மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 42

கலைடாஸ்கோப் - 42
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - 42

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 42

சுவர்

``இவன் பெயர் நந்தன். நமது கூடத்தின் மத்திய அறையில் உள்ள `காஸ்மிக் எனர்ஜி’யைப் பார்க்க வேண்டுமாம்” என்றான் ஒருவன்.

நந்தனின் அருகில் வந்த தலைவன், “நாங்கள் சயின்ட்டிஸ்ட்கள்; இந்த `காஸ்மிக் எனர்ஜி’யைப் பராமரிப்பவர்கள். அங்கே உனக்கு என்ன வேலை?” என்றான்.

நந்தன் நிமிர்ந்து அவனைப் பார்த்தான் “அந்த `காஸ்மிக் எனர்ஜி’ ஒரு பிரபஞ்ச சக்தி. அது ஏற்கெனவே அங்கே இருப்பது. உங்களுக்கு மட்டுமேயானது அல்ல... எனக்கும் சொந்தமானது” என்றான்.
தலைவன் சிரித்தான்...

“நீ கூடத்துக்குள் போக நிறைய ஃபார்மாலிட்டி இருக்கின்றன. குறிப்பாக, உடலைச் சாம்பலாக்கும் லேசர் அறையைத் தாண்ட வேண்டும்” என்றவன், சதுர வடிவ லேசர் அறையைத் திறந்தான். லேசர்கள் தகித்தன.

``நீங்கள் எப்போதும் தாண்டாத இந்த லேசர் அறையை, நான் தாண்டப்போவது இல்லை. நேராக அந்த `காஸ்மிக் எனர்ஜி’யை நெருங்கப் போகிறேன்” என்ற நந்தன், கூடத்தை நோக்கி நடந்தான்.
“க்ளோஸ் தி வால்” எனக் கத்தினான் தலைவன். ஒருவன் தாவிச் சென்று ஒரு பட்டனை அழுத்தவும் கூடத்தின் வாசலை அடைத்தபடி எழுந்தது ஒரு மெட்டாலிக் சுவர்.

தலைவன் சட்டென ரிமோட்டை அழுத்தி, லேசர் கற்றைகளை நந்தனை நோக்கித் திருப்பினான். லேசர் கற்றைகள் நந்தனை ஆக்கிரமித்து, கரைத்துக்கொண்டி ருந்தபோதுதான் தலைவன் அதைக் கவனித்தான். அணுத்துகள்களின் நடனத்துடன் அந்த காஸ்மிக் எனர்ஜி, கூடத்தின் மையத்தில் இருந்து நந்தனை நோக்கி வந்து கொண்டிருந்தது. நடுவில் சுவர்.

தகிக்கும் லேசர்களுக்கு மத்தியில் நந்தனின் கடைசி புன்னகையைக் கண்டான் தலைவன்.

மெட்டாலிக் சுவர் மெதுவாக விரிசல்விடத் தொடங்கியது.

கலைடாஸ்கோப் - 42

தலைநகரம்

நம் சினிமாக்களில் வரும் ரௌடி ஹீரோக்கள், பார்ப்பதற்கு முரட்டுத் தனமாக இருப்பார்கள். கதாநாயகி களின் கடைக்கண் பார்வை விழுந்ததும், அவர்களின் முரட்டுத்தனம் கழன்று உள்ளுக்குள் சாஃப்ட் வெர்ஷனில் ஒரு ஹீரோ எட்டிப் பார்ப்பார். இதற்கும் சிற்பி ஜெய்ம் மொலினாவின் (Jaime Molina) மரச் சிற்பங்களுக்கும் என்ன தொடர்பு என்பதைக் கீழே சொல்கிறேன்.

கலைடாஸ்கோப் - 42

மெக்ஸிக்கோவில் பிறந்த ஜெய்ம் மொலினா, சின்ன வயதில் இருந்தே வழக்கமான சிறுவர்களைப்போல கார்ட்போர்டு, மரக்கட்டை, ஊக்கு போன்ற பொருட்களால் உருவங்களைச் செய்வதை பொழுதுபோக்காக வைத்திருந்தார். சென்டம் வாங்கும் ஆசையில் குழந்தைகளின் இது போன்ற ஆர்வங்களை நசுக்கிவிட்டு, மனப்பாட இயந்திரங்களாக மாற்றும் நம் ஊர் பெற்றோர்களைப்போல மொலினாவின் பெற்றோர் இல்லை என்பதால், வளர்ந்த பிறகும் அதே சின்னப்பிள்ளைத்தனத்துடன் தன் கலை ஆர்வத்தைத் தொடர்கிறார். ஒரு நேர்காணலில் `உங்கள் ஆர்ட்டுக்கு எது இன்ஸ்பிரேஷன்?’ எனக் கேட்டபோது, `குழந்தைகளின் கிறுக்கல்கள்’ என பதில் சொன்னார் மொலினா.

கலைடாஸ்கோப் - 42
கலைடாஸ்கோப் - 42

பெயின்ட்டிங், 2D சிற்பங்கள்... என, தன் கலைப்பயணத்தைக் கடக்கும் மொலினாவின் சமீபத்திய இந்த மரச்சிற்பங்கள் சுவாரஸ்யமானவை. தேர்ந்தெடுத்த மரத்துண்டுகளில் ஆணிகளைப் பதித்து, பார்ப்பதற்கு டெரரான முகங்கள் கொண்டவை அவை. ஆனால், அவற்றை பெட்டியைத் திறப்பதுபோல இரண்டாகத் திறந்து பார்த்தால் உள்ளே கலர்ஃபுல்லாகவோ, காமெடி யாகவோ இன்னோர் உருவம் இருக்கும். அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட்டாகவோ, மரமண்டை ஓடாகவோ இருக்கலாம். `இந்த மாதிரி கேரக்டர்களை எப்படிக் கற்பனை செய்கிறீர்கள்?’ என்றால், `இவை என் தலைக்குள் இருக்கும் இமேஜினரி நகர மனிதர்கள்’ என்கிறார். கலைஞர் களுக்கு `தலைக்கனம்’ அதிகம் என்பார்கள், மொலினா விஷயத்தில் அது ரைட்.

கலைடாஸ்கோப் - 42

சிலேட்

இப்போது எல்லாம் எல்.கே.ஜி பிள்ளைகளின் புத்தகங்களை எடைக்குப் போட்டாலே ஏழெட்டு கிலோ தேறும்போல. அன்று எல்லாம் மூன்றாம் வகுப்பு வரை பள்ளிக்கூடப் பையில் சுமந்தது, ஒரு சிலேட்டும் சத்துணவுச் சாப்பாட்டுத் தட்டும்தான். அதிலும் சத்துணவுக்கு என பள்ளியில் அலுமினியத் தட்டுகள் வைத்திருப்பார்கள். வீட்டில் இருந்து தட்டு எடுத்துப் போகும் குழந்தை, இருப்பதிலேயே பணக்காரக் குழந்தையாக இருக்கும் என நினைப்பார்கள்.

கறுப்பு கிறிஸ்டல் கற்களால் ஆன மரச் சட்டமிட்ட சிலேட்டுகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கும். விழுந்தால் உடைந்துவிடும். அழுக்கேறும் மரச்சட்டத்தை பிளேடால் சுரண்டினால், டீச்சரின் பவுடர் முகச் சிரிப்புபோல மீண்டும் பளீரிடும். சிலேட்டை அழித்து, துடைத்து மீண்டும் அதன் கருமையை மீட்க, கற்பூரவள்ளி செடியின் இலையை நசுக்கித் தேய்ப்பார்கள். நீர்த்தன்மை அதிகம் உள்ள அதன் இலை டஸ்டர்போல துல்லியமாக அழிக்கும். பிளாஸ்டிக் ஃபிரேமிட்ட, மணிச்சட்டத்தில் பாசி மணிகள் குலுங்கும் சிலேட்டுகள் பிற்காலத்தில் கடைக்கு வந்தபோது ஏக்கமாகப் பார்த்ததும் மனதின் ஓரத்தில் ஞாபகம் இருக்கிறது.

சிலேட்டில் எழுத குச்சிகளை இரவல் வாங்குவதும் பெருமையாக, இனாமாகக் கொடுப்பதும் நடக்கும். அதிலும் தூள் தூளாக உதிரும் மாவுக்குச்சி, கெட்டியான பென்சில் குச்சி, கடல் குச்சி... போன்ற வகைகள் இருக்கும். தேர்வு காலங்களில் அந்த சிலேட்டிலேயே 100 -க்கு இத்தனை என ஆசிரியர்கள் மார்க் போட்டு அனுப்புவார்கள். அந்த வயதிலும் மார்க்குகளை அழித்துவிட்டு, அதிக மார்க்குகளைப் போட்டுக்கொள்ளும் சில தில்லாலங்கடிகளையும் பார்த்திருக்கிறேன். அவர்களில் சிலர் பிற்காலத்தில் உள்ளூர் கான்ட்ராக்டர்கள் ஆகிவிட்டதாக அறிந்தேன்!

கலைடாஸ்கோப் - 42

மகாநதி

கடந்த பெருமழையில் `செல்ஃபிபுள்ள’ யாகத் தன்னைத்தானே சுத்தம் செய்துகொண்ட கூவத்தை மீண்டும் சாக்கடையாக மாற்றிவிட்டு, கோடை மழைக்கே பயந்து, வானிலை அறிக்கையையும் வாசற்படியையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த 21 -ம் நூற்றாண்டிலும் கூவத்தைச் சரிசெய்யவே முடியாது என்பவர்களுக்கு 19 -ம் நூற்றாண்டு லண்டன் தேம்ஸ் நதியின் `மகா நாற்றம்’ (Great Stink) மகா பாடம்.

1858 -ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தேம்ஸ் நதியில் இருந்து வீச ஆரம்பித்த துர்நாற்றம் லண்டன் மக்களை மண்டைகாயவைத்திருக் கிறது. நகரமயமாதலின் முன்னோடியாக உருவாகிவந்த லண்டனின் கழிவுகளை, எந்தத் திட்டமும் இல்லாமல் தேம்ஸ் நதியில் கொட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். விளைவு, `மியாஸ்மா' என்கிற கொடும் நாற்றம்; காலரா போன்ற வியாதிகள். அரசாங்கம் குழப்பத்தில் தவித்தபோது அதைச் சரிசெய்ய தானாக முன்வந்தவர் ஜோசப் பஸல்கெட் (Joseph Bazalgette) என்கிற சிவில் இன்ஜினீயர்.

1859 -ம் ஆண்டில் ஆரம்பித்து 1875 -ம் ஆண்டு வரை 15 வருடங்களுக்கு மேல் `தனி ஒருவனாக’த் திட்டமிட்டு, கழிவு அகற்றும் பெரிய குழாய்களையும் அண்டர்கிரவுண்டு கால்வாய்களையும் பல பம்பிங் ஸ்டேஷன் களையும் படம் வரைந்து, பாகம் குறித்து, கட்டிமுடித்து லண்டனையும் தேம்ஸையும் காப்பாற்றியிருக்கிறார். பள்ளமான பகுதிகளையும் மேடான பகுதிகளையும் இணைத்து, கழிவுகளைக் கொண்டுசெல்ல அவர் உருவாக்கிய டிசைன்கள் இன்றும் வேலைசெய்வதைக் கண்டு, இந்த நூற்றாண்டு பொறியாளர்கள் வியக்கிறார்கள். வரலாற்று ஆசிரியர் பீட்டர் அக்ரியோட், பஸல்கெட்டை ‘லண்டனின் ஹீரோ’ எனப் புகழ்ந்தார்.

கழிவு மேலாண்மை தொடர்பாக பஸல்கெட் எழுதிய குறிப்புகள், குண்டு தொகுப்புகளாக லண்டன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சிவில் இன்ஜினீயரிங் ஆவணக் காப்பகத்தில் இன்றும் உள்ளன. நமக்குத் தேவை... தீரமான, உண்மையான, திறமையான பஸல்கெட்டுகள்!

கலைடாஸ்கோப் - 42

புக்மார்க்

புக்மார்க் எனச் சொன்னால், இணைய தலைமுறைக்கு சட்டென ஞாபகம் வருவது க்ரோமிலோ, சஃபாரியிலோ இணையப் பக்கங்களைச் சேமித்துவைப்பதைத்தான். இணையம் பயன்பாட்டுக்கு வந்தபோது அச்சு ஊடகத்தில் என்ன எல்லாம் சொல் பயன்பாட்டில் இருந்ததோ அதை அப்படியே காப்பி(!) அடித்துக்கொண்டது. உதாரணம் இந்த புக்மார்க்.

புத்தகங்களை வாசிக்கும்போது விட்ட பக்கங்களில் இருந்து மறுபடியும் தொடர அல்லது குறிப்புகள் எடுக்க, அந்தப் பக்கங்களில் செருகிவைக்கும் வஸ்துதான் புக்மார்க். அது கெட்டிக்காகிதத்தில் செய்ததாகவோ அல்லது மென்கயிறாகவோ இருக்கலாம். தலையணை சைஸ் புத்தகங்களுக்கு இலவச இணைப்புபோல பைண்டிங் செய்யும்போதே, இந்த புக்மார்க்கைச் சேர்த்துவிடுவார்கள்.

கி.பி 6 -ம் நூற்றாண்டிலேயே எகிப்தின் பாபிரஸ் புத்தகங்களில் (Coptic codex), கன்றுக்குட்டி தோல்களால் செய்த புக்மார்க்குகளைப் பயன்படுத்தி யிருக்கிறார்கள். 16 -ம் நூற்றாண்டில் ராணி எலிசபெத் காலத்தில் தயாரிக்கப்பட்ட பைபிள்களுக்கு பட்டு நூலில் புக்மார்க் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. ராயல் மியூசியம் ஆஃப் புரூனேயில் 16 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த யானைத் தந்தத்தால் செய்த ஓர் இந்தியன் புக்மார்க் இருக்கிறதாம். பிற்காலத்தில் அச்சுத் தொழில்நுட்பம் வளர்ந்தபோது, விதவிதமான ரசனையான கிரியேட்டிவ்வான தனித் தனி புக்மார்க்குகள் புத்தக மார்க்கெட்டில் கிடைத்தன; கிடைக்கின்றன.

கலைடாஸ்கோப் - 42

புக்மார்க் இல்லாத புத்தகங்களின் பக்கங்களை ஓரத்தில் மடித்துவிட்டு மூடி வைக்கும் பழக்கம் நமக்கு உண்டு அல்லவா? அதை ஆங்கிலத்தில் `Dog ears' என்பார்கள். பார்ப்பதற்கு நாய் காதுபோல இருப்பதால் அந்தப் பெயர். சிலருக்கு புத்தகங்களை அப்படி மடித்தால் பிடிக்காது, பாய்ந்து கடிக்க வருவார்கள். அது ஏன் என இப்போது புரிகிறது!