மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 38

கலைடாஸ்கோப் - 38
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - 38

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 38

நாஸ்கா லைன்ஸ்

`மேலே இருந்து ஒருத்தன் பார்த்துட்டிருக்கான்' என நம் ஊரில் சொல்வார்கள். மனிதர்களின் அழிச்சாட்டியத்தைப் பார்த்து, மூத்தோர்கள் சொன்ன வாக்கு இது. நம்மில் பலர் அதை நம்புவது இல்லை. ஆனால், நாஸ்கா பழங்குடிகள் அதை நம்புகிறார்கள். `தங்களுடைய பிரமாண்ட ஓவியங்களால் கடவுளிடம் கம்யூனிகேட் பண்ண முனைந்திருக்கிறார்கள்' என்கிறார்கள் மானுடவியலாளர்கள்.

`எந்திரன்' திரைப்படத்தில் குரூப் டான்ஸர்கள் பற்களால் தந்தியடிக்க, ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் `கிளிமாஞ்சாரோ...' என இறகு நடனம் ஆடுவார்கள். அது பெரு நாட்டின் மச்சு பிச்சு என்பது உங்களுக்குத் தெரியும். நாஸ்கா என்பது, பெரு நாட்டின் வறண்ட நிலப் பகுதி. அங்கேதான் இந்த நாஸ்கா லைன்ஸ் என்கிற பிரமாண்ட ஓவியங்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்டிருக்கின்றன.

பல மீட்டர் அகல-நீளங்களில் வரையப்பட்டிருக்கும் இந்த ஓவியங்களில் சில, கிலோமீட்டர்களில் நீண்டவை. பல்வேறு விலங்குகள், பறவைகள் என விரிந்துகிடக்கும் இந்த ஓவியங்களை, தரையில் நின்று பார்த்தால் வெறும் கோடுகளாக மட்டுமே தெரியும். விமானத்தில் இருந்தோ, சாட்டிலைட் புகைப்படங்கள் வழியாகவோ பார்த்தால்தான் ஓவியம் முழுமையாகத் தெரியும்.

கலைடாஸ்கோப் - 38

சாதாரணமாக சில பல அடிகள் நீளமும் அகலமும் கொண்ட, அரசியல்வாதிகளின் கட்அவுட்டுகளை வரையவே நம் ஊரில் ஆர்ட்டிஸ்ட்கள் நூல் பிடித்து, அளவு எடுத்து... எனக் கஷ்டப்படுவார்கள். அப்படி இருந்தும் பிள்ளையார் பிடிக்கக் குரங்கான கதையாக சில பல்லிளிக்கும். ஆனால், இந்த நாஸ்கா ஓவியங்களை, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே துல்லியமாக எப்படி இவ்வளவு பிரமாண்டமாக வரைந்திருப்பார்கள் என்பதை வழக்கம்போல சொல்ல வேண்டுமானால் `புரியாத புதிர்’.

இந்த வகையான நில ஓவியங்களை `Geoglyphs' எனச் சொல்வார்கள். உலகின் வேறு சில நாடுகளிலும் இந்த வகையான பிரமாண்ட ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. ஏலியன்களின் வேலையாக இருக்குமோ எனச் சந்தேகப்படுகிறார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் ஏலியன்களின் ட்ரவுசர்களைக் கழற்றுவதையே இவர்கள் வேலையாக வைத்திருக்கிறார்கள்!

கலைடாஸ்கோப் - 38

ஸ்ட்ரா

வரலாறு, எப்போதும் பெரிய விஷயங்களையே பேசுகிறது. ஒரு மாறுதலுக்காக நம்மைச் சுற்றியிருக்கும் சின்னஞ்சிறு விஷயங்களைப் பற்றி பேசுவதுதான் நானோ ஹிஸ்டரி எழுதுவதின் நோக்கம். அந்த வகையில் இந்தக் கோடைகாலத்தில் குளிர்பானங்களை, பழரசங்களை உறிஞ்சிக் குடிக்கப் பயன்படுத்தும் ஸ்ட்ராவின் வரலாற்றை கொஞ்சமே கொஞ்சம் புரட்டினேன்.

கி.மு-வில் சுமேரியர்கள் பீர் குடிப்பதற்காகக் கண்டுபிடித்த வஸ்துதான் ஸ்ட்ரா. அதாவது உலோகக் குழாய்கள்தான் அந்தக் கால ஸ்ட்ரா. வசதிக்கு ஏற்ப தங்கத்தில்கூட செய்திருக்கிறார்கள். இந்தியாவில் இந்த மாதிரி ஸ்ட்ராக்களைப் பயன்படுத்தியிருக்கிறார்களா? ஆதாரம் இல்லை. ஆனால், நம் ஊர் கெண்டிகளைப் பார்த்தால் ஸ்ட்ராவை செம்புடன் இணைத்து செய்த டிசைன் போலத்தான் தெரிகிறது. ஸ்ட்ராவைத் தனியாக மறைத்துவைத்துவிட்டு தேட வேண்டாம் பாருங்கள். ஆனால் கெண்டிகள், இன்று சடங்குகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

இன்றைய நவீன ஸ்ட்ராக்களைக் கண்டுபிடிக்க காரணமானவர் மார்வின் ஸ்டோன் என்னும் வாஷிங்டன் கோபக்காரர். நாணலால் செய்த ஸ்ட்ராவில் லெமன் ஜூஸ் குடித்தவர், நாணலின் ஸ்மெல் ஜூஸில் வரவும், கண்ணாடி கிளாஸைத் தூக்கிப்போட்டு கடுப்பில் உடைத்திருக்கிறார்.பேப்பரை பென்சிலில் சுற்றி ஒட்டிவிட்டு, காய்ந்ததும் பென்சிலைக் கழற்றி எடுக்க பேப்பர் ஸ்ட்ரா தயார். நண்பர்களிடம் கிடைத்த வரவேற்பைப் பார்த்தவர், இதற்கு 1888 -ம் ஆண்டில் பேடன்ட் வாங்கிவிட்டார்.

ஸ்ட்ராவின் மேல் பகுதியில் சுருக்கத்துடன் வளையும் அமைப்பை உருவாக்கியவர் ஜோசப் பி.ஃப்ரைடுமேன் (Joseph B. Friedman.) `தெறி'யில் வரும் பாசக்காரத் தந்தை ஜோசப் போலதான் இந்த ஜோசப்பும். நீளமான ஸ்ட்ராவில் தன் செல்ல மகள் கஷ்டப்பட்டு மில்க்‌ஷேக் குடிப்பதைக் காணச் சகிக்காமல், வளையும் ஸ்ட்ராக்களைக் கண்டு பிடித்தார். வெள்ளைக்காரர்கள் எதையும் விட்டுவைக்காமல் பேடன்ட் வாங்கிவிடுவார்கள். ஆனால், நமது கிளிஷே காதலர்கள் ஒரே இளநீரில் இரண்டு ஸ்ட்ராக்கள் போட்டுக் குடிப்பதை யாராவது பேடன்ட் வாங்கினால் தேவலை.

கலைடாஸ்கோப் - 38

ஷாப்

21 -ம் நூற்றாண்டு (கலர்)


``டைம் டிராவல் ஷாப்பிங்குக்கு டோக்கன் வாங்கிய அனைவருக்கும் வந்தனம்” - செயற்கையான புன்னகையுடன் ஒலிபெருக்கியில் சொன்னான் வரவேற்பாளன். டெக்னோ மாலின் தளத்தில் கூட்டம் முண்டியடித்தது.

“இந்த அறையின் மறுமுனையில் இருக்கும் கதவு, 18 -ம் நூற்றாண்டு அமெரிக்காவுக்கு உங்களை அழைத்துச் செல்லும். பத்தே நிமிடங்களில் அந்தக் கதவை நீங்கள் அடையலாம். அங்கே நீங்கள் விரும்பிய எதையும் ஷாப்பிங் செய்துகொள்ளலாம். டோக்கன் வாங்கிய அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள். முதல் 25 டோக்கனுக்கு எங்கள் ஸ்பெஷல் வாழ்த்து” என்றபடி கதவை ஸ்டைலாகத் திறந்தான்.

கூட்டம், ஆர்ப்பரித்துக் கத்தியது. ``ஷாப்பிங்… ஷாப்பிங்…” என்ற கோஷம், மாலின் கண்ணாடிக் கூரைகளில் எதிரொலித்துச் சுழன்றது.

“நீங்கள் எதற்கு இந்த டைம் டிராவல் ஷாப்பிங்கில் கலந்துகொண்டீர்கள்?” - முதல் டோக்கன் வாங்கிய இளைஞரிடம் மைக்கை நீட்டினாள் லிப்ஸ்டிக் பெண் ஒருத்தி.

“ஷாப்பிங்… இட்ஸ் ப்யூர் அடிக்‌ஷன். எதுவா இருந்தாலும் வாங்குவேன்” என்றான்.

கூட்டம் ``ஆம்'' என அலறியது.

கலைடாஸ்கோப் - 38

25 பேரும் கதவுக்குள் நுழைந்ததும் தானாக மூடிக்கொண்டது. கும்மென்ற இருள் வந்து அப்பியது.

18 -ம் நூற்றாண்டு (பிளாக் அண்ட் ஒயிட்)

ரிச்மாண்ட் ஸ்லேவ் மார்க்கெட் பரபரப்பாக இருந்தது.

பைப்பில் புகையை இழுத்தபடி தொப்பிக்குக் கீழே கன்னத்தில் நீண்டிருந்த கிருதாவைச் சொறிந்துகொண்டே கனமான ஒரு கனவான் கேட்டான், “நாங்கள் ஆர்டர் செய்த 25 அடிமைகள் எங்கே?”
“இன்னும் 10 நிமிஷம் பொறுங்கள்” என்றபடி மூடியிருந்த கதவை நோக்கினான் ஏஜென்ட்!

கலைடாஸ்கோப் - 38

ஃபிலிம் ரோல்

`அக்காவின் நிச்சயதார்த்தத்துக்கு நான்தான் போட்டோ எடுப்பேன்' என அடம்பிடித்து யாரிடம் இருந்தோ ஆட்டோமேட்டிக் கேமராவை வாங்கி, நீங்கள் விழுந்து விழுந்து படம் எடுத்திருக்கிறீர்களா? பெருசுகள் வேறு `இதை எடு, அதை எடு' எனச் சொல்லி, உங்களைப் படுத்துவார்கள். ஒட்டுமொத்த ஃபங்ஷன் கூட்டமும் உங்களையே கூர்ந்து கவனிக்கும். டென்ஷனில் ஃப்ளாஷ் அடித்தபடி திரிந்திருப்பீர்கள்.

ஃபிலிமைக் கழுவி பிரின்ட் போட்டபோதுதான் தெரிந்திருக்கும், நடுக்கத்தில் உருவங்கள் அனைத்தும் நடமாடும் ஆவிகளாக மாறி, குறுக்கும் நெடுக்குமாகப் பறந்துகொண்டிருப்பதை. அவுட் ஆஃப் ஃபோக்கஸ் என்ற வாக்கியத்தை அந்தக் காலத்தில் நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். இப்படி உங்களின் புகைப்படக் கலைஞன் கனவு, ஃபிலிம் ரோல்போல உங்களுக்குள்ளே சுருண்டு மறைந்திருக்கும்.

இந்த ஆட்டோமேடிக் ஃபிலிம் கேமரா வந்தபோது, ஊரில் பல பேர் அமெச்சூர் போட்டோகிராஃபர்கள் ஆனது இப்படித்தான். கேமராவின் முதுகைத் திறந்து ஃபிலிம் ரோலை ஒளிபடாமல் இழுத்து மாட்ட வேண்டும். பிறகு, கிட்டத்தட்ட 32 போட்டோக்கள் (சில ஃப்ரேம்கள் மாட்டும்போது எக்ஸ்போஸ் ஆகி கறுப்பாகிவிடும்) எடுக்கலாம். முடிந்ததும் தானியங்கியாக ரீவைண்ட் ஆகி ரோலுக்குள் மறுபடி சுருண்டுக்கொள்ளும். பவ்யமாகத் திறந்து எடுத்து, பக்கத்து டவுனில் இருக்கும் ஸ்டுடியோக்காரர்களிடம் கொடுத்தால் பிரின்ட் போட்டுத் தருவார்கள். `இந்த ஸ்டுடியோக்காரர்களுக்கும் தையல்காரர்க ளுக்கும் நம்மை நாலு முறை அலையவிட்டால்தான் இரவில் தூக்கம் வரும்போல' எனக் கடுப்பாவது போனஸ் அனுபவம்.

பிறகு, டிஜிட்டல் கேமராக்கள் படையெடுத்தபோது இந்த ஆட்டோமேடிக் ஃபிலிம் ரோல் கேமராக்கள் வரலாற்றின் தொழில்நுட்ப நாடகத்தில் தன் `ரோலை’ இழந்தன!

கலைடாஸ்கோப் - 38

டெய்சி கேர்ள்

இளவயதில் உள்ளூரில் அரிய ஆர்ட்டிஸ்ட்டாக நான் கிடைத்ததால், தேர்தல் காலங்களில் அண்ணன்களும் மாமாக்களும் என்னை ஹைஜாக் செய்து, அவரவர் கட்சிகளுக்கு பேனர் எழுதுவது, சுவரில் எழுதுவது என வேலை வைப்பார்கள். அரசியல் விளம்பரங்கள், இப்படி சுவர் எழுத்துக்கள் மூலமாகத்தான் நமக்கு அறிமுகமாயின. சைன் போர்டு ஆர்ட்டிஸ்ட்டுகள் தேர்தல் காலத்தில் சுவரெழுத்து, சின்னம் வரைதல் என கல்லாகட்டுவார்கள். இப்போதைய சேனல்காரர்கள் அரசியல் விளம்பரங்களை மொத்தக் குத்தகையில் எடுத்துவிடுகிறார்கள்.

இன்டர்நேஷனல் அரசியல் கேம்பைன்களில் `அட்டாக் ஆட்' என்னும் ஒரு வகை இருக்கிறது. `கட்சியையோ கட்சித் தலைவரையோ பெர்சனலாகப் போட்டுத்தாக்குவது' என அதற்கு விளம்பர அகராதி விளக்கம் தருகிறது. உள்நாட்டு `அட்டாக் ஆட்’களைப் பார்த்து வெறுப்பாக இருப்பீர்கள். அதனால், உலக அளவில் ஓர் உதாரணம் சொல்கிறேன். 1963 -ம் ஆண்டில் நடந்த அமெரிக்கத் தேர்தலின்போது பிரபலமான விளம்பரம் அது. `டெய்சி கேர்ள் (Daisy Girl) விளம்பரம்' எனச் சொன்னால், வயதான அமெரிக்கர்களுக்கு ஞாபகம் இருக்கலாம். லிண்டன் பி.ஜான்சனுக்கும் (Lyndon B.Johnson) பேரி கோல்டுவாட்டருக்கும் (Barry Goldwater) இடையே நடந்த தேர்தல் போட்டியின்போது, லிண்டன் சார்பாக வெளிவந்த விளம்பரம் அது.

ஒரே ஒருதடவைதான் ஒளிபரப்பப்பட்டாலும் இன்று வரை பேசப்படுகிறது.

பேரி கோல்டுவாட்டர், ராணுவத்தைப் பலப்படுத்த வேண்டும் என்றும், அணுகுண்டை ஆதரித்தும் பிரசாரத்தில் பேசிவிட, அதையே பாயின்டாகப் பிடித்து அணுகுண்டுக்கு எதிராக லிண்டன் செய்த விளம்பரம்தான் `டெய்சி கேர்ள்'. பூக்களை ஒவ்வொன்றாக எண்ணியபடி பறிக்கும் ஒரு சிறுமி பற்றிய சிம்பிளான விளம்பரம். அவள் எண்ணுவதும் அணுகுண்டுக்கான கவுன்ட்டவுணும் இணைந்து எதிர்பாராத நொடியில் நம்மை உலுக்கிவிடுகிறது. அமெரிக்க மக்களையும் உலுக்கிவிட்டதுபோல. அந்தத் தேர்தலில் லிண்டன் ஜான்சன்தான் ஜெயித்தார்.