Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

படம்: சசிகுமார்

சொல்வனம்

... என்றொரு கிராமம்

எங்களுக்காகப் பேச அனுப்பிய பிரதிநிதிகள்
எங்களைக் கூட்டிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
சட்டையற்றவர்களாய்ப் போனவர்கள்
மொடமொட துணியணிந்து மகிழுந்தில் வந்திருக்கிறார்கள்.
கன்றுக்குட்டி இழுவையில் கவிழ்ந்துவிழும் நோஞ்சான்கள்
கொழுத்து வெளுத்து நின்றுகொண்டிருக்கிறார்கள்.
கை நீட்டி `அந்த நிலம் என்ன விலை?’ என்கிறார்கள்.
`விற்பனைக்கு இல்லை’ என்றால் முறைக்கிறார்கள்.
தொடரும் மாதங்கள்...
நிலங்கள் பணக்கட்டுகளாகிப் பெயர்கின்றன நகரத்துக்கு.
நிறமிழந்து நிம்மதியிழந்து தவிக்கிற ஊரில்
தேநீரகங்களில் டீ உறிஞ்சுபவர்களில் பலரும்
வடமொழி பேசிச் சிரிக்கிறார்கள்.
சாணமிறைந்த வண்டிப்பாதைகள் தார்ப்பாட்டைகளாகி நீள
பன்னாட்டு நிறுவன ‘சுமோ’க்கள் திரிகின்றன அவற்றில்.
நம்ம சுந்தரி புருஷன் பெயர்கூட ஏதோ....`சோன்பேட்’டாம்
இட்லிக்கடை சத்திரத் திண்ணையில் ரொட்டித்தாவாக்களும்
முனியாண்டி விலாஸ்களும் புகை தள்ளியபடியிருக்க
பெட்டிக்கடைகளில் போதைப் பாக்குகள்
புகையிலைப் பொட்டலங்கள் தொங்குகின்றன சரஞ்சரமாய்.
பழைய பேப்பர் கடை நிரம்பும் வேற்றுமொழி தினசரிகள்
ஓடைக்கரையெங்கும் இறைந்துகிடக்கும் ஆணுறைகள்
வயல்கள் மனைகளாகி கல் முளைத்துக் காய்கின்றன.
ஊற்றிலும் கிணற்றிலும் நீர் மோந்த கரங்களில்
திணிக்கப்பட்டுவிட்டன தண்ணீர்ப் புட்டிகள்.
வானம் வருந்தியழவும் மாட்டேனென்கிறது
கைவிட்டுப்போனவர்களின் நினைவுகளற்று
ராட்சத இயந்திரங்களின் கீறல்களோடும்
கரிபடிந்த நுரையீரலோடும்
சுணங்கிக்கிடக்கிற கிராமத்திற்கு
இரவுதோறும் வந்து முந்தைய நிலத்தைத் தேடித் திரும்பும்
அதே பழைய நிலா.

- சூ.சிவராமன்

உளறல்கள்

காடுகள் விற்று ஆலைகள் பெறுவதிலும்
ஆறுகள் விற்று அழகு வீடுகள் பெறுவதிலும்
மனிதம் விற்று மதங்கள் பெறுவதிலும்
ஆச்சர்யங்கள் ஏதும் இல்லை
இயேசுவை விற்று யூதாஸ் பெற்றது
முப்பது வெள்ளிக்காசுகளே!

- பா.சந்தோஷ் குமார்

முகம்

தினமும் காலையில் எழுந்ததும்
மாடித் தோட்டத்தில்
நட்டுவைத்திருக்கும் பூச்செடிகளுக்கு நீருற்றும் அப்பா
காய்ச்சலுற்றுப் படுத்திருக்கிறார்.

தண்ணீர் இல்லாமல்
குழந்தைகள் வாடிப்போகும்
அவற்றுக்குக் கொஞ்சம்
தண்ணீர் விடு என்றார்.

வாளியில் நீரள்ளிக் கொண்டுவந்து
ஊற்றும்போதுதான்
கொஞ்சம் உற்றுக் கவனித்தேன்
வெள்ளை நட்சத்திரம்போல்
செடி முழுக்கப் பூத்துக் குலுங்கும்
பவளமல்லிப் பூக்களுக்கு
அப்பாவின் முகம்.

- தரணி வேந்தன்