Published:Updated:

மைல்ஸ் டு கோ -12

மைல்ஸ் டு கோ
பிரீமியம் ஸ்டோரி
News
மைல்ஸ் டு கோ

படம்: ஸ்டில் ராபர்ட்

கதிர் சாரிடம் இருந்து வெளியே வந்தவுடன் தனியே படம் பண்ணுவதற்கான வேலைகளில் இறங்கினேன். ‘கிளாஸ்' என்ற ஆங்கில நாவலை அடிப்படையாக வைத்து, ஏற்கெனவே ஒரு ஸ்கிரிப்ட் எழுதி யிருந்தேன்.

கல்லூரி முடித்து 10 வருடங்கள் கழித்து, நண்பர்கள் ஒன்றாகச் சந்திக்கும் நாளில் படம் தொடங்கும். ஆனால், அந்த நண்பர்களில் ஒருவன் மட்டும் வந்திருக்க மாட்டான். மற்ற நண்பர்கள் அனைவரும் அவனைத் தேடிக் கிளம்பும் கதை அது.

அப்போது எல்லாம் ஸ்கிரிப்ட் வாசிக்கும் மரபே கிடையாது. இயக்குநர்கள் கதை சொல்வதை நம்பித்தான், தயாரிப்பாளர்கள் பல கோடிகளை முதலீடு செய்வார்கள். அதனால், கதை சொல்வதற்கு மிகப் பெரிய எஃபர்ட் தேவை. கதை சொல்லல், சிலருக்கு இயல்பிலேயே வரும்; சிலருக்கு பயிற்சியில்தான் வரும். நான் அதை கஷ்டப்பட்டுப் பயின்றவன்.

ஒவ்வொரு முறை கதை சொல்லும்போதும் நம் முன்பு மிகப் பெரிய வாய்ப்பு ஒளிந்திருக்கும். சரியாகச் சொன்னால், அந்தக் கதவு திறந்துவிடும். நான் முதன்முதலில் கதை சொன்னது இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம். என் நண்பர் `அடிதடி’ பட இயக்குநர் சிவா (இப்போது ஷாகுல் ஹமீது) எஸ்.ஏ.சந்திரசேகர் சாரிடம் உதவியாளராக இருந்தவர். ‘இந்தக் கதை விஜய்க்குப் பொருத்தமா இருக்கும் வெற்றி. எஸ்.ஏ.சி சார்கிட்ட நான் பேசறேன்’ என, கதை சொல்ல நேரம் வாங்கித் தந்தார். அது ‘கதை நேரம்’ (1999) படப்பிடிப்பு சமயம்.

அம்மா ஊருக்கு வந்திருப்பதாக சாரிடம் பொய் சொல்லிவிட்டு, கதை சொல்லச் சென்றோம். ‘வெற்றி, நீ கூட இருடா போதும். எங்க சாருக்கு எப்படி கதை சொல்லணும்னு எனக்குத் தெரியும்’ என்றார் சிவா. இருந்தாலும், நாமும் தயாராக இருப்போம் என முதல் நாள் அறையில் ரிகர்சல் செய்து பார்த்தோம். என் நண்பர்கள் ஏற்கெனவே பலமுறை கேட்ட கதைதான் என்றாலும், ஏதோ புதிதாகக் கேட்பதுபோல் அவ்வளவு எமோஷனலாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். எனக்கும் நம்பிக்கை கூடியது. மறுநாள் காலை கிளம்பி கடைக்குச் சென்று டீ குடித்தோம். கொஞ்சம் டென்ஷனாக இருந்தது. சிவா வந்து அழைத்துச் சென்றார். ‘கொஞ்ச நேரம் வெயிட் பண்ணச் சொல்லுவாங்க. அந்த நேரத்துல நாம ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்’ என்று நினைத்தபடி சென்றேன். ஆனால், போன உடனேயே ‘சார் உங்களுக்காகத்தான் காத்தி ருக்கார்.

உள்ளே போங்க’ எனச் சொல்லி விட்டார்கள். ரிலாக்ஸ் பண்ணலாம் என நினைத்த எனக்கு, பதற்றம் கூடிவிட்டது. முதல் நாள் இரவு இருந்த கான்ஃபிடென்ஸ் அந்த அறைக்குள் செல்லும்போது இல்லை. உள்ளே சென்றதும் சிவா, `சார், இவர்தான் வெற்றிமாறன். இவர் கதாசிரியர், நான் டைரக்டர்' என என்னை எஸ்.ஏ.சி-யிடம் அறிமுகப் படுத்தினார்.

மைல்ஸ் டு கோ -12

`சரி, யார் கதை சொல்றீங்க?’ என எஸ்.ஏ.சி கேட்டதும், சிவாவிடம் `அந்த ஓப்பனிங் சீன் மட்டும் நான் சொல்றேன்’ என்றேன். ஓர் ஆலமர இலை காற்றில் பறக்க, ஒவ்வொரு கேரக்டராக அறிமுகமாகும் காட்சியைச் சொல்லி முடித்துவிட்டு சிவாவைப் பார்த்தேன். `நீயே சொல்லிடுடா’ என்றார். நான் நுணுக்கமாகக் கதை சொல்ல ஆரம்பித்தேன். முதல் நாள் சொன்னதுபோல் என்னால் கதை சொல்ல முடியவில்லை. சிவாவும் பதற்றமாகவே இருந்தார். முழுவதையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு எஸ்.ஏ.சி, `எனக்கு கதை கனெக்ட் ஆகவே இல்லையேப்பா' என்றார்.

சிவா சோர்வாக `ஓ.கே சார்' எனச் சொன்னதும் நாங்கள் கிளம்பினோம். ‘முழுக்கதையையும் நானே சொல்லியிருப்பேன்டா, தப்பு பண்ணிட்டேன்’ - வெளியே வந்ததும் சிவா சொல்லி வருத்தப்பட்டார். இப்படி என் கதை சொல்லும் முதல் அனுபவம் படுதோல்வியில் முடிந்தது. ஒரு கதையை முதல்முறையாகச் சொல்லும்போது உள்ள எமோஷன்ஸ், அதையே திரும்பத் திரும்பச் சொல்லும்போது இருப்பது இல்லை. போகப்போக நாம் சோர்வாகிவிடுவோம். அன்று முதல் `மறுநாள் கதை சொல்வது என்றால், முழுக்கதையையும் முதல் நாளே சொல்லி ரிகர்சல் பார்க்கக் கூடாது. ஒன்லைன்ஸை மட்டும் பேசினால் போதும்' என முடிவுசெய்தேன்.

‘படம் எடுப்பது ஒரு கலை. கதை சொல்வது முற்றிலும் வேறு ஒரு கலை. கதை நன்றாகச் சொல்லும் அனைவருமே நன்றாகப் படம் எடுப்பது இல்லை. நல்ல படங்கள் எடுக்கும் பலருக்கு, கதை சொல்லத் தெரிவதே இல்லை. வெகு சிலருக்கே இரண்டு கலைகளும் கைவரும். நம் ஊரில் இயக்குநருக்கு ஒரு படம் கிடைக்க வேண்டும் என்றால், நன்றாகக் கதை சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். கதை சொல்லும் புராசஸ் முழுமை அடைவதில் எதிரில் இருப்பவருக்கு முக்கிய ரோல் உண்டு’ - கதிர் சார் அடிக்கடி சொல்வார். நண்பர்களிடமோ    சக உதவி  இயக்குநர் களிடமோ கதை சொல்கிறோம் என்றால், எந்தவிதமான பதற்றமும் இன்றி இயல்பாகச் சொல்லிவிடுவோம்.

ஆனால், அந்தக் கதையைக் கேட்டுத்தான் நம்மை ஜட்ஜ் செய்யப்போகிறார்கள் அல்லது வாய்ப்பு தரப்போகிறார்கள் என்றால், நமக்கு பிரஷர் ஏறிவிடும். அதனால் நான் கதை சொல்லும்போது `கதை கேட்பவர்கள், என் திறமையை ஜட்ஜ் செய்யப்போகிறார்கள்' என்பதை மனதில் இருந்து எடுத்துவிடுவேன். தொடர்ச்சியாகக் கதை சொல்லும் அனுபவத்தின் மூலமாக, அப்போது நான் சில விஷயங்களைக் கண்டு பிடித்து வைத்திருந்தேன். சின்னச்சின்ன காமெடிக்கும் விழுந்து விழுந்து சிரிப்பவர்கள் உண்டு. என்ன சொன்னாலும் சிரிக்கவே சிரிக்காதவர்களும் உண்டு. நன்றாகச் சிரிப்பவர்கள், `கதை நல்லா இல்லையே’ என்பார்கள். சிரிக்காமல் கேட்டவர்கள், ‘காமெடி பிரமாதம்’ என்பார்கள். கதை கேட்பவர் ஏதாவது அவசரத்தில் இருந்தால், அது அவர்களது உடல்மொழியில் தெரிந்துவிடும். கதையின் முக்கிய சீன்களை மட்டும் சொல்லிவிட்டு, மற்றதை ஜம்ப் செய்துவிடலாம்.

சில பேர் மதிய நேரத்தில் கதை கேட்பார்கள். ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அவர்களுக்கு கண் சொருக ஆரம்பிக்கும். `திடீர்ர்ர்ர்ர்’ என எதிரே இருக்கும் பெஞ்ச்சை ஆவேச மாகத் தட்டி சத்தத்தைக் கூட்டுவது, குரலை உயர்த்துவது... என அலாரம் அடித்து அவர்களின் தூக்கம் கலைத்த சம்பவம் எல்லாம் நடந்தது உண்டு. அவர்கள் எழுந்ததும், ஒரு சீன் முன்னர் இருந்து மீண்டும் சொல்ல ஆரம்பிப்பேன். நான் கதை சொல்லச் சென்றால், என்னுடன் மணியும் இருப்பான். அவன்  இருந்தால் எனக்குப் பெரிய சப்போர்ட். ஒருநாள் நாராயணன் (`ஆடுகளம்’ நரேன்), என்னைச் சந்திக்க வந்தார்.

பாலு மகேந்திரா சார் படம் ஆரம்பிக்கப்போவதாகவும், `அவரைப் போய்ப் பார்' என்றும் சொன்னார். நானும் போய்ப் பார்த்தேன். ‘என்ன பண்ற வெட்டி?’ எனக் கேட்டவரிடம், `கதை சொல்லிட்டு இருக்கேன் சார்’ என்றேன். அப்போது ஜி.ஜே சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். தயாரிப்பாளர்கள் ஞானவேலும் ஜெயபிரகாஷும் சாரின் ரசிகர்கள். என்னைப் பரிந்துரைத்து அவர்களுக்கு ஒரு கடிதம் கொடுத்தார். அதைப் பார்த்ததும் ஞானவேல் அவர்கள் கதை சொல்ல வரச்சொன்னார். இரண்டரை மணி நேரம் கதை கேட்டுவிட்டு, அதன் பிறகு இரண்டு மணி நேரம் பேசினார். அவருக்கு, கதை பிடித்திருந்தது. நடிகர் ஸ்ரீகாந்திடம் சொல்லச் சொன்னார். நான் ஏற்கெனவே இந்தக் கதையை ரிச்சர்டிடம் சொல்லியிருந்ததைச் சொன்னேன். `அப்படியென்றால், `காதல் வைரஸ்' ரிலீஸ் ஆகட்டும், பார்க்கலாம்’ என்றார். அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்குள் ஜி.ஜே சினிமாஸ், சாரை வைத்து ‘ஜூலி கணபதி’ படம் தயாரிக்கத் தொடங்கினார்கள்.

`அதில் வேலைசெய்தால், அவர்களின் நம்பிக்கையைப் பெற்று நிச்சயம் அவர்கள் தயாரிப்பிலேயே படம் பண்ணிவிடலாம்' என சார் சொன்னார். நானும் மீண்டும் சாரிடம் முதல் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், என் மேல் அவருக்கு இருந்த கோபம் எதுவும் அப்போது அவரிடம் இல்லை.

மைல்ஸ் டு கோ -12

நான் சேர்ந்த சில நாட்களிலேயே விக்ரம் சுகுமாரன் மீண்டும் சேர்ந்தார். கர்நாடகத்தில் உள்ள ‘தீர்த்தஹள்ளி’ என்கிற இடத்தில் முதல்கட்டப் படப்பிடிப்பு நடந்தது. அப்போது சென்னை ஆபீஸில் இருந்து பார்த்துக்கொள்ள ஒருவர் தேவைப்பட்டார். அதற்காக செந்தில் என்கிற ஒருவர் வந்திருந்தார். பி.எஸ்ஸி., (எலெக்ட் ரானிக்ஸ்) படித்தவர் எனத் தெரிந்ததும் ‘அப்புறம் ஏன்டா ஆபீஸ் பாய் வேலைக்கு வர்ற?’ என்றார் சார். செந்திலுக்கு, சாரிடம் உதவியாளராகச் சேர ஆசை. அப்படிச் சொன்னால் வேலை கிடைக்காது என்பதால், ஆபீஸ்பாயாகவாவது சேர நினைத்ததாகச் சொன்னார். அவரை சிறிது நேரம் உற்றுப்பார்த்த சார், பிறகு செந்திலை உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். அந்த செந்தில்தான் `எதிர்நீச்சல்', `காக்கி சட்டை' படங் களின் இயக்குநர் துரை செந்தில்குமார். ‘ஜூலி கணபதி’ முடியும்போது எனக்கு  என்ன மாதிரியான கதைகள் பண்ண வேண்டும் என்ற தெளிவு வந்திருந்தது.

‘ரெயின் மேக்கர்’ என்ற நாவல், என்னை அப்போது மிகவும் இன்ஸ்பயர் செய்தது. மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களின் ஊழலை மையமாகக்கொண்ட கதை அது. இந்தியாவில் மருத்துவ நிறுவனங்களைப் பற்றி தேடியதில் தமிழில் டாக்டர்.கே.ஆர்.சேதுராமன் என்பவர் எழுதிய `போஸ்ட்மார்ட்டம்’ (விகடன் பிரசுரம்) என்ற புத்தகம் கிடைத்தது. அந்தக் கதைக்களத்தில் படம் எடுக்க நிறைய வாய்ப்புகள் இருப்பது தெரிந்தது. அதன் அடிப்படையில் ‘வியூகம்’ என்ற ஸ்கிரிப்ட் ஒன்றை எழுதினேன். (அதுதான் நான் தங்கவேலனிடம் சொன்ன முதல் ஸ்கிரிப்ட்.) அப்போதுதான் நடிகர் மாதவனின் மேனேஜர் நஸீர் அறிமுகம் கிடைத்தது. எனக்கும் மணிக்கும் `‘வியூகம்’ கதை மாதவனுக்கு நிச்சயம் பிடித்துவிடும். ஆனால், முதலில் மேனேஜரை கன்வின்ஸ் செய்ய வேண்டும். அவர்களுக்கு இந்த மாதிரியான கதை பிடிக்குமா?' என்ற பயம் இருந்தது.

கதை சொல்ல, காலை 7 மணிக்கு திருவான்மியூர் வரச் சொன்னார். பாலு மகேந்திரா சார் புதிய படம் அட்வான்ஸ் வாங்குவதாக இருந்தால், வெள்ளை நிற பேன்ட்- ஷர்ட் போடுவார். அதைப் பார்த்தாலே நாங்கள் மகிழ்ச்சியாகிவிடுவோம். அதுபோல, நான் கதை சொல்ல போக, வெள்ளை அல்லது லைட் கலர் சட்டை என ஒரு டிரெஸ்கோட் வைத்திருந்தேன். நஸீருக்கு ஒன்றரை மணி நேரம் கதை சொன்னேன். எந்தவிதச் சலனமும் இல்லாமல் கேட்டார். கதை சொல்லி முடித்த பிறகு, சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், ‘எங்க அப்பாவை ஹாஸ்பிட்டல்ல வெச்சிருந்தோங்க. இதேதாங்க பண்ணியிருக்காங்க. எல்லாரையும் இப்படித்தான் ஏமாத்துறானுங்க. இதை நிச்சயம் படமா எடுக்கணும். எக்ஸ்ட்ரார்டினரி சப்ஜெக்ட்’ என அவர் பேசப்பேச, எனக்கும் மணிக்கும் ஆச்சர்யம். மாதவனிடம் கதை சொல்ல அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுத்துவிட்டார். மாதவனைப் பார்க்கப் போனேன். அன்று மணி ஊருக்குப் போய்விட்டதால், என்னுடன் வரவில்லை. கதிர் சாரிடம் வேலைசெய்த ஜெயக்குமாரை அழைத்துச் சென்றிருந்தேன். இரவு 2 மணிக்கு மாதவனுக்கு ஃப்ளைட்.

நாங்கள் அவர் வீட்டில் காத்திருந்தோம். 11 மணிக்கு மேல் மாதவன் வந்தார். கதையைக் கேட்டு முடித்தவுடனே, ‘இப்ப நான் இந்த மாதிரி கதை பண்றது சரினு படலே’ எனச் சொல்லிவிட்டார்.நஸீருக்குக் கதை பிடித்ததும், மாதவனுக்குப் பிடிக்காமல்போனதும் எனக்கு மிகப் பெரிய ஆச்சர்யம். அன்றுதான் யாருக்கு எந்தக் கதை பிடிக்கும் என நாம் முடிவுசெய்யக் கூடாது என்பதைத் தெரிந்துகொண்டேன். அந்தச் சமயம் கோடம்பாக்கத்தில் டிராவல் சீஸன். ஹீரோ, கிராமத்தில் இருந்து கிளம்பி நகரத்துக்கு வரும் கதைகள் வரிசையாக ஹிட். அதனால் சிலர், ‘உங்க கதையிலயும் கிராமத்துல இருக்கிற டாக்டர் நகரத்துக்குக் கிளம்பி வந்து இதை எல்லாம் கண்டுபிடிக்கிறான்னு மாத்துங்க’ என்றார்கள்.

அதையும் செய்தோம். அப்படியும் அந்தக் கதை விற்கவில்லை. சில நல்ல கதைகள் விற்காது. சுமாரான சில கதைகள்கூட எளிதில் விற்றுவிடும். ‘வியூகம்’ நல்ல கதை. ஆனால், விற்க முடியவில்லை. ஒருநாள் டீக்கடையில் நின்றுகொண்டிருந்த போது மணியிடம் `மச்சான்... ஒரு எலோப்பிங் ஸ்கிரிப்ட் பண்ணலாம்டா’ என்றேன். ஆர்வம் இல்லாமல் `சரி' என்றான். ‘ஓப்பனிங்ல ஒருத்தன், ஒரு பொண்ணைக் கூட்டிட்டு, சென்னையில இருந்து பெங்களூரு ஓடுறான். இன்டர்வல்ல, அந்தப் பொண்ணைப் பிடிச்சு வில்லன் கூட்டிட்டுப் போயிடுறான். க்ளைமாக்ஸ்ல திரும்ப ஹீரோ காப்பாத்திக் கூட்டிட்டு வர்றான்’. `இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்குடா’ என்றான் மணி. ‘சென்னை - பெங்களூருக்குப் பதிலாக, பெங்களூரு - சென்னை என வைத்துக்கொள்ளலாம்’ என்றான். அடுத்த 24 மணி நேரத்தில் ஒன்லைன் ஆர்டர் போட்டுவிட்டோம். அந்தக் கதை, கேட்ட எல்லோருக்குமே பிடித்திருந்தது. வேறு சில காரணங்களால் அது தள்ளிப்போனதே தவிர, கதையை யாரும் ரிஜெக்ட் செய்யவில்லை. விற்கிற கதையை நாங்கள் எழுத ஆரம்பித்து விட்டோம் என நாங்கள் அப்போதுதான் தெரிந்துகொண்டோம். அந்தக் கதைதான் 2013-ம் ஆண்டில் மணிகண்டன் (மணிமாறன் என்ற பெயரில்) இயக்கிய `உதயம் NH4’ என்ற பெயரில் படமாக வெளியானது.

- பயணிப்பேன்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan