Published:Updated:

மைல்ஸ் டு கோ - 13

தனுஷ் - வெற்றிமாறன்
பிரீமியம் ஸ்டோரி
News
தனுஷ் - வெற்றிமாறன்

படம்: ஸ்டில் ராபர்ட்

‘அது ஒரு கனாக்காலம்’ முதல் ஷெட்யூல் சமயத்தில் பாலு மகேந்திரா சாருக்கு திடீரென ஸ்ட்ரோக் வந்து படுத்த படுக்கையாகிவிட்டார்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சாருடன் சுமுகமான பேச்சுவார்த்தையில் இல்லாமல் இருந்த பாலா, சாரைப் பார்க்க வந்தார். அந்தச் சந்திப்பு அவ்வளவு நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக இருந்தது. பாலா, காலையில் இருந்து மாலை வரை வெளியிலேயே நின்றுகொண்டிருந்தார். பாலாவுக்கு சார் மீது உள்ள அந்த அக்கறை எங்களை ஆச்சர்யப்படுத்தியது.

‘இனிமே அவர் எழுந்துவருவது ரொம்ப கஷ்டம்’ - டாக்டர்கள் எங்களிடம் இப்படிச் சொன்னார்கள். ஆனால், மூன்றாவது நாளே சார் என்னைக் கூப்பிட்டு, ‘டேய் சீக்கிரம்டா, ஷூட்டிங்குக்கு ரெடி பண்ணிவெச்சுக்கங்க. தனுஷ் டேட்ஸ் வேஸ்டாயிடக் கூடாது. அடுத்த வாரம் நான் வந்ததும் ஷூட்டிங் போலாம்’ என்றார். சரியாக 60-வது நாளில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தார். லொக்கேஷனில் ஒரு ஃப்ரேம் ஃபிக்ஸ் பண்ண சார் நடந்தால், நாங்கள் எல்லாம் அவர் பின்னால் ஓடவேண்டியிருக்கும். அந்த அளவுக்கு அதே பழைய எனர்ஜியுடன் இருந்தார்.

`அது ஒரு கனாக்காலம்' சமயத்தில் தனுஷ் பள்ளி முடித்து வந்த ஒரு சிறுவன்போல்தான் இருப்பார். முதல் ஷெட்யூல் ஷூட் பண்ணிக்கொண்டிருந்தபோது தனுஷுக்கும் எனக்கும் சின்னதாக ஒரு வாக்குவாதம். இரண்டாவது ஷெட்யூல் திரும்ப வரும்போது, ‘என்கிட்ட ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு, கேட்கிறீங்களா?’ என்றேன். வேறு யாராக இருந்தாலும் அந்த நேரத்தில் மன வருத்தத்தை மனதில் வைத்து வேண்டாம் எனச் சொல்லியிருப்பார்கள். ஆனால் தனுஷ், ‘இன்னைக்கே கேட்டுடுறேன் சார்’ என்றார். சொன்னேன். அவருக்குப் பிடித்திருந்தது. ‘வெற்றி ஒரு கதை சொன்னார் சார்’ என்று அதை சாரிடம் சொன்னார். சார் ரொம்ப சந்தோஷப்பட்டார்.

‘அது ஒரு கனாக்காலம்’ ஆரம்பிக்கும் நேரத்தில் சாரிடம் கதை சொல்ல வந்த ராமசுப்புவுடன்தான்  நான் அதிகமாக திரைக்கதை விவாதங்களில் ஈடுபடுவேன். அந்த ராமசுப்பு எங்களுக்கு அறிமுகமானதே சுவாரஸ்யமானது. ஒருநாள் காலை சார் வழக்கத்தைவிட எனர்ஜியோடு இருந்தார். ‘டேய், ராமசுப்புனு ஒரு பையன் வந்து கதை சொன்னான்டா. வெரி நைஸ் ஸ்கிரிப்ட்’ என்றார். ‘சார்கிட்ட அப்படி யார்றா பேர் வாங்கினது?' என எங்களுக்கு ஆச்சர்யம். ‘நான் அவனுக்கு கேமரா பண்ணணும்னு வந்து கேட்டான்டா’ என்றார். ‘ஐயோ, இவர்கிட்டபோய் இப்படிக் கேட்டிருக்கான் பார்’ என்று எனக்கு வேடிக்கையாக இருந்தது. `நான் அவன் படத்துக்கு கேமரா பண்ணலாம்னு இருக்கேன்டா’ என்ற சாரின் அடுத்த பதிலில் அப்படியே உறைந்துவிட்டோம். ‘மற்ற டைரக்டர்களின் படங்களுக்கு நீங்க ஏன் சார் கேமரா பண்றது இல்லை?’ - இந்தக் கேள்வியை அவரின் உதவியாளர்கள் அடிக்கடி கேட்பது உண்டு.

இயக்குநர்கள் பரதன், மகேந்திரன், மணிரத்னம்... இவர்களின் முதல் படத்துக்கு சார்தான் கேமரா. அவர்கள் அனைவரும் தங்களின் ஸ்டைலை, சினிமாவை சார் மூலமாகத்தான் கண்டறிந்திருக்கிறார்கள். ‘நான் ஃபர்ஸ்ட் படம் பண்றவங்க எல்லாம் கதை சொல்லும்போது என்னை அவ்வளவு இன்ஸ்பயர் பண்ணினாங்கடா. மணி கதை சொல்லும்போது ‘திஸ் கை வில் டூ சம்திங் குட்’னு ஒரு நம்பிக்கை இருந்தது. அதனாலதான் நான் அவருக்கு முதல் படம் பண்ணினேன்’ என்றார். ‘அப்படிப்பட்டவரை திடீர்னு யாரோ ஒரு ராமசுப்பு என்கிற இளைஞன் இன்ஸ்பயர் பண்ணிட்டானே. யார் அவன்?’ - எங்களுக்கு திகைப்பும் வியப்புமாக இருந்தது. ‘இந்தியில் ராஜ்குமார் சந்தோஷிகிட்டயும், இங்க தங்கர்பச்சான்கிட்டயும் வொர்க் பண்ணியிருக்கான்’ என்றார் சார். அப்போது சாரை, ராமசுப்பு காலை ஏழு மணி முதல் எட்டு மணிக்குள் அடிக்கடி சந்திப்பது உண்டு. அப்படி சாரைச் சந்திக்க வந்த ராமசுப்புவை ஒருநாள் நான் சந்தித்தேன்.

ராம் - பாலுமகேந்திரா
ராம் - பாலுமகேந்திரா

எங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு ஒற்றுமை இருந்தது. இருவரும் நிறைய சிகரெட் பிடிப்போம். நிறைய  டீ குடிப்போம். அதுவும் டீக்கடையில் நின்று சாயங்காலம் 6 மணிக்குப் பேச ஆரம்பித்தால் இரவு 12 மணிக்கு டீக்கடையை மூடிய பிறகும், அடுத்த கடைக்குப் போய் பேசுவோம். அங்கும் மூடினால் அடுத்த கடை. சினிமா தாண்டி புத்தக வாசிப்பு, அரசியல், ரசனை என ஏராளம் பேசுவோம். அன்றைய ராமசுப்புதான் இன்றைய இயக்குநர் ராம். சாருக்கு ராமின் வொர்க் ரொம்பப் பிடிக்கும். ஒருமுறை, ‘நான் பார்த்த ஐந்து சிறந்த ஆசியத் திரைப்படங்களில் ‘கற்றது தமிழ்’ ஒன்று’ என்றார். ராம் முதலில் சாரிடம் சொன்ன அந்த ஸ்கிரிப்ட் ‘மேகம்’. அதை ராம் இன்னும் படமாக்கவில்லை. இப்படி நட்பாக எங்கள் யூனிட்டுக்கு அறிமுகமான ராம், சாரின் `அது ஒரு கனாக்காலம்' படத்தில் வேலைசெய்யத் தொடங்கினார். அதற்கு நான்தான் காரணம். ஆம், நான் இல்லாததால்தான் அவர் அங்கு வேலைசெய்தார்.

ஊட்டி ஷெட்யூல். நான் தனுஷுக்குக் கதை சொன்னப் பிறகு, ‘மச்சான் கதை ஓ.கே-டா’ என்று மணிக்கு போனில் சொன்னேன். கதை சொல்லி ஓ.கே வாங்கிய உதவி இயக்குநர் என்ற ஆர்வத்தில் எக்ஸ்ட்ரா எனர்ஜி போட்டு வேலை செய்துகொண்டிருந்தேன். ஒரு நாள், ‘டேய் வெட்டி, இந்த லைட்டிங் நல்லாயிருக்குடா. அந்த லாரி பாஸிங்ல போனா நல்லா இருக்கும். லாரியை வரச் சொல்லு’ என்றார் சார். ‘நீங்க `ஃபைட் எடுக்கலாம்'னு சொன்னதால, லாரி இன்னைக்கு வரலை சார். நாம பேசாம ஃபைட்டே எடுத்துடலாமே சார்’ என்றேன்.

‘மூர்த்தி, இவன் என்ன நினைச்சிட்டிருக்கான்? என் படத்துல நான் என்ன ஷூட் பண்ணணும்னு இவன் எனக்குச் சொல்றான்’ - பயங்கரமாகச் சத்தம் போட்டார். வேறு ஒருநாள் இதற்கு எல்லாம் உச்சமாக ஒரு சம்பவம். ஒரு ஸ்டெடிகேமை ஜீப்புக்குப் பின்னால் பொருத்தி ப்ரியாமணிக்கு முன்னால் போகவேண்டும். இது காட்சி. அதில் நாங்கள் எதிர்பார்க்காத ஒரு குழப்பம். அந்த கேமராவின் ஃபோகஸில் ஜீப்பின் புகை அடித்தது. `புகை வரக் கூடாது' என்றார் சார். ‘ஜிம்மிஜிப் எடுத்துட்டு வந்து மவுன்ட் பண்ணுடா’ என்றார். ‘நீங்க `ஸ்டெடிகேம் மட்டும் போதும்'னு சொன்னதால ஜிம்மிஜிப்பை முந்நாநேத்தே அனுப்பிட்டேன் சார்’ என்றேன். ‘நான் என்னைக்குடா சொன்னேன்?’ என்றார்.

‘ஸ்டெடிகேம் போதும்னா அதுதானே சார் அர்த்தம்’ என்றேன். ‘நான் சொல்லாததை எல்லாம் சொன்னேன்னு நீயா ஏன் நினைச்சுக்கிற? எனக்காக நீ யோசிக்காத’ என்றார். இருவரும் மாறி மாறிப் பேச, ‘இனிமே நீ வராத. என் கண்லயே முழிக்காத’ என்றார். நான் அங்கிருந்து வந்துவிட்டேன். எம்.ஏ படிப்பு, ‘கதை நேரம்’, ‘காதல் வைரஸ்’, இப்போது ‘அது ஒரு கனாக்காலம்’... இப்படி அனைத்தையுமே பாதியில்விட்டு ஓடினால் எதைத்தான் நம்மால் முழுதாக முடிக்க முடியும் என்கிற பயம் வரத்தொடங்கியது. இதைச் சரி பண்ணினால்தான நம்மால் படம் முடிக்க முடியும் என்ற எண்ணம். ஓர் உதவி இயக்குநராக வேலைசெய்யும்போது நாம் கற்றுக்கொள்வதில் மிக முக்கியமானது காத்திருத்தல்.

முதலில் ஒரு பணி கிடைக்கக் காத்திருப்பதும், பிறகு அந்தப் பணி முடிவடையும் வரை காத்திருப்பதும்தான் ஓர் உதவி இயக்குநரின் மிகப் பெரிய வேலை. அது நம்மைப் பக்குவப்படுத்தும், ஒரு தவநிலைக்கு எடுத்துச்செல்லும். அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் என் எண்ணம். பிறகு, ஒரு ஷெட்யூல் முடிந்ததும், நான்  சாரைப் பார்க்க ஆபீஸ் போனேன். ஒன்றுமே தெரியாததுபோல், ‘என்னடா வெட்டி, என்ன விஷயமா வந்திருக்க?’ என்றார். ‘ஸாரி சார்... நான் அன்னைக்கு உங்ககிட்ட அப்படிப் பேசியிருக்கக் கூடாது. என்னை மன்னிச்சிடுங்க’ என்று உண்மையிலேயே மனபூர்வமாகச் சொன்னேன். ‘ம்ம்ம்ம்... இப்ப என்னா அதுக்கு?’ என்றார். ‘நான் திரும்பவும் படத்துல வொர்க் பண்றேன் சார். எனக்கு படத்துல வொர்க் பண்ணி முடிக்கணும்னு தோணுது' என்றேன். அப்படியே என்னைப் பார்த்தார். `நீ உன் ஸ்கிரிப்ட் வொர்க்கை ஆரம்பிச்சிட்ட. நீ அந்த வேலையைப் பாருடா’ என்றார். ‘இல்ல சார், எனக்கு படத்தை கம்ப்ளீட் பண்ணாமப் போறது என்னவோ மாதிரி இருக்கு' என்றேன்.

`அதனாலதான் முதல்லயே சொன்னேன். நீ படத்துல வொர்க் பண்ணினா தனுஷ்கூட இன்ட்ராக்ட் பண்றதுக்கும் உனக்கு ஈஸியா இருக்கும்ல’ - என் மனதில் இருந்ததை சார் சொன்னதுபோல் இருந்தது. ‘ஆமாம் சார்’ என்றேன். சில நாட்கள் கழித்து அந்த இரண்டு மாதக் கசப்பு ஏதுமின்றி என்னுடன் சகஜமாகப் பழக ஆரம்பித்தார். அந்தச் சமயத்தில்தான் தனுஷ் ‘தேசிய நெடுஞ்சாலை’ கதையை, தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகருக்குச் சொல்லச் சொன்னார். வழக்கத்தைவிட அன்று நன்றாகவே கதை சொன்னேன். ‘ரொம்பப் பிரமாதமா இருக்கு'  என்றார். மூன்று நாட்கள் கழித்து தனுஷைக் கூப்பிட்டேன். ‘சார், அவருக்குக் கதை பிடிக்கலைனு சொல்லிட்டார்’ என்றார் ‘சரி தனுஷ், அடுத்தது என்ன?’ என்றேன். ‘வேற புரொடியூஸர் சொல்றேன் சார்’ என்றார்.

இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு தனுஷ் கவிதாலயாவில் கதை சொல்லச் சொன்னார். புஷ்பா கந்தசாமி மேடத்தைச் சந்தித்து கதை சொன்னேன். ‘ரொம்ப நல்லா இருக்கு. நாம பண்ணலாம்’ என்றார். உடனடியாக பத்தாயிரத்துக்கு செக் எழுதி, கையில் கொடுத்தார். ‘எங்க கம்பெனியின் அடுத்த இயக்குநர் நீங்கதான்’ என்றார். அசிஸ்டன்டாக இருக்கும்போது சாரிடம் நிறைய செக் வாங்கியிருந்தாலும் ‘இயக்குநர்’ என்று சொல்லிக் கொடுத்த முதல் செக். சந்தோஷமாக இருந்தது. ஆர்த்திக்கு போன் செய்து, ‘வீட்ல கல்யாணத்தைப் பத்திப் பேசிடு’ என்றேன். இதற்கு இடையில் பாலசந்தர் சாரைச் சந்தித்தோம். ‘வெரிகுட் வெரிகுட்’ என்று வாழ்த்தினார். ‘உங்க கம்பெனியில படம் பண்ண பெருமையா இருக்கு சார்’ என்றேன். அதுவரை இயக்குநர்கள், நடிகர்கள் என்று கவிதாலயா 63 நபர்களை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி யிருக்கிறது. நான் 64-வது அறிமுகம்.

கவிதாலயாவில் இரண்டு மாதங்கள் கதை விவாதம் செய்த பிறகு ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் படம் தடைபட்டது. ஒருநாள் தனுஷ் போனில் அழைத்து, ‘சார், சேலம் சந்திரசேகர் திரும்ப வர்றார். நம்ம ஸ்கிரிப்ட்டுக்கு ஓ.கே சொல்லிட்டார்’ என்றார். சேலம் சந்திரசேகரைத் திரும்பச் சந்தித்தேன். ‘இந்த ஸ்கிரிப்ட்டுக்கு ஒரு போட்டோஷூட் பண்ணிடலாம்’ என்றார். அப்போது நான், மணி, விக்ரம், துரை செந்தில், இன்னொரு செந்தில், கார்த்தி ஆகியோர் இருந்தோம். சிக்கனமாக எடுக்கவேண்டும் என்று ஆரம்பித்தோம்.  ஆனால், இரண்டே முக்கால் லட்சம் செலவானது.

தயாரிப்பாளருக்கு போட்டோஷூட் ஸ்டில்ஸ் அவ்வளவு திருப்தியாக இல்லை. காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் படித்த எனது நண்பர் அமரை அழைத்தேன். அமர், பாலு மகேந்திரா சாரிடம் ‘அது ஒரு கனாக்கால’த்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். ‘அமர், இந்த போட்டோஸை வெச்சு பட பூஜைக்கான இன்விட்டேஷன் மாதிரி ஒண்ணு, இன்னைக்கு நைட்டே ரெடி பண்ணணும். நாளைக்கு காலையில புரொடியூஸருக்கு பிரசன்ட் பண்ணணும்’ என்றேன். நைட் ஒரு நிமிஷம்கூட தூங்காமல் அமர் தயாரித்த ஏழெட்டு டிசைன்ஸ் இன்விட்டேஷனை எடுத்துக்கொண்டு சேலம் சந்திரசேகரைச் சந்தித்தேன். ‘டிசைன்ஸ் பிரமாதமா இருக்கு. நாம அடுத்த வாரமே ஆரம்பிச்சிடுவோம்’ என்றார். சுறுசுறுப்பானோம். ஆனால் இரண்டு மாதங்களாகியும் எந்தத் தகவலும் இல்லை.

தனுஷிடம் இருந்து வழக்கம்போல் ஒரு அழைப்பு. ‘சார், ஏ.எம்.ரத்னம் சார்ட்ட பேசியிருக்கேன். போய் கதை சொல்லுங்க’ என்றார். சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. காமெடி சேர்ப்பது உட்பட சின்னச்சின்னத் திருத்தங்கள் சொன்னார். நிறையப் பேசி, நிறையச் சேர்த்து, நிறைய நீக்கி... ஸ்கிரிப்ட் தயார்செய்தோம். ஆனாலும் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இதற்கு இடையில் எண்ணூரில் வசிக்கும் நண்பர் ஆண்ட்ருவின் பைக் தொலைந்துபோன சம்பவங்களை வைத்து ஒரு கதை யோசித் திருந்தேன். அதை ஒன்லைனராக ரெடி செய்தேன். தனுஷிடம், பைக் ஸ்கிரிப்ட்டின் அந்த ஓப்பனிங் சீனை மட்டும் சொன்னேன்.

‘கேமரா அப்படியே கீழ இருந்து மேலே போகுது. அங்க ஒருத்தன் அடிபட்டுக் கிடக்குறான். அப்படியே ரூம்குள்ள போகுது. ஒருத்தன் கையில கத்தியை வெச்சுக்கிட்டு இறங்கி வர்றான். வாய்ஸ் ஓவரில், ‘இரண்டு மாசத்துக்கு முன்னாடி வரை நான் சாதாரணமாதான் இருந்தேன். ஆனால் இது எல்லாத்துக்கும் காரணம் எங்க அப்பா எனக்கு ஆசையா வாங்கித் தந்த பைக்குனு சொன்னா உங்களால நம்ப முடியுதா?’ நான் சொல்லி முடிப்பதற்குள், ‘எனக்கு இதெல்லாம் செட்டாகாதுல்ல சார்’ என்றார் தனுஷ் தயக்கமாக. ‘உங்களுக்கு சூட் ஆகுற மாதிரியும் பண்ணலாம் தனுஷ்’ என்றேன். ‘அப்படிப் பண்ண முடியும்னா, `தேசிய நெடுஞ்சாலை'யை முடிச்சிட்டு அடுத்தது இதைப் பண்ணலாம் சார்’ என்றார்.

இதெல்லாம் ‘அது ஒரு கனாக்காலம்’ ரிலீஸுக்கு முன்பே நடந்தவை. பிறகு தனுஷே ஒருநாள் அழைத்தார். ‘சார், ரத்னம் சார் ‘தேசிய நெடுஞ்சாலை’ வேணாம்னு சொல்லி வேறு ஒரு டைரக்டரை அனுப்புறார். உங்ககிட்டயே வேறு ஒரு கதை இருக்குனு அந்த பைக் ஸ்கிரிப்ட் பற்றி அவர்கிட்ட சொன்னேன். `கேட்கிறேன்'னு சொல்லியிருக்கார். உங்களை நாளைக்கு `கிரீன் பார்க்' வரச்சொல்லியிருக்கார். போய்ப் பாருங்க’ என்றார். போனேன். அந்த பைக் ஸ்கிரிப்டைக் கடகடவெனச் சொன்னேன். ‘இதுதான் கதை. இதை நாம பண்ணிடலாம். அந்த ரோட் ஸ்கிரிப்ட் நல்லாயிருந்தது. ஆனால், படம் முடிஞ்சு வெளியிலப் போய் என்ன கதைனு சொல்வீங்க? இந்த பைக் கதையில ஒரு நடுத்தரக் குடும்பம், அந்தக் குடும்பத்து இளைஞனோட கனவு இருக்கு. ஒரு சாதாரணமான பையன் எப்படி ஹீரோ ஆகிறான்கிற ஹீரோயிசம் இருக்கு. இதை நீங்க வொர்க் பண்ணுங்க. நல்லா வரும்’ என்றார். நான் அப்போது சொன்ன வெர்ஷனில் ரௌடி செல்வத்தின் சாவை நாம் பார்க்க மாட்டோம். ‘பிரபல ரௌடி வெட்டிக்கொலை’ என்று பேப்பரில்தான் நியூஸாக வரும். ரத்னம் சார்தான், ‘அவன் ரொம்ப நல்லவன். அவன் மரணத்தை நாம பார்த்தோம்னா இன்னும் பெர்சனலாக அவனுடன் கனெக்ட் ஆவோம்’ என்றார்.

2005-ம் ஆண்டு நவம்பரில் இருந்து 2006-ம் ஆண்டு மே மாதம் வரை அங்கு டிஸ்கஷனில் இருந்தோம். அப்போது அந்தக் கதைக்கு நாங்கள் வைத்திருந்த தலைப்பு ‘இரும்புக் குதிரை’. பாலகுமாரன் நாவலின் தலைப்பு. மே மாதம் வரை இரண்டு மூன்று முறை ரத்னம் சார் கதை கேட்டார். சில மாற்றங்கள் சொன்னார். ஆனால், அந்த நேரத்தில் அவர் விக்ரம் நடித்த ‘பீமா’ படம் பண்ணிக்கொண்டிருந்ததால் ஒரே சமயத்தில் அதையும் இதையும் பண்ண முடியாத நெருக்கடி.  அங்கிருந்தும் வந்துவிட்டோம். அதற்குப் பிறகு தனுஷுக்கு போன் பண்ணினால் போன் ரிங் ஆகும். பதில் இருக்காது. ஒரு நேரத்தில், ‘த நம்பர் டஸ் நாட் எக்சிஸ்ட்’ என்று வந்தது. ‘அவரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேருக்கு அனுப்பிட்டுத்தான் இருக்கார். ஆனால் நடக்கலைன்னா, நாம வேற யாருக்காவதுதானே கதை ரெடி பண்ணணும்னு நினைக்கிறோம் வெற்றி’ என்று நண்பர்கள் சொல்லத் தொடங்கினார்கள். எனக்கு அவர்கள் சொன்னது புரிந்தது. ஆனால், அது சரியா என எனக்குத் தெரியவில்லை. குழப்பத்தில் மேலும் குழம்பினேன்!

- பயணிப்பேன்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan