் பிணைச்சுக்கிறது நினைவிருக்கா? அந்தக் குதிரையைப் போலத்தான் தாய்மொழியும். மொழி என்பது வெறும் கம்யூனிக்கேஷன் சாதனம் மட்டும் அல்ல. பயாலஜிக்கலா அதற்கும் நமக்கும் ஒரு பிணைப்பு இருக்கு’ என்றார்.

கலைடாஸ்கோப் - 37

தமிழ் எழுத்துக்களைக்கூட உயிர், மெய் என்று எல்லாம் சொல்வது சும்மாவா? தொல்காப்பியம் இலக்கண விதிகள் பற்றி பேசும்போதுகூட பிறப்பியல், புணரியல், உயிர் மயங்கியல் என்றெல்லாம் சொல்கிறது. மொழி, உயிரியல்தான். இதை நாம் சொன்னால் நம்ப மாட்டார்கள். Norwegian University of Science and Technology (NTNU) ஓர் ஆய்வில் `Language is in our biology’ எனச் சொல்கிறார்கள். இப்போது நம்புவார்கள். கேட்டால், வெள்ளைக்காரன் பொய் சொல்ல மாட்டான் என்பார்கள்!   

கலைடாஸ்கோப் - 37

தலையைக்கூட கொடுப்பார்கள். ஆனால், தலையணையைக் கொடுக்க மாட்டார்கள் சிலர். ஆம்... தலையணை இல்லை என்றால் தரையில் போட்ட மீனைப்போல, தூக்கம்வராமல் புரண்டுகொண்டிருக்கும் பலரைப் பார்க்கலாம். நீங்களே அதில் ஒருவராகக்கூட இருக்கலாம். இந்தத் தலையணையின் வரலாற்று உறையை, கொஞ்சம் கழற்றி ஆராய்ந்துபார்த்தேன்.

கி.மு.7,000 ஆண்டுக்கு முன்பே மெசபடோமியாவில் தலையணை உபயோகித்த சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இப்போது மெத்தென நாம் பயன்படுத்தும் தலையணையைப் போல அல்ல அவை. கற்களை, பிறைநிலாபோல செதுக்கிச் செய்தவை. `கல்லணை' எனச் சொன்னால் வரலாற்றுக் குழப்பம் வரும். தூங்கும்போது எறும்புகள் போன்ற ஊர்வன காதிலோ மூக்கிலோ நுழைந்துவிடாமல் இருக்க, தலையை கொஞ்சம் பாதுகாப்பான உயரத்தில் வைத்துத் தூங்க வேண்டும் எனத் தீர்மானித்திருக்கிறார்கள். எகிப்தியர்கள் தலையை உடலின் முக்கிய ஆத்மிக மையமாக நினைத்ததால், தலையணை அதைப் பாதுகாக்கும் என நம்பி தூங்கியிருக் கிறார்கள்.

சீனர்களும் மூங்கில் முதல் பித்தளை போன்ற உலோகங்கள் வரை கடினமான தலையணைகளைத்தான் உபயோகித்திருக்கிறார்கள். இலகுவான மெத்தென்ற தலையணைகள் செய்யத் தெரிந்திருந்தாலும், அது தூங்குபவர்களின் சக்தியை உறிஞ்சி எடுத்துவிடும் என, வெகுகாலம் நம்பியிருக்கிறார்கள். கடினமான தலையணைகள்தான் துர்சக்திகளை தூக்கத்தில் அண்டவிடாது என்பது அவர்கள் நம்பிக்கை.

ரோமானியர்களும் கிரேக்கர்களும்தான் வைக்கோல், இறகுகள் போன்றவற்றை அடைத்து சொகுசான தலையணைகளை உபயோகித்திருக்கிறார்கள். மத்தியகால ஐரோப்பாவில் இலகுவான தலையணைகள் ஸ்டேட்டஸ் சிம்பலாகக்கூட இருந்திருக்கின்றன. மன்னர் எட்டாவது ஹென்றி காலத்தில் குறிப்பிட்ட சில மேல்தட்டு மக்கள் தவிர, பிறர் தலையணையைப் பயன்படுத்தக் கூடாது எனத் தடையே இருந்ததாம். பிரசவத்துக்கு இலவசம் என நம் ஆட்டோக்களில் எழுதியிருப்பதுபோல, கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டும் தலையணை பயன்படுத்த அனுமதி உண்டாம்.
இப்படி விதவிதமாக உலகம் எங்கும் தலையணைகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், `தலையணை மந்திரம்’ என்ற ஒன்றைக் கண்டுபிடித்தது நம் ஆட்கள்தான்.