
ஓவியங்கள்: ஸ்யாம்

பொன்(ய்)மொழி
`கடன் அன்பை முறிக்கும்' என்ற வாசகத்தை, கடையில் எழுதி வைத்திருந்த பங்க் கடைக்காரர், தினமும் ஆறு தண்டல்காரர்களிடம் தவணை கட்டிக்கொண்டிருந்தார்.
- ந.கன்னியக்குமார்

வேலை... வேலை..!
உடல்நிலை சரியில்லாததால் ஆபீஸுக்கு லீவு போட்டுவிட்டு, வீட்டு வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள் ரேகா.
- பெ.பாண்டியன்

இடமும் நிலமும்
மகனின் ஆசைக்காக சென்னையில் 3 சென்ட் இடம் வாங்க, ஊரில் அப்பாவின் 8 ஏக்கர் நிலத்தை விற்க நேர்ந்தது.
- லதா கார்த்திகேயன்

தனியொருவர்
`எனக்காக யாரும் இல்லை. நீங்கள் மட்டும்தான்' எனச் சொன்ன தலைவர், எங்களைத் தனியே விட்டுவிட்டு ஹெலிகாப்டரில் பயணிக்க ஆயத்தமானார்.
- அபிசேக் மியாவ்

உலக மகா நடிப்பு!
``ஃபைட் சீனுக்கு டூப் போட்டுடுங்க, சிங்கம் சண்டையை கிராஃபிக்ஸ்ல பண்ணிடுங்க’’ என்ற ஹீரோ, முத்தக் காட்சியில் மட்டும் அவரே நடித்தார்.
- ராம்குமார்

என் வேலை... என் கடமை!
``வேற வேலையே இல்லை... சண்டேகூட ரெஸ்ட் எடுக்கவிடாம தொந்தரவு பண்றானுங்க!’’ - ஏதோ கம்பெனி விஷயம் பேச வந்த ஜி.எம்-மைப் பற்றி மனைவியிடம் குறை கூறினார் எம்.டி.
- பிரகாஷ் ஷர்மா

ஆரோக்கிய விஷ(ய)ம்
ஆர்கானிக் காய்கறியில் செய்த பொரியலை ஒரு வாரம் ஃப்ரிட்ஜில் வைத்து, தினமும் சூடாக்கிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் அஞ்சலி.
- நந்தகுமார்

இது... ட்விஸ்ட்!
``புரட்சி பேசி, பதிவுகள் போட்டு, கட்டுரைகள் எழுதி, ஸ்டேட்டஸ்கள் பதிந்து `49ஓ'-வில் ஓட்டு போடுவேன்” என்ற குமரேசனின் பெயர், வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தது.
- எஸ்கா

பொற்கால ஆட்சி
``எங்கள் ஆட்சியில் ஏழைகளே இல்லை...’’ என்று, 100 ரூபாயும் பிரியாணி பொட்டலமும் கொடுத்து அழைத்துவரப்பட்ட மக்களுக்கு மத்தியில் பேசிக்கொண்டிருந்தார் அந்த அரசியல்வாதி.
- ரஹீம் கஸாலி

எப்பூடி..?
`நான் முதலமைச்சரானால்...' என்ற தலைப்பில் குழந்தைகளை கட்டுரை எழுதச் சொன்ன ஆசிரியர், ஒரு குழந்தை `ஒரு ஓட்டுக்கு 10,000 ரூபாய் கொடுப்பேன்' என எழுதியிருந்ததைப் பார்த்து அதிர்ந்தார்.
- ஜெ.கண்ணன்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ` 500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!