Published:Updated:

சமகாலத் தலைவர்களை கதைமாந்தர்களாக்கிய கல்கி..! கதை சொல்லிகளின் கதை - பாகம் 15

சமகாலத் தலைவர்களை கதைமாந்தர்களாக்கிய கல்கி..! கதை சொல்லிகளின் கதை - பாகம் 15

சமகாலத் தலைவர்களை கதைமாந்தர்களாக்கிய கல்கி..! கதை சொல்லிகளின் கதை - பாகம் 15

Published:Updated:

சமகாலத் தலைவர்களை கதைமாந்தர்களாக்கிய கல்கி..! கதை சொல்லிகளின் கதை - பாகம் 15

சமகாலத் தலைவர்களை கதைமாந்தர்களாக்கிய கல்கி..! கதை சொல்லிகளின் கதை - பாகம் 15

சமகாலத் தலைவர்களை கதைமாந்தர்களாக்கிய கல்கி..! கதை சொல்லிகளின் கதை - பாகம் 15

முந்தைய பாகங்கள்:

பாகம்-2- ஆ.மாதவய்யா

பாகம்-5- மௌனி

பாகம்-6 - கு.பா.ரா

பாகம் - 13 - எஸ்.வி.வி

”கல்கியால்தான் சிறுகதை, தமிழ் மண்ணில் இரண்டறக் கலந்தது. அந்த அஸ்திவாரத்தின்மீதே சிறுகதை கட்டியெழுப்பப்பட்டு, சிகரமும் அமைக்கப்பட்டது. அந்தச் சிகர வளர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் மணிக்கொடி குழுவினர்” என்று தமிழறிஞரும் இடதுசாரி சிந்தனையாளருமான இலங்கைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிடுகிறார். ஆனாலும், மணிக்கொடி குழுவினரும் அதைத் தொடர்ந்த சிற்றிதழாளர்களும் `அகல உழுதவர்’, `தழுவல் கதைகள் எழுதியவர்’ போன்ற அடைமொழிகளுடனே கல்கியைக் குறிப்பிடுவர்.

தான் இறக்கும் வரை கல்கியுடன் நேருக்குநேர் மல்லுக்கு நின்றவர், புதுமைப்பித்தன் எனலாம். அவர், `ரஸமட்டம்’ என்ற புனைபெயரில் எழுதிய விமர்சனக் கட்டுரைகளில் தாக்குதலுக்கு அதிகம் ஆளானவை, கல்கியின் எழுத்துகளே. கல்கியின் வாதங்களை ``மட்டரக மூளைகளுக்கு உதயமாகும் அக்குத்தொக்கற்ற வார்த்தைக் குப்பை” என்கிற அளவுக்குக் கடுமையான வார்த்தைகளால் சாடியவர் புதுமைப்பித்தன்.
`என்னுடைய கதைகள் எல்லாம் மட்டமான மொழிபெயர்ப்பு என்பதாக பத்து வருடங்களுக்கு முன்பே சிலர் எழுதினார்கள். விவாதங்களில் நேர்மறையாக பதில் சொல்ல முடியாதபோதெல்லாம், ரஸமட்டக் கும்பல்கள் இந்த பூச்சாண்டியை எடுத்துவிடுவது வழக்கம்' என்று புதுமைப்பித்தன் மறைவுக்குப் பிறகும் கல்கி எழுதிக்கொண்டிருந்தார். `என்னுடைய கதைகளின் தரத்தைத் தீர்மானிப்பதற்கு, தமிழ்நாட்டில் பதினாயிரக்கணக்கான வாசகர்களும், கல்வி அறிவில் சிறந்த பெரியோர்களும் இருக்கிறார்கள்' என்றும் 1949-ம் ஆண்டில் கல்கி எழுதினார். புதுமைப்பித்தன் 1948-ம் ஆண்டில் காலமாகிவிட்டார்.

புதுமைப்பித்தனின்  படைப்புலகை ஆய்வுசெய்த ஆய்வாளர் ராஜ்கௌதமனின் கருத்து, ``எனக்கு உடன்பாடானதாகவும், இந்த விஷயத்தில் அறிவுப்பூர்வமானதாகவும் படுகிறது. இந்திய-தமிழகத்தில், மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் வணிகச் சக்திகளின் பரவலின் ஊடாக நவீன இலக்கியம் தோன்றியது. தமிழகத்தில், 1930-களில் நவீன  இலக்கியத்தில்  `படைப்பு x சரக்கு' என்கிற தர நிர்ணயம் உருவானது. இந்த இரண்டையுமே மேற்கத்திய முதலாளியம் உற்பத்திசெய்த நவீனத்துவத்தின் இரு வகை எழுத்துகள் என்றே கருத வேண்டும். சரக்குமயமான எழுத்தில் தரமில்லை என்று மணிக்கொடி படைப்பாளிகள் தாக்குதல் நடத்தியதில் அர்த்தமில்லை என்பது இப்போது தெரிகிறது. 
சரக்குக்கு உடனடியான செலாவணி மதிப்பும், வெகுமக்கள் ரசிப்பும் வரவேற்பும், புகழும் லாபமும் உண்டு. ஆனால், அற்ப ஆயுளைக்கொண்டது. அன்றாடச் செய்திகளைப்போல நுகர்ந்ததும் எறிந்துவிடத்தக்கது. படைப்பு இப்படிப்பட்டதன்று. ஒப்பீட்டளவில் நீடித்த ஆயுளைக்கொண்டது. பொருளைவிட சீரிய நோக்கங்கள்கொண்டது. அது, மாபெரும் ஆளுமையின் பரிபூரண வெளிப்பாடு. இப்படிப்பட்ட நிலையில், ஒன்றில் மற்றதை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது'' என்பது ராஜ்கௌதமனின் தீர்ப்பு.

`கல்கி என்று ஏன் பெயர் வைத்துக்கொண்டீர்கள்?' என்கிற கேள்விக்கு அவரே சொன்ன பதில்,
``நான் கல்கி என்ற புனைபெயரில் முதன்முதலாக எழுதிய கட்டுரையைப் படித்தவர்களுக்கு, இந்தப் புனைபெயரின் அர்த்தம் புரியும். நான் பழைமையான சம்பிரதாயங்களையும் அர்த்தமற்ற பழக்கவழக்கங்களையும் விட்டொழித்து, புதுமை யுகத்தை மலரச்செய்ய வேண்டும் என்ற கருத்தை அந்தக் கட்டுரையில் வெளியிட்டேன். இதுவரை கழிந்துபோன யுகங்களைத் தவிர்த்து, புதுயுகத்தை சிருஷ்டிக்கப்போவதாக ஒவ்வோர் இளம் எழுத்தாளரும் எண்ணிக்கொண்டு எழுதுவது இயற்கை. அதுபோலவே நானும் அந்தக் காலத்தில் ஒரு புதுயுகத்தை சிருஷ்டிக்கப்போகும் பெருவீரனாக என்னை நினைத்துக்கொண்டு, பகவானின் பத்தாவது அவதாரமும் புதுயுகத்தைக் குறிப்பதுமான `கல்கி' என்ற புனைபெயரை அப்போது வைத்துக்கொண்டேன். 

ஜோதிடம் பார்ப்பது, சகுனம் பார்ப்பது முதலான அர்த்தமற்ற வழக்கங்களை விட்டொழிக்க வேண்டும் என்று `கல்கி’ என்ற புனைபெயருடன் எழுதிய எனது முதலாவது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். புதிய கருத்துகளை வெளியிட்டு, வாசகர்களின் சிந்தனையை புதிய திசையில் திருப்பி, புதிய யுகத்தை சிருஷ்டிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன்தான் `கல்கி’ என்ற புனைபெயர் பூண்டேனே தவிர, வேறு எந்தக் காரணமும் கிடையாது.”

மேற்கண்ட வாசகங்கள், `பொன்னியின் புதல்வர்’ என்ற பேரில் கல்கிக்கும் கல்கி குடும்பத்துக்கும் நெருக்கமான சுந்தா அவர்களால் எழுதப்பட்ட கல்கியின் வாழ்க்கை வரலாற்று நூலில் பதிவுசெய்யப்பட்டவை. 912 பக்கங்களில் ஏராளமான புகைப்படங்களுடன் இந்த வரலாற்று நூல் வெளிவந்துள்ளது.

இந்த நூல் பற்றியும் `புதுமைப்பித்தனின் வரலாறு (ரகுநாதன் எழுதியது)' நூலுடன் ஒப்பிட்டு காரசாரமான விவாதம் இலக்கிய உலகில் உண்டு. புதுமைப்பித்தன் வரலாற்று நூலின் காலச்சுவடு மறுபதிப்புக்கான முன்னுரையில், புதுமைப்பித்தனின் படைப்புகளை செம்பதிப்பாக வெளிக்கொண்டுவந்தவரும், புதுமைப்பித்தனுக்கே பிச்சனாகிவிட்ட ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதுகிறார்:
`இவ்வளவு முக்கியமான ஒரு நூல் உருவான கதை, சுவையானது. புதுமைப்பித்தனுக்கு எதிரான ஆளுமையாக இருவருடைய வாழ்நாளில் மட்டுமல்லாமல் மறைவுக்குப் பிறகும் கட்டமைக்கப்பட்ட கல்கியின் வரலாறு எழுதப்பட்ட கதையோடு இதை ஆழ்ந்து நோக்கலாம். கல்கியின் வாழ்க்கை வரலாறான `பொன்னியின் புதல்வர்' 1974 ஆகஸ்ட் முதல் இரண்டு ஆண்டுகள் கல்கி வார இதழில் தொடராக வெளிவந்தது. 1976 டிசம்பரில், கல்கியின் 78-வது பிறந்தநாளையொட்டி நூலாக்கம் பெற்றது. டெம்மி அளவில் ஏறத்தாழ 900 பக்க அளவிலான பென்னம்பெரிய நூல் அது. எழுதியவர், தொடக்கக்கால மணிக்கொடி எழுத்தாளரும், பிறகு கல்கி  குழுவில் இடம்பெற்றவருமான மே.ரா.மீ.சுந்தரம் என்கிற சுந்தா. 

கல்கி நிறுவனத்தின் முழு ஆதரவுடனும் புரத்தலுடனும் தி.சதாசிவம், கல்கியின் மகன் கி.ராஜேந்திரன் உள்ளிட்ட குடும்பத்தினரின் ஒத்துழைப்புடனும்  வெளிவந்த அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கை வரலாறு அது. இரண்டு ஆண்டுகளுக்குமேல் உழைப்பை வாங்கி, கல்கி குழுவைச் சேர்ந்த செல்வாக்கான பல பிரமுகர்களின் ஒத்துழைப்புடன், பல நூலகங்களிலிருந்து சேகரித்த ஏராளமான தகவல்களையும்கொண்டு எழுதப்பட்ட நூல் அது. கல்கி பணியாற்றிய `நவசக்தி', `விமோசனம்', `ஆனந்த விகடன்', `கல்கி' ஆகிய இதழ்களை முழுமையாகவும் முறையாகவும் பயன்கொண்டு, பொருத்தமும் சுவையும் உடைய ஏராளமான மேற்கோள்களை சுந்தா எடுத்தாண்டிருப்பார். வாழ்க்கை வரலாறு எழுதுவது எப்படி என்பதற்கு, ஒரு பாடப்புத்தக முன்மாதிரி என்றும் இதைச் சொல்லலாம். (இருந்தாலும் அந்த நூல் விற்பனையாகாமல், இருபது ஆண்டுகளுக்குமேல் வானதி பதிப்பகத்தில் கிடந்து, சில ஆண்டுகளுக்கு முன்புதான் மறு பதிப்பாயிற்று.)

சத்தான உணவும் குங்குமப்பூ போட்ட பாலும் பருகி வளர்ந்த தாய்க்குப் பிறந்த சுந்தாவின் பொன்னியின் புதல்வரோடு ஒப்பிடுகையில், ரகுநாதனின் புதுமைப்பித்தன் வரலாறு போஷாக்கு இல்லாமல் பிறந்த குழந்தை. ஆனால், நிறைமாதக் குழந்தையின் வனப்புடன் பிறந்தவுடன்  நஞ்சுக்கொடியைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு ஓடிய அவதாரப் பிறப்பு.
கல்கியும் புதுமைப்பித்தனும் மறைந்து வெகுகாலம் ஆன பிறகும், அவர்களுடைய ஆவிகள் இன்னும் இந்தப் பூமியில் இறங்கிச் சண்டையிடுவதுபோன்ற பிரமை நமக்கு ஏற்பட்டாலும், கல்கியின் வாழ்க்கை வரலாறு மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது என்பதை புதுமைப்பித்தனின் ஆவி ஏற்றுக்கொண்டுள்ளதை நாம் அவதானிக்கலாம். சென்னையில், 1950-ம் ஆண்டில் கூடிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தில், புதுமைப்பித்தன் குடும்பத்துக்கு நிதி திரட்ட வேண்டும் என்கிற தீர்மானத்தை சங்கத் தலைவர் கல்கி முதலில் தவிர்க்க முயன்றாலும், பிறகு அதைச் செயலாக்கும் முயற்சியில் முனைப்புடன் செயல்பட்டார் என்று அதே முன்னுரையில் சலபதி குறிப்பிட்டுள்ளார்.

கல்கியின் நாவல்களான `அலை ஓசை', `கள்வனின் காதலி', `சிவகாமியின் சபதம்', `தியாக பூமி', `பார்த்திபன் கனவு', `பொன்னியின் செல்வன்' போன்றவை (அவர் 12 நாவல்கள் எழுதியிருப்பினும்), அவருக்கு பெரும்புகழை ஈட்டித்தந்தன. நாவலாசிரியராக அவர் கொண்டாடப்பட்ட அளவுக்கு சிறுகதை ஆசிரியராகக் கொண்டாடப்படவில்லை. சிறுகதைகளையும் நாவல் பாணியிலேயே எழுதினார் என்றுதான் சொல்ல வேண்டும். சிறுகதையின் வடிவக்கச்சிதம் அவருக்குப் பிடிபடவில்லை.

பேராசிரியர் எம்.வேத சகாயக்குமார், தம் `தமிழ்ச் சிறுகதை வரலாறு' (முதற்பகுதி) என்ற நூலில், `அவர் (கல்கி) கதைகளில் சிறுகதைக்குரிய எந்தவித இயல்பையும் காண முடியாது. சிறுகதையில் அமைந்திருக்கவேண்டிய ஒருங்கிணைப்புப் பற்றி  அவர் என்றுமே கவலைப்பட்டதில்லை. அவர் கவனமெல்லாம், வாசகர்களைச் சுவைப்படுத்துவதற்கான தந்திரங்கள் மீதுதான்' என்று குறிப்பிடுகிறார்.

தீவிர இடதுசாரி ஆய்வாளரான அமரர் கோ.கேசவன், ``கல்கியின் கதைகள் வாசகர்களை ஆட்கொண்டன என்றே வரலாறு குறிப்பிடுகிறது. ஆனால், உண்மை மாறுபட்டுள்ளது. கல்கியின் கதை வடிவங்களை வாசகர்களே ஆட்கொண்டு நிர்ணயித்துள்ளனர் என்பதே உண்மையான வரலாறு” என்கிறார். ``கல்கிக்கு புதினம் எழுதுவதில் இருந்த பொறுப்பு, கவனம் சிறுகதையில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கல்கி ஒரு முதல்தர சிறுகதை எழுத்தாளர் அல்ல. இரண்டாம் தர எழுத்தாளர்களில் நடுவில் இருப்பவர்” என்பது, முற்போக்கு எழுத்தாளரான சிகரம் ச.செந்தில்நாதனின் கருத்து. ``சிலர் கூறுவதுபோல `கல்கித் தமிழ்’ என்ற அந்த எளிய கலகலப்பான நடையில் எழுதி பல்லாயிரம் வாசகர்களை ஈர்த்தவராயிற்றே அவர்” என்பது அருணன் கூற்று.

முதலில் ஆனந்த விகடனிலும், பிறகு தன் சொந்த பத்திரிகையான `கல்கி’யிலும் அவர் தொடர்ந்து  சிறுகதைகள் எழுதினார். சிறுகதை என்கிற வடிவம் அறிமுகமான 1920-களிலிருந்தே கல்கி, கதைகள் எழுதிக்கொண்டிருந்தார். அந்த வடிவத்தை மக்களிடம் பரவலாக எடுத்துச்சென்ற முன்னோடி என அவரைக் குறிப்பிட்டாக வேண்டும். அவர், ஆழ உழாமல் அகல உழுதவராக இருக்கலாம். வாசகனுக்கு வால் பிடித்தவர் என்று விமர்சிக்கப்பட்டிருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக ஜனரஞ்சக எழுத்து என்பதன் அடையாளமாக அவர்தான் திகழ்கிறார். அந்தப் படை வரிசையில் அவர்தான் கேப்டனாக முன் நிற்கிறார்.

அந்த வரிசையில் காந்திஜியின் கொள்கைகளை, சமூக சீர்திருத்தக் கருத்துகளை, மூடப்பழக்கவழக்கங்களை எதிர்த்து உறுதியுடன் எழுதினார் என்பது உண்மை. அவருடையை சிறுகதைகள் எல்லாமே இன்று வலைதளங்களில் வாசிக்கக் கிடைக்கின்றன. உடனடி வாசிப்புக்காக இங்கே ஓரிரு கதைகளை மட்டும் அறிமுகம்செய்கிறேன். அவருடைய கதைகளில் எல்லோருக்கும்போலவே எனக்கும் மிகவும் பிடித்த கதை, `கேதாரியின் தாயார்'.

`சமீபத்தில், பத்திரிகைகளில் `அம்மாமி அப்பளம்' என்னும் விளம்பரத்தைப் பார்த்ததும், எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. உடனே பாகீரதி அம்மாமியின் ஞாபகம் வந்தது. அவளுடைய அருமைப் புதல்வனும் என்னுடைய பிராண சிநேகிதனுமான கேதாரியின் அகால மரணத்தை எண்ணியபோது உடம்பை என்னவோ செய்தது. கேதாரிக்கு இந்தக் கதி நேரும் என்று யார் நினைத்தார்கள்? இதுபோன்ற சம்பவங்களை எண்ணும்போதுதான் மனித யத்தனத்தில் நமக்கு நம்பிக்கை குன்றி, விதியின் வலிமையில் நம்பிக்கை பலப்படுகிறது' என்று தொடங்குகிற கல்கியின் `கேதாரியின் தாயார்', அவரது கதைகளில் முக்கியமானதும், அவரது நோக்கையும் போக்கையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அமைந்த கதை.

சங்கர் என்னும் கேதாரியின் நண்பனுடைய எண்ண ஓட்டங்களிலிருந்து அந்தக் கதை தொடங்குகிறது. தொடக்கத்திலேயே கேதாரியின் மரணக் குறிப்பு இடம்பெறுகிறது. ``கேதாரியின் மரணத்துக்குக் காரணம், சிக்கலான வகைகளில் புரிந்துகொள்ள முடியாத நிலையிலிருந்த அவனுடைய உடல்நிலையே'' என்று அவனுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் உரைக்கிறார்கள். ஆனால், அவன் உடல் நோயின் வேர் அவனுடைய மனோவியாதியில் இருந்தது என்பதையும், அந்த மனோவியாதி, நமது சமூகத்தைப் பீடித்திருக்கும் பல வியாதிகளில் ஒன்றைக் காரணமாகக்கொண்டது என்பதையும் சொல்லும் நண்பன், அவனுடைய நட்பையும் வாழ்வில் நடந்த பல்வேறு சம்பவங்களையும் தொகுத்து நினைத்துக்கொள்கிறவிதத்தில் கதை அமைந்திருக்கிறது.

கேதாரிக்கு, தாயின் ஞாபகம் மட்டுமே உண்டு; தந்தையைப் பற்றிய ஞாபகமே கிடையாது. அவன் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, அவர் ஒரு நாடகக்காரிமீது மையல்கொண்டு ஊரைவிட்டுச் சென்றுவிட்டார். இந்த விவரமெல்லாம் கேதாரி வளர்ந்து பெரியவனாகும் வரை யாருக்கும் தெரியாது. கேதாரிக்கு திருமணப் பேச்சு நடக்கிறபோதுதான், அவன் தாயாரான பாகீரதி அம்மாவே சொல்லித் தெரிந்துகொள்கிறான். அதைச் சொல்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. மணந்துகொள்ள இருக்கும் பெண்ணை, தான் சென்று பார்க்கவேண்டிய அவசியமே இல்லையென்றும், தன் அம்மாவுக்குப் பிடித்திருந்தால் போதுமென்றும் சொன்ன மகனைப் பார்த்துச் சொல்லவேண்டிய சூழல் உருவாகிவிடுகிறது.

`இப்படியெல்லாம் பிள்ளையையும் பெண்ணையும் சம்மதம் கேட்காமல் கலியாணம் பண்ணிப் பண்ணித்தான், குடும்பங்களில் கஷ்டம் ஏற்படுகிறது. இவனுடைய (கேதாரியினுடைய) தகப்பனார் எங்களை விட்டுவிட்டுப் போனதற்காக ஊரெல்லாம் அவரைத் திட்டினார்கள். எனக்கும் அப்போது கோபமும் ஆத்திரமும் அடைத்துக்கொண்டுதான் வந்தன. நாற்பது நாள் படுத்தபடுக்கையாய்க் கிடந்தேன். ஆனால், பின்னால் ஆறஅமர யோசித்துப் பார்த்ததில், அவர்மேல் ஒரு குற்றமும் இல்லையென்று தோன்றிற்று. என்னை கலியாணம் செய்துகொள்வதில் அவருக்கு இஷ்டமே இல்லையாம். அப்படிச் சொல்லவும் சொன்னாராம். ஆனால், பெரியவர்கள் பலவந்தப்படுத்தி கலியாணம் செய்துவைத்தார்களாம். ஏதோ ஐந்தாறு வருடங்கள் பல்லைக் கடித்துக்கொண்டு குடும்பம் நடத்தினோம். அப்புறம் அந்தக் கூத்தாடிச்சி வந்து சேர்ந்தாள்; போய்விட்டார்."
இப்படி பாகீரதி அம்மாமியே அந்தப் பேச்சை எடுத்தபோது, நானும் பக்குவமாகச் சிற்சில கேள்விகளைப் போட்டு மற்ற விவரங்களையும் அறிந்தேன். கேதாரியின் தகப்பனார் சுந்தரராமையர், பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருப்பாராம். நன்றாகப் பாடுவாராம். அப்போது திருமங்கலத்தில் தபால் ஆபீஸில் அவருக்கு குமாஸ்தா உத்தியோகம். ரங்கமணி என்னும் பெயர்பெற்ற நாடகக்காரி, அந்த ஊரில் நாடகம் நடத்திக்கொண்டிருந்தாள். 

ஒருநாள் அயன் ராஜபார்ட் போடுகிறவனுக்கு உடம்பு சரியில்லை என்றும், அன்று அநேகமாக நாடகம் நடைபெறாது என்றும் செய்தி வந்தது. கேதாரியின் தகப்பனாருக்கு நாடகம் என்றால் பித்து. நாடகம் பார்த்துப் பார்த்து எல்லா நாடகங்களும் நெட்டுருக பாடல்கள் தலைகீழ்ப் பாடம். ஆகவே, இவர் போய், ``நான் ராஜபார்ட் போட்டுக்கொள்கிறேன்'' என்றார். சில பாடல்களும் பாடிக்காட்டினார். ரங்கமணி சம்மதித்தாள். நாடகம் நடந்தது. எல்லாரும் அதிசயிக்கும்படி கேதாரியின் தகப்பனார் நடித்தார். அம்மாமிக்குக்கூட அது பெருமையாயிருந்தது. அப்புறம் திருமங்கலத்தில் அந்த கம்பெனி இருந்த வரையில் அவர்களுடனேயே இருந்தார். வேலையை ராஜினாமா செய்துவிட்டார் என்றும், தன்னுடன் அழைத்துக்கொண்டு போகப்போகிறாள் என்றும் ஊரில் பேசிக்கொண்டார்கள். ஆனால், பாகீரதி அம்மாமி அதையெல்லாம் நம்பவில்லை. கடைசியில், நாடக கம்பெனி ஊரைவிட்டுப் போயிற்று. அதற்கு மறுநாள், சுந்தரராமையரையும் காணவில்லை. நாடக கம்பெனி இலங்கைக்குப் போயிற்று என்றும், அங்கே போய் இவரும் சேர்ந்துகொண்டார் என்றும் பின்னால் தகவல் தெரியவந்தது.

பட்டப்படிப்பு முடிந்ததும் பக்கத்தில் இருந்த மணிபுரம் பண்ணையார் நரசிம்மையர், கேதாரியைப் பற்றிய எல்லா விஷயங்களையும் கேள்விப்பட்டு, அவனுக்குத் தன் மகளைக் கொடுக்க முன்வருகிறார். சம்பந்தம் பேசுவதிலும் வித்தியாசமான யோசனையைக் கொண்டிருக்கிறாள் பாகீரதி அம்மாள். சீர்வரிசை, வரதட்சணை எதைப் பற்றியும் அவள் கவலைப்படவில்லை. மாறாக, தன் மகனை வெளிநாட்டுக்கு அனுப்பி ஐ.ஸி.எஸ் படிக்கவைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை மட்டும் நிபந்தனையாகச் சொல்கிறாள். நரசிம்மையரும் நிபந்தனைக்கு ஒப்புக்கொள்கிறார்.

கேதாரியும் நண்பனும் சென்று பெண்ணைப் பார்த்துவிட்டு வருகிறார்கள். பார்ப்பதற்கு கிளி மாதிரி இருக்கும் அவளுக்கும் கேதாரிக்கும் ஒரு நல்ல முகூர்த்தத்தில் திருமணம் நடைபெறுகிறது. மறு ஆண்டில் கேதாரி இங்கிலாந்துக்குப் பிரயாணமாகிறான். பாகீரதி அம்மாமியைத் தங்கள் வீட்டிலேயே வந்து இருக்க வேண்டும் என்று மணிபுரத்தார் எவ்வளவோ வருந்த அழைக்கிறார். அம்மாமி கேட்கவில்லை. கிராமத்தில் தாயற்று வளர்கிற தன் சொந்தக்காரப் பிள்ளைகள் இருவரை அழைத்துவந்து வளர்க்கத் தொடங்குகிறாள். ஆனால், சம்பந்திகளின் கெளரவத்தை முன்னிட்டு அப்பளம் போட்டு விற்பதை மட்டும் நிறுத்திவிடுகிறாள்.

கேதாரி வெளிநாட்டுக்குச் சென்ற ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு, நரசிம்மையருக்கு ரங்கூனிலிருந்து ஒரு கடிதம் வருகிறது. அது கேதாரியின் தந்தையார் சுந்தரராமையர் எழுதிய கடிதம். பிள்ளையின் திருமணத்தைப் பற்றி யார் மூலமோ கேள்விப்பட்டு எழுதிய கடிதம். ரங்கூனிலிருந்து ஊருக்குத் திரும்ப பிரயாணச் செலவுக்குப் பணம் அனுப்பும்படி எழுதியிருக்கிறார். ``அம்மாமியைக் கேட்டு முடிவெடுக்கலாம்!`` என்று நண்பன் சொன்ன ஆலோசனை ஏற்கப்படுகிறது. நண்பனே வந்து மாமியிடம் விஷயத்தைச் சொல்கிறான். நரசிம்மையரிடம் பணம் வாங்க வேண்டாம் என்றும், தானே கொடுப்பதாகவும் சொல்லிச் சிறுகச் சிறுகச் சேர்த்துவந்த எண்பது ரூபாயைக் கொண்டுவந்து ரங்கூனுக்கு அனுப்பித் தருமாறு சொல்லி ஒப்படைக்கிறாள். ஆனால், பத்து நாள்களில் அனுப்பிய மணியார்டர் திரும்பிவந்துவிடுகிறது. எந்த முகவரிக்கு அனுப்பப்பட்டதோ அந்த முகவரியில் இருந்தவர் எழுதியிருந்த கடிதத்திலிருந்து மணியார்டர் வருவதற்கு முன்னரே சுந்தரராமையர் காலமாகிவிட்டார் என்றும் அநாதைப்பிணமாக அடக்கம் செய்யப்பட்டுவிட்டார் என்றும் தெரியவருகிறது. பதினெட்டு வருடங்களாக கண்களால் காணாத கணவனுக்காக பாகீரதி அம்மாள் துக்கம் காக்கிறாள். பத்தாம் நாள் சாதி வழக்கப்படியான எல்லா அலங்கோலங்களுக்கும் அவள் ஆளாகநேர்கிறது. கேதாரிக்கு இதைப் பற்றி ஒன்றும் எழுதக் கூடாது என்றும் திரும்பி ஊருக்கு வந்த பிறகு தெரிவித்தால் போதும் என்றும் சொல்லிவிடுகிறாள் பாகீரதி அம்மாள்.

காலம் நகர்கிறது. எதிர்பார்த்ததைப்போல மிகச் சிறப்பான தகுதியுடன் ஐ.சி.எஸ் தேர்வில் தேர்ச்சிபெறுகிறான் கேதாரி. நீண்ட பயணத்தை முடித்துக்கொண்டு ஊருக்குத் திரும்பியதும் தன் தாயாரைப் பார்ப்பதற்கு விரைகிறான். தாழ்வாரத்திலேயே உட்கார்ந்திருக்கும் அவள்மீது அவன் பார்வை விழவே இல்லை. வேகவேகமாக `அம்மா... அம்மா'வென அழைத்தபடி வீட்டுக்குள் நுழைகிறான். நண்பன் அவனை அழைத்து பாகீரதி அம்மாள் இருக்கும் இடத்தைக் காட்டுகிறான். கேதாரி திரும்பி வருகிறான். வெள்ளைப்புடவை அணிந்து, மொட்டைத்தலையில் முக்காடிட்டு உட்கார்ந்திருக்கும் பாகீரதி அம்மாளைப் பார்த்ததும் ``ஐயோ... அம்மா..!'' என்று பயங்கரமாகக் கூச்சலிட்டபடி தொப்பென கீழே உட்கார்கிறான். அதே விசனத்தில் அவன் படுத்தபடுக்கையாகிறான். கடுமையான காய்ச்சலால் அவதிப்படுகிறான். அந்தக் காய்ச்சலுக்கிடையேயும் அம்மாவின் கோலத்தை எண்ணி அவன் மனம் குமைகிறது. இத்தகு பழக்கவழக்கங்களை நிர்பந்திக்கிற சாஸ்திரங்களைக் கொளுத்த வேண்டும் என்று மனம் குமைகிறான். வைதீகத்தில் நம்பிக்கை மிகுந்த குடும்பத்தில் தனக்கு பெண் எடுத்திருப்பதால்தான் ஊர் வாய்க்கு அஞ்சி இந்த முடிவுக்கு தன் அம்மா வந்திருக்கலாம் என்று புலம்புகிறான். உடல்நலம் தேறி எழுந்ததும் முதல் வேலையாக இத்தகு மூடப்பழக்கங்களை ஒழிக்க பெரும்கிளர்ச்சியைச் செய்யப்போவதாகச் சொல்கிறான். ஆனால், உடல் குணமடையாமலேயே வெளிநாட்டிலிருந்து திரும்பிய 21-ம் நாள் அவன் இறந்துவிடுகிறான்.  

இந்தப் பரிதாப வரலாற்றில் சொல்லவேண்டியது இன்னும் ஒன்றே ஒன்றுதான் பாக்கியிருக்கிறது. கேதாரியின் மாமனார், அவனுடைய புகைப்படம் ஒன்று இருந்தால் தரும்படி எனக்குச் சொல்லியிருந்தார். நானும் அவனும் சேர்ந்து எடுத்துக்கொண்ட படம் ஒன்று என்னிடம் இருந்தது. அதிலிருந்து அவனுடைய படத்தை மட்டும் தனியாக எடுத்து சட்டம் போட்டு எடுத்துக்கொண்டு போனேன். அப்போது, அவர்களுடைய வீட்டில் தற்செயலாய் கேதாரியின் மனைவியைக் காண நேரிட்டது. அவளைப் பார்த்ததும் என் உடம்பு நடுங்கிற்று; மயிர் சிலிர்த்தது. அவளை `கிளி' என்று சொன்னேன் அல்லவா? அந்தக் கிளிக்கு இப்போது தலையை மொட்டையடித்து முக்காடும் போட்டிருந்தார்கள்!

கணவன் இறந்தால் மொட்டை போட்டு முக்காடு போடும் பிராமண வழக்கத்துக்கு எதிராக, வாசக மனதில் அழுத்தமான உணர்வைத் தூண்டிவிடும் கதை இது.