Published:Updated:

மைல்ஸ் டு கோ - 15

மைல்ஸ் டு கோ
பிரீமியம் ஸ்டோரி
News
மைல்ஸ் டு கோ

படம்: ஸ்டில் ராபர்ட்

`ஸ்டார்ட்... கேமரா... ஆக்‌ஷன்...’ எனச் சொன்னதும் திரைப்பட இயக்குநர் ஆகிவிட்டதாக எனக்கு தோன்றியது. ஆனால், முதல் நாள் படப்பிடிப்பு முடிவதற்குள் அது உண்மை அல்ல என்பதையும் உணர்ந்தேன்.

நாங்கள் எழுதிவைத்திருந்த கதை ஷூட்டிங் ஸ்பாட்டில் காணாமல்போனது. பேப்பரில் இருந்த படத்தை எடுக்க முடியாமல் பல விஷயங்கள் தடுத்தன. அவற்றை எல்லாம் மீறி எடிட்டிங் டேபிளில், எழுதிய படத்தை கண்டடைவதே பெரிய போராட்டமாக இருந்தது. நாங்கள் நினைத்ததை  எடுக்க முடியாமல் படப்பிடிப்பில் தொடர்ந்து ஏதேனும் ஒரு குழப்பம் தினம்தினம் வந்துகொண்டே இருந்தது.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜை எனக்கு அறிமுகப்படுத்தியது தனுஷ்தான். `பரட்டை என்கிற அழகுசுந்தரம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் அவர். இருவரும் சந்தித்துப் பேசியதும் எங்களுக்குள் ஒரு புரிதல் வந்தது. இணைந்து பணியாற்றலாம் என முடிவுசெய்தோம். படப்பிடிப்புக்கு முன்னர் என் தேவைகள் என்ன என்பதைச் சொன்னேன். அவரும் சில ஐடியாக்கள் தந்தார்.

`இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் இடையே இருக்கும் உறவு கணவன் - மனைவி உறவு போன்றது. ஒரு குடும்பத்தில் யார் விட்டுக்கொடுக்கிறார் என்பது முக்கியம் அல்ல, அவர்கள் பிள்ளைகளை எப்படி வளர்த்தெடுக்கிறார்கள் என்பதே முக்கியம். அதுபோல இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் இணைந்து படத்தை எப்படி எடுக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்’ என வி.ஏ.துரை அடிக்கடி சொல்வார். `பொல்லாதவன்’ படத்தின் பெரும்பாலான காட்சிகள், `ஹேண்ட் ஹெல்டு’ ஷாட்ஸ். இரண்டு பேர் பேசும் காட்சிகளில்கூட கேமராவை ஸ்டாண்டில் போடாமல், கையில் பிடித்தபடிதான் படமாக்கினோம்.  வேல்ராஜ் கையில் கேமரா இருக்கும்போது நான் அவரை ஆட்டுவேன்.

மைல்ஸ் டு கோ - 15

பார்ப்பவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது புரியாது. வேல்ராஜ்கூட என்னை நம்பிவிட்டார். தயாரிப்பாளரின் தம்பி சேகருக்குத்தான் சந்தேகம். அவர் ஒரு கேமரா அசிஸ்டன்ட் என்பதால், இது சரியாக வருமா என்ற பயம். முதல்கட்டப் படப்பிடிப்பின் 13-வது நாள் வில்லன் வீட்டில் ஷூட்டிங். வில்லனின் வீட்டைப் பார்த்ததும் சேகருக்கு அதிர்ச்சி. `செல்வம் பெரிய தாதா. அவன் இவ்வளவு சின்ன வீட்டுல இருப்பானா?’ என்றார். அவர்களாகப் பேசி, படப்பிடிப்பை நிறுத்திவிட்டார்கள். லைன் புரொடியூசர் வி.ஏ.துரை வந்து, `எடுத்த வரைக்கும் படத்தை எடிட் பண்ணி காமிங்கப்பா. மீதியை அப்புறம் எடுக்கலாம்’ என்றார். நானும் மணியும் விக்ரம் சுகுமாரனும் எங்களுக்குள் சிரித்துக்கொண்டோம். இதற்கு முன்னர் அட்வான்ஸ், ஆபீஸ், போட்டோஷூட் என ஆரம்பக் கட்டங்களில் எங்கள் முயற்சிகள் நின்றுபோயிருந்தன. இந்த முறை எங்களுக்கு 12 நாட்கள் படம்பிடித்த ஃபுட்டேஜ் கிடைக்கப்போகிறது. எடுத்ததைப் பார்த்தால் தயாரிப்பாளர் நிச்சயம், `நல்லா இருக்கு’ எனச் சொல்வார். அப்படியும் நடக்கா விட்டால், அந்த ஃபுட்டேஜைக் காண்பித்து புதுத் தயாரிப்பாளரை எளிதில் பிடித்துவிடலாம் என்றுதான் நினைத்தோம்.

`பொல்லாதவன்’ படத்துக்கு  வி.டி.விஜயன் சார்தான் எடிட்டர். எங்களுடன் எடிட் செய்ய ஒரு அசோசியேட் எடிட்டரைக் கொடுப்பதாகச் சொன்னார். `எனக்கு கிஷோர் (அப்போது அவர் அசிஸ்டன்ட்) போதும்' எனச் சொன்னேன். அவரைவைத்து எடுத்த வரைக்கும் எடிட் செய்து பார்த்ததில், படம் 27 நிமிடங்கள் வந்தது. தனுஷின் வீடு மற்றும் நண்பர்கள் சீன்கள் எடுத்திருந்தோம். விஜயன் சார் படம் பார்த்தார். வழக்கமான படங்களில் இருந்து ஏதோ ஒன்று வித்தியாசமாக இருக்கிறது.

படம் பார்க்கும் உணர்வு இல்லாமல், ஒரு வீட்டில் நடப்பதைப் பார்க்க முடிவதாகச் சொன்னார். எங்களின் நோக்கமும் அதுவாகத்தான் இருந்தது. ஒரு சீனியர் எடிட்டருக்கு அப்படித் தோன்றியதே, எங்களுக்குப் பெரிய எனர்ஜியைக் கொடுத்த‌து.

`தேசிய நெடுஞ்சாலை’க்குப் பதில் `பொல்லாதவன்’ எடுக்கலாம் என்றபோது மணிக்கு உடன்பாடு இல்லை. `ஓப்பனிங் சீனைச் சொல்லி கதையை வித்துட்ட. திரைக்கதைக்கு என்ன செய்றது?' என்பது அவன் வாதம். எடிட் செய்த காட்சிகளைப் பார்த்துவிட்டு `இவ்ளோ விறுவிறுப்பா வரும்னு எதிர்பார்க்கலடா’ என்றான். தயாரிப்பாளருக்கு பெரிய ஸ்கிரீனில் போட்டுக் காட்டினோம். அவர்களுக்கும் பிடித்திருந்தது. கருணாஸ் சொல்லும், ‘நீ கேளேன்...’ காமெடி, கதை சொல்லியபோதே எல்லோருக்கும் பிடித்த ஒன்று. ஆனால், திரையில் அது வொர்க்அவுட் ஆகவில்லை எனச் சிலர் நினைத்தார்கள். கதிரேசன் சாருக்கு அது பிடித்திருந்தது. லைன் புரொடியூசர் வி.ஏ.துரைக்கும் பிடித்திருந்தது. எனது இரண்டாவது படத்தை அவருடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு இயக்க, அன்று மாலையே எனக்கு அட்வான்ஸ் தந்துவிட்டார். உண்மையிலேயே வணிகரீதியாக வெற்றிபெறக்கூடிய படத்தை எடுத்திருக்கிறோம் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு அப்போதுதான் வந்தது. படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.

மைல்ஸ் டு கோ - 15

வில்லன் போர்ஷனைப் படம்பிடிக்கத் தயாரானோம். நான் பார்த்தவரை செல்வம் போன்ற ரௌடிகள், ஏரியா மக்களோடு மக்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு அதுதான் பாதுகாப்பு. அதனால் யாரும் பெரிய வீடுகளில் தங்குவது இல்லை. இதைச் சொன்னபோது தயாரிப்பாளரும் ஏற்றுக்கொண்டார். கதையில் வில்லன் செல்வத்தின் தம்பி கேரக்டர் மிக முக்கியமானது. அதற்கு நிறைய முடி இருக்க வேண்டும் என முடிவுசெய்திருந்தோம். ‘கதை நேரம்’ சஷி, ஆடிஷனில் நன்றாக நடித்திருந்தார். ஆனால், சில காரணங்களால் அவரை நடிக்கவைக்க முடியாமல்போனது. அப்போது டேனியல் பாலாஜியை, தனுஷ் நினைவுபடுத்தினார். நுங்கம்பாக்கம் மோக்கா காபி ஷாப்பில் இருவரும் சந்தித்தோம். ஆரம்பமே அதிர்ச்சி. அதுவரை நீள முடி வைத்திருந்தவர் அன்று ஷார்ட்டாக வெட்டியிருந்தார்.

`இது சராசரி ஹீரோ-வில்லன் கதை இல்லை. இருவரின் பாயின்ட் ஆஃப் வியூவிலும் கதை இருக்கும்’ என்றேன். `படம் எடுத்து முடிக்கும் வரை இதே ஐடியா இருக்குமா?' என, சந்தேகத்துடன் கேட்டார். `நிச்சயம் அது மாறாது’ என்றேன். அதன் பிறகே ஒப்புக்கொண்டார். அடுத்த மூன்று நாட்களில் ஷூட்டிங். விக் வைத்துக்கொள்ளலாம் என முடிவுசெய்தோம். டெஸ்ட் ஷூட்டில் சரியாகப் பொருந்திய விக், ஸ்பாட்டில் சொதப்பியது. அவரது நிஜ முடிபோல தெரியவில்லை. தண்ணீர் தெளித்துச் சமாளித்தோம். முதல் ஷெட்யூல் பாதியில் நிற்க டேனியல் பாலாஜியின் முடியும் ஒரு காரணம். `பொல்லாதவன்' ரிலீஸானபோது ‘உலகின் நீளமான விளம்பரம் `பொல்லாதவன்’ ' என ஒரு எஸ்.எம்.எஸ் காமெடி பிரபலம். ஆனால், படத்தில் பல்சர் பைக்கைக் கொண்டு வர நாங்கள் பட்ட பாடு பெரும்பாடு. அந்த பைக்குக்கான ஸ்பான்சரை, பல்சர் நிறுவனத்திடமே கேட்கலாம் என நினைத்தோம். ஆனால் அவர்களோ, ‘ஏற்கெனவே இருக்கும் டிமாண்டை எங்களால் சமாளிக்க முடியவில்லை’ என மறுத்துவிட்டார்கள். அவர்கள் ஷோ ரூமில் படப்பிடிப்பு நடத்த மட்டும் அனுமதி தந்தார்கள்.

மற்ற பைக் நிறுவனங்களைக் கேட்டபோது `சூப்பர் ஸ்டார்கள் படங்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்’ எனக் காரணம் சொன்னார்கள். கடைசியில் ஹீரோ ஹோண்டா, கிளாமர் பைக்கை ஸ்பான்சர் செய்ய முன்வந்தது. ஆனால், எனக்கு இளைஞர்கள் பல்சரோடுதான் கனெக்ட் ஆவார்கள் என்ற நம்பிக்கை. அதனால் பல்சர்தான் வேண்டும் எனத் தீர்மானமாக இருந்தேன். தனுஷும் `பல்சரே போகலாம்’ என்றார். ஆனால், தயாரிப்பாளர் அதற்கு ஏன் செலவுசெய்ய வேண்டும் என நினைத்தார். ஒருநாள் நான் வீட்டில் இதுபற்றி பேசிக்கொண்டிருந்தேன். ஆர்த்தி உடனே லோன் வாங்க ஏற்பாடு செய்தார். அந்தப் பணத்தில் ஒரு பல்சர் பைக் வாங்கினோம். அடுத்த நாள் ஸ்பாட்டில் பல்சர் பைக்கைப் பார்த்தவுடன் தயாரிப்பாளர் ‘நாங்க வாங்கிக்கொடுக்க மாட்டோமா... ஏம்ப்பா இப்படிப் பண்ற?’ எனக் கடிந்துகொண்டார். படத்துக்குத் தேவையான விஷயங்களைச் சரியாகச் செய்துகொடுக்கும் தயாரிப்பாளர் அவர். அதை எல்லாம் தாண்டி கதிரேசன் சாருக்கு என் மீது தனி பிரியம் உண்டு.

பெற்ற அப்பாகூட, தன் மகனை நம்பி பல கோடி ரூபாய் கொடுப்பாரா என்பது சந்தேகம். ஆனால், ஆறு தயாரிப்பாளர்கள் வேண்டாம் எனச் சொன்ன என்னை நம்பி, ஒரு படம் தயாரிக்கத் தேவைப்பட்ட பணத்தைக் கொடுத்தார் கதிரேசன் சார்.

அவர் அன்று `பொல்லாதவன்’ எடுக்காமல் போயிருந்தால், இன்று நான் இருக்கும் இடத்தில் இருப்பேனா என்பது சந்தேகம்தான். என் சினிமா வாழ்வில் கதிரேசன் சார் மிகவும் முக்கியமானவர். பிறகு, தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ஒரு பல்சர் வந்தது. அது கடைசி வரை ஆபீஸிலே நின்றது. இளைஞர்கள் `பொல்லாதவன்’ பிரபுவுடன் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள, நாங்கள் அவ்வளவு சண்டைபோட்டு வாங்கிய பல்சர் பைக் நிச்சயம் ஒரு முக்கியமான காரணம்.

மைல்ஸ் டு கோ - 15

`பொல்லாதவன்’ பட செல்வம் கேரக்டருக்கு நாராயணனை (‘ஆடுகளம்’ நரேன்) முதலில் ஆடிஷன் செய்தேன். முடி வெட்டி, கொஞ்சம் கறுப்பானால் நன்றாக இருக்கும்’ என்றேன். உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக்கொண்டு மொட்டைமாடி வெயிலில் கிடந்தார். பத்து நாட்கள் கழித்து, `இப்ப ஓ.கே-வா?’ என வந்து நின்றார். எனது வில்லனிடம் இருந்த ஏதோ ஒன்று அவரிடம் மிஸ் ஆவதுபோல தோன்றியது. அப்போதுதான் கிஷோர் ஞாபகம் வந்தது. `தேசிய நெடுஞ்சாலை' கதையில் அசிஸ்டன்ட் கமிஷனர் கேரக்டருக்காக, அவரை முன்னர்  ஒரு முறை ஆடிஷன் செய்துவைத்திருந்தேன். அவர் வந்து தயாரிப்பாளரைச் சந்தித்துப் பேசினார். `பொல்லாதவன்’ படத்தின் ஒரு வசனத்தைப் பேசி நடிக்கச் சொன்னேன். அதைப் பார்த்ததுமே விக்ரம் சுகுமாரன், மணி எல்லோருக்கும் சரியாக இருக்கும் எனத் தோன்றியது. நாராயணனும் பார்த்துவிட்டு, `சரியா இருக்குல... சூப்பர்’ என்றார்.

அவர் அந்தப் படத்தில் நடிக்கவில்லை என்பதை, அந்த நொடியே தாண்டிப் போய்விட்டார். ஆனால்,  அவர் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஒரு சின்ன மனவருத்தம் இருந்திருக்கும். அவர் அதை எந்த இடத்திலும் காட்டிக்கொள்ளவில்லை. நாராயணன் ஓர் உதவி இயக்குநரும்கூட. `பொல்லாதவன்’ படத்தில் பின்னணியில் இருக்கும் கூட்டத்தை முழுக்க முழுக்க கன்ட்ரோல் செய்தது நாராயணன்தான். பின்னால் கடந்து கொண்டிருக்கும் நடிகர்கள் எந்த நோக்கமும் இல்லாமல் குறுக்கில் நடந்துகொண்டிருப்பார்கள். ஆனால், நாராயணன் அவர்களுக்கும் ஒரு நோக்கத்தைச் சொல்லி, காரணத்துடன் கடக்கவிட்டார். `பொல்லாதவன்’ படத்தில் வரும் எல்லோருமே ஒரு முழுமையான மனிதர்களாகத் தெரிய, நாராயணன் ஒரு முக்கியமான காரணம்.

மைல்ஸ் டு கோ - 15

`பொல்லாதவன்’ பட நாயகிகள்தான் மாறிக்கொண்டே இருந்தார்கள். கடைசி நேரத்தில் ஒருவரை ஃபிக்ஸ்செய்து படப்பிடிப்புக்குச் சென்றே ஆகவேண்டிய சூழ்நிலை. அப்போதுதான் திவ்யா ஸ்பந்தனாவை தனுஷ் சஜஸ்ட் செய்தார். நான் அவர் நடித்த படங்கள் பார்த்தது இல்லை. டைரக்‌ஷன் டீமிடம் கேட்டபோது, செந்தில்தான் (`எதிர் நீச்சல்’ இயக்குநர் துரை செந்தில்குமார்) `கதைக்கு சரியாக இருக்கும். அழகா இருப்பாங்க’ என்றார். அப்போது கன்னடத்தில் திவ்யா பெரிய ஸ்டார். நான் திவ்யாவிடம் போனில்தான் கதை சொன்னேன். கதை கேட்டுவிட்டு `ஓ.கே' என்றார்.

அடுத்த மூன்றாவது நாள் ஹைதராபாத் ஸ்பாட்டுக்கு காஸ்ட்யூமுடன் வந்துவிட்டார். தூரத்தில் நடந்து வந்தவரை, வேல்ராஜ் கேமராவில் போட்டுத்தந்த ஸூம் லென்ஸ் வழியாக முதல்முறை பார்த்தேன். ‘ஹேமாவுக்கான உருவம் இதுதான்’ என நினைக்கும் அளவுக்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தார். திவ்யா மிகவும் கமிட்டட் ஆன ஒரு ஆர்ட்டிஸ்ட். அன்று ‘நீயே சொல்...’ பாடல் படப்பிடிப்பு. திவ்யாவுக்கு அந்த உடைகள் அன்கம்ஃபர்டபிளாக இருந்தது. எனக்குமே அதில் உடன்பாடு இல்லை. (நாங்கள்தான் எடுத்தோம். இப்போது இதைச் சொல்ல எங்களுக்கு உரிமை இருக்கிறதா எனத் தெரியவில்லை) எடுத்தாக வேண்டும் என்பதால் தொடர்ந்தோம். அன்று புகைப்படக்கலைஞர் ஸ்டில் ராபர்ட் நிறையப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார்.

அதற்கு திவ்யா ஏதோ சொல்ல, பதிலுக்கு நான் பேச வாக்குவாதம் முற்றியது. ஒவ்வொரு படத்திலுமே என்றாவது ஒருநாள் என் கோபம் எல்லை மீறிப்போய்விடும். அந்தக் கோபத்தில் மைக், போன் எல்லாவற்றையும் போட்டு உடைத்துவிட்டேன். திவ்யாவும் `இனிமேல இந்த செட்டுக்கே வர மாட்டேன்’ எனப் போட்டிருந்த உடையோடு ஆட்டோ ஒன்றைப் பிடித்து, கிளம்பிப்போய்விட்டார். வி.ஏ.துரை அவரை சமாதானப்படுத்த பைக்கில் பின்தொடர்ந்து சென்றுவிட்டார். 

படக்குழுவே ஸ்தம்பித்து நின்றது. அன்று தயாரிப்பாளர் ஊரில் இல்லை. ஸ்பாட்டில் தனுஷ், டான்ஸ் மாஸ்டர் பிருந்தா எல்லோரும் இருந்தார்கள். அப்போது மணியின் மொபைலுக்கு கதிரேசன் சார் அழைத்தார். மணி எடுத்துப் பேசிவிட்டு `மச்சான் புரொடியூசர்டா’ என்றான். இன்னும் 12 நாட்களே ஷூட்டிங் பாக்கி. திவ்யாவின் கால்ஷீட் இரண்டே நாட்கள்தான் தேவை. இந்தச் சூழலில் இப்படியொரு பிரச்னை என்றதும் தயாரிப்பாளருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. போனை வாங்குவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் நின்றேன். 

- பயணிப்பேன்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan