Published:Updated:

சமகால தலைவர்களை கதைமாந்தர்கள் ஆக்கிய கல்கி..! கதை சொல்லிகளின் கதை - பாகம் 15/2

கதை சொல்லிகளின் கதை - பாகம் 15/2

சமகால தலைவர்களை கதைமாந்தர்கள் ஆக்கிய கல்கி..! கதை சொல்லிகளின் கதை -

Published:Updated:

சமகால தலைவர்களை கதைமாந்தர்கள் ஆக்கிய கல்கி..! கதை சொல்லிகளின் கதை - பாகம் 15/2

சமகால தலைவர்களை கதைமாந்தர்கள் ஆக்கிய கல்கி..! கதை சொல்லிகளின் கதை -

கதை சொல்லிகளின் கதை - பாகம் 15/2

அன்றைய தஞ்சை மாவட்டம் (இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம்) மாயூரத்துக்கு எட்டு மைல் தொலைவில் உள்ள புத்தமங்கலம் என்னும் சிறிய கிராமத்தில் ராமசாமி அய்யருக்கும் தையல்நாயகி அம்மையாருக்கும் இரண்டாவது மகனாக 1899-ம் அண்டு செப்டம்பர் 9-ம் நாள் பிறந்த ரா.கிருஷ்ணமூர்த்திதான் கல்கி ஆவார்.

இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். திருச்சியில் தேசியப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார். படிக்கும் காலத்திலேயே 1921 செப்டம்பர் 18-ம் நாள் காந்தியை நேரில் சந்திக்கும் பேறுபெற்றார். அன்று முதல் அவருள் அரும்பிக்கொண்டிருந்த காந்தி பக்தி, முழுதாக மலர்ந்து மணம் வீசத் தொடங்கியது. பிறகு, சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றார். ``1921-ம் வருஷ ஆரம்பத்தில் டி.எஸ்.எஸ்.ராஜனுடைய ஆவேசமான பிரசங்கங்களைக் கேட்டுத்தான் பள்ளிக்கூடப் புத்தகங்களைக் கட்டி காவிரியில் போட்டுவிட்டு, நான் வெளிக்கிளம்பியது. என்னுடைய வாழ்க்கையில் இந்த மனிதர் மட்டும் பிரவேசித்திராவிட்டால், `சிவனே’ என்று பரீட்சையில் பாஸ் செய்துவிட்டு உத்தியோக வேட்டையில் தலையிட்டிருக்கலாம்” (சுந்தாவின் `பொன்னியின் புதல்வர்' நூலிலிருந்து...) 

சிறை மீண்ட பிறகு திருச்சி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் குமாஸ்தாவாகச் சேர்ந்தார். பிறகு திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் சில காலம் வாழ்ந்தார். பின்னரும் அதே டி.எஸ்.எஸ்.ராஜனின் சிபாரிசுக் கடித்ததுடன் சென்னை சென்று திரு.வி.க-வின் `நவசக்தி' இதழில் வேலையில் சேர்ந்தார். அங்கு வெ.சாமிநாத சர்மா அவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது.

தன்னுடைய 28-வது வயதில் `சத்தியசோதனை' என்கிற மொழிபெயர்ப்பு நூலையும் `சாரதையின் தந்திரம்' என்னும் சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டார். `சாரதையின் தந்திரம்' கதை இப்படித் தொடங்குகிறது.

``அடி அக்கா, எனக்கு உன்னைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? என் கவலைகளை யாரிடம் சொல்லி ஆற்றுவேன்? இத்தனை நாள்களாக எட்டிப்பாராமல் இருந்துவிட்டாயே!" என்று சொல்லி, சாரதையின் மடியில் முகத்தை வைத்துக்கொண்டு கண்ணீர் உகுந்தாள் லக்ஷ்மி. ``அசடே, நீ என்ன இன்னமும் பச்சைக்குழந்தையா? பதினெட்டு வயதாகிறது. ஒரு குழந்தை பெற்றெடுத்துவிட்டாய். வெட்கமில்லாமல் அழுகிறாயே! சங்கதி என்ன சொல்" என்று சொல்லி, சாரதை அருமையுடன் லக்ஷ்மியின் கண்ணீரைத் துடைத்தாள்.

தன் மீதுகொண்ட அன்பை மறந்து, சீட்டு விளையாட்டு, கிண்டி குதிரைப்பந்தயம் என அலைகின்ற தன் கணவனைக் குறித்தான கவலையைத்தான் அக்காவிடம் சொல்லி அழுகிறாள் லஷ்மி. சாரதை ஒரு தந்திரம் செய்கிறாள். கணவனிடம் முன்பைவிட அன்பாக இருக்குமாறு தங்கையிடம் சொல்லிவிட்டு, மனைவி மீது சந்தேகம் வரும்படியாக அவ்வப்போது இரண்டு வரியில் கடிதம் எழுதி லஷ்மியின் கணவனுக்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறாள். சந்தேகத் தீயை அணைத்துக்கொள்ளும் முயற்சியில் அவள் கணவன் குதிரைப்பந்தயத்தை மறந்து மனைவிக்குத் தெரியாமல் அவளை வேவுபார்ப்பதிலேயே கவனத்தைச் செலுத்துகிறான். முடிவில் இது சாரதையின் தந்திரம் என்றறிந்து மனம் திருந்துகிறான்.

 ``சாரதை, அவனுடன் போய் மாடிப்படியில் வழியை மறித்துக்கொண்டு, ``அசட்டு அத்தான்! லக்ஷ்மியிடம் ஒரு வார்த்தையும் சொல்லாதே, அவளிடம் சந்தேகப்பட்டாய் எனத் தெரிந்தால் உயிரை விட்டுவிடுவாள். மேலும் என்னை மன்னிக்கவே மாட்டாள்?" என்றாள்.  ``சாரதை, உனக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்?" என்றான் நாராயணன். 

``கைம்மாறா? நீ என் மீது கோபித்துக்கொள்ளப்போகிறாயோ என்று பயந்தேன். நல்லது, எனக்கு கைம்மாறு செய்ய விரும்பினால், குதிரைப்பந்தயத்தை மறந்துவிடு. உன் மனைவியை தனியே விட்டுவிட்டு ஊர் சுற்றவும், சீட்டு விளையாடவும் போகாதே" என்றாள்.  ``இல்லை... இல்லை. ஆண்டவன் மீது ஆணை! இந்த ஒரு மாதமாக நான் அனுபவித்தது போதும்" என்று கூறிக்கொண்டு நாராயணன் விரைந்து கீழே ஓடினான் என்று சுவாரஸ்யமான திருப்பங்களுடன் நகர்ந்து, கதை முடிகிறது.

1924-ம் ஆண்டில் ருக்மணி அம்மையாரைத் திருமணம் செய்கிறார். 1928-ம் ஆண்டில் ஆனந்த விகடனில் முதல் கட்டுரை `ஏட்டிக்குப்போட்டி' கல்கி என்ற புனைபெயரில் வெளிவருகிறது. 1931-ம் ஆண்டில் ஆனந்த விகடனில் துணை ஆசிரியராகச் சேர்ந்து, 1941 வரை பணியாற்றுகிறார். பிறகு விகடனிலிருந்து விலகி, எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் கணவரான சதாசிவத்தின் உதவியுடன் கல்கி பத்திரிகையைத் தொடங்குகிறார். 1944-ம் ஆண்டில் `சிவகாமியின் சபதம்', 1948-ம் ஆண்டில் `அலை ஓசை', 1950-ம் ஆண்டில் `பொன்னியின் செல்வன்' ஆகிய நாவல்கள் கல்கியில் தொடர்களாக வெளிவருகின்றன. 1947-ம் ஆண்டில் கல்கியின் பெருமுயற்சியின் பலனாக எட்டயபுரத்தில் பாரதிக்கு மணிமண்டபம் எழுகிறது. 1954 டிசம்பர் 5-ம் நாள் கல்கி காலமானார்.

சமகால அரசியல் தலைவர்களையும் தன் கதைகளில் கதாபாத்திரங்களாக்கி உலவவிடுவது கல்கியின் பாணி. அத்தகைய ஒரு கதை `அமர வாழ்வு'.

 ``பர்மாவிலிருந்து தாய்நாட்டுக்குத் திரும்பி வந்த பிறகு, என் உள்ளம் அமைதி இழந்து அலைப்புண்டிருந்தது. ஓர் இடத்தில் நிலையாக இருப்பது சாத்தியமில்லாமல்போயிற்று. என் மனோநிலையை வியாஜ்யமாகக்கொண்டு தேச யாத்திரை செய்யத் தொடங்கினேன். அந்தத் தேச யாத்திரையைப் பெரும்பாலும் வட இந்தியாவிலேயே செய்யும்படி தூண்டிய காரணம் ஒன்று இருந்தது” என்கிற பீடிகையுடன் ஆரம்பமாகும் அந்தக் கதையில், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ்  கதாபாத்திரமாக வருகிறார். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் வீரர்களாகச் சேரும் இளம் டாக்டர்களான ராகவன் - ரேவதி தம்பதிகளை மையமாகக்கொண்டு சுழலும் கதை. நம்ப முடியாத திருப்பங்களுடன் நகரும் கதை இது. இந்தக் கதை போகிறபோக்கில் அன்று காங்கிரஸ் கட்சிக்கு நேதாஜியைப் பற்றி இருந்த கிண்டலான பார்வையை கல்கி சத்தமில்லாமல் வெளிப்படுத்துகிறார்.

 ``நேதாஜியின் நோக்கம் என்ன என்பது சீக்கிரத்திலேயே தெரியவந்தது. இந்திய சுதந்திர சைன்யம் ஒன்றை அமைத்துக்கொண்டு இந்தியாவுக்குப் படையெடுத்துச் சென்று பிரிட்டிஷாரைத் துரத்திவிட்டு புதுடெல்லியில் பூரண சுதந்திரக் கொடியை உயர்த்துவதுதான் அவருடைய உத்தேசம் எனத் தெரிந்தது. இந்த எண்ணத்துடன் நேதாஜி இந்திய சுதந்திரப் படையைத் திரட்டத் தொடங்கினார். அதுவரையில் எச்சில் கையினால் காக்கை ஓட்டாத லோபிகளாக இருந்தவர்கள் உள்பட, மலாயிலும் பர்மாவிலும் வாழ்ந்த இந்தியர்கள் பதினாயிரம், லட்சம் என்ற கணக்கில் பணத்தை அள்ளிக் கொடுத்தார்கள். கனவில்கூட போர்க்களம் செல்வது பற்றி எண்ணி அறியாதவர்கள் நேதாஜியின் சுதந்திரப் படையில் சேரத் தொடங்கினார்கள். அப்படி சுதந்திரப் படையில் முதன்முதலில் சேர்ந்தவர்களில் டாக்டர் ராகவனும், டாக்டர் ரேவதியும் இருந்தனர். தங்கள் மூலமாக பாரதத்தாயின் விடுதலை நடைபெற வேண்டியிருக்கிறது என்றும், அதனால்தான் தங்களை கடவுள் மலாய் நாட்டில் கொண்டுவந்து சேர்த்தார் என்றும் அந்தத் தம்பதிகள் பூரணமாக நம்பினார்கள். மலாயிலிருந்து பர்மாவுக்குப் போன முதல் கோஷ்டியோடு புறப்பட்டுச் சென்றார்கள்.

சில தினங்களுக்கெல்லாம் ரங்கூனிலிருந்து இந்திய சுதந்திரப் படையானது `ஜெய்ஹிந்த்!' `டெல்லி சலோ!' என்று வானளாவக் கோஷமிட்டுக்கொண்டும், `கதம் கதம் படாயே ஜா... குஷீகே கீத காயே ஜா' என்னும் சுதந்திரப்போர் கீதத்துடனும் அசாம் எல்லைப்புறத்தை நோக்கிக் கிளம்பியது. அப்போது அந்தப் படையைச் சேர்ந்தவர்களின் உற்சாகத்துக்கு அளவே கிடையாது. நேதாஜி நேரில் வந்திருந்து அவர்கள் புறப்படும்போது பேசிய பேச்சு மரக்கட்டைக்குக்கூட சுதந்திர வீரஉணர்ச்சியை ஊட்டக்கூடியதாக இருந்தது. அப்படியிருக்க, ஏற்கெனவே தாய்நாட்டின் விடுதலைக்காக உடல், பொருள், ஆவியைத் தத்தம் செய்யச் சித்தமாயிருந்தவர்களைப் பற்றிக் கேட்பானேன்? புது டெல்லியில் சுதந்திரக்கொடியை உயர்த்தி நேதாஜியை இந்தியக் குடியரசின் முதல் அக்கிராசனராகச் செய்யும் வகையில் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை என்று பிரக்ஞை செய்துகொண்டு அந்த வீரர்கள் கிளம்பினார்கள். அத்தகைய சுதந்திர ஆவேச வெறி, டாக்டர் ராகவனையும் கொள்ளைகொண்டிருந்தது. 

ஆயினும் அவனுடைய உற்சாகத்தை ஓரளவு குறைப்பதற்குரிய இரு காரணங்கள் ஏற்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று, ரேவதியைப் பிரிந்து போகவேண்டியிருக்கிறதே என்பது. ஏனெனில், ரேவதி சேர்ந்திருந்த பெண்கள் படை, போர்முனைக்கு உடனே அனுப்பப்படவில்லை. இவ்விதம் ஒருவரையொருவர் பிரிய நேர்ந்தது அவர்கள் இருவருக்குமே மனவேதனையை அளித்தது. என்றாலும், அவர்கள் ஈடுபட்டிருந்த மகத்தான லட்சியத்தை முன்னிட்டு ஒருவாறு மனதைத் திடப்படுத்திக்கொண்டு பிரியத் தயாரானார்கள். மறுபடியும் சந்தித்தால், சுதந்திர பாரத தேசத்தில் சந்திப்பது, இல்லாவிடில் வீர சொர்க்கத்தில் சந்திப்பது என்று ஒருவருக்கொருவர் வாக்குறுதி கொடுத்துவிட்டுப் பிரிந்தார்கள்.

ரேவதியின் பிரிவால் ஏற்பட்ட மனச்சோர்வை, ராகவன் ஒருவாறு சமாளித்துக்கொண்டான். ஆனால், வேறொரு காரணத்தினால் மனதில் ஏற்பட்ட சங்கடம் அவ்வளவு சுலபமாகச் சமாளிக்கக் கூடியதாயில்லை. அந்தக் காரணம், ராகவன் சேர்ந்திருந்த சுதந்திரப் படையின் தலைவர் மேஜர் ஜெனரல் குமரப்பா என்பதுதான்!”

தன்னையும் ரேவதியையும் பிரித்தது குமரப்பாதான் என்கிற சந்தேகம் ராகவனுக்கு.

ஒருநாள் ரகவனை, குமரப்பா அழைக்கிறார். ராகவன் ஓடோடிச் செல்கிறான்.

கேப்டன் ராகவனை அவர் ஏற இறங்கப் பார்த்தார். பிறகு, ``கேப்டன், உம்மிடம் மிக முக்கியமான ஒரு வேலையை ஒப்புவிக்கப்போகிறேன்" என்றார்.

ராகவன் கம்பீரமாக ``மிக்க வந்தனம். ஜெனரல், என் உயிரைக் கொடுத்தாவது கட்டளையை நிறைவேற்றுவேன்!" என்று சொன்னான். ஆனால், அவன் மனதுக்குள் ஏனோ திக் திக் என்றது.

``உயிரைக் கொடுக்கிறேன் எனச் சொல்வதில் பயனில்லை. இந்தியாவின் வருங்காலத்தையே உம்மிடம் ஒப்புவிக்கப்போகிறேன். ஒரு கடிதம் கொடுப்பேன். அதைக் கொண்டுபோய் பத்திரமாய்ச் சேர்க்க வேண்டும். வழியில் உயிருக்கு அபாயத்தைத் தேடிக்கொள்வது துரோகம் செய்வதாகும்."

``கடிதம் யாருக்கு?" என்று ராகவன் கேட்டபோது, அவனுடைய குரல் தழுதழுத்தது.

``வேறு யாருக்கு? நமது மகோன்னத தலைவருக்குத்தான். நேதாஜி, தற்சமயம் அந்தமான் தீவில் இருக்கிறார். ஆகாச விமானத்தில் போய் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, பதிலும் வாங்கிவர வேண்டும்.''

சற்று முன்னால் ராகவன் மனதில் குடிகொண்டிருந்த பயமெல்லாம் பறந்தது. குமரப்பாவிடம் சொல்ல முடியாத நன்றி அவனுடைய உள்ளத்தில் ததும்பியது.

``ரொம்ப வந்தனம்! இதோ புறப்படத் தயார்!" என்று எக்களிப்புடன் சொன்னான்.

``ஆனால், இந்த முக்கியமான கடிதத்தை அவ்வளவு சுலபமாக உம்மிடம் ஒப்புவிக்க முடியாது. அதற்கு முன்னால் உமக்கு ஒரு சோதனை இருக்கிறது. அதில் நீர் தேறியாக வேண்டும்."

சிறிது நேரம் ராகவனுடைய மனதைவிட்டு அகன்றிருந்த சந்தேகங்கள், பயங்கள் எல்லாம் திரும்பவும் அதிவிரைவாக வந்து புகுந்தன. 

``என்ன சோதனை?" என்று ஈனஸ்வரத்தில் கேட்டான். 

``நான்கு நாள்களுக்கு முன்பு இங்கு வந்துசேர்ந்த படையில் ஒருவர் மீது பிரிட்டிஷ் ஒற்றர் என்ற சந்தேகம் ஏற்பட்டது. விசாரித்ததில் அது நிச்சயமாயிற்று. நமக்குள்ளே இருந்துகொண்டு ஒற்று வேலை பார்ப்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமல்லவா?"

``தெரியும். மரணதண்டனை!"

``அந்தத் தண்டனையை நீர் நிறைவேற்ற வேண்டும்."

ராகவன் மனதில் பெரும்திகில் உண்டாயிற்று. மேலே எதுவும் பேச முடியாமல் நின்றான்.

``ஒற்று வேலைபார்த்தது ஒரு பெண்; அவள் உமக்கு அறிமுகமுள்ள பெண்தான்!"

ராகவனுக்கு இப்போதுதான் எல்லாம் வெட்டவெளிச்சமாகின. அவள் ரேவதியாகத்தான் இருக்க வேண்டும். சந்தேகமில்லை. `ஆ! இந்தக் கொடிய கிராதகன் இந்த முறையில் இருவர் மேலும் பழிதீர்த்துக்கொள்ளப் பார்க்கிறான். இத்தனை நாள் ஒன்றுமே வெளியில் காட்டிக்கொள்ளாமல் வேஷம்போட்டதெல்லாம் இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துத்தான்' என்று ராகவன் ஒரு நிமிட நேரம் யோசனை செய்தான். படைத்தலைவர்களின் கட்டளைகளை மறுவார்த்தை பேசாமல் நிறைவேற்றுவதாகச் செய்துகொடுத்த பிரதிக்ஞையை ஞாபகப்படுத்திக்கொண்டான். அதை நிறைவேற்றிவிட்டு, நேதாஜியையும் கடைசி முறையாகத் தரிசித்துவிட்டு, பிறகு தன் சொந்த பழியைத் தீர்த்துக்கொள்வது என்று முடிவுசெய்தான்.

``என்ன யோசனை செய்கிறீர், ஒப்புக்கொள்கிறீரா... இல்லையா?" என்று அதிகாரக் குரலில் கேள்வி வந்தது.

``கட்டளையை நிறைவேற்றுகிறேன்!" என்று ராகவன் பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னான்.

``ரொம்ப சரி! இதோ துப்பாக்கி. இதில் ஐந்து குண்டுகள் இருக்கின்றன. ஐந்தையும் தீர்த்துவிட வேண்டும். ஒருவேளை கை நடுக்கத்தால் குறி தவற இடமிருக்கக் கூடாதல்லவா?"

இவ்விதம் சொல்லிக்கொண்டே குமரப்பா மேஜை மேல் கிடந்த துப்பாக்கியை எடுத்து நீட்டினார். ராகவன் அதற்குள் மனதைத் திடப்படுத்திக்கொண்டிருந்தான். சிறிதும் கை நடுக்கமின்றித் துப்பாக்கியை வாங்கிக்கொண்டான்.

கேப்டன் ,ரேவதியின் கண்களைக் கட்டி ஒரு பாறையின் பக்கத்தில் நிறுத்தியிருந்தார்கள்.

ராகவனும் அவளுக்கு எதிரில் முப்பது அடி தூரத்தில் நின்றுகொண்டான். துப்பாக்கியை குறிபார்த்துவிட்டு, கண்களை மூடிக்கொண்டான். விசையை இழுத்தான்.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து!

ஐந்து வெடியும் ராகவனுடைய தலையின் உச்சியில் ஐந்து இடி விழுந்ததுபோல் வெடித்தன.

அவனுடைய தலை சுழன்றது. மறுபடியும் ஒரு பெருமுயற்சி செய்து சமாளித்துக்கொண்டான். கண்களைத் திறந்து பார்த்தபோது ஏற்கெனவே ரேவதி நின்ற பாறை ஓரத்தில் புகை சூழ்ந்திருப்பதைக் கண்டான். அந்தப் புகையினிடையே தரையில் ஓர் உருவம் கிடந்தது! அங்கிருந்து கேப்டன் ராகவனை மிக அவசரமாக விமானக்கூடத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

அதன் பிறகு அவன் குமரப்பாவைப் பார்க்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. கடிதம் அவனிடம் கொண்டுவந்து கொடுக்கப்பட்டது. விமானம் தயாராக நின்ற இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.  

அதன் பிறகு இந்திய தேசிய ராணுவம் தோற்கிறது. நேதாஜி, விமான விபத்தில் மரணமடைகிறார். ராகவன், குமரப்பாவைக் கொன்று தீர்க்கும் பழி உணர்ச்சியுடன் அவரைத் தேடி வட இந்தியாவில் அலைகிறான். கடைசியில் ஒரு ரயில்பெட்டியில் அவரைக் கண்டு சுடப்போகிறான். அப்போது ஆண் வேடத்தில் அவன் கதையை அதுவரை முழுக்கக் கேட்டுக்கொண்டிருந்த ரேவதி உயிருடன் வந்து மீசையை எடுத்துவிட்டு தன்னை அடையாளம் காட்டி குமரப்பாவைச் சுடுவதைத் தடுக்கிறாள்.

பிறகு கணவனும் மனைவியும் ஆனந்தமாக சென்னைக்குச் செல்லும் ரயிலில் ஏறுகிறார்கள். பயணத்தின்போது குமரப்பாவைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல்போனதைப் பற்றியே பேசிக்கொண்டு போகிறார்கள். அப்போது...

என்னுடைய பெட்டிக்குள்ளே சில நாள்களாக பத்திரப்படுத்தி வைத்திருந்த தினசரிப் பத்திரிகை ஒன்றை எடுத்துக் கொடுத்தேன். அதில் வெளியாகியிருந்த ஒரு செய்தியைச் சுட்டிக்காட்டினேன். அதைப் படித்ததும் ராகவனுக்கு எல்லையற்ற வியப்பு ஏற்பட்டது என்பதை அவருடைய முகக்குறி உணர்த்திற்று. மேற்படி பத்திரிகைச் செய்தி வருமாறு...

`இந்திய சுதந்திரப் படையில் மிகவும் பொறுப்புவாய்ந்த பதவி வகித்தவரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பூரண நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆப்தருமான மேஜர் ஜெனரல் குமரப்பா, சென்னை ஆஸ்பத்திரியில் நேற்று சேர்க்கப்பட்டார். சிகிச்சை எதுவும் பயன்படாமல் இன்று மாலை அவர் மரணமடைந்த செய்தியை அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.'

லெஃப்டினென்ட் கர்னல் ராகவன் மேற்படி செய்தியைத் திரும்பத் திரும்பத் திரும்பப் படித்துப் பெருமூச்சு விட்டார்.

``தேதியைப் பார்த்தீர்களா?" என்று கேட்டேன்.

``ஆம்; ரட்லம் ஜங்ஷனில் நாம் சந்தித்ததற்கு மூன்று தினங்களுக்கு முன்னால்..." என்றார் ராகவன்.

``அன்றிரவு அவரைப் பார்த்தபோதே எனக்கு ஏதோ ஒரு மாதிரி இருந்தது" என்று நான் சொன்னேன்.

``அமரவாழ்வைப் பற்றி ஜெனரல் குமரப்பா கூறியதின் உண்மைப்பொருள் இப்போதுதான் எனக்கு நன்றாய் விளங்குகிறது!" என்றார் என்னுயிர் துணைவர்.

 குமரப்பாவாக வந்தது ஆவியா என்கிற குழப்பத்தை வாசகனுக்கு ஏற்படுத்தி, கதையை முடிக்கிறார் கல்கி. கேதாரியின் தாயாரும் அமரவாழ்வும் கல்கியின் எழுத்துக்குச் சரியான அடையாளங்கள் என நான் கருதுகிறேன்.

முந்தைய பாகங்கள்:

 பாகம்1- வ.வே.சு.ஐயர்

பாகம்-2- ஆ.மாதவய்யா

பாகம்-3- பாரதியார்

பாகம்-4-புதுமைப்பித்தன்

பாகம்-5- மௌனி

பாகம்-6 - கு.பா.ரா

பாகம்-7- ந.பிச்சமூர்த்தி

பாகம்- 8 - பி.எஸ்.ராமையா

பாகம்- 9 - தொ.மு.சி. ரகுநாதன்

பாகம் -10- அறிஞர்.அண்ணா

பாகம்-11- சி.சு.செல்லப்பா

 பாகம்-12- ந. சிதம்பர சுப்ரமணியன்

பாகம் - 13 - எஸ்.வி.வி

பாகம் - 14 - தி.ஜ.ரங்கராஜன்!