
எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

மருந்து அட்டைகள்
குழந்தைகள் மிட்டாய் வாங்குவதுபோல, சின்னச்சின்ன உடல் உபாதைகளுக்குக்கூட மாத்திரை வாங்கிச் சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். ஜலதோஷம் போன்ற சாதாரண விஷயங்களுக்குக்கூட, பிரபலங்களின் கிராஃபிக்ஸில் சிவந்த மூக்குகளை விளம்பரங்களில் காட்டி வியாபாரம் செய்கிறார்கள். சுக்குக் கஷாயம் குடிக்கும் பரம்பரையில் வந்த நாம், விளம்பரங்களை நம்பி ஏமாந்து உடலை வேதியல் பொருட்களின் குப்பைக்கூடையாக மாற்றுகிறோம். இந்தியச் சந்தைகளில் இருக்கும் தேவையற்ற மாத்திரை மற்றும் மருந்துகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்தபோது, அதிர்ச்சியில் சிலருக்கு தலைவலி வந்து அதற்கும் மாத்திரையைத் தேடினார்கள்.
இயற்கையின் மிகப் பெரிய கொடையான உடலுக்கு எதிராக, இந்த சிந்தெட்டிக் வேதியல் யுத்தங்களை, தன் கலையில் பதிவுசெய்கிறார் ஓவியர் சாரா. விழிப்புஉணர்வோ, பிரசாரமோ செய்வதுபோல, அவர் எதையும் வரையவில்லை. அழகான பறவைகளின் போஸ்டர் தொடர்பான கலர் ஓவியங்களை வரைகிறார். அதை எதில் வரைகிறார் என்பதில்தான் கலையின் அரசியல் இருக்கிறது. நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் பல்வேறு மருந்து அட்டைகளைப் பிரித்து, அதன் உள்பக்கத்தில்தான் இந்தப் பறவை ஓவியங்களை வரைகிறார்.
இதுவரை 120 -க்கும் மேலான மருந்து அட்டை ஓவியங்களை வரைந்து கண்காட்சியாக வைத்திருக்கும் சாரா, `மருந்து அட்டைகளின் எதிர்ப்பக்கத்தில் பறவைகளை வரைவது இயற்கைக்கும் செயற்கையான மருந்துகளுக்கும் இடையிலான முரண்பட்ட தன்மையைக் குறியீடாக உணர்த்தத்தான். பறவைகள் என்பது, இயற்கையில் சுதந்திரமான உயிர்கள். அவை மண்ணையும் விண்ணையும் தன் சின்னஞ்சிறிய சிறகுகளால் இணைத்து வாழ்கின்றன' என தன் இணையப் பக்கத்தில் சொல்கிறார்.
சில மருந்துகள், உயிர்களை மண்ணில் இருந்து விண்ணுக்கு பறவைகளைப்போல அனுப்பிவிடுகின்றன என, கோக்குமாக்காகக் குறியீடு தோன்றுவது எனக்கு மட்டும்தானா?

பூனை
``ஸ்ராடிங்கரின் பூனை தியரி தெரியுமா?” என்றான் ஃபெலிஸ். பூட்டிய ஆய்வகத்தில் அவன் குரல் எதிரொலித்தது.
“குவாண்டம் இயற்பியல்படி, எலெக்ட்ரான்கள் நாம் கவனிக்கும்போது துகள் வடிவிலும், கவனிக்காதபோது அலை வடிவிலும் இருக்கும். இரட்டை நிலை. `சூப்பர் பொசிஷன்' எனச் சொல்வார்கள். கொஞ்சம் மண்டை காயவைக்கும் இதை விளக்கத்தான் பூனைக் கருத்தைச் சொன்னார் ஸ்ராடிங்கர்” என்றான் ஃபார்மோன்.
``ஒரு பெட்டிக்குள், கதிர் இயக்கத்தால் உடைந்துபோக வாய்ப்பு உள்ள சயனைடு குப்பியையும் ஒரு பூனையையும் பூட்டிவைத்தால், பூனை உயிருடன் இருக்கலாம் அல்லது இறந்துபோகலாம் என இரண்டு நிலைகள் உண்டு. பெட்டியை நாம் திறந்துபார்க்காதவரையில்தான் பூனையைப் பற்றி இந்த இரண்டு நிலைகள் நமக்கு இருக்கும். ஆனால், பூனையின் பார்வையில்... ஒரே நிலைதான்” என்றான் ஃபெலிஸ்
“ஆமாம். செத்துவிட்டால் இரண்டாம் நிலையை பூனை அறியாது” என்றான் ஃபார்மோன்.
“ஆனால் ஸ்ராடிங்கர், இதை ஒரு கருத்தாக மட்டுமே சொல்லியிருக்கிறார். அவர் பூனையை வைத்து உண்மையான ஆராய்ச்சிசெய்யவில்லை. நான் செய்ய இருக்கிறேன். பூனையைவைத்து அல்ல, உன்னைவைத்து” என்றான் ஃபெலிஸ்.
``ஹா... ஹா... ஹா... நீயா?” என்று சிரித்தான் ஃபார்மோன்.
“என்ன சிரிக்கிறாய்?” என்றான் ஃபெலிஸ்.
“நன்றாகப் பார். நாம் இருவரும் பிறந்ததில் இருந்தே இந்த ஆய்வகத்தில்தான் இருக்கிறோம். இந்த ஆய்வகமே ஒரு பெட்டி மாதிரி இருக்கிறது. ஏற்கெனவே நம்மைவைத்து யாரோ ஆராய்ச்சிசெய்கிறார்கள் என்பது உனக்குப் புரியவில்லையா? உனது பெயரின் அர்த்தம் என்ன தெரியுமா? `ஃபெலிஸ் காடஸ்' என்பது பூனைகளின் பயாலஜிக்கல் நேம்” என்று ஃபெலிஸின் அருகில் வந்தான் ஃபார்மோன்.

“ஃபார்மோனைட்ரைல் என்பதன் சுருக்கம்தான் `ஃபார்மோன்' என்னும் எனது பெயர்.”
“அதன் அர்த்தம்?” - ஃபெலிஸ் பதற்றமாகக் கேட்டான்.
“சயனைடு” என்றான் ஃபார்மோன்.

விசிட்டிங் கார்டு
ஒரு மெஜிஷியன், என் நண்பர் ஒருவருக்கு தன் விசிட்டிங் கார்டைக் கொடுத்திருக்கிறார். அதை வாங்க கை நீட்டிய நண்பர் ஜெர்க்காகிவிட்டார். காரணம், கார்டு ஒரு நொடி தீப்பற்றி எரிந்து அணைந்திருக்கிறது. இதற்கு, கார்டில் தடவியிருந்த பாஸ்பரஸ்தான் காரணம். மெஜிஷியன், பெருமையாகச் சிரித்திருக்கிறார். நண்பர், வழக்கமாக விசிட்டிங் கார்டுகளை வாங்கிய கையோடு பேன்ட்டின் முன்பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும் பழக்கம்கொண்டவர். `டைமிங் கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தால்...' என்ற பதற்றம் அவருக்கு. கிரியேட்டிவிட்டிக்கு அளவு இல்லாமல்போய்விட்டது என, வரும் வழியில் நம்பிக்கை இல்லாமல் கார்டைத் தூக்கிக் கடாசிவிட்டார்.
இந்த விசிட்டிங் கார்டுகள் இன்றைய வியாபார உலகின் கண்டுபிடிப்பு என நினைத்தால், அதன் வரலாறு சில நூற்றாண்டுகள் பின்னோக்கிச்செல்கிறது. சீனாவில் 15 -ம் நூற்றாண்டில் இதை `காலிங் கார்டு' எனச் சொல்வார்களாம். ஒருவரைச் சந்திக்க வேண்டும் என்றால், இந்த காலிங் கார்டுகளை அவர்கள் கதவுகளில் செருகிவைத்துவிட்டுச் செல்வார்களாம். உயர்குடி மக்களுக்கான ஒரு விஷயமாகத்தான் இருந்திருக்கிறது இந்த காலிங் கார்டு என்னும் விசிட்டிங் கார்டு.
17 மற்றும் 18 -ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வீட்டுக்குத் தேவையான வேலைகளைச் செய்யும் டெக்னீஷியன்கள் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள காலிங் கார்டுகள் போடுவார்களாம். `டியர் லேடீஸ்...' என ஆரம்பிக்கும் வாசகங்கள் அடங்கிய அந்த கார்டுகளை, வீடுகளில் அதற்கென பிரத்யேகமாக வைத்திருக்கும் பெட்டிகளில் போடுவார்கள். இல்லத்தரசிகள் அதை எடுத்துக்கொண்டால் வேலை இருக்கிறது எனக் குஷியாகிவிடுவார்களாம் டெக்னீஷியன்கள்.
இந்த காலிங் கார்டுகள், ட்ரேட் கார்டுகள் என்பவை எல்லாம் வழக்கொழிந்து இன்று விசிட்டிங் கார்டுகளாக எல்லாருடைய பாக்கெட்டுக்கும் குடிவந்துவிட்டன. `என்ன பண்ணிட்டு இருக்கீங்க?' என, கடமைக்குக் கேட்டால்கூட கையில் ஒரு கார்டைத் திணித்துவிட்டுச் செல்கிறார்கள்.

சாணம் மெழுகுதல்
சின்ன வயதின் காலைகள் `கவுசல்யா சுப்ரஜா...' என, கோயில் ஸ்பீக்கர்களின் எழுப்புதலிலும் வீட்டு முற்றத்தில் அம்மாக்கள் சாணம் தெளிக்கும் `சளக் சளக்' சவுண்டு எஃபெக்ட்டிலும்தான் விடியும். நீங்கள் 70 -களின் கடைசியில் அல்லது 80 -களின் தொடக்கத்தில் கிராமங்களில் பிறந்தவர் என்றால், இதை எல்லாம் கடந்துதான் வந்திருப்பீர்கள்.
முற்றத்தில் சாணக் கரைசலைத் தெளித்து கோலம்போடுவது மட்டும் அல்ல, பெரும்பாலான வீடுகள் சாணம் மெழுகிய தரைகளாகத்தான் இருக்கும். வாரத்துக்கு ஒருதடவை சாணத்தைக் கரைத்து வீட்டின் தளம், அடுப்படி, திண்ணை எல்லாம் மெழுகுவார்கள் அம்மாக்கள். வார்லி ஆர்ட் போல அழகான பேட்டர்ன்களுடன் மெழுகும் ரசனையான அம்மாக்களையும் பார்த்திருக்கிறோம்.
நம்பினால் நம்புங்கள்... காலையிலேயே மாடு வளர்க்கும் வீடுகளின் தொழுவங்களில் காத்திருந்து பக்கெட்டுகளில் சுடச்சுட அள்ளிவரும் சாணத்துக்கு என பிரத்யேக மணம் இருக்கும். பசிய புற்களும் வைக்கோலும் பிண்ணாக்கும் தின்ற மாடுகள் அவை. திருவல்லிக்கேணி மாடுகள் வீதிகளில் போட்டுவைத்திருக்கும் சாணங்களை (ஆர்வம் இருக்கும்பட்சத்தில்) ஆராய்ந்து பார்த்தால் இந்த வேறுபாடு தெரியும். சினிமா போஸ்டர்களும், பாலித்தீன் கலந்த குப்பைகளும், கம்பெனி தீவனங்களும் தின்னும் மாடுகள் இவை. `சாணத்துக்கு உண்டான மரியாதையே போச்சுடா!' என்பதுபோல் இருக்கும்.
பெரும்பாலான ஊர்களில், இன்று மாடுகளும் இல்லை; சாணமும் இல்லை; சாணம் மெழுகும் பழக்கமும் இல்லை. அஞ்சரைப் பால், ஆறரைப் பால் என அறைகுறை பாக்கெட் பால்களில் டீ குடித்துவிட்டு, சிமென்ட் தரையின் அனலில் படுக்கப்பழகிவிட்டார்கள்.

முதல் வரி
கதையோ, கட்டுரையோ எப்படி ஆரம்பிப்பது என்பது எழுத உட்காரும் அனைவரையும் டென்ஷனாக்கும் ஒன்று. இந்த நிலையில் எழுத்தாணி கையில் கிடைத்தால் அனைவரும் சீத்தலை சாத்தனார் ஆகிவிடுவோம். முதல் வார்த்தையோ, வரியோ தோன்றுவதின் பேரின்பம் வார்த்தையில் அடங்காதது. அதை அடைய ஏதேனும் வழி இருக்கிறதா?
நானும் நண்பனும் குன்றத்தூர் முருகன் கோயிலுக்கு அருகில் எதிர்பாராமல் சேக்கிழார் கோயிலைக் கண்டடைந்தோம். கருவறைக்குள் அமைதியான தனிமையில் நின்றிருந்தார் சேக்கிழார். 12 -ம் நூற்றாண்டில் அநபாய சோழனின் அவையில் முதலமைச்சராக இருந்த சேக்கிழார், சமண நூலான `சீவகசிந்தாமணி'யை அநபாயன் படித்துக்கொண்டிருந்ததைக் கண்டு, அதற்குப் பதிலாக சிவனடியார்கள் பற்றி படிக்குமாறு அறிவுறுத்தினார். `சிவனடியார்கள் பற்றி படிக்க என்ன இருக்கிறது?' என அநபாயன் பதிலுக்குக் கேட்க, 63 நாயன்மார்களின் வரலாற்றைத் தொகுத்து, `திருத்தொண்டர் புராணம்' எழுதுவதாகச் சொல்லியிருக்கிறார் சேக்கிழார்.
ஆனால், புராணத்தை எப்படித் தொடங்குவது என்ற குழப்பத்தில், தில்லை கூத்தனின் முன்பு அமைதியாக நின்றிருக்கிறார் சேக்கிழார். சிவனே எடுத்துக்கொடுத்த முதல் அடிதான் `உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்…' என்னும் தொடக்கம். தமிழுக்கு `பெரிய புராணம்' கிடைத்தது.
இதில் எழுத ஆசைப்படுபவர்களுக்கான வழி ஒளிந்துள்ளது. எதுவும் எழுதத் தோன்றவில்லையா, அப்படியே சரண்டர் ஆகிவிடுங்கள். முதல் வரி அல்லது வார்த்தை உள்ளுக்குள் தானாக வரும்(வரை)!