
சொல்வனம்

முடிவற்ற பாதையின் முடிவில் இருக்கும் வீடு!
போய்க்கொண்டே இருந்தோம் வெகுதூரம்
'எங்கே... எங்கே?' என்று
கேட்டுக்கொண்டே வந்தாள் அஸ்மிதா.
ஒரு திருப்பத்தில்
சூரியனில் முடியும் ஒரு பாதைக்கு மாறியதும்,
'ஹைய்யா! நாம சூரியனின் வீட்டுக்குத்தானே போகிறோம்?'
கண்டுபிடித்த மகிழ்ச்சியில் துள்ளினாள் அஸ்மி.
முடிவற்ற பாதையின் முடிவிலிருந்த
சூரியனின் வீட்டுக்கு
நாங்கள் சென்று சேர்வதற்குள்
சூரியன் வீட்டுக்குள் மறைந்துவிட,
நாளை மறுபடியும் வரலாம் என்று
சமாதானப்படுத்தித் திரும்பினோம்.
முடிவற்ற பாதையின் முடிவிலிருக்கும்
முழுநிலவின் வீட்டுக்கு
இப்போது சென்றுகொண்டிருக்கிறோம்.
- சேயோன் யாழ்வேந்தன்
தப்பின் முகம்
முன்பொரு காலத்தின் மருத நிலம்
அடுக்குமாடிக் குடியிருப்பாகவும்
நான்கு வழிச் சாலையாகவும் வியாபித்திருந்தது
டீக்கடை முன்
தூக்கில் தொங்கிய வாழைப்பழத்தை
அண்ணாந்து பார்த்து நகர்ந்த பசுவொன்று
குப்பைத்தொட்டியாய்ப் பிரவேசித்திருந்த
சாலை இருபுறங்களிலும் பசியைத் தேடியது
சவத்துக்கும் சாமிக்கும் தப்படித்த குழு
தேர்தலுக்குக் கொட்டடித்துக் களைத்து
அயர்ந்துறங்கினர் மர நிழலில்
வரிசையாக அடுக்கப்பட்டிருந்த தப்புகளின்
ஒன்றின் முகத்தை
நாவால் நக்கி நகர்ந்தது பசு.
- பூர்ணா
ஃபேஸ்புக்
பெயர்ப் பலகை இல்லாத
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில்
என்னையும் சேர்த்து எட்டுப் பேர்
தீபாவளி பண்டிகையின்போது
ஒரே கலரில் துணி எடுத்து
ஊரையே அசத்துவோம்
கல்யாண வீடா, துக்க வீடா
தனியே அடையாளம் தெரிவோம்
அனைவரும் திருமணத்திற்குப் பிறகு
ஆளுக்கு ஒரு திசையாய்
மோகனும் கட்ட முருகனும்
எதிர்ப்படும்போது
புன்னகைப்பதோடு சரி.
பாரதியும் கஜேந்திரனும்
என்ன ஆனார்கள் தெரியவில்லை
சுரேந்தர்
வெளிநாட்டு வாழ்க்கை
ஃபேஸ்புக்கில்
யார் முதலில்
ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுப்பது
என்ற ஈகோவில்
நான், மணிமாறன், முகுந்தன்!
- ஆர்.எஸ்.நாதன்
இணைய காலம்
தாத்தாவிடம்
வினவவேண்டிய
சந்தேகங்கள்
தேடப்படுகின்றன இணையத்தில்
இணையம் வழியே
அனுப்பப்படும்
பேரப்பிள்ளைகளின்
புகைப்படங்களை முத்தமிட
பழகிக்கொள்கிறார்கள்
தாத்தாக்களும்!
- விஜி செந்தில்