Published:Updated:

காற்று விற்பனைக்கு!

காற்று விற்பனைக்கு!
பிரீமியம் ஸ்டோரி
News
காற்று விற்பனைக்கு!

பாரதி தம்பி

காற்று விற்பனைக்கு!

`காற்றுக்கு எடை உண்டு' என்பது அறிவியல் விதி.  அது இப்போது வர்த்தக விதியும் கூட. ‘சுவாசிக்கும் காற்றுக்கும் விலை வைத்து விற்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை’ என இதுவரை வெறும் எச்சரிக்கை வாக்கியமாகப் பேசிவந்த விஷயம், இப்போது உண்மையாகிவிட்டது. சுவாசிக்கும் காற்றை பாட்டிலில் அடைத்து, இப்போது விற்கத் தொடங்கிவிட்டார்கள். தண்ணீர் பாட்டில்போல இது காற்று பாட்டில். சீனாவில் தொடங்கியிருக்கும் இந்த வியாபாரம், படிப்படியாக உலகம் எங்கும் பரவிவருகிறது.

காற்றை பாட்டிலில் அடைத்து சுவாசிக்கவேண்டிய அளவுக்கு, சீனாவின் சுற்றுச்சூழல் சீர்கெட்டுக் கிடக்கிறது. அதன் தீவிரத்தைப் புரிந்து கொண்டால்தான் காற்று விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்ட அவலம்  புரியும்.  சீனத் தலைநகர் பீஜிங் உள்பட நாட்டின் 33 நகரங்கள், நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு காற்று சீர்கேட்டால் நாசமாகிவிட்டன. சாலையில் நடந்து சென்றால், எதிரே நடந்து வருபவரின் முகம் தெரியாத அளவுக்குப் புகைமண்டலம். பள்ளிக்கரணை, கொடுங்கையூர் குப்பைக் கிடங்குகளை எரித்துவிட்டால், அந்த ஏரியாவே புகைமண்டலத்தால் சூழப்பட்டிருப்பதைப் போல... மொத்த நகரமும், எல்லா நேரங்களிலும் இருந்தால் எப்படி இருக்கும்?

பொருளாதார வளர்ச்சியில் அதிவேகமாக முன்செல்லும் சீனா, அதற்குக் கொடுத்த விலை இது. ஏராளமான தொழிற்சாலைகளும், சாலைகளில் திரண்டு நிற்கும் வாகனங்களும், குளிரைப் போக்க மக்கள் வீட்டில் எரிக்கும் நிலக்கரியும்... ஏராளமான புகையையும் தூசியையும் உமிழ்ந்து சுற்றுச்சூழல் மோசமான நிலையை அடைந்துவிட்டது. சீனக் காற்றில் இருக்கும் மாசின் அளவு, பாதுகாப்பான வரம்பைக் காட்டிலும் 20 மடங்கு அதிகம். இதனால் ஆண்டுக்கு 3.5 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான மக்கள் உயிரிழக்கின்றனர்.

காற்று விற்பனைக்கு!

ஆனால் சீன அரசு, தங்கள் நாட்டில் சுற்றுச் சூழல் பிரச்னையே இல்லை என மறுத்துவந்த நிலையில், 2013-ம் ஆண்டில் சீனாவின் காற்று சீர்கேடு ஒரு புதிய உச்சத்தை எட்டியது. நகரங்களில் வெளியில் நடமாடவே முடிய வில்லை. நச்சுக்காற்றை சுவாசித்ததால், தொண்டை வறண்டுபோனது; தொண்டையில் பிசுபிசுப்பாக ஒட்டிக்கொண்டது; மூக்கின் உள்ளே கறுப்பு நிறத் துகள்கள் படிந்துபோயின. மூக்கைச் சிந்தினால், துப்பினால் கரிய நிற நச்சுகள் திரண்டு வெளியே வரும். இதனால் மக்கள் பெரும் அச்சம் அடைந்தார்கள். வீட்டைவிட்டு வெளியே வந்தால் மாஸ்க் அணிந்துகொண்டு வந்தார்கள். பெற்றோர்கள், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவே அஞ்சினார்கள். பள்ளிக்கூடங்கள், திறந்த வெளியில் விளையாடும் விளையாட்டுகளுக்குத் தடை விதித்தன. விதவிதமான நோய்கள், வீதியில் நடந்தால் மூச்சுத்திணறல் எல்லாம் ஏற்பட்டன.

2014-ம் ஆண்டில், பீஜிங் நகரத்தில் மாரத்தான் போட்டி நடந்தது. ஓடத் தொடங்கியபோது 400 பேராக இருந்த எண்ணிக்கை, ஒருசில கிலோ மீட்டர்களிலேயே மிகச் சிலராகச் சுருங்கிப் போனது. காரணம், ஓட ஓட, அவர்கள் அணிந்திருந்த மாஸ்க்கின் நிறம் சாம்பல் நிறத்தில் மாறத் தொடங்கியதுதான். அச்சம் அடைந்த மாரத்தான் வீரர்கள், ஓட்டத்தை அத்தோடு நிறுத்திக்கொண்டார்கள். பன்னாட்டு நிறுவனங்கள், பீஜிங்கில் பணிபுரியும் தங்கள் ஊழியர்களுக்கு 20 முதல் 30 சதவிகிதம் ‘ரிஸ்க் அலவன்ஸ்’ வழங்கின. பல நிறுவனங்களில், தெர்மாமீட்டர் போல, காற்றில் உள்ள மாசின் அளவை அளவிட்டுச் சொல்லும் தானியங்கிக் கருவிகள் பொருத்தப்பட்டன. அவற்றில், காற்று மாசின் அளவு ஓடிக்கொண்டே இருக்கும். அது அபாய அளவை எட்டும்போது அதில் இருந்து எச்சரிக்கை மணி ஒலிக்கும். இந்த இயந்திரத்துக் கான தேவை மிக அதிக அளவில் ஏற்பட்டுள்ளதால், ஒரு காற்றுத் தரக்கட்டுப்பாட்டுக் கருவியின் விலை 5,000 டாலரைத் தாண்டியுள்ளது.

காற்று விற்பனைக்கு!
காற்று விற்பனைக்கு!

தனிமனிதர்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் மாஸ்க் அணிந்துகொள்கிறார்கள். இந்த மாஸ்க் பல்வேறு தரங்களில், பல்வேறு தொழில்நுட்பங்களில் கிடைக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த மாஸ்க் தொழில் துறையின் சந்தை மதிப்பு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. சாதா மாஸ்க், பிரீமியம் மாஸ்க் எல்லாம் உண்டு. இவைபோக சீன மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஸ்மார்ட்போன்களில் ‘ஏர் குவாலிட்டி ஆப்ஸ்’களை வைத்துள்ளனர். அதில் அவ்வப்போது காற்றின் தரத்தை சோதனை செய்துகொண்டே இருக்கின்றனர். 2015-ம் ஆண்டில் காற்று மாசின் அளவு மேலும் அதிகரித்து அரசாங்கமே, ‘ரெட் அலெர்ட்’ கொடுக்கும் அளவுக்கு நிலைமை மாறியது. பீஜிங் நகரத்தின் உள்ளேயும் வெளியேயும் செயல்படும் 21,000 தொழிற்சாலைகளுக்குத் தங்கள் உற்பத்தியைக் குறைத்துக்கொள்ளவும் நிறுத்திக்கொள்ளவும் அரசு அறிவுறுத்தியது. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த மோசமான சூழல் சீர்கேட்டின் பின்னணியில்தான் ‘தூய்மையான, சுத்தமான சுவாசிக்கும் காற்று’ எனக் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனைசெய்யும் பிசினஸ் இப்போது சீனாவில் சூடுபிடித்திருக்கிறது.

vitalityair என்கிற கனடா நிறுவனம், சீனாவின் காற்று வணிகத்தில் புதிதாக நுழைந்துள்ளது. கனடாவின் பரிசுத்தமான காடுகள், ஏரிகள், மலைகளில் இருந்து சேகரிக்கப்படும் ‘பிரீமியம் ஆக்ஸிஜனை’ பாட்டிலில் அடைத்து விற்பனை செய்வதாகச் சொல்கிறது இந்த நிறுவனம்.

3 லிட்டர் காற்று அடைக்கப்பட்ட ஒரு புட்டியின் விலை 32 டாலர். இந்திய மதிப்பில் 2,100 ரூபாய்.

7.7 லிட்டர் காற்று அடைக்கப்பட்ட ஒரு புட்டியின் விலை 3,900 ரூபாய். ‘இதன்மூலம் 150 முறை தூய்மையான காற்றை சுவாசிக்க முடியும்’ என்கிறது இந்த நிறுவனத்தின் விளம்பரம். 3,900 ரூபாய் கொடுத்து வாங்கும் காற்றை, வெறும் 150 முறைதான் சுவாசிக்க முடியுமா? அப்படியானால், ஒரு சுவாசத்துக்கு 26 ரூபாய் வருகிறது. பிடிக்கப்படும் இடத்துக்கு ஏற்ப இந்த விலையும் மாறுபடுகிறது. ‘எனக்கு, கனடாவின் குறிப்பிட்ட மலைப்பகுதியின் காற்றுதான் வேண்டும்’ என குறிப்பாகக் கேட்டும் பெறலாம். ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை.

சீனாவில் இப்போது சக்கைப்போடு போடும் இந்த நிறுவனம், 2014-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் சி.இ.ஓ-க்களில் ஒருவரான மோசஸ் லாம், ‘`உண்மையில் இதை ஒரு விளையாட்டான யோசனையாகவே நாங்கள் பேசினோம். ஒரு பையில் காற்றை அடைத்து, புகைப்படம் எடுத்து Ebay தளத்தில் விற்பனைக்கு ஏற்றினோம். உடனே விற்றது. அடுத்த பையை அதைவிட கூடுதல் விலை வைத்து வெளியிட்டோம். அதுவும் விற்றது. அப்போதுதான் இதில் ஒரு சந்தை வாய்ப்பு இருப்பதை உணர்ந்தோம். அப்போதும்கூட, மருத்துவரீதியில் தேவைப்படுவோருக்கும், தங்கள் சொந்த ஊரின் காற்றை சுவாசிக்க விரும்புவோருக்கும் இது பயன்படும் என்ற அளவில்தான் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தோம். ஆனால், சீனாவில் எங்கள் காற்று பாட்டிலுக்கு அன்றாடத் தேவை இருப்பதைக் கண்டு கொண்டோம். இப்போது எங்கள் நிறுவனம் வேகமாக வளரும் ஸ்டார்ட்அப்களில் ஒன்று’' என்கிறார்.

காற்று விற்பனைக்கு!

இந்த நிறுவனத்தை ‘நவீன காலத்தின் மிகவும் புதுமையான ஸ்டார்ட்அப்’ என வர்ணிக்கிறது புகழ்பெற்ற சர்வதேச வர்த்தக இதழான ‘ஃபார்ச்சூன்’. ‘`நாங்கள் சீனாவின் கள நிலவரத்தைத் தொடர்ந்து கவனித்துவருகிறோம். எங்கள் சீன விநியோகஸ்தர்கள் நிலைமையை விளக்குகின்றனர். சந்தையின் தேவை மிக அதிகமாக இருப்பதை உணர்கிறோம். அதனால் எங்கள் உற்பத்தியை வேகப்படுத்தி உள்ளோம்’' என்கிறார் மோஸஸ் லாம். இன்னும் பல கனடா நிறுவனங்கள் சீனாவுக்கு காற்று பாட்டில்களை ஏற்றுமதி செய்கின்றன.

Shoreditch Air என்ற நிறுவனம் லண்டனில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. ‘நீங்கள் லண்டனை விட்டுப் பிரிந்து இருக்கிறீர்களா? அல்லது லண்டனில் அனுபவித்த நறுமணமிக்க  காற்றை இப்போது சுவாசிக்க வேண்டுமா? உங்களுக்காகத்தான் இந்த பாட்டில் காற்று’ என்கிறது இந்த நிறுவனத்தின் குறிப்பு. ஒரு பாட்டில் காற்றின் விலை 19.99 பவுண்டு. இந்திய விலையில் 1,903 ரூபாய்.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் காற்று பாட்டிலுக்கு நிர்ணயித்துள்ள விலை மிக மிக அதிகம். சீனாவில் விற்பனை செய்யப்படும் ஒரு தண்ணீர் பாட்டிலின் விலையைவிட, ஒரு காற்று பாட்டிலின் விலை 200 மடங்கு அதிகம். இதை எல்லோராலும் வாங்கவே முடியாது. இதனால் நம் ஊரில் 2 ரூபாய்க்கு தண்ணீர் பாக்கெட் விற்கப்படுவதைப்போல, பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட குறைந்த விலைக் காற்று பாக்கெட்டுகளும் விற்பனைக்கு வந்திருக்கின்றன. இந்த வணிகத்தில் ஈடுபட்டுள்ள சீனாவின் புகழ்பெற்ற தொழிலதிபர் சென் குங்பியோ, ‘`பத்தே நாட்களில் ஒரு கோடி காற்று பாக் கெட்டுகள் விற்பனையாகியுள்ளன'’ என்கிறார்.

தூய்மையான காற்றை சுவாசிக்க, மக்கள் பணம் செலுத்தத் தயாராக இருக்கிறார்கள் என்பதைக் கண்டுகொண்ட வணிக நிறுவனங்கள், இதை வேறு எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் எனச் சிந்திக்க ஆரம்பித்துள்ளன. ‘உங்கள் விருந்தினர்களுக்கு, தூய்மையான காற்று பாட்டிலைப் பரிசளியுங்கள்’ என இதை ஒரு கிஃப்ட் ஆக மாற்றியுள்ளனர். ஷாங்ஜியாங் என்ற நகரத்தில் ஓர் உணவு விடுதி, ‘எங்கள் ஹோட்டலில் ஏர் ஃபில்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு வந்தால் தூய்மையான காற்றுக்கு உத்தரவாதம்’ என விளம்பரம் செய்கிறது. அங்கு உணவருந் தினால் பில்லில், சுத்தமான காற்றுக்கும் கட்டணம் உண்டு. விரைவில் air parlour வரக்கூடும். அங்கு சென்றால் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம். ஒரு நிமிடத்துக்கு இவ்வளவு எனக் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.
 
vitalityair நிறுவனம், காற்று பாட்டிலை இந்தியாவுக்கும் ஏற்றுமதி செய்வதாகக் கூறுகிறது. டெல்லியில் இந்தியா கேட் உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த பாட்டில்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
டெல்லிக்கு வந்துவிட்ட பாட்டில் சென்னைக்கும், மதுரைக்கும், தூத்துக்குடிக்கும் வருவதற்கு அதிக காலம் ஆகாது. விரைவில் நம் ஊரின் கடைகளிலும் இந்தக் காற்று பாட்டில்களும், காற்று பாக்கெட்டு களும் விற்பனைக்கு வரக்கூடும். நமக்கு இது அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், இந்த அதிர்ச்சி ஒன்றும் நமக்குப் புதிது அல்ல. தண்ணீர் பாட்டில் வரும்போது நமக்கு என்ன தோன்றியது? ‘தண்ணியைப்போய் பாட்டில்ல அடைச்சு விக்குறாங்களே... யார் வாங்குவா?’ என நினைத்தோம். இன்று தண்ணீர் பாட்டில் இல்லாத கரங்கள் இல்லை. அரசே தண்ணீர் பாட்டில் தயாரித்து விற்பதுடன், அதைச் சாதனையாகவும் சொல்லிக் கொள்கிறது.

காற்று விற்பனைக்கு!

அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பணம் பண்ணும் தொழிலாக மாற்றப் பட்டு வெகுகாலம் ஆகிறது. அடுத்தது அத்தியாவசியத் தேவையான தண்ணீரையும் பணமாக மாற்றினார்கள். இப்போது காற்றில் கை வைத்துள்ளனர். மற்ற எதையும்விட `சுவாசிக்கும் காற்று' என்பது உயிர் அச்சம் தரக்கூடியது. சுற்றுப்புறச்சூழல் மிக மோசமாக மாறிக் கொண்டிருப்பது குறித்து ஒவ்வொரு நாளும்    எத்தனையோ ஆய்வறிக்கைகளைப் படிக்கிறோம். எனவே, தூய்மையான காற்று பாட்டில் விற்பனைக்கு வரும்போது, இதில் ஏதேனும் சிறு நன்மையேனும் கிடைக்குமா என நினைத்து மக்கள் அதை வாங்கத்தான் செய்வார்கள். மற்றபடி, ‘சுவாசிக்கிற காற்றைப்போய் காசு கொடுத்து வாங்குவதா?, காற்றைக்கூட விற்பனை பண்டமாக மாற்றிவிட்டார்களா?’ என்ற அற உணர்ச்சியில் இந்தக் காற்று பாட்டில்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என நம்புவதற்கு இல்லை. ஏனெனில், ‘தரமானது வேணுமா... செலவு செஞ்சுதான் ஆகணும்’ என்ற மனநிலைக்கு ஏற்கெனவே நம்மைப் பழக்கப்படுத்தியுள்ளனர். அதனால் காற்று பாட்டில் வாங்கும் அளவுக்குத் தங்கள் பொருளாதார நிலைமையை வளர்த்துக்கொள்ளத்தான் மெனக்கெடுவார்களே தவிர, அதைத் தவிர்த்துவிட மாட்டார்கள். ஆனால், காற்று பாட்டிலின் விலை அதிகமாக இருக்கிறதே, என்ன செய்வது? கவலையே வேண்டாம்... நிச்சயம் காற்று பாட்டில்களுக்கும் இ.எம்.ஐ தருவார்கள். அது காற்றுக்கான இ.எம்.ஐ அல்ல... நம் உயிருக்கான இ.எம்.ஐ!