Published:Updated:

மைல்ஸ் டு கோ - 14

மைல்ஸ் டு கோ
பிரீமியம் ஸ்டோரி
News
மைல்ஸ் டு கோ

படம்: ஸ்டில் ராபர்ட்

‘ஒரு நடிகருக்காக எத்தனை காலம்தான் காத்திருப்பது?’ என நண்பர்கள் அடிக்கடி கேட்க ஆரம்பித்தார்கள். ஒரு நடிகருடன் ஓர் இயக்குநர் வேலை செய்ய நினைப்பதற்கு, படத்தைத் தாண்டி பல காரணங்கள் உண்டு.

இருவருக்கும் இடையே ஒரு புரிதல் இருக்க வேண்டும். அந்தப் புரிதல் எனக்கும் தனுஷுக்கும் இடையே நிறைய உண்டு. என் திருமணத்துக்கு 30,000 ரூபாய் பணம் கேட்டபோது, என் தேவை அதிகம் இருக்கும் என உணர்ந்து ஒரு லட்சம் ரூபாய் தந்ததற்கும், ஓர் உதவி இயக்குநரின் திருமணத்துக்கு அவர் வந்ததற்கும் அந்தப் புரிதல்தான் காரணமாக இருக்க முடியும்.

எனக்கு அதிகம் கோபம் வரும். சம்பந்தமே இல்லாத விஷயத்துக்குக் கூட கோபப்படுவது உண்டு. ‘என்னப்பா ஆச்சு... எதுக்குப்பா இப்படிக் கோபப்படுறான்?’ எனப் பலரும் கேட்பார்கள். `அது ஒரு கனாக்காலம்' படப்பிடிப்பின்போது என் கோபத்தை தனுஷ் நேரடி யாகவே சந்திக்கவேண்டிய சூழல் வந்தது. அதையும் மீறி, என் கதை பிடித்து, என்னைப் புரிந்துகொண்டு நான்கு தயாரிப்பாளர்களிடம் என்னை அனுப்பிய தனுஷே படம் ஆரம்பிக்கப் போராடவேண்டி யிருந்தது. இந்தச் சூழலில் இன்னொரு ஹீரோவிடம் கதை சொல்லி, அவருக்காக இன்னும் ஓரிரு வருடங்கள் காத்திருப்பதைவிட தனுஷுக்காகவே காத்திருக்கலாம் என எனக்குத் தோன்றியது. கையில் இருந்த ஸ்கிரிப்ட் இல்லாமல், இன்னொரு கதைக்கான வேலைகளைத் தொடங்கினேன்.

மைல்ஸ் டு கோ - 14

அந்த நேரத்தில் `அமோரஸ் பெரோஸ்’ எனக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன். `மெக்ஸிக்கோவின் நாய் சண்டையை முன்வைத்து எடுக்கப்பட்டப் படம். அப்போதுதான் `நம்ம ஊர் சேவல் சண்டையை நாம் படமாக்கலாமே' எனத் தோன்றியது. அந்த எண்ணம்தான் `ஆடுகளம்'. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டருக்கு ஒரு பேட்டர்ன் சிக்கும். ஒரு ஸ்கிரிப்ட் எழுதி, அது திரைப்படமாக முழுமையடையும் முன்னர், இன்னொரு ஸ்கிரிப்ட் எழுதினால், முதல் கதையில் இருந்த முக்கியமான சில விஷயங்கள் அடுத்த ஸ்கிரிப்ட்டிலும் வரும். `பொல்லாதவன்' படத்தில் பைக்கைத் தேடி ஹீரோ போவதைப்போல `ஆடுகளம்' படத்தில் ஹீரோ அவனுக்குப் பெரிய வெற்றியைத் தேடித் தந்த சேவலைத் தேடிப்போவதாக எழுதியிருந்தேன்.

ஆனால், எனக்கு அந்தக் கதையை எப்படிக் கொண்டுபோவது எனத் தெரியவில்லை. அப்போது எனக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது அலெக்ஸ் ஹேலி எழுதிய `ரூட்ஸ்' நாவலில் வரும் சிக்கன் ஜார்ஜ் என்ற கேரக்டர். அவனது முதலாளிதான் அவனது அப்பா. ஜார்ஜின் அம்மா, அந்த வீட்டில் வேலைக்காரி. இவனையும் வேலைக்காரன்போல நடத்தினாலும் உள்ளுக்குள் பாசமும் இருக்கும். இங்கிலாந்தில் இருந்து ஒருவன், கப்பலில் சேவல்களுடன் சண்டைக்கு வருவான். தொடர்ந்து சண்டை நடக்கும்.

மைல்ஸ் டு கோ - 14

40 ரவுண்டு சண்டையில் 39 ரவுண்டுகளில் ஜார்ஜ் வென்றுவிடுவான். கடைசிச் சண்டையில் அந்த இங்கிலாந்துக்காரன் `என் கப்பல் உள்பட எல்லா சொத்தையும் கட்டுறேன். நீயும் கட்டு' என்பான். சண்டை நடக்கும். 39 முறை தோற்றவன் கடைசிச் சண்டையில் வென்றுவிடுவான். ஜார்ஜின் அப்பா, பிச்சைக்காரனாகிவிடுவான். அப்போது ஜெயித்தவன், `நீ எனக்கு எதையும் தர வேண்டாம். உன் மகன் ஜார்ஜை மட்டும் என்னுடன் அனுப்பு. அவனிடம் வித்தையைக் கத்துக்கிட்டுத் திரும்ப அனுப்புறேன்' என்பான்.

அப்போது நண்பர் சீனுராமசாமி `கூடல் நகர்' படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். என் முயற்சிகள் தாமதமானதால், `நீங்க வாங்க வெற்றி. நான் பரத்கிட்ட சொல்றேன். அவர்கிட்ட கதை சொல்லுங்க’ என்றார். அந்த நேரத்தில் அவர் அப்படிச் சொன்னது மிகவும் முக்கியமானது. எனக்காக பல தயாரிப் பாளர்களிடம் பேசியவர் என்பதால், தனுஷிடம் மற்ற இடங்களில் முயற்சிசெய்வதைச் சொல்லிவிட வேண்டும் என நினைத்தேன். அந்தச் சமயத்தில் ஒருநாள், ஒரு புது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. தனுஷ்தான் அழைத்தார். அப்போது சன் குழுமத்தின் செயல் அதிகாரியாக இருந்த ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா மூலம் ஒரு தயாரிப்பாளர் வந்திருப்பதாகச் சொல்லி, அவரிடம் `தேசிய நெடுஞ்சாலை' கதையைச் சொல்லச் சொன்னார். அவர்தான் `ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன். கதிரேசன் சாரும் அவரது தம்பி சேகரும் கதை கேட்டனர். பரபரப்பாக இருப்பதாகவும், அவர்களுக்குப் பிடித்திருப்பதாகவும் சொன்னார்கள். `தேசிய நெடுஞ்சாலை' கதை பற்றி ரத்னம் சார் சொன்ன விஷயம் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அதனால், `என்கிட்ட இன்னொரு கதை இருக்கு’ என அவர்களிடம் `பொல்லாதவன்' கதையின் ஒன் லைன் மட்டும் சொன்னேன். கிளம்பும்போது, கதிரேசன் சாரின் தம்பி சேகர், பைக் கதை பற்றி கேட்டார். இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொன்னேன். ``பைக்'குன்றதால என்னை மாதிரி பசங்களுக்கு  ஈஸியா கனெக்ட் பண்ணிக்க முடியுது’ என்றார்.

மைல்ஸ் டு கோ - 14

சில நாட்கள் கழித்து தனுஷ் லைனில் வந்தார். தயாரிப்பாளர் `தேசிய நெடுஞ்சாலை' கதையைப் பிறகு பண்ணலாம் என்றதாகவும், வேறு ஓர் இயக்குநரை அனுப்பியதாகவும் சொன்னார். என்னிடம் இன்னொரு கதை இருப்பதாக தனுஷ் அவர்களிடம் சொல்லியிருக்கிறார். என்னை அவர்களிடம் `பொல்லாதவன்' கதையைச் சொல்லச் சொன்னார். நானும் முழுமையாகச் சொல்லிவிட்டு வந்தேன். அவரிடம் எந்த ரியாக்‌ஷனும் இல்லை.

மறுநாள் கதிரேசன் சாரிடம் இருந்து போன். `வெற்றி, நாளைக்கு வாங்க. நாம இந்தப் படத்தைப் பண்ணிடுவோம்' என்றார். தனுஷை அழைத்து விஷயத்தைச் சொன்னேன். அவரிடமும் கதிரேசன் சார் பேசியிருந்தார். அவரைப் போய் பார்த்ததும் அட்வான்ஸ் தந்தார். அவரது லைன் புரொடியூசர் வி.ஏ.துரை (`பிதாமகன்', `லூட்டி', `கஜேந்திரா' படங்களின் தயாரிப்பாளர்) அவர்களிடம் கதை சொல்லச் சொன்னார். அவருக்கும் கதை பிடித்திருந்தது. என்ன தலைப்பு என்றதும் ‘இரும்புக் குதிரை' அல்லது `TN 4D 3551’ என்றேன். அவருக்குப் பிடிக்கவில்லை. ‘நல்லா மாஸா வைங்க’ என்றார். கதிரேசன் சார் `தம்பிக்கு எந்த ஊரு?' மாதிரி வைக்கலாம் என்றார். `படத்துக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லை’ என்பதால் எனக்குப் பிடிக்கவில்லை. நான் விளையாட்டாக `அதுக்கு `பொல்லாதவன்'னு வெச்சுட்டுப் போலாம்' என்றதும் சட்டென அமைதி ஆகிவிட்டார்.

`சூப்பர் டைட்டில்மா. அதையே ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்' என்றார். அதை எப்படித் தடுப்பது எனத் தெரியாமல் ‘தனுஷிடம் பேசாமல் இதை முடிவுசெய்ய முடியாது’ என்றேன். அவர் பேசுவதாகச் சொன்னார். நான் உடனே அங்கு இருந்தே தனுஷை அழைத்தேன். `நம்ம டைட்டில்ஸ் வேணாம்னு சொல்றாங்க தனுஷ். `பொல்லாதவன்'னு வைக்கலாம்னு சொல்றாங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க?' என்றேன். நீண்ட மெளனத்துக்குப் பிறகு, `சார் ஹானஸ்ட்டா சொல்றேன். இந்த டைட்டில் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எதுக்கும் ரஜினி சார்கிட்ட ஒரு தடவை கேட்டுக்கிறேன்' என்றார். ரஜினி சாரும் ஓ.கே சொல்லிவிட்டார். `எனக்கு டைட்டில் பிடிக்கவில்லை' என தனுஷிடம் சொன்னேன். அப்போது கதிரேசன் சார், `ஒரு பிசினஸ்மேனா சொல்றேன். இந்தத் தலைப்புக்காக 20 சதவிகிதம் ஓப்பனிங் அதிகமா வரும்' என்றார். அதற்கு மேல் என்னால் எதுவும் பேச முடியவில்லை.

இப்போது வரை அந்தத் தலைப்பில், அந்தக் கதை வந்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. `பொல்லாதவன்' கதை டிஸ்கஷன் நடந்துகொண்டிருந்தது. காமெடி கொஞ்சம் சேர்த்தால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர் தரப்பில் நினைத்தார்கள். எனக்கு நாராயணின் (`ஆடுகளம்’ நரேன்) நண்பர் பிரித்வி நினைவு வந்தது. `லூட்டி' படத்தின் திரைக்கதை, வசனம் அவர்தான். நகைச்சுவைக்காக வெற்றிபெற்ற படம் அது. அவர் கதை கேட்டுவிட்டு, `இரண்டாம் பாதியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும்' என்றார். `பொல்லாதவ'னில் முதலில் காதல் எபிசோட் வருவதற்கு நேரமாகும். பிரித்விதான் `பைக்குக்கு அப்புறம் எனக்கு ரொம்பப் பிடிச்சது ஹேமா’ என கதை வேகமாகத் தொடங்க உதவினார். படம் முடியும் வரை பிரித்வி `பொல்லாதவ'னுக்கு மிகப் பெரிய சப்போர்ட். `பொல்லாதவன்' டைட்டிலில் திரைக்கதையில் என் பெயரும், பிரித்வி பெயரும் போடலாம் என்றேன். `இல்லை.

இது உங்க ஸ்கிரிப்ட். நான் உதவிதான் பண்ணேன்’ என மறுத்துவிட்டார். தொடர்ந்து `ஆடுகளம்' வரைக்குமே எனக்கு உறுதுணையாக இருந்தார். `பொல்லாதவ'னில் முதலில் இருந்த கதைப்படி சந்தானம் கேரக்டரே கிடையாது. தயாரிப்பாளர் சொன்னதால் சேர்த்தோம். அவர் வந்ததும் படத்துக்கு பலம் சேர்ந்தது. சந்தானம் காலையில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து சீன் பேப்பரை வாங்கிக்கொள்வார். கடகடவென 10 விஷயங்களைச் சொல்வார். நான் அமைதியாகக் கேட்டுக்கொள்வேன். சந்தானமே `நல்ல காமெடியா இருக்குல்ல சார்' என்பார். உடனே, கருணாஸ் `ஆமா... ஆனா, சத்தியமா அவர் படத்துல வைக்க மாட்டார். அதான் நான் எதுவும் சொல்றது இல்லை' என்பார். `பொல்லாத'வனில் இருந்த சந்தானம் காமெடி 100 சதவிகிதம் அவர் எழுதியதுதான்.

படப்பிடிப்பு வேலைகள் தொடங்கின. கதைப்படி ஒரு பேங்க் லொக்கேஷன் தேவை. நாங்கள் பார்த்த இடம் கடைசி நேரத்தில் கிடைக்கவில்லை. காம்ப்ரமைஸுடன் ஏதேனும் ஓர் இடத்தில் ஷூட் செய்தால், அந்தப் படம் சரியாக வராது என நினைத்தேன். உடனே, ஆர்த்திக்கு கால் செய்தேன். அவர்கள் அலுவலகத்தில் ஷூட் செய்ய முடியுமா என அவர் பாஸிடம் கேட்கச் சொன்னேன். அவரும் கேட்டுவிட்டு ஓ.கே என்றார். நானும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜும் போய்ப் பார்த்தோம். சின்னதாக இருந்தாலும் நிஜ அலுவலகம் என்பதால் நன்றாக இருந்தது. அங்கேயே படப்பிடிப்பு நடத்தலாம் என முடிவு செய்தோம்.

மறுநாள் 2007, பிப்ரவரி 21. என் அம்மா, கதிரேசன் சார் மற்றும் அவர் அம்மா, தனுஷ் மற்றும் தனுஷ் அம்மா அப்பா என எல்லோரும் வந்திருந்தார்கள். சின்னப் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.  `ரெடி... ஸ்டார்ட் கேமரா... ஆக்‌ஷன்’ என நான் சொன்னதும் கேமரா ரோல் ஆகும் சத்தம் கேட்டது.

- பயணிப்பேன்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan