Published:Updated:

"காடு வனவிலங்குகளின் வீடு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்!" - 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன்

"காடு வனவிலங்குகளின் வீடு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்!" - 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன்

"காடு வனவிலங்குகளின் வீடு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்!" - 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன்

"காடு வனவிலங்குகளின் வீடு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்!" - 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன்

"காடு வனவிலங்குகளின் வீடு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்!" - 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன்

Published:Updated:
"காடு வனவிலங்குகளின் வீடு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்!" - 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன்

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 உயிர்கள் கருகி மடிந்துபோயின. வேறு சிலர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். குரங்கணி தீ விபத்தால் ஏற்பட்ட வெப்பம் தமிழகம் முழுவதும் இன்னும் தகித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஒரு சம்பவத்திலிருந்து பாடம் படித்துக்கொள்ளும் நிலையில்தான் நாம் இப்போதும் இருந்துகொண்டிருக்கிறோமே தவிர, வரும்முன் காக்கும் யுக்தி நம்மிடம் இல்லை. அதிலும் இங்கு நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் மறக்கடித்து விடுகின்றன. தமிழகத்தில் வனப்பகுதி சுருங்கிக்கொண்டே வருகிறது. இயற்கை தன்னை புதுப்பித்துக்கொள்ள மனிதர்கள் உதவாமல் இருந்தாலும் பரவாயில்லை; வனப்பகுதிக்கு தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டியது அவசியம். குரங்கணி விபத்துக்குப் பிறகாவது வனங்கள் பற்றிய புரிதல் மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிய வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது. 

இந்தத் தீ விபத்து சம்பவம் குறித்து 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜனிடம் பேசினோம்.. "தேனி வனப்பகுதியில் நான்கு நாள்களாகத் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. அதன்பிறகும் அவர்கள் ஏன் வனத்துக்கு ட்ரெக்கிங் போனார்கள் என்றுதான் தெரியவில்லை. வனத்துறையினரும் தீயை அணைக்காமல் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்ற கேள்விக்கும் பதில் இல்லை. மன அழுத்தத்தைக் குறைக்க காட்டுக்குள் எதற்காகப் போகிறார்கள் என்பதும் புரியவில்லை. ஐ.டி துறையில் பணிபுரிவோர் அதிகரித்த பிறகுதான் ட்ரெக்கிங் செல்வதும் அதிகரித்திருக்கிறது. முன்பு இதுபோன்ற பயணங்கள் குறைவு. காடு என்பது சிங்கம், புலி, யானை போன்ற விலங்குகளின் வீடு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமது வசிப்பிடம் அருகே சிறுத்தையோ, புலியோ அல்லது பிற வன உயிரினங்களோ புகுந்துவிட்டால் அவற்றை நாம் என்ன பாடுபடுத்துகிறோம்? ஊருக்குள் புகுந்த வன உயிரினங்கள் மீண்டும் காட்டுக்குள் உயிருடன் செல்வது மிகவும் அரிது. அப்படியிருக்க, நாம் எதற்காக வனத்துக்குள் செல்ல வேண்டும். அப்படி ஒருவேளை அனுமதிக்கப்பட்டாலும், வனத்துக்குச் செல்வதை அரசு முறைப்படுத்த வேண்டும். 

அதிலும், காட்டுப்பகுதிக்குள் செல்பவர்கள் விசில், டார்ச் போன்ற அத்தியாவசிய உபகரணங்களைத் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். வனத்தைப் பற்றி நன்கு தெரிந்த உள்ளூர் மக்களையும் அழைத்துக்கொண்டுதான் உள்ளே செல்ல வேண்டும். அதிலும் 15 பேருக்கு அதிகமானோர் ட்ரெக்கிங் செல்லக் கூடாது. கேரளத்தில் ட்ரெக்கிங் செல்வதை முறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அதுபோல தமிழக அரசும் முறைப்படுத்த வேண்டும். ட்ரெக்கிங் போகிறவர்கள் இறப்பது தொடர்கதையாக இருக்கிறது. ஒருவர், இருவர் இறப்பதால் அது பெரிதுபடுத்தப்படுவதில்லை. இந்த முறை இறப்பு எண்ணிக்கை அதிகம் என்பதால் வெளியே தெரிகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம்வரை வனத்தில் 'ஃபயர் வாட்ச்சர்' எனும் தீ கண்காணிப்புப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அதுபோன்ற நபர்கள் யாரும் நியமிக்கப்படுவது இல்லை எனத் தெரிகிறது. இந்த ஆண்டு தீ கண்காணிப்புப் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது. தீ கண்காணிப்பாளர்கள் சின்ன அளவில் நெருப்பு ஏற்பட்டாலும் உடனடியாக அதைத் தடுத்து அணைத்து விடுவார்கள். மேலும், பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை கோடைகாலத்தில் ட்ரெக்கிங் செல்ல அனுமதிக்கக் கூடாது. இது கோடைக்காலம் என்பதால் அடிக்கடி நெருப்பு பற்றிக்கொள்ளக்கூடிய அபாயம் உண்டு. அதுமட்டுமல்லாது, வன உயிரினங்கள் தண்ணீர் குடிப்பதற்காகக் கிராமங்களுக்குள் புகுந்துவிடும் சம்பவங்களும் நடக்கும். இந்தக் காலகட்டத்தில் ட்ரெக்கிங் சென்றால் எப்போது வேண்டுமானாலும் எந்தக் கோணத்திலும் ஆபத்து ஏற்படலாம். காடுகளுக்குச் செல்லும்போது நமக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும். அதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக மிக முக்கியம்" என்றார் அவர். 

இத்தனை பேரை பலிகொடுத்த பிறகாவது, ட்ரெக்கிங் செல்வோர், அதற்கு ஏற்பாடு செய்வோர் மற்றும் அரசும் விழித்துக்கொள்ளட்டும்....!