மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 39

கலைடாஸ்கோப் - 39
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - 39

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 39

`டூட்லிங்' (doodling) கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு பேப்பரும் பேனாவும் கையில் இருந்தால், தங்களை அறியாமல் ஏதாவது வரைந்துகொண்டிருப்பார்கள் சிலர். இதற்கு, தேர்ந்த ஓவியனாக இருக்கவேண்டும் என்கிற தேவை இல்லை. சும்மா கிறுக்கத் தெரிந்தாலே போதும், மனம் (கை) போனபோக்கில் வரைந்துகொண்டேபோகலாம். இன்று டூட்லிங்கையும் ஒரு கலையாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.

இந்த டூட்லிங்கை, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள் ரிக் ராபர்ட்ஸ் மற்றும் மரியா தாமஸ் என்கிற கலைக் காதலர்கள். இவர்கள், `டூட்லிங் ஆர்ட் என்னும் வடிவத்தை, ஒருவிதத்தில் உளவியல் தெரபிபோல பயன்படுத்த முடியும்’ என்கிறார்கள். யானையோ, புலியோ, குருவியோ, குரங்கோ, பக்கத்துவீட்டுப் பையனோ... இப்படி ஏதாவது ஓர் உருவத்தின் அவுட்லைனை மட்டும் எடுத்துக்கொண்டு, அதற்குள் விதவிதமான வடிவங்கள்,  கோடுகளை மனம்போனபோக்கில், அந்த அவுட்லைன் அழகாக நிறையும் வரை வரைவது. இதைத்தான் இவர்கள் `சென்டாங்கிலிங்’ என்கிறார்கள்.

கலைடாஸ்கோப் - 39

இப்படி மனமகிழ்ச்சிக்காக வரைவது, உலகின் பல பழங்குடிப் பண்பாடுகளின் சடங்குகளில் இருப்பதுதான். விஷுவல் கார்னரில், கேரளாவின் `களம் வரைக்கல்’ என்னும் கலையைப் பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். `சென்டாங்கிலிங் வரைவது, ஒருவகையான ஸ்ட்ரெஸ்ஃப்ரீ தெரபி’ என்கிறார்கள். கோபம் தலைக்கு ஏறும்போது, அமைதியாக ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்து சென்டாங்கிலிங் பண்ண ஆரம்பித்துவிடுங்கள். உங்களுக்குக் கோபம் குறைகிறதோ இல்லையோ, எதிரில் இருப்பவர் குழப்பத்தில் கூலாகிவிடுவார் என்பதற்கு நான் கேரன்டி.

கலைடாஸ்கோப் - 39

நம் முன்னோர்கள் பிறப்பையும் இறப்பையும் சமமாகத்தான் பார்த்திருக்கிறார்கள் என்பதற்கு, தத்துவங்களை நோண்டத் தேவை இல்லை. பிறந்தாலும் பால், புட்டுக்கிட்டாலும் பால்... போலவே பிறந்தாலும் சங்கு, போனாலும் சங்கு. முன்னர் எல்லாம் உரை மருந்து, கஷாயம் என குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதற்காகவே வைத்திருக்கும் சங்கு ஞாபகம் இருக்கிறதா?

தாத்தாவில் இருந்து பேத்தி வரை பல தலைமுறைகளைப் பார்த்த சங்குகள், பரணில் தூங்கும். அடுத்த வாரிசு வந்ததும் பாட்டிகள் பொக்கிஷத்தைப்போல அதைத் தேடி எடுப்பார்கள். கடல் சங்குகளை அறுத்துதான் ஒருகாலத்தில் பயன்படுத்தியிருப்பார்கள்போல. பிற்காலத்தில் உலோகத்தில் வந்திருக்கலாம். காரணம், அதன் வடிவம்.

சங்கை கையில் வைத்துக்கொண்டு வீராவேசமாக நிற்கும் அம்மாக்களைப் பார்த்தவுடன் குழந்தைகள் தெறித்து ஓடுவதை சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். கதறக் கதற குழந்தைகளின் வாயில் சங்கின் நுனியைத் திணித்து, மருந்து புகட்டுவார்கள். ஆனால் இன்று, இனிப்பு கலந்த சொட்டு மருந்துகளை பேனாவில் இங்க் அடைப்பதுபோல குழந்தை களின் தொண்டைக்குள் ஃபில்லரால் ஊற்றிவிடுகிறார்கள்.

கலைடாஸ்கோப் - 39

``மதன், நல்லா புரிஞ்சுக்கோ. உனது ரெண்டு கைகளும் போய் ரெண்டு மாதங்களாச்சு’’ என்ற டாக்டர் லீ, சிறிய டைனிங்டேபிளை மதனுக்கு அருகில் நகர்த்தினார்.

``இல்லை. இப்போதும் எனக்கு கைகள் இருக்கின்றன. இதோ அசைக்கிறேன் பாருங்கள்.’’

``உனக்கு கை இருப்பதுபோலத் தோன்றுவது மூளையின் விளையாட்டு’’ என்றபடி டேபிளில் துணியை விரித்தார் லீ.

கலைடாஸ்கோப் - 39

``எதுக்காக டாக்டர்... எதுக்காக என் கையை எடுத்தீங்க?’’

``எனது மாணவன் நீ. என்னையும் தாண்டிவிடும் ஆவேசம் உன்னிடம் இருந்தது. அதை நான் விரும்பவில்லை’’ என்ற லீ, தட்டு, ஸ்பூன், முள்கரண்டியை எடுத்து டேபிள் துணிவிரிப்பில் பரப்பினார்.

``நீங்கள் ஒரு சைக்கோ. எனக்கு கைகள் அரிப்பதுபோல இருக்கிறது.’’

``ஹா... ஹா. உன் மூளையில் இருந்து கைகளுக்கு ஓடிக்கொண்டிருந்த நரம்பின் முடிச்சுகள், இப்போதும் உனக்கு கைகள் இருப்பதுபோன்ற சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்பிக் குழப்பிக்கொண்டிருக்கின்றன. சாப்பிடு’’ என்ற லீ புன்னகைத்தபடி ஸ்பூனில் உணவை மதனுக்கு ஊட்டப்போனார்.

``இதற்கு நீங்கள் என்னைக் கொலைசெய்திருக்கலாமே டாக்டர்’’ என்று மறுத்தான் மதன்.

``இல்லை டியர். நான் கல்யாணம்கூடச் செய்து கொள்ளவில்லை. என் வாழ்க்கையையே தொலைச்சுட்டு, ஆராய்ச்சி... ஆராய்ச்சி என இருந்தேன். ஆனால், சின்னப் பையன் நீ. எனது அறிவை உண்டு செரித்தபடி என்னையும் தாண்டிச் செல்ல நினைத்தாய். உன்னை உயிரோடு வைத்திருக்கணும். எனது பலம் என்னெவென்று அறியாமல் நீ சாகக் கூடாது.’’

``என் கை விரல்களை நீட்டி மடக்குவது உங்களுக்குத் தெரியவில்லையா? நான் கையை இழக்கவில்லை’’ என்றான் மதன்.

``ஹா... ஹா. இதை `பாந்தம் லிம்ப்’ என்று நியூராலஜியில் சொல்வார்கள். வெறும் மாயை.’’

அடுத்த நொடி, டேபிளில் இருந்து காற்றில் எழுந்து தன் கழுத்தை நோக்கி இறங்கிய முள்கரண்டியை திடுக்கிட்டு பார்த்தபடி லீ குழறலாகக் கத்த நினைத்தது... ``ஹவ் இஸ் இட் பாஸிபிள்?’’ ஆனால், குரல் எழவில்லை.

கலைடாஸ்கோப் - 39

மெரினா பீச்சுக்கு உண்மையில் பல முகங்கள். காலையில் அது மேல்நடுத்தரவர்க்கத்துக்கானது. மருத்துவர்கள் பரிந்துரையில் பணக்கார அங்கிள்கள், பெண்கள், ட்ராக் ஷூட், சாக்ஸ், ஷூ, காதுகளில் ஐபாட் சகிதம் முகத்தில் தீவிரமான ஒரு குறிக்கோளுடன் வாக்கிங், ஜாக்கிங் பயில்கிறார்கள். தினசரிப் பழக்கத்தால் வாக்கிங் மேட்களுக்கு மெல்லிதாக `ஹாய்' சொல்கிறார்கள். கைகளை கூட்டமாகத் தூக்கியபடி குறிப்பிட்ட இடைவெளியில் `ஹா... ஹா... ஹா’ எனப் போலியாக வாய்விட்டுச் சிரிக்கிறார்கள். ஆரோக்கிய விசனத்துடன் அருகம்புல் ஜூஸை நிதானமாகக் குடிக்கிறார்கள். கண்களை மூடி, பிராணனை இழுக்கிறார்கள். புறாவுக்குத் தீனி போட்டு பறவைகள் மீதான கருணையை தங்களுக்குள் நிரூபித்துக்கொள்கிறார்கள். பிறகு, எனர்ஜி டிரிங்க்கை உறிஞ்சியபடி அலுவலகத்தின் வழக்கமான லெளகீக ஞாபகங்களுடன் காரில் கிளம்புகிறார்கள். 

மாலையில் மெரினா கீழ்நடுத்தர மக்களுக்கானது. நடுத்தரவாசிகள் கோடைகால அந்தி நேரத்தை மால்களின் இலவச ஏசி-யை உதாசீனித்து மெரினாவில் கழிக்கிறார்கள். வெயில் இறங்கும் நேரத்தில் பேருந்துகளில் குழந்தைகள், பெட்ஷீட், தண்ணீர் பாட்டில்கள் சகிதம் பிதுங்கியபடி அண்ணாசதுக்கத்திலோ, காந்தி சிலையிலோ இறங்குகிறார்கள். கடலையைக் கொறித்தபடி, கடல் அலையை ரசிக்கிறார்கள். செல்ஃபி எடுத்தபடி கால் நனைக்கிறார்கள். குதிரைகளுக்கு வழிவிட்டு, வட்டமாக மணலில் உட்கார்ந்து அந்தாக்‌ஷரி விளையாடுகிறார்கள். காற்றடுப்பில் வாட்டிய ஸ்வீட் கார்னைக் கடித்துக் குதறியபடி, குழந்தைகளை மிரட்டி கட்டுக்குள் கொண்டுவருகிறார்கள்; `குவாலிட்டி வால்ஸில் குச்சி ஐஸ் 30 ரூபாயா?!’ என வியக்கிறார்கள் குடும்பத் தலைவிகள். `மிக்ஸட் பஜ்ஜி மூணு பிளேட்’ என ஆர்டர்செய்து, `இன்னும் கொஞ்சம் சட்னி’ என்கிறார்கள். குடும்பத் தலைவர்கள் அவ்வப்போது பர்ஸைத் தடவிப்பார்த்து சமாதானம்கொள்கிறார்கள்.

மூன்றாவதாக ஒரு முகம் இருக்கிறது. வெயிலோ, மழையோ, பூக்கார அம்மாக்களின் கவனக்கலைப்போ, கிளி ஜோசியக்காரனின் சீட்டுக் கணிப்போ என எந்தச் சூழலியல் பாதிப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் மணலில், குடை நிழலில், படகு மறைவில், துப்பட்டா திரையில், காதல் வளர்க்கும் ரொமான்டிக் முகம்.

வாழ்க நீ மெரினா!   

கலைடாஸ்கோப் - 39

டென்ஷனாக இருக்கும்போது, சிலர் நகம் கடிப்பார்கள். விரல்நுனி வரை கடித்துவிட்டு, அதற்காக மீண்டும் டென்ஷன் ஆவார்கள். நகம் கடிப்பதை ஒரு கெட்ட பழக்கமாகத்தான் கணக்கில் எடுக்கிறோம். ஆனால், பல நூற்றாண்டுகளாக மனிதகுலத்துக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். காரணம், `நகவெட்டி கண்டுபிடிக்கப்பட்டது கிரேக்கப் பேரரசின் காலத்தில்தான்’ என்கிறார்கள். செயின்ட் அல்பான்ஸ் மியூசியத்தில் கிரேக்கர்களின் அழகுசாதனப் பெட்டியில் கிட்டத்தட்ட நகவெட்டி போன்ற ஒரு கருவியின் மாதிரி இருக்கிறது.

வழக்கமாக, நம் ஊர் இலக்கியங்களில் தலை முதல் பாதம் வரை புலவர்கள் புரவலர்களைப் புகழ்ந்திருந்தாலும் `ஆலின் விழுதுகள் போன்ற நீண்ட நகம்கொண்ட என் தலைவன்’ என்கிற மாதிரியான குறிப்புகள் எதுவும் இல்லை. ஆதலால், நிச்சயமாக நகம் வெட்டும் பழக்கம் இருந்திருக்கும். ஆனால், எந்த மாதிரியான கருவிகள் இருந்திருக்கும் என்பதை அறிய முடியவில்லை.

நாம் இன்று பார்க்கும் நகவெட்டிகளின் வருகை 19 -ம் நூற்றாண்டில், என்றாலும் அதன் வடிவம் ஏதோ கில்லட் மெஷின்போல கொஞ்சம் கொடூரமாகத்தான் இருந்திருக்கிறது. அதுமட்டும் அல்ல, அதைத் தயாரிக்க ஆகும் செலவும் அதிகம். 1940 -ம் ஆண்டில் வில்லியம் இ.பாசெட் (William E. Basset) என்பவர்தான் நகவெட்டியை எளிமையான வடிவிலும் குறைந்த விலையிலும் தயாரித்து விற்க ஆரம்பித்திருக்கிறார். இன்று ஐந்து ரூபாய்க்குக்கூட கிடைக்கிறது. ஆனாலும் `பெடிக்கூர்’ என்ற பெயரில் நகம் வெட்ட 1,000 ரூபாய் வரை பணம் வெட்டுகிறார்கள்.