
படம்: ஸ்டில் ராபர்ட்
`காதல் வைரஸ்’ தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரான படம். முதல் நாளிலேயே எங்கள் சொதப்பல் தொடங்கியது. அதில் ஹீரோ ஓர் உதவி இயக்குநர்.
தனது படப் பூஜையின் முதல் இன்விடேஷனை, தன்னுடைய காதலிக்குத் தர நினைப்பான். நாங்கள் டிசைனரிடம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ‘காதல் வைரஸ்’ என எழுதச் சொல்லியிருந்தோம். அப்போது கேமரா ஆபரேட்டர், கதிர் சாரிடமே, ‘காதல் வைரஸ்’ என்பது தவறாக இருப்பதாகச் சொன்னார். அவரும், ‘சரிதானே... அதுதானே இருக்கணும்?’ என்றார். அதற்கு ஆபரேட்டர், ‘இல்ல சார்… கா...த...ல்... என தெலுங்கிலும் எழுதப்பட்டிருக்கிறது’’ என்றார். `முதல் நாளே சொதப்புகிறார்களே!' என, கதிர் சார் டென்ஷன் ஆகிவிட்டார்.
அந்தக் காட்சியில் நடிக்க வேண்டியவரை அழைக்க, அவர் உடனே வரவில்லை. என்னைப் பார்த்து, `போங்க... போய் நில்லுங்க’ என என்னை நடிக்க சொன்னார். அது நாங்கள் செய்த சொதப்பலால் எடுத்த முடிவா எனத் தெரியவில்லை. பொதுவாக, எனக்கு திரையில் தோன்றுவதில் உடன்பாடு கிடையாது. ஆனால், முதல் நாளே டைரக்டர் சொன்னதும் என்னால் மறுக்க முடியவில்லை. உதவி இயக்குநர்கள் ஐந்து பேருமே `காதல் வைரஸ்’ படத்தில் தலைகாட்டியிருக்கிறோம். முதல் நாள் ஷூட்டிங்கின்போதுதான் ஜேக்கப் வந்துசேர்ந்தார்.
இவர் பெங்களூரில் டிகிரி, லயோலாவில் எம்.பி.ஏ முடித்துவிட்டு, சினிமாவுக்கு வருகிறாரே என்ற குழப்பம் எங்களுக்கு. வந்தவரிடம் கதிர் சார், `அந்த சூட்கேஸை எடுத்துக்கப்பா’ என்றார். மற்ற உதவியாளர்கள் அனைவருக்கும் அதில் ஒரு சின்ன ஆசுவாசம். கதிர் சாரின் பர்ஸ், ஸ்கிரிப்ட் ஃபைல் என எல்லாமே அதில்தான் இருக்கும். அவர் எங்கு சென்றாலும் சூட்கேஸ் வைத்திருப்பவரும் கூடவே செல்ல வேண்டும். `காதல் வைரஸ்’ படப்பிடிப்பு நடந்த நாட்கள் முழுவதும், ஜேக்கப்பின் கைகளில்தான் அந்த சூட்கேஸ் இருந்தது. படப்பிடிப்பு முழுவதும் ஜேக்கப், கதிர் சாருடனே இருந்தார். இரண்டு ஆண்டுகளில் இரண்டே முறைதான் ஜேக்கப் லீவ் எடுத்திருந்தார். அப்போது சூட்கேஸ் தியாகு கைக்கு வந்துவிடும். கதிர் சாரின் வீடு ஆழ்வார்பேட்டையில் இருந்தது. அவருடன் அவரது அம்மா - அப்பாவும் உடன் இருந்தார்கள். அந்த வீட்டில் உதவி இயக்குநர்களுக்கு என ஓர் அறை உண்டு. அங்கே எப்போது வேண்டுமானாலும் நாங்கள் தங்கிக் கொள்ளலாம். ஜேக்கப், கதிர் சார் வீட்டில் சாப்பிடுவதுதான் வழக்கம்.
ஒருநாள் ஆபீஸ் வந்தவர், இனி எங்களுடன் சாப்பிடுகிறேன் என்றார். எங்களுக்கு என்ன நடந்தது எனப் புரியவில்லை. ஒரு வாரம் கழித்துதான் விஷயத்தைச் சொன்னார். ஒருநாள் சாப்பிடும்போது ஜேக்கப் தயிர் கேட்க... அங்கு இருந்தவர், கதிர் சாருக்கு இல்லாமல் போய்விடுமோ என நினைத்து, `சாருக்கு மட்டும்தான் தயிர் இருக்கிறது' எனச் சொல்லியிருக்கிறார். வழக்கமாக இதுபோன்ற விஷயங்களை ஜேக்கப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார். ஏனோ, அன்று அதில் அப்செட் ஆகிவிட்டார். இது தெரிந்த கதிர் சார், `இந்த வீட்டுல எனக்கு என்ன மரியாதை இருக்கோ, அதே மரியாதை என் உதவியாளர் களுக்கும் இருக்கணும். அவங்களுக்கு இல்லைன்னா, அந்த இடத்துல நான் இருக்க மாட்டேன். இதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்’ எனச் சொல்லிவிட்டார். உதவி இயக்குநர்களை அவ்வளவு முக்கியமானவர் களாகப் பார்ப்பார் கதிர் சார். ஷூட்டிங் இல்லாத நாட்களில் கதிர் சாரே சமைக்கவும் செய்வார். கறி சமைப்பது அவருக்கு பிடிக்கும். அவர் சமைக்க ஆரம்பித்தால் ஜேக்கப் குஷியாகிவிடுவார். சாப்பிட்டதும் கதிர் சார் ஏதாவது ஆங்கிலப் பட டி.வி.டி எடுத்து வரச் சொல்வார். முழு இருட்டில்தான் படம் பார்ப்பார். எல்லா விளக்குகளையும் அணைத்ததும் அந்த கேப்பில், ஜேக்கப் எஸ்கேப் ஆகிவிடுவார். அந்த இரண்டு மணி நேரத்தில் தனது கேர்ள் ஃப்ரெண்டைப் பார்த்துவிட்டு வந்துவிடுவார்.
அப்போதுதான் அவருக்கு நேரமே கிடைக்கும். படம் முடிந்து கதிர் சார் ஜேக்கபைத் தேடும்போது சரியாக வந்துவிடுவார். கதிர் சாரின் படங்களில் சன்ரைஸ் காட்சிகள் அதிகம் இடம்பெறும். மொத்தம் 117 நாட்கள் நடைபெற்ற `காதல் வைரஸ்’ படப்பிடிப்பில், 50 நாட்கள் சன்ரைஸ் கால்ஷீட்தான். சன்ரைஸ் கால்ஷீட் என்றால், அதிகாலை 3 மணிக்கே நாங்கள் வந்துவிட வேண்டும். 4 மணிக்குள்ளாக மொத்த யூனிட்டும் ஆர்ட்டிஸ்ட்டும் தயாராக இருக்க வேண்டும். சூரியன் அது இஷ்டத்துக்குத் தானே வரும்? அது வரும் சில நிமிடங்களில் எந்தத் தவறும் நடக்காமல், அந்தக் காட்சியை எடுத்துவிட வேண்டும் என்ற பதற்றம் எங்களுக்கு இருக்கும். கதிர் சாருக்கு இயற்கையுடான புரிதல் அதிகம். 4:30 மணிக்கு ஓர் இடத்தைக் காட்டி அங்கு கேமரா வைக்கச் சொல்வார்.
அவர் வைக்கும் ஃப்ரேமுக்குக்குள் அவர் சொல்வதைக் கேட்கும் ஒரு நடிகராக சூரியன் எழுந்து வரும்.
`என் ஹீரோ சூரியன்தான். அவனுக்காக மட்டும்தான் நான் காத்திருப்பேன். மத்த யாருக்காகவும் நான் வெயிட் பண்ண மாட்டேன். அந்த மேஜிக்கைப் படம்பிடிப்பதுதான் என் வேலை' என்பார்.
சில நாட்கள் காலை 4:30 மணி வரை அவர் ஸ்பாட்டுக்கே வர மாட்டார். `இன்னைக்கு அந்த லொக்கேஷன்ல சன்ரைஸ் சரியா தெரியாது. அடுத்த லொக்கேஷனுக்கு வந்துடுங்க’ என்பார். அது அவரது சொந்த தயாரிப்பு படம்.
`ஏன் இந்த வெட்டிச்செலவு?' என எங்களுக்குக் கோபமாக வரும். ஆனால் `இன்று அந்த இடத்தில் சூரிய உதயத்தைச் சரியாகப் பார்க்க முடியாது’ என அவர் சொன்ன நாட்களில் எல்லாம் அப்படியேதான் நடந்திருக்கிறது.

கதிர் சாரின் ஞாபக சக்தி நாங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு விஷயம். 10 ஆயிரம் அடி ஃபுட்டேஜ் என்றால், இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக ஓடக்கூடியது. அதில் இருந்து தேவையான 10 அடியை (அதாவது 4 செகண்ட்) மட்டும் அவரால் சரியாக எடுக்க முடியும். எப்போதோ வெட்டி வைத்த 4 ஃப்ரேம்களைக்கூட மறக்காமல் தேவைப்படும் போது எடுக்கச் சொல்வார். நானும் தியாகுவும்தான் வி.டி.விஜயன் எடிட்டிங் அறையில் `காதல் வரைஸ்’ பட வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அங்குதான் எடிட்டர் கிஷோரும் ஜி.பி.வெங்கடேஷும் எனக்கு அறிமுகம்.
`காதல் வைரஸ்’ ஆரம்பித்தபோது அப்ரண்ட்டீஸாகச் சேர்ந்த கிஷோர், படம் முடிவதற்குள் அசோசியேட் எடிட்டர் அளவுக்கு வளர்ந்தார். கிஷோரின் மறைவுக்குப் பிறகு `விசாரணை’ பட எடிட்டிங்கில், வெங்கடேஷ் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். உதவி இயக்குநர்களில் ஜெகதீஷ், மற்ற எல்லா ஏரியாக்களுக்கும் பொறுப்பு ஏற்றுக்கொள்வார். பாலு மகேந்திரா சாருடன் `கதை நேரம்’ வேலை செய்தபோது, `சாரோட படத்துக்கு அவர் எதிர்பார்க்கிற மாதிரி நல்லா வேலைசெய்யணும்’ என்றுதான் நினைப்பேன். ஜெகதீஷுடன் வேலைசெய்தபோதுதான், ஓர் உதவி இயக்குநர் அந்தப் படத்தை தன் படமாகவே நினைத்து வேலைசெய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன்.
எனக்கு அது மிகவும் முக்கியமான ஒரு பாடம். வேலை என வந்துவிட்டால் ஜெகதீஷ் தூக்கம் மறந்து செய்வார். ஒருநாள் வேலை முடிந்து தனது புல்லட்டில் செல்லும்போதே தூங்கி, ஏவி.எம் ஸ்டூடியோவில் மோதி விழுந்துவிட்டார். படப்பிடிப்பு நாட்களில் எங்கள் எல்லோருக்குமே தூக்கம் என்பது ஓரிரு மணி நேரங்கள்தான். `காதல் வைரஸ்' கதைப்படி நாயகி பணக்கார வீட்டுப் பெண். கதையின் பிற்பகுதியில் அவளை ஒரு சாதாரண நடுத்தர வீட்டில் பார்த்ததும் ஹீரோ சோகமாகிவிடுவான். அவன் கையில் இருக்கும் சிகரெட் முழுவதும் எரிந்து சாம்பலாகி கையைச் சுட வேண்டும். சாம்பல் கீழே விழக் கூடாது. ஹீரோ ரிச்சர்டிடம் கதிர் சார், `சாம்பல் விழக் கூடாது’ எனச் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் அது விழுந்துவிடும். நான் `அதைச் செய்து காட்டுகிறேன்’ என்றேன்.
ஒரு சிறிய கம்பியை சிகரெட்டின் உள்ளே நுழைத்துவிட்டு, சிகரெட்டைப் புகைத்தால் முழு சாம்பலும் அப்படியே நிற்கும். `தி கேட்ச்சர் இன் தி ரை' நாவலில் படித்ததை அங்கே பயன்படுத்தினேன். கம்பியைச் செருகி, ஓரமாகச் சென்று சிகரெட் புகையை இழுத்து விட்டுக்கொண்டிருந்தேன். திடீரென, ஸ்பாட் முழுவதும் அமைதி. கதிர் சார் நான் செய்வதை மொத்த யூனிட்டையும் அழைத்துப் பார்க்க வைத்திருக்கிறார். ஸ்டில் போட்டோகிராஃபர் அதை படம் எடுத்துக்கொண்டிருந்தார். எதையும் ஜாலியாக எடுத்துக்கொண்டு, அந்த இடத்தைக் கலகலப்பாக்குவது கதிர் சார் ஸ்டைல். `காதல் வைரஸ்' படப்பிடிப்பு பாதிக்கும் மேல் முடிந்திருந்தது. அப்போது கதிர் சாரைப் பற்றி பத்திரிகையில் ஒரு செய்தி வெளிவந்திருந்தது. அடுத்த நாள் சம்பந்தப்பட்டவர் வீட்டில் இருந்து எங்கள் அலுவலகத்துக்கு போன் வந்தது. நான்தான் எடுத்து கதிர் சாருக்கு கனெக்ட் செய்தேன். திடீரென அவர் ரூமில் இருந்து சத்தம் வந்தது. `உங்ககிட்ட காசுக்கு மட்டும் வேலைசெய்றவங்க இருப்பாங்க இல்ல. அவங்க சொல்லியிருப்பாங்க. என் பசங்களைப் பத்திலாம் பேச உங்களுக்கு ரைட்ஸ் கிடையாது.
அவங்களைப் பத்தி எனக்குத் தெரியும். இப்படிச் சொன்னதுக்கு நீங்க அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டே ஆகணும்’ எனக் கோபமாகக் கத்திக் கொண்டிருந்தார். நாங்கள்தான் கதிர் சாரைப் பற்றி தவறான செய்தியை பத்திரிகைக்குச் சொல்லி விட்டதாக, மறுமுனையில் இருந்தவர் நினைத்து விட்டார். அடுத்த வாரமே அவரது வீட்டில் எங்களுக்கு ஒரு விருந்து வைத்தார். அது மறைமுகமாக அவர் எங்களிடம் கேட்ட மன்னிப்பு என எனக்குத் தோன்றியது. படம் கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்திருந்தது. `ஹேய்... ஹேய்... என்ன ஆச்சு உனக்கு?...’பாடல் ஷூட் மட்டுமே மீதியிருந்தது. அன்று கதிர் சார் நடிக்க வேண்டியது. அதில் ஒரு சிறு குழப்பம் நடந்து விட்டது. மறுநாள் சாரை அழைத்து `ஊருக்குப் போறேன் சார்... முக்கியமான வேலை. நான் ஷூட்டிங்குக்கு வரலை’ என்றேன். அவருக்குப் புரிந்துவிட்டது. `சரி' எனச் சொல்லிவிட்டார். மூன்று நாட்களுக்குப் பின்னர் அவரை அலுவலகத்தில் சந்தித்து, தனியாக ஸ்கிரிப்ட் எழுதப்போவதாகச் சொன்னேன்.
`நல்ல விஷயம். பண்ணுங்க’ என்றார். அவர் உதவியாளர்களில் ‘சொல்லாமலே’ இயக்குநர் சசிக்குப் பிறகு, அவரைச் சந்தித்து `நான் இனி வர மாட்டேன்' எனச் சொல்லி விட்டுச் சென்றது நான் மட்டும்தானாம். `நீங்க சொல்லாமப் போனாலும் நான் எதுவும் கேட்க போறது இல்லை. ஆனா, எந்தப் பிரச்னைனாலும் ஃபேஸ் பண்ற உங்க கான்ஃபிடன்ஸ் நல்ல விஷயம். கதை பண்ணிட்டு மணிரத்னத்திடம் போய்ச் சொல்லுங்க. நீங்க பண்ணுவீங்கனு நான் நினைக்கிற கதைக்கு, அவரை மாதிரி ஒரு தயாரிப்பாளர் கிடைச்சா நல்லாருக்கும்’ என்றார். `அவர், அவருடைய அசிஸ்டன்ட்ஸுக்குத்தானே சார் சான்ஸ் தர்றாரு’ என்றேன். `அப்படின்னு யாரு சொன்னது?’ `இல்லை சார். அப்படித்தானே நடந்துட்டுருக்கு.' `மணிரத்னம் ஆபீஸ்ல உங்களுக்குப் படம் இல்லைன்னு அவர் வெளியே அனுப்பட்டும். நீங்களாவே உங்களை வெளியே அனுப்பிக்காதீங்க. உங்களுக்குக் கிடைக்கும். போய் டிரை பண்ணுங்க’ என்றார். அவர் சொன்னது அப்போது மட்டும் இல்லை. தொடர்ந்து எனக்கு ஒரு தெளிவைக் கொடுத்திருக்கிறது. பின் ஆபீஸில் இருந்த நண்பர்களிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, நான் நம்பிக்கையுடன் வெளியே வந்தேன்.
- பயணிப்பேன்...
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!
Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan