Published:Updated:

மாத்தியோசி திருடர்கள்!

மாத்தியோசி திருடர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மாத்தியோசி திருடர்கள்!

கார்க்கிபவா, ஓவியங்கள்: ஸ்யாம்

கேரளாவில் வங்கி ஒன்றின் மேல்மாடியில் ஓர் உணவகம் இருந்தது. அதை வாடகைக்கு எடுத்து, புதிதாக மாற்றம் செய்தார்கள் நான்கு தொழிலதிபர்கள். அவர்கள் செய்த மாற்றம் இதுதான். ஹோட்டல் கிச்சனில் ஓட்டை போட்டு, கீழ்த்தளத்தில் இருந்த வங்கியில் ஆட்டையைப் போட்டிருக்கிறார்கள். கைதுசெய்யப்பட்ட அந்த நான்கு `தொழிலதிபர்களும்’ சொன்னது... `` `தூம்' படத்துல இப்படித்தாங்க கொள்ளையடிச்சாங்க. அதைப் பார்த்துதான் இந்த ஐடியா வந்துச்சு!’'.

இப்படிப் பல சம்பவங்கள், சினிமாவைப் பார்த்து நடந்தது உண்டு. ஒருசில ‘புத்திசாலி’ திருட்டுக்கள் சினிமாவாகவே எடுக்கப்பட்டதும் உண்டு. இந்தியத் திருடர்களின் ‘திறமையை’ப் பற்றி கொஞ்சம் ஆராய்ந்ததில் இருந்து...

மோகன் சிங்

1987, மார்ச் 19. மும்பை காவல் நிலையத்துக்கு ஒரு போன் வந்தது. ஓபரா ஹவுஸில் இருந்த ‘திரிபுவந்தாஸ் பீம்ஜி சவேரி' நகைக்கடையில் சி.பி.ஐ ரெய்டு நடப்பதாகச் சொன்னவர், `அதில் ஏதோ சந்தேகம் இருக்கிறது' என்றார். உடனே ஒரு போலீஸ் படை நகைக்கடைக்கு விரைந்தது. அங்கே சி.பி.ஐ டீம் காத்திருந்தது. ஆனால், டீமின் தலைவர் மட்டும் மிஸ்ஸிங். அவர்களின் ஐ.டி கார்டுகளை  சோதனையிட்டபோதுதான் அவை எல்லாமே போலி என்பது தெரிந்தது.

மாத்தியோசி திருடர்கள்!

நடந்தது இதுதான். அந்த டீமின் தலைவன் மோகன் சிங், சம்பவம் நடந்த நாளுக்கு சில வாரங்களுக்கு முன்னர் `டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் ஒரு விளம்பரம் தந்தான்.

`இன்டெலிஜன்ஸ் ஆபீஸர்ஸ்' மற்றும் `செக்யூரிட்டி ஆபீஸர்' வேலைகளுக்கு, துடிப்பான இளைஞர்கள் தேவை. ஆர்வம் இருப்பவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு வரவும்’ என்ற விளம்பரத்தைப் பார்த்ததும் பலர் தாஜுக்குப் படையெடுத்தார்கள். வந்தவர்களில் 26 பேரை மட்டும் மோகன் தேர்வு செய்தான். அவர்களை மார்ச் 19-ம் தேதி வரச்சொன்ன மோகன், அவர்களுக்கு `ரெய்டு டெஸ்ட்' நடத்தப் போவதாகச் சொன்னான். எல்லோருக்கும் போலி ஐ.டி கார்டுகள் தரப்பட, டீம் ஒரு பஸ்ஸில் ஓபரா ஹவுஸுக்குச் சென்றது. நகைக்கடையை `டெமோ ரெய்டு' செய்ய, கடைக்குள் நுழைந்து, நிஜ ரெய்டைப்போலவே ஷட்டரை மூடிவிட்டு லெட்ஜரை எடுத்து கணக்குகளைச் சரிபார்க்க ஆரம்பித்தது டீம்.

அப்போது கடையை ரவுண்ட் அடித்த மோகன், சில நகைகளை எடுத்து பேக் செய்து, அரசாங்க முத்திரை வைத்து மூடினான். `நான் போய் அடுத்த கடையைப் பார்த்துட்டு வர்றேன்’ என அந்தப் பையோடு வெளியேறிய மோகன் திரும்பவே இல்லை. இந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து அக்‌ஷய்குமார் நடித்து `ஸ்பெஷல் 26' என்ற இந்திப் படம்கூட வந்து விட்டது. ஆனால், இன்று வரை 30 லட்ச ரூபாய் (1987-ம் ஆண்டில்) மதிப்புள்ள நகைகளோடு எஸ்கேப் ஆன மோகனை போலீஸால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

லாப் சிங் & கோ

லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்ற இந்த பேங்க் கொள்ளை நடைபெற்றது 1987-ம் ஆண்டில். இதன் மாஸ்டர் மைண்ட் ஆன `காலிஸ்தான் கமாண்டோ ஃபோர்ஸ்’ இயக்கத்தின் தலைவன் லாப் சிங் (நிஜப்பெயர்-சுக்தேவ் சிங்), ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி. லூதியானா நகரில் இருந்த பஞ்சாப் நேஷனல் பேங்கில் இருந்து ஆறு கோடி ரூபாயை (1987-ம் ஆண்டில் 6 கோடின்னா...) அபேஸ் செய்தான் லாப் சிங். அதற்கு அவன் போட்ட திட்டம் இன்று சாத்தியம் இல்லாத ஒன்றுதான். ஆனால், அப்போது சூப்பர் ஹிட்.

மாத்தியோசி திருடர்கள்!

பிப்ரவரி மாதம், 12-ம் தேதி வங்கிக்குள் நுழைந்த லாப் சிங் கும்பல், அங்கு இருந்த வாடிக்கையாளர்களையும் வங்கி அதிகாரிகளையும் ஓர் அறைக்குள் அடைத்தது. பின்னர் அங்கு இருந்த தொலைபேசியைப் பயன்படுத்தி நகர காவல் துறைக்கு லூதியானாவின் இன்னொரு மூலையில் வங்கிக் கொள்ளை நடைபெறுவதாகத் தகவல் சொன்னது. மொத்த லூதியானா போலீஸும் அந்தப் பக்கம் பறந்து செல்ல, பணத்தைப் பொறுமையாக எண்ணி எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆனது லாப் சிங் டீம்.

சர்தாக் பாப்ரா

மாத்தியோசி திருடர்கள்!

சர்தாக், யாரையும் காயப்படுத்தியது இல்லை; யாருடைய சேமிப்பையும் திருடியது இல்லை. ஆனால், ராஜ வாழ்க்கை வாழ்ந்தான். சிட்டியில் எந்த ஹோட்டலுக்கு அன்றைக்கு ‘துரதிர்ஷ்டம்’ அடிக்கிறதோ, அந்த ஹோட்டலுக்கு கால் செய்வான் சர்தாக். உள்ளூர் அதிகாரி அல்லது அரசியல்வாதிகளில் பெரிய பெயரைச் சொல்வான். அந்த அலுவலகத்தில் இருந்து ஒரு ரூம் புக் செய்வான். `செக் அவுட் செய்யும்போது செட்டில் செய்யப்படும்' என்பான். எந்தப் பெயரில் அறையை முன்பதிவு செய்கிறானோ, அந்தப் பெயரில் ஒரு போலி பான் கார்டு செய்வது மட்டுமே சர்தாக் செலவு. உள்ளே போனதும் மீல்ஸில் இருந்து மசாஜ் வரை எல்லாம் டாப் கிளாஸ் வாழ்க்கை. புக் செய்த நாட்கள் முடியும் முதல் நாள் இரவு, ஹாயாக கம்பி நீட்டிவிடுவான். இதுவரை அப்படி அவன் ‘லாக் இன்’ செய்த ஹோட்டல்கள் எவை தெரியுமா? ஓபராய், தாஜ், ரேடிசன், ஹயாத் மற்றும் பல டாப் ஸ்டார் ஹோட்டல்கள். `உங்க சி.சி.டி.வி கேமரா ஃபுட்டேஜ், என்னோட டிப்ஸுடா என் சிப்ஸு’ எனக் கலாய்த்திருக் கிறான் சர்தாக்.

ஆன்லைன் வீரசாமி

திருடர்களுக்குத் தெரிந்த டெக்னாலஜியும் டெக்னிக்குகளும் போலீஸுக்குக்கூடத் தெரியாது. ஹைதராபாத் வீரசாமியின் கதையைக் கேட்டால் அது புரியும்.

மாத்தியோசி திருடர்கள்!

32 வயதாகும் வீரசாமிக்கு, தனது பெயரிலும் தனது குடும்பத்தினர் பெயரிலும் போலி ஐ.டி-க்கள் உருவாக்குவது தான் முதல் வேலை. பின்னர் filipkart.com-க்குச் சென்று மனதுக்குப் பிடித்த விலை உயர்ந்த பொருளை வாங்குவது இரண்டாவது வேலை. அது கைக்கு வந்ததும், அதேபோல அச்சு அசல் டம்மி தயார்செய்வது மூன்றாவது வேலை. ஆன்லைனில் பொருள் வாங்கிவிட்டு பிடிக்கவில்லை என்றால் ரிட்டர்ன் செய்யலாம் என்பதால், திரும்பத் தரும்போது போலியைக் கொடுத்துவிடுவான். அதைக் கொண்டுபோகும் டெலிவரி பாய்க்கு சந்தேகமே வராத வகையில் ஒரிஜினலைப்போலவே இருக்கும் வீரசாமியின் டம்மி. இப்படியாக ஒன்றல்ல, இரண்டல்ல... 20 லட்சம் ரூபாய் மதிப்புக்கும் அதிகமான பொருட்களை வாங்கிக் குவித்தான் வீரசாமி. இப்போது மாட்டிக்கொண்டு விட்டான்.

தாவூத் ஸ்டைல்

மாத்தியோசி திருடர்கள்!

இது மும்பை தாதா தாவூதின் ஆரம்பகாலக் கதை. வெளிநாடுகளில் இருந்து மும்பை துறைமுகத்துக்கு வரும் பொருட்களுக்கு ‘கன்சைன்மென்ட் நம்பர்’ என ஒன்று இருக்கும். அந்தப் பொருளின் மேல் இருக்கும் நம்பரை, முதலில் லெட்ஜரிலேயே இல்லாத நம்பர் ஒன்றுக்கு மாற்றி, அதை அங்கேயே ஒளித்துவைத்துவிடுவார்கள். கப்பலில் வருவதால் அந்தப் பொருளின் சொந்தக்காரர் பொருளை இன்ஷூர் செய்திருப்பார். `Lost in transit' என இன்ஷூரன்ஸ் மூலம் அவருக்குப் பணம் கிடைத்திருக்கும். சில நாட் களுக்குப் பிறகு அந்த உரிமையாளரைச் சந்திக்கும் தாவூத் ஆட்கள், பாதி விலைக்கு அதே சரக்கைக் கண்டுபிடித்துத் தருவதாகச் சொல்வார்கள். வந்த வரை லாபம் என அவரும் ஓ.கே சொல்வார். துறைமுகத்தில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் அந்தச் சரக்கு, உரியவரிடம் சென்று சேரும். தாவூதின் பர்ஸும் நிரம்பும். இதுபோல ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொரு ஐடியாவுடன் கல்லா கட்டியிருக்கிறான் தாவூத்.