மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 40

கலைடாஸ்கோப் - 40
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - 40

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 40

விஷுவல் கார்னர்

குளுகுளு ஆர்ட்

அடிக்கிற வெயிலுக்குக் குளிர்ச்சியாக ஏதேனும் யோசிக்கலாம் என்றபோது, சிமோன் பெக் (Simon Beck) ஞாபகத்துக்கு வந்தார். `வடிவியல்' என்ற வார்த்தையை மறந்திருப்பீர்கள். காம்பஸ், கோணமானி, ஸ்கேல் எல்லாம் உபயோகித்து பள்ளிக்காலத்தில் பித்தாகரஸ், வட்டம், முக்கோணம் என வரைந்தது ஞாபகம் இருக்கிறதா? ஜியோமெட்ரி உபகரணங்களைப் படுத்தி எடுத்தாலும் கடைசி வரை வடிவியல் ஒரு வடிவத்துக்கு சுலபத்தில் வராது.

கலைடாஸ்கோப் - 40

ஆனால், இந்த சிமோன் பெக் மிகப் பெரிய வடிவியல் வடிவங்களை பனியில் வரைகிறார். அதுவும் தன் காலில் ஸ்நோ ஷூவை மாட்டிக்கொண்டு ஸ்கேட்டிங் செய்தபடி மீட்டர் கணக்கிலான பிரமாண்ட வடிவங்களைத் துல்லியமாகக் கொண்டுவருகிறார். ஒவ்வோர் ஓவியத்தையும் வரைய அவர் சறுக்கியபடியோ நடந்தபடியோ எடுத்துக்கொள்ளும் தொலைவைக் கணக்கிட்டால் கிட்டத்தட்ட 25 மைல்கள் வரை ஆகலாம் என்கிறார்கள். ஓர் ஓவியம் வரைய, 10  மணி நேரம் ஆகும்.

கலைடாஸ்கோப் - 40

ஒவ்வொரு பனிக்காலத்திலும் ஆல்ப்ஸ் மலையில் குறைந்தது இதுபோல 30 ஓவியங்களை வரையும் சிமோன், “வெற்றுக் காகிதத்தைப் பார்த்தால் உங்களுக்குப் படம் வரையத் தோன்றும் அல்லவா? அதுபோல எனக்கு இந்தப் பனிபடர்ந்த பரப்பைப் பார்த்தால், காலில் பரபரப்பு தொற்றிக்கொள்ளும்” என்று தன் ஆர்ட் இன்ஸ்பிரேஷனைச் சொல்லிச் சிரிக்கிறார். 56 வயதான சிமோன், ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் பொறியியல் படித்தவர். மேப் வரைவதே  தொழில் என்பதால், இவ்வளவு பெரிய ஓவியங்களின் துல்லியக் கணக்கு அவர் மனதில் இருக்கிறது. அதை அசத்தலாகக் காலில் கொண்டுவந்துவிட முடிகிறது. `சிமோன் பெக் கலெக்‌ஷன்’ என்ற பெயரில் நியூஸிலாந்து கம்பெனி ஒன்று உள்ளாடைகளில் சிமோனின் இந்த `ஸ்நோ டிசைன்’களைக் கொண்டுவந்திருக்கிறது. `அக்னி வெயிலுக்கு சிமோன் கலெக்‌ஷன் அரை டஜன் பார்சல்...' என்கிற மைண்ட் வாய்ஸ் (யாருடையதோ) எனக்குக் கேட்கிறது!

அஞ்ஞானச் சிறுகதை

துயில்

சீஃப் கே, அந்தப் பிரத்யேக ஹெல்மெட்டை கைகளில் எடுத்துக்கொண்டார்.

அசிஸ்டென்ட் எல் பணிவாகச் சொன்னான், “ `ஏஸ்டிவேஷன்'னு சொல்வாங்க. நீள் துயில். சம்மர்ல சில அனிமல்ஸ் தொடர்ச்சியா பல மாதங்கள் தூங்கும். கிட்டத்தட்ட மரணம் மாதிரி. ஹார்ட் பீட் மட்டும்தான் இருக்கும். அதுவும் மெதுவாகத்தான் துடிக்கும். அது மாதிரிதான் மக்களையும் தூங்கவைக்கப்போறோம்.”

கலைடாஸ்கோப் - 40

இன்னொரு ஹெல்மெட்டை கைகளில் எடுத்துக்கொண்ட எல், அதை ஆராய்ந்தபடி சொன்னான் “நாட்டின் அனைத்து நானோபோன் டவர்களுக்கும் புரோகிராம் அனுப்பியாச்சு. எலெக்ட்ரான்கள் வழியாக இன்னும் சில நிமிடங்களில் மக்கள் மூளைக்கு நீள்துயிலுக்கான சிக்னல் போய்விடும்.”

சீஃப் சந்தோஷமாக ஹெல்மெட்டை மாட்டியபடி கேட்டார் “அடுத்த மூன்று மாதங்களுக்கு உணவு, தண்ணீர், மின்சாரம், பற்றி எதிர்க்கட்சிகளுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை.”
“ஹா ஹா ஹா... அவர்களும் மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் துயில் எழுவார்கள்” என்ற எல் கணினியை சீஃப் பக்கம் திருப்பிவிட்டு தன் ஹெல்மெட்டை அணிந்தான்.
சீஃப், என்டர் பட்டனைத் தட்டினார்.

“நீயும் நானும் மட்டும்தான் விழித்திருக்கப்போகிறோம். மூன்று மாதங்கள் நிம்மதியான வாழ்க்கை. இந்த ஹெல்மெட் சரியாக வேலைசெய்யும்தானே?” - சிக்னல்கள் நாடெங்கும் பரவுவதை, மக்கள் தூங்கி விழுவதை மானிட்டரில் பார்த்துக்கொண்டே கேட்டார் சீஃப்.

``ஆனால், இதில் ஒரு ஹெல்மெட் வேலைசெய்யாது” என்றபடி சீஃப் முகத்துக்கு நேராகப் புன்னகைத்தான் எல்.

“என்ன சொன்னாய்?!” என்று அதிர்ச்சியாகக் கேட்ட சீஃப், பிறகு அடக்க முடியாமல் கொட்டாவிவிட்டார்.

கண்கள் மெள்ள சொக்குவதை உணரத்தொடங்கினார்!

கொலாஜ்

துகில் விரித்தன்ன…

நற்றிணையில் எயினந்தையார் பாடிய ஒரே ஒரு பாடல் `துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்…' எனத் தொடங்கும். வேலை தேடி செல்லும் தலைவனை, தோழி தடுத்து நிறுத்துவதற்காகப் பாடும் பாடல். இதில் வெயிலைப் பற்றி சொல்லும்போது `வெளிறிய ஆடையை விரித்ததுபோல கிடக்கும் வெயில்' என்ற உவமை அட்டகாசம்.

கலைடாஸ்கோப் - 40

எயினந்தையார் ஆண்பாற்புலவரா? தெரியவில்லை. ஆனால், ஒரு பெண்ணின் பார்வையில் தலைவனைத் தடுத்து நிறுத்தப் பட்டியலிடும் காரணங்கள் ஒரு விஷுவல் ஸ்கிரிப்ட்போல இருக்கிறது. உதாரணத்துக்கு, தலைவன் பயணமாகப்போகும் வழியில் கிடைக்கும் உணவு, செந்நாய்கள் தின்று மிச்சம் வைத்துபோன மானின் இறைச்சிதான் எனக் கொடுமைகள் நீள்கின்றன.

ஏன் இந்தப் பாடல் ஞாபகம் வந்தது என்றால், கொளுத்தும் அக்னி வெயிலில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு அலுவலகம் புறப்படும் கணவர்களை, லன்ச் பாக்ஸுடனும் சங்கடத்துடனும் வழி அனுப்பும் மனைவியரைப் பார்த்தபோதுதான். ஸ்கூல் ஃபீஸ், கரன்ட் பில் (ஏ/சி ஓடுவதால் கொஞ்சம் எக்ஸ்ட்ரா), வாடகை, இத்தியாதி... என ஒரு பட்டியல் கண் முண் ஓடுவதால், `எயினந்தையார்’ போல பட்டியலிட்டு தலைவனைத் தடுக்க முடிவது இல்லை.

நாஸ்டால்ஜியா நோட்

குளியல்

`குளியலையும் நாஸ்டால்ஜியா நோட்டில் சேர்த்துவிட்டார்களா?!' என பீதியடையத் தேவை இல்லை. நான் `குளியல்' எனச் சொல்வது, சளி, தலைவலி, காய்ச்சல் பற்றிய பயத்துடன் வாரத்துக்கு ஒருதடவை தலைக்குத் தண்ணீர்வைக்கும் வைபவத்தை அல்ல. ஏரி, குளம், ஆறு, கிணறு... எனக் கண்கள் சிவப்பாகும் வரை குளிரக் குளிரக் குளிப்பதை.

கலைடாஸ்கோப் - 40

காலையில் துண்டு, பல்பொடி, சோப்புடன் படித்துறைகளுக்கு வரும் மாமாக்கள், தாத்தாக்கள்... அரசியல் நையாண்டி, சினிமா விமர்சனம் எனப் பேசுவது இன்றைய 100 யூடியூப் சேனல்களுக்குச் சமம். பெருசுகளைத் தொற்றிக்கொண்டுவரும் சிறுசுகள் வயதுக்கு ஏற்ப நீச்சல் பயில்வது, குதிப்பது, குட்டிக்கரணம்போடுவது எனத் தண்ணீரைக் கண்ணீர்விடவைப்பார்கள். அதுவும் கோடைக்காலங்களில் ஆறு, குளம், குட்டை எனச் சில மணி நேரத்தைத் தண்ணீருக்கே தாரைவார்த்துவிட்டதுபோல கிடப்பார்கள்.

இவை எல்லாம் இன்று பெரும்பாலும் இல்லாமல் ஆகிவிட்டது. ஆறுகள், குளங்கள் நிறைந்த எங்கள் ஊர் பக்கம்கூட இன்று மோட்டார் போட்டு மொட்டைமாடி யானைபோல உட்கார்ந்திருக்கும் கறுப்பு டேங்குகளில் தண்ணீரைச் சேமித்து பாத்ரூமில்தான் குளிக்கிறார்கள். குளியல் என்பது, நீருக்கும் நமக்குமான விளையாட்டு. அந்த இன்பம் இன்றைய பக்கெட் குளியலில் கிடைக்கிறதா?
நிலத்தடி நீரை நம்பி நிலத்துக்குள் பல்லாயிரம் நுண்ணுயிர்கள் உள்ளன. நம்மிடம் ஒரு மோட்டாரும் மின்சாரமும் இருக்கிறது என்ற திமிரில், நிலத்தில் வன்முறையாகப் `போர்’ செய்கிறோம். நிலத்தையும் நீரையும் மதியாத சமூகம் என்ன ஆகும்? விடை, இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளிவந்த ஆனந்த விகடனில் பாரதி தம்பியின் `தண்ணீர் அகதிகள்’ கட்டுரையில் இருக்கிறது.

நானோ ஹிஸ்டரி

சன் கிளாஸ்

விளம்பர மாடல்கள்போல வெயிலுக்கு நிறையப் பேர் சன் கிளாஸ் போட்டுத் திரிவதைப் பார்க்க முடிகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆர்டிக் பனிப்பிரதேச இனப் பழங்குடிகள் கடல்பசுக்களின் (Walrus) தந்தங்களை நசுக்கி அதில் சின்னதாகக் கீறல் போட்டு, சன் கிளாஸ்போல பயன்படுத்தியுள்ளனர். பனிப்பிரதேசத்தில் பளிச்சென அடிக்கும் வெயிலை கன்ட்ரோல் செய்து கண்ணுக்கு அனுப்புவதுதான் நோக்கம். பிடில் வாசிப்பு புகழ் நீரோ மன்னன், கிளாடியேட்டர்கள் காலரியில் சண்டையிடுவதைக் கண்டுகளிக்க, எமரால்டு கற்களைச் செதுக்கிச் செய்த கண்ணாடியை உபயோகித்தான் என்றும் குறிப்புகள் இருக்கின்றன.

கலைடாஸ்கோப் - 40

12 -ம் நூற்றாண்டு சீனாவில் குவார்ட்ஸ் படிகங்களால் செய்த கிளாஸ்களை நீதிபதிகள் அணிந்திருக்கிறார்கள். காரணம், விசித்திரம். குற்றவாளிகளை விசாரணை செய்யும்போது நீதிபதிகளின் உணர்ச்சிகள் கண்களில் தெரியாமல் இருக்குமாம். நீதிபதிகளின் உணர்ச்சிபாவங்களைப் பார்த்து தங்கள் வாக்குமூலங்களை மாற்றும் பலே குற்றவாளிகளுக்குப் போக்கு காட்டத்தான் இந்த ஏற்பாடோ என்னமோ!

18 -ம் நூற்றாண்டில்தான், நீல வண்ணக் கண்ணாடி லென்ஸ்களைப் பயன்படுத்தி சன் கிளாஸ்களைத் தயாரித்திருக்கிறார் ஜேம்ஸ் அய்ஸ்காக். அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் பல வடிவங்கள் மாறி சாம் ஃபாஸ்டரின் சன் கிளாஸ்கள் 1930 -ம் ஆண்டுகளில் சந்தைக்கு வெற்றிகரமாக வரவே, 1937 -ம் வருடத்தில் மட்டும் 20 மில்லியன் அமெரிக்கர்கள் அதை வாங்கியிருக்கிறார்கள். ஆனால், அதில் 25 சதவிகித மக்களுக்குத்தான் உண்மையில் அதன் தேவை இருந்திருக்கிறது. மீதி எல்லோரும் வாங்கக் காரணம், இன்று உலகெங்கும் அமெரிக்கா பரப்பியிருக்கும் `சந்தையில் புதிதாக எது வந்தாலும் வாங்குவோம்' என்கிற நுகர்வு வெறிதான்.

கலைடாஸ்கோப் - 40

`சன் கிளாஸை’ சினிமாக்காரர்கள் நட்டநடு இரவிலும் `மூன் கிளாஸ்’போல முகத்தில் பாவிப்பதைக் கிண்டலடிக்கிறோம். ஆனால், சினிமாவுக்கும் இந்த சன் கிளாஸுக்கும் சில தொடர்புகள் இருக்கின்றன. 1920 -களிலேயே சன் கிளாஸ்கள் அதிக அளவு புழக்கத்தில் வந்தாலும், பெரும்பாலும் ஹாலிவுட் நடிகர்கள்தான் அதைப் பயன்படுத்தியுள்ளனர். இரண்டு காரணங்கள், ஒன்று ரசிகர்கள் தங்களை அடையாளம் காணாமல் இருக்க(?). இரண்டு, ஆர்க் லேம்புகளுக்கு முன்னால் நடிப்பதால் கண்கள் சிவந்து கனிந்துவிடுவதைத் தவிர்க்க. அது மட்டும் அல்லாமல், 1930 -களில் சாம் ஃபாஸ்டர் செல்லுலாய்டைப் பயன்படுத்தித்தான் சன் கிளாஸ்களை அதிக அளவில் தயாரித்திருக்கிறார். ஆனால், இந்தக் காரணங்களுக்காகத்தான் நம் ஊர் ஸ்டார்கள் கிளாஸ் போடுகிறார்கள் எனச் சொன்னால் அந்த `சன்’னே நம்பாது!