
மருதன்

பிரபல `டைம்' பத்திரிகை வெளியிட்டிருக்கும் 2016-ம் ஆண்டின் செல்வாக்குமிக்க மனிதர்கள் பட்டியலில் இரண்டு ஆச்சர்யங்கள். ஒன்று, நரேந்திர மோடியின் பெயர் இல்லை. இரண்டாவது, ப்ரியங்கா சோப்ரா, சானியா மிர்ஸா, கூகுளின் சுந்தர் பிச்சை ஆகியோரோடு ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனும் இடம்பெற்றிருக்கிறார்.
`இந்தியாவின் சர்ச்சைக்குரிய பிரபலங்கள்' என்றொரு பட்டியல் தயாரித்தால், அதிலும் இடம்பிடித்துவிடுவார் ரகுராம் ராஜன். `உலகப் பொருளாதாரமே தடுமாறிக்கொண்டிருக்கும்போது, இந்தியா மட்டும் எப்படி பிரகாசமாக இருக்கிறது?' எனக் கேட்டபோது, ‘பார்வையற்றோர் தேசத்தில் ஒற்றைக்கண் கொண்டவரே அரசர். என்னைப் பொறுத்தவரை நாம் போகவேண்டிய தூரம் அதிகம்’ என சிக்ஸர் அடித்தார் ரகுராம் ராஜன்.
வளர்ச்சி, முன்னேற்றம் என முழங்கிவரும் மத்திய அரசு, எரிச்சல் அடைந்தது. `ரகுராம் ராஜன் சொல்லியிருப்பது தவறு, இந்தியா ஜொலித்துக்கொண்டு இருக்கிறது' எனப் பாய்ந்து வந்தார் மத்திய நிதி இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா. ரகுராம் ராஜனின் வார்த்தைகள் ‘திருப்திரகமாக இல்லை’ என விமர்சித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
உடனடியாக மன்னிப்புக் கேட்டார் ரகுராம் ராஜன். ஆனால், அது நிர்மலா சீதாராமனிடமோ, மோடி அரசிடமோ அல்ல. ‘நான் பயன்படுத்திய உவமை, கண் பார்வையற்றவர்களைவிட ஒற்றைக்கண் கொண்டவர் மேலானவர் என்னும் அர்த்தத்தை அளித்தால், அது தவறு. பார்வையற்றவர்களிடம் பல திறமைகள் மண்டிக் கிடக்கின்றன!’
அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் தன்னைக் கண்டு எரிச்சல்கொள்பவர்களுக்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்தார். ‘ `கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என அனைவரும் புறப்பட்டால் உலகமே குருடாகிவிடும்' என காந்தி சொன்னார். அப்படியானால் குருடர்களை அவர் அவமரியாதை செய்தார் என்றாகிவிடுமா? வெறும் வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு ஆராய்ச்சிசெய்வது பயன் அற்றது. ஒருவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை மட்டும் கவனியுங்கள்.’
ரகுராம் ராஜனின் ஆளுமையைப் புரிந்துகொள்ள இந்த ஒரு சம்பவம் போதும். அதிகாரத்தில் இருப்பவர்களோடு முரண்படுகிறோமே எனத் தயங்காமல், சொல்ல விரும்பியதை பட்டென போட்டு உடைத்துவிடுகிறார்.
ரகுராம் ராஜனை, கௌரவப் பொருளாதார ஆலோசகராக 2008-ம் ஆண்டு முதன்முதலில் நியமித்தவர் மன்மோகன் சிங். ஆனால், நான்கே ஆண்டுகளில் ஐக்கிய முன்னணி அரசின் செயல்பாடுகளையும் பொருளாதாரக் கொள்கைகளையும் காரசாரமாக விமர்சித்து உரையாற்றினார் ரகுராம் ராஜன். அவர் உரையாற்றும்போது பார்வை யாளர்கள் வரிசையில் மன்மோகன் சிங்கும் அமைதியாக அமர்ந்திருந்தார். 2013-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதோ காங்கிரஸ் ஆட்சி முடிந்து பா.ஜ.க வந்த பிறகும் ரகுராம் ராஜன் ஆளுநராகவே தொடர்கிறார். தன் இயல்புகள் எதையும் அவர் மாற்றிக்கொள்ளவே இல்லை. `இந்தியா வளர்ச்சிப் பாதையில் பீடுநடைபோடுகிறது' என ஒரு பக்கம் மோடி அரசு பெருமிதப்பட்டுக்கொள்ளும்போது, மற்றொரு பக்கத்தில் இருந்து புள்ளிவிவரங்களை எடுத்துவைத்து நிதானமாக முரண்படுகிறார் ரகுராம் ராஜன்.
`தனிநபர் வருமானத்தைப் பொறுத்தவரை இந்தியா இன்னமும் உலகின் மிகப் பெரிய ஏழை நாடுகளில் ஒன்றாகத்தான் இருக்கிறது. நம் குடிமக்களின் பிரச்னைகள் ஒவ்வொன்றின் மீதும் கவனம் செலுத்தித் தீர்ப்பதற்கு அதிக காலம் தேவைப்படும்' என்கிறார் ரகுராம் ராஜன்.

`இதோ இந்தியா வல்லரசாகப்போகிறது; கிட்டத்தட்ட ஆகிவிட்டது, இதோ சீனாவை மிஞ்சிவிட்டது' என்றெல்லாம் பூரிப்படை பவர்களை அமைதிப்படுத்துகிறார். ‘சீனாவோடு இந்தியாவை ஒப்பிடுவதில் அர்த்தமே இல்லை. 1960-களில் நம்மைவிடச் சிறிய நாடாக இருந்த சீனா, இன்று நம்மைவிட ஐந்து மடங்கு அதிக வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஓர் இந்தியரைவிட ஒரு சீனர் நான்கு மடங்கு பணக்காரராக இருக்கிறார்.’
நம்முடைய தற்போதைய வளர்ச்சி விகிதத்தை இன்னும் 20 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால்தான், ஒவ்வோர் இந்தியருக்கும் குறைந்தபட்ச வாழ்க்கைத்தரத்தையாவது அளிக்க முடியும் எனத் தெளிவுபடுத்துகிறார். ‘பிரிக்ஸ் நாடுகளில் நாம்தான் கடைசி. நாம் முன்னேறிவிட்டோம், வளர்ச்சி வந்துவிட்டது என்றெல்லாம் இப்போதே சொல்லிக்கொள்ளத் தொடங்கினால், வளர்ச்சி தடைபடும். இப்படிச் சொல்லிய பலரை நாம் ஏற்கெனவே பார்த்துவிட்டோம்' என எச்சரிக்கிறார்.
ரகுராம் ராஜன், ஒரு தமிழர். போபாலில் பிறந்த ரகுராம் கோவிந்தராஜன், இளம் வயதிலேயே இலங்கை, இந்தோனேஷியா, பெல்ஜியம்... என பல நாடுகளுக்குக் குடும்பத்துடன் சென்றிருக் கிறார். தன் தந்தை ஆர். கோவிந்தராஜன் வெளியுறவுத் துறையில் பணியாற்றுவதாகவே நீண்டகாலம் நினைத்திருந்தார் ரகுராம் ராஜன். உண்மையில் அவர் பணியாற்றியது இந்திய உளவு நிறுவனமான ஐ.பி-யில். பின்னர் ஐ.பி உடைந்தபோது, கோவிந்தராஜன் ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்கில் (ரா) இணைந்துகொண்டார்.
வெவ்வேறு நாடுகளில் ஏழாம் வகுப்பு வரை படித்த ரகுராம் ராஜன், 1974-ம் ஆண்டு இந்தியா திரும்பினார். இந்திரா காந்தி அவசரநிலைப் பிரகடனம் செய்திருந்த சமயம் அது. முதல் பார்வையிலேயே இந்தியா அவரைக் குழப்பியது. இந்தியாவில் நிலவிய தட்டுப்பாடு, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீட்டுக்குத் தேவைப்படும் எளிய பொருட்கள்கூட கடைகளில் இல்லாதது ஏன்? கார் வாங்கும் அளவுக்குச் செழிப்பான குடும்பமாக இருந்தபோதும், ரொட்டிக்காகக் கடை கடையாக ஏறி இறங்கவேண்டிய நிலைமை ஏன் நிலவுகிறது? `இந்தக் கேள்விகளே என்னைப் பொருளாதாரத் துறையின் பக்கம் கொண்டுசென்றன' என தனது `ஃபால்ட் லைன்ஸ்' என்னும் நூலில் குறிப்பிடுகிறார் ரகுராம் ராஜன்.
டெல்லி ஐ.ஐ.டி-யில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்த ரகுராம் ராஜன், அஹமதாபாத் ஐ.ஐ.எம்-ல் மேலாண்மை பயின்றார். இரண்டு இடங் களிலும் தங்க மெடல் கிடைத்தது. பிறகு, அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி-யில் முனைவர் படிப்பு மேற்கொண்டார். அங்கேயே பேராசிரிய ராகப் பணியாற்றத் தொடங்கினார். உடன் படித்த ராதிகாவைத் திருமணம் செய்துகொண்டார். முதலாளித்துவம், சுதந்திரச் சந்தை ஆகியவற்றை ஆதரித்து எழுதத் தொடங்கினார். வங்கித் துறை மீதும் கவனம் திரும்பியது. 2003-ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) தலைமைப் பொருளாதார ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டபோது உலகம் அவரைத் திரும்பிப் பார்த்தது. ஒரு வளரும் நாட்டைச் சேர்ந்த, குறைந்த வயது கொண்ட ஒருவருக்கு, இந்தப் பதவி வழங்கப்பட்டது அது முதல்முறை.
அப்போதே அவர் எழுதியதும் பேசியதும், பரவலான கவனத்தைக் கவர்ந்தன; சர்ச்சைகளையும் விவாதங் களையும்கூடக் கிளப்பின. அரசுக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, போட்டி மனோபாவத்தை ஊக்குவித்தால் நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும் என்ற மேற்கத்திய உலகின் பிரபலமான நம்பிக்கையை ரகுராம் ராஜன் மறுத்தார். `அவ்வாறு செய்தால் ஒரு நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப் படுவதோடு, நிதிநெருக்கடியும் ஏற்படும்' என எச்சரித்தார். அவ்வாறே, 2008-ம் ஆண்டு அமெரிக்கா நிதி நெருக்கடிக்கு உள்ளானபோது ரகுராம் ராஜனின் மதிப்பு மேலும் உயர்ந்தது. ‘நிதி நெருக்கடியைச் சரியாக மோப்பம் பிடித்தவர்’ என உலகம் அவரை அழைத்தது.
2013-ம் ஆண்டு இறுதியில், மன்மோகன் சிங் ஆட்சி முடிவடையும் தறுவாயில் இந்திய ரூபாயின் மதிப்பு அபாயகரமான முறையில் சரிந்திருந்தது. ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டது அப்போதுதான். சுருண்டு கிடந்த பங்குச்சந்தை விழித்துக்கெண்டது. ரூபாயின் மதிப்பு 10 சதவிகிதம் உயர்ந்தது. உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப் பாட்டில் கொண்டுவரும் முயற்சிகளும் முடுக்கி விடப்பட்டன. பொருளாதாரம் சோர்வடை வதைத் தடுக்க வங்கியின் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சென்செக்ஸ் 60 சதவிகிதம் உயர்ந்தது; இந்திய ஸ்டேட் வங்கியின் பங்குகள் 130 சதவிகிதம் உயர்ந்தன. இதை ‘ராஜன் எஃபெக்ட்’ என அழைத்தது மீடியா.
2014-ம் ஆண்டில் நரேந்திர மோடி பதவியேற்ற போது ரகுராம் ராஜன் கழற்றிவிடப்படலாம் என்னும் யூகம் எழுந்தது. ஆனால், மோடி அவரைத் தக்கவைத்துக்கொண்டார். ‘ரகுராம் ராஜன் ஒரு சிறந்த ஆசிரியர்’ எனப் புகழ்ந்தார் மோடி. பொருளாதார வளர்ச்சியை ஒரு கோஷமாக முன்வைத்து வெற்றிபெற்ற மோடிக்கு, அதைச் சாத்தியப்படுத்த ரகுராம் ராஜன் தேவைப்பட்டார். பணவீக்கத்தைக் கட்டுப் படுத்தவும், அந்நிய முதலீடுகளைக் கவரவும் ரகுராம் ராஜனின் வழிகாட்டுதல் உதவும் என மோடி நம்புகிறார். ஆனால், முதலீட்டாளர்கள் மட்டும் அல்ல... மோடிக்கு வாக்களித்த நடுத்தரவர்க்கத்தினரும் வலதுசாரி பொருளாதார ஆதரவாளர்கள்கூட அரசின் மீது நம்பிக்கை இழந்துவருகின்றனர். ரகுராம் ராஜனின் மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சமீபத்திய மூன்று சம்பவங்களை எடுத்துக்கொள்வோம்.
கொல்கத்தாவில் மார்ச் மாத இறுதியில் விவேகானந்தா சாலை மேம்பாலம் சரிந்து விழுந்தது அல்லவா? இந்த விபத்துக்கான இழப்பீட்டை இப்போது செலுத்தப்போவது, அந்த மேம்பாலத்தைக் கட்டிய கட்டுமான நிறுவனம் அல்ல... அதற்கு கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகள்தாம். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததால் அந்த நிறுவனத்தின் 51 சதவிகிதப் பங்குகளை வங்கிகள் வாங்கிக்கொண்டன. இப்படி ஓர் ஏற்பாட்டை அறிமுகப்படுத்தியது ரிசர்வ் வங்கிதான்.
இரண்டாவதாக, `பனாமா பேப்பர்ஸ்' விவகாரத்தில் சிக்கிய இந்தியர்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் ரிசர்வ் வங்கியும் இருக்கிறது. ஆனால், ரகுராம் ராஜனின் அணுகுமுறை, பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கு எதிரானதாக இருக்கிறது. ‘பனாமாவில் ஓர் இந்தியர் வங்கிக்கணக்கு வைத்திருந்தாலே அது தவறு எனச் சொல்லிவிட முடியாது. ஆண்டுக்கு 2,50,000 டாலர் பணத்தை நடப்பு அல்லது மூலதனக் கணக்கு நடவடிக்கை களுக்கு எனச் சட்டப்படியே ஒரு நாட்டுக்கு அனுப்பிவைக்க முடியும்’ என வாதிடுகிறார் ரகுராம். `சர்ச்சையில் சிக்கியிருப்பவர்களின் கணக்குகள் சட்டப்படி இருக்கின்றனவா இல்லையா என்பதைக் கண்டறிவது மட்டுமே விசாரணையின் நோக்கம்’ என்கிறார் இவர்.
மூன்றாவது, பணப்புழக்கம். ‘இந்தியாவில் பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது. அதுவும் சமீபத்தில் 48 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது’ என்கிறார் ரகுராம் ராஜன். அவருடைய கணக்கின்படி கிட்டத்தட்ட 60,000 கோடி ரூபாய் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் புழங்கிவருகிறது. சரி, இந்தப் பணப்புழக்கத்தை எப்படித் தடுப்பது?
‘நிலம், இயற்கை வளம், அரசு அனுமதி ஆகியவற்றைக் கையகப்படுத்திக்கொண்டு பில்லியனராக மாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது அபாயகரமானது’ என சமீபத்தில் எச்சரித்துள்ளார் ரகுராம். சரி, இதை எப்படி மாற்றுவது?
‘நல்ல கல்வி, மேம்பட்ட மருத்துவ வசதி ஆகியவற்றை ஓர் அரசு, மக்களுக்கு அளிக்க வேண்டும்’ எனக் கோருகிறார் ரகுராம் ராஜன். ஆனால், இதை எப்படிச் சாத்தியமாக்கப் போகிறார்கள்?
‘முதலாளித்துவத்தை, பெரும் முதலாளிகளிடம் இருந்து மீட்டாகவேண்டும்’ என்றும் அறைகூவல் விடுத்துள்ளார் ரகுராம் ராஜன். ஆனால், அதைச் சாத்தியமாக்குவதற்கான வழிகள் என்னென்ன?
காலியான கடைகளைக் கண்டவுடன், `சோஷலிசம் தோல்வி அடைந்துவிட்டது' எனத் துணிச்சலுடன் அறிவித்துவிட்டு இளம் வயதி லேயே முதலாளித்துவத்தைத் தழுவிக்கொள்ள முடிந்தது ரகுராம் ராஜனால். ஆனால், நிதிநெருக்கடிகள், பெருகும் ஊழல், லஞ்சம், கனிமவளக் கொள்ளை, அதிகரித்துவரும் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எல்லாம் தரிசித்த பிறகும் அவரால் முதலாளித்துவத்தின் அடிப்படைகளைச் சந்தேகிக்க முடியவில்லை. கசடுகளை அகற்றிவிட்டு இந்த அமைப்பைச் சீர்திருத்திவிட முடியும் என்றே அவர் நம்புகிறார். ஆனால், அவ்வளவு எளிதில் நீக்கக்கூடிய அளவுக்கு லேசானவையா இந்தக் கசடுகள்?