
தொடரும் சமகால சாதியச் சிக்கல்கள் - கட்டுரைஓவியம்: கார்த்திகேயன் மேடி

`இந்தியாவில் சாதிகள்’ - அம்பேத்கரின் முதல் புத்தகம். 1916-ல், நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மானுடவியல் கருத்தரங்கில், ‘இந்தியாவில் சாதிகள்: அதன் அமைப்பியக்கம், தோற்றம் மற்றும் வளர்ச்சி’ என்ற தலைப்பில் அம்பேத்கர் ஆற்றிய ஆய்வுரையே ‘இந்தியாவில் சாதிகள்’ என்னும் புத்தகமாக வெளியானது. இந்த ஆண்டோடு அந்தப் புத்தகம் வெளியாகி 100 ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகள் கழித்து ஏன் ஒரு புத்தகத்தை நாம் நினைவுகூர வேண்டும்? சமகாலச் சூழலுக்கும் இந்தப் புத்தகத்துக்கும் என்ன தொடர்பு?

பெரும்பாலும் சாதிகள் குறித்த ஆய்வை மேற்கத்திய ஆய்வாளர்களே முன்வைத்தனர். சாதி குறித்த அர்த்தபூர்வமான ஆய்வுகளை முதலில் முன்வைத்த இந்தியர் அம்பேத்கர். அதுவும் தன் வாழ்நாள் முழுவதும் சாதியின் காரணமாக அவமானங்களைச் சந்தித்தவர் மற்றும் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆற்றல்மிக்க தலைவர் என்ற வகையில், சாதி குறித்து அம்பேத்கர் முன்வைத்த ஆய்வுகள் இன்னும் அர்த்தபூர்வமானவை. ‘இந்தியாவில் சாதிகள்’ என்னும் புத்தகத்தின் சாராம்சத்தைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
சாதிமுறை எப்படித் தோன்றியது என்பது குறித்துப் பேசிய அம்பேத்கர், அது குறித்த செனார்ட், நெஸ்ஃபீல்டு, ரிஸ்லி, கெட்கர் ஆகிய நான்கு ஆய்வாளர்களின் கருத்துக்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்.
`குறிப்பிடத்தக்க மரபுவழியிலான தன்னிச்சையான அமைப்பு’ என்று சாதியைக் குறிப்பிடும் செனார்ட், ` ‘தீட்டு’ என்னும் வழக்கமே சாதியின் தோற்றத்துக்குக் காரணம்’ என்றார். ஆனால் அம்பேத்கரோ, ‘தீட்டு என்பது சாதியத்தின் விளைவுதானே தவிர, அதுவே சாதி தோன்றுவதற்கான காரணம் அல்ல’ என்று செனார்ட் முன்வைத்த கருத்தாக்கத்தை மறுக்கிறார். இதேபோல் ‘மற்றவர்களுடன் சேர்ந்து உணவு உண்ணாமையால்தான் சாதிகள் தோன்றின’ என்ற நெஸ்ஃபீல்டின் கருத்தையும் அம்பேத்கர் மறுத்தார். `ரிஸ்லியின் ஆய்வுகள், சிறப்பான கவனத்துக்குரிய எந்த அம்சத்தையும் முன்வைக்கவில்லை’ என்றார் அம்பேத்கர். நான்காவது ஆய்வாளரான கெட்கரின் ஆய்வையே கவனத்தில் எடுத்துக்கொள்ளும் அம்பேத்கர், அவர் இந்தியர் என்பதால் சாதி குறித்த புரிதல் மற்ற ஆய்வாளர்களைவிடவும் அவருக்கு அதிகம் இருப்பதற்கான சாத்தியத்தையும் கவனப்படுத்துகிறார்.
‘சாதி என்பது இரண்டுவிதமான இயல்புகளைக்கொண்ட சமூகக் குழுமம்’ என்று சொல்லும் கெட்கர், ‘ஒரு சாதிக்குழுவின் உறுப்பினராகும் உரிமை, அந்த உறுப்பினருக்குப் பிறந்தவர்களுக்கே உண்டு’ மேலும், ‘தங்கள் குழுவைத் தவிர வேறு குழுவோடு திருமண உறவு வைத்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டவர்களே சாதிக்குழுவாக உருவாகிறார்கள்’ என சாதியின் இரு இயல்புகளை விளக்குகிறார். இதை ஏற்றுக்கொள்ளும் அம்பேத்கர், ‘ஆனால் கெட்கர் இரண்டையும் தனித்தனி அம்சங்களாகப் பார்க்கிறார். இரண்டும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்’ என்றார். ‘ஒரே சாதிக்குள் திருமணம்’ என்னும் அகமண முறையே சாதியத்தின் ஒரே இயல்பு என்று அழுத்தமாக முன்வைக்கிறார் அம்பேத்கர். `தீட்டு, மற்ற சாதிகளோடு கலந்துண்ணாமை, பிறப்பின் அடிப்படையில் மட்டுமே சாதிக்குழுவின் உறுப்பினராதல் போன்ற சாதியின் அனைத்து இயல்புகளுக்கும் அகமண முறையே அடிப்படையாக விளங்குகிறது’ என்கிறார்.
தொடக்க காலத்தில் இந்தியாவில் புறமண முறை எனப்படும் கலப்புமணமே நடைமுறையில் இருந்துவந்தது. இந்தப் புறமண முறை மீது அகமண முறை மேலாதிக்கம் செலுத்தியதே சாதியின் உருவாக்கத்துக்குக் காரணம் என்று எளிமையாக விளக்குகிறார். இப்படி ஒரே சாதித் திருமணங்களைக் கட்டாயமாக்கும்போது, சாதியமைப்பு எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த அம்பேத்கரின் கருத்துகள் தனித்தன்மை வாய்ந்தவை.
ஒரே சாதிக்குள்ளேயே தொடர்ந்து அகமண முறை நடைபெறவேண்டும் என்றால், அந்தச் சாதியக்குழுக்களில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கையின் சமநிலை (Balance) பேணப்படவேண்டும். ஆனால், கணவனை இழந்த பெண் சாதிமுறைக்குச் சவாலாக விளங்குகிறாள். கணவனை இழந்த பெண், வேறு குழுவைச் சேர்ந்த ஆணோடு திருமண உறவு உள்ளிட்ட உறவுகளை அமைத்துக்கொள்ளும்போது சாதித்தூய்மை சீர்குலைகிறது; சாதியக்குழுவின் சமநிலையும் சரிகிறது. இதற்காக ஏற்படுத்தப்பட்ட முறையே ‘சதி என்னும் உடன்கட்டை ஏறுதல்’ என்று விளக்குகிறார் அம்பேத்கர்.

`கணவனை இழந்த பெண், வேறு சாதி ஆணோடு உறவுகொள்வதைத் தடுப்பதற்காக அவள் உடன்கட்டை ஏற்றப்பட்டு, சாதித்தூய்மை பாதுகாக்கப்படுகிறது. இதன் அடுத்த கட்டமாக, உடன்கட்டையை அமல்படுத்த முடியாதபோது பெண்கள் மீது விதவைத்தன்மை திணிக்கப்படுகிறது. எனவே சதி என்னும் உடன்கட்டை, கைம்மை எனப்படும் விதவைத்தன்மை இரண்டும் சாதியத்தின் காரணமாகவே உருவாக்கப்பட்டன’ என்கிறார் அம்பேத்கர்.
கணவனை இழந்த பெண்ணைப் போலவே மனைவியை இழந்த ஆணும் சாதிக்குழுவுக்குச் சவாலாக இருந்தான். `பெண்களைப்போல ஆண்களை உடன்கட்டை ஏற்றிவிட முடியாது. உடன்கட்டை ஏற்றாததற்கு அவன் ஆணாக இருக்கும் காரணமே போதுமானது’ என்று சொல்லும் அம்பேத்கர், `மேலும் ஓர் ஆணை எரித்துவிட்டால், சாதிக்குழு வலிமையான ஓர் உயிரியை இழந்துவிடுகிறது என்பதும் காரணம்’ என்றார். எனவே, மனைவியை இழந்த ஆணுக்கு, பருவ வயதுக்கு வராத பெண் குழந்தையைத் திருமணம் செய்துவைத்தனர். ‘குழந்தைத் திருமணம்’ இப்படித்தான் உருவானது என்பது அம்பேத்கர் முன்வைத்த ஆய்வு.
ராஜாராம் மோகன்ராய் உள்ளிட்ட சமூகச் சீர்திருத்தவாதிகள் 19-ம் நூற்றாண்டில் சதி என்னும் உடன்கட்டை, விதவைகள் மீதான கொடுமைகள், குழந்தைத் திருமணம் ஆகியவற்றை எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். ஆனால், அவர்கள் இதைப் ‘பெண்களுக்கு எதிரான கொடுமைகள்’ என்ற நோக்கிலும் இந்துச் சமூகச் சீர்திருத்தம் என்ற நோக்கிலும் இருந்துமே அணுகினர். ஆனால் அம்பேத்கர்தான் இத்தகைய பெண்கள் மீதான ஆணாதிக்க ஒடுக்குமுறைகளுக்கும் சாதியத்துக்கும் உள்ள தொடர்பை முதன்முதலில் முன்வைத்தவர். ‘தனிச்சொத்து தோன்றியபோது அதைக் காக்க குடும்பம் என்னும் அமைப்பு தோன்றியது’ என்று ஏங்கெல்ஸ் முன்வைத்ததைப்போல, ‘அகமண முறையின் மூலம் உருவான குடும்பம் என்னும் அமைப்பு சாதியையும் தனிச்சொத்தையும் காப்பாற்ற உருவானது’ என்பது அம்பேத்கர் முன்வைத்த தனித்துவமான ஆய்வு.
‘வர்க்கமும் சாதியும் அடுத்தடுத்துள்ள அண்டை வீட்டுக்காரர்கள்’ என்றார் அம்பேத்கர். பார்ப்பனர், வைசியர், சத்திரியர், இவர்களுக்குக் கீழே சூத்திரர் என்று கட்டமைக்கப்பட்ட வருணாசிரம முறை, வர்க்க அமைப்பை ஒத்திருப்பதை அம்பேத்கர் கவனப்படுத்தினார். இந்த வர்ணங்களுக்கு என்று தொழில்கள் உருவாக்கப்பட்டதும், அந்தத் தொழில்களை மற்ற வர்ணத்தினர் மேற்கொள்வது தடை செய்யப்பட்டிருந்ததும் கவனத்தில் கொள்ளத்தக்கது. இந்த வகையில் ‘சாதி என்பது அடைபட்டுள்ள ஒரு வர்க்கமே’ (A Caste is an enclosed Class) என்று கவித்துவமாக விளக்கினார் அம்பேத்கர்.
வர்க்கம் என்பது பிறப்பின் அடிப்படையில் உருவானது அல்ல. ஒருவர் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தில் பிறந்தாலும், பிறகு அவர் தன் வர்க்கநிலையை மாற்றிக்கொள்ள முடியும். செருப்பு தைக்கும் குடும்பத்தில் பிறக்கும் ஒரு தலித், உயர்கல்வி கற்று அரசு வேலையில் சேர்வதன் மூலம் தன் வர்க்கநிலையை மாற்றிக்கொள்ள முடியும். அரசியல்வாதியாகவோ, உயர்மட்ட அதிகாரியாகவோ மாறி... அதிகார வர்க்கத்தின் பகுதியாகவும் ஆக முடியும். ஆனாலும் அவர் தலித்தாகத்தான் இருக்க முடியுமே தவிர... பார்ப்பனராகவோ, வெள்ளாளராகவோ, வன்னியராகவோ, முக்குலத்தாராகவோ மாற முடியாது என்பதுதான் சாதியத்தின் தனித்தன்மை. இப்படி ஒவ்வொரு சாதியும் எப்படி தனக்குள் அடைபட்ட வர்க்கமாக மாறின என்பதையும் அம்பேத்கர் விளக்கினார். அகமண முறையே இப்படி சாதிகள் தனக்குள் கதவடைப்பு செய்வதற்குக் காரணம்.
ஆனால் ‘சாதியைப் பார்ப்பனர்கள்தான் உண்டாக்கினார்கள்’ என்பதை அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளவில்லை. `சாதியைப் பாதுகாப்பதற்கான ஆதாரங்களை அவர்கள் உருவாக்கினார்கள் என்பது உண்மைதான். மேலும், அவர்கள் வரலாற்றில் இழைத்த குற்றங்கள் பல. ஆனால், அவர்களால் சாதியமைப்பை உண்டாக்கி, மற்றவர்கள் மீது திணித்திருக்க முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் பலமானவர்கள் அல்ல’ என்றார் அம்பேத்கர். ஆனால், ‘பார்ப்பனர்களே முதன்முதலில் தங்களுக்குள் கதவடைத்துக்கொண்ட வர்க்கம்’ பிறகு மற்ற வர்ணத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களைப் பார்த்தொழுகி, அவர்களைப்போலவே தங்களுக்குள் கதவடைத்துக்கொண்டனர் என்கிறார். இதைப் ‘பார்த்தொழுகும் தொற்றுநோய்’ (Infection of Imitation) என்று குறிப்பிட்டார் அம்பேத்கர்.
தொடர்ந்து கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் சாதியின் இயல்பு குறித்து விரிவாகப் பேசினாலும், ‘சாதி என்பது தனக்குத்தானே கதவடைத்துக்கொண்ட வர்க்கம்’, ‘பார்த்தொழுகும் தொற்றுநோய்’ என்ற அவரது இரு கருத்தாக்கங்கள் முக்கியமானவை. ’அகமண முறையே சாதியத்தின் தோற்றுவாய்’ என்னும் அம்பேத்கரின் ஆய்வு முடிவு, சாதியத்தின் பல புதிர்களை அவிழ்த்தது.
பின்னாட்களில், சூத்திரர்கள் யார், மனுதர்மம் இந்தியச் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம், வர்ணாசிரமத்தை ஏற்க மறுத்தவர்கள் அவர்ணர்களாக, பஞ்சமர்களாக ஆக்கப்பட்ட வரலாறு, சனாதன தர்மத்துக்கு எதிராகப் பவுத்த தம்மத்தைக் கடைப்பிடித்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் ஆக்கப்பட்டது என்று பல புதிய ஆய்வுகளை முன்வைத்தார் அம்பேத்கர். ‘ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே’ என்று மார்க்ஸ் சொன்னதைப்போல, `இந்திய வரலாறு என்பது சாதியத்தின் வரலாறுதான்’ என்று அம்பலப்படுத்தினார் அம்பேத்கர்.
இப்படிப் பல ஆழமான ஆய்வுகளை முன்வைப்பதற்கு அடித்தளமாக இருந்தது, அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆற்றிய இந்த உரை. இந்த மகத்தான உரையை நிகழ்த்தியபோது அம்பேத்கர் வயது 25. அப்போது இந்தியாவில் காந்தியின் சகாப்தம் தொடங்கியிருக்கவில்லை.
எல்லாம் சரி, 100 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தப் புத்தகத்தை நினைவுகூர வேண்டிய தேவை என்ன? சமகாலத்தைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் ஏதேனும் ஒருவகையில் உதவுமா?
சமகாலத்தில் இருந்து ‘இந்தியாவில் சாதிகள்’ புத்தகத்தை அணுகுதல்...
‘அகமண முறையே சாதியைக் காப்பாற்றுகிறது’ என்ற அம்பேத்கரின் ஆய்வை நாம் தற்கால அரசியல் சூழல்களில் பொருத்திப்பார்க்க வேண்டியுள்ளது. இளவரசன் - திவ்யா காதல் விவகாரம், இளவரசன் மரணம், கோகுல்ராஜ் படுகொலை, உடுமலையில் சங்கர் படுகொலை, தொடரும் ஆணவக் கொலைகள் ஆகியவை அம்பேத்கரின் ஆய்வு முடிவுகளுக்கு வலுசேர்க்கின்றன என்பதுதான் எதார்த்தம். மீண்டும் மீண்டும் இந்தியச் சூழலில் சாதி என்பது கதவடைக்கப்பட்ட வர்க்கமாக இருப்பதையும் சாதித் தூய்மையைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளைக் கண்டு சாதியவாதிகள் பதறுவதையும் பார்க்கும்போது, 100 ஆண்டுகளுக்கு முந்தைய அம்பேத்கரின் புத்தகம் எந்த அளவு ஆழமானது என்பது விளங்கும். குறிப்பாக ‘அகமண முறை’, ‘சாதிமறுப்புத் திருமணங்கள்’ என்ற இரண்டு அம்சங்கள் குறித்து கவனத்தில்கொள்ள வேண்டிய சில புள்ளிகளைத் தொகுத்துக்கொள்வோம்.

• தமிழகத்தில் சாதிக் கலவரங்கள் அல்லது தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் என்பவை, தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வெளியைத் தாண்டி பொதுவெளியில் பிரவேசிக்கும்போதே நிகழ்கின்றன. 60, 70-களில் சாவு வீட்டில் பறையடித்தல், செத்த மாட்டைச் சுமந்துசென்று புதைத்தல் ஆகிய இழிவு சுமத்தப்பட்ட தொழில்களைச் செய்ய மாட்டோம் என்று தலித் மக்கள் மறுத்தபோது, ஆதிக்கச் சாதியினர் தாக்குதல் தொடுத்தனர். ஊராட்சித் தேர்தல்களில் பங்குபெற்றபோதும், ஊர்த்தெருக்களில் மட்டுமே ஊர்வலம் செய்யும் கோயில் திருவிழாத் தேர்கள் சேரிக்குள்ளும் வர வேண்டும் என்று தலித் மக்கள் கோரிக்கை வைத்தபோதும் சாதிக் கலவரங்கள் வெடித்தன. தலித் மக்களில் கணிசமான இளைய தலைமுறையினர் படித்துப் பொருளாதாரரீதியாக உயர்ந்ததாலும், தங்கள் பெற்றோர்களைச் சாதித் தொழில்கள் செய்ய வேண்டாம் என்று தடுத்ததாலும், 90-களில் தென் மாவட்டங்களில் சாதிக் கலவரங்கள் நடந்தன. அவற்றைச் சாதிக் கலவரங்கள் என்று சொல்வதைவிடவும் தலித் மக்களின் சுயமரியாதைக்கான போராட்டங்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால், சமீப காலமாக சாதியப் பிரச்னைகளில் மையம்கொள்பவை எல்லாம் ‘சாதிமறுப்புத் திருமணங்கள்’ என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.
• நீதிக்கட்சி ஆட்சிக் காலத்திலேயே தமிழகத்தில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது என்றாலும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான் அது உச்சம்பெற்றது. இந்த இடஒதுக்கீடு தலித் மக்களுக்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும், குறிப்பிடத்தக்க அளவுக்கு தலித் மக்கள் கல்வி, அரசு வேலை வாய்ப்பு, தனியார் வேலை வாய்ப்பு, உயர்கல்வி ஆகியவற்றைப் பெறுவதற்கு வழிவகுத்தது. குறிப்பாக, அனைத்துச் சாதி ஆண்களும் பெண்களும் பழகுவதற்கான, நட்பு பாராட்டுவதற்கான, காதல் மலர்வதற்கான வெளி உருவானது. இன்னொருபுறத்தில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த திராவிடக் கட்சிகளின் சமூகநீதி நடவடிக்கைகளால் இடைநிலைச் சாதிகளே அதிகம் பலனடைந்தனர். அரசியல் கட்சிகளில் அதிகார மையங்களாகத் திகழ்வதில் இருந்து வாரியத் தலைவர்கள் பதவி, அரசு ஒப்பந்தப் பணிகளை எடுப்பது, கோயில் திருவிழா நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிப்பது ஆகியவற்றால் இடைநிலைச் சாதியினருக்குப் புதிய அதிகாரங்கள் கிடைத்தன. ஒருபுறம் சமூகநீதி நடவடிக்கைகளால் தலித் இளைஞர்களும் பெண்களும் மற்ற சாதி ஆண்களோடும் பெண்களோடும் காதல் செய்வதற்கும் சாதிமறுப்புத் திருமணங்கள் நடைபெறுவதற்குமான வாய்ப்பு, இன்னொருபுறம் திராவிடக் கட்சி ஆட்சிகளில் சாதியைக் காப்பாற்றும் அதிகார மையங்களாக இடைநிலைச் சாதியினர் உருவானது ஆகிய இரண்டுமே நடந்தன. இத்தகைய சாதி முரண்கள் அதிகரிப்பது என்பதுதான் சமூக இயங்கியல். இதுகுறித்து கூடுதலாக விளங்கிக்கொள்ள ‘முரண்பாடுகள்’ குறித்த மாவோவின் கருத்துகள் உதவும்.
• குழந்தைத் திருமணத்துக்கும் சாதிக்கும் உள்ள உறவு குறித்து அம்பேத்கர் விளக்கியதை முன்பே பார்த்தோம். குழந்தைத் திருமணங்கள் நடைபெற்ற19-ம் நூற்றாண்டில் ‘பெண்களின் திருமண வயதை அதிகரிக்கவேண்டும்’ என்று சமூகச் சீர்திருத்தவாதிகளும் பெண்ணியத்துக்காகப் போராடிய பெரியார் போன்றவர்களும் குரல் எழுப்பினர். இப்போதோ ‘பெண்களின் திருமண வயதை அதிகரிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை ராமதாஸ் போன்ற சாதியத் தலைவர்கள் முன்வைக்கிறார்கள். ‘கல்லூரிக் காலங்களில் அதிகமும் சாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறுகின்றன. பெண்களின் திருமண வயதை அதிகரித்தால், வேலைவாய்ப்புக்கான போட்டிகள் நிறைந்த சூழலில் காதல் மணங்கள் நடைபெறாது’ என்பது இவர்கள் கோரிக்கையின் பின்னுள்ள தர்க்கம். ஒரே கோரிக்கை வெவ்வேறு காலங்களில் எதிரெதிர் சக்திகளிடம் இருந்து வருவது வரலாற்றின் விசித்திரம்தான்!
• ஆணவக் கொலைகளைக் கவனித்தால் ஓர் உண்மை புரியும். ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை தலித் ஆண் திருமணம் செய்யும்போதுதான் அதிகம் ஆணவக் கொலைகள் நடக்கின்றன. சமயங்களில் தங்கள் சொந்த மகளையே பலியிடுவதற்கும் சாதிவெறியர்கள் தயங்குவதில்லை. சதி என்னும் உடன்கட்டைக்கும் சாதிக்கும் உள்ள தொடர்பு குறித்து அம்பேத்கர் சொன்னதை ஆணவக் கொலைகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம். எப்படியாயினும் சாதித் தூய்மையைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு பெண்களின் தலையிலேயே சுமத்தப்படுகிறது.
• சாதிமறுப்புத் திருமணங்களில் உள்ள உள்முரண்பாடு குறித்தும் பேச வேண்டும். சாதி மறுத்த காதல் திருமணம் செய்துகொள்பவர்கள் முற்றிலுமாகச் சாதியுணர்வை நீக்கிவிடுவதில்லை. அதனால் ‘சாதியற்றோர்’ என்ற வகையினமும் உருவாகவில்லை. இரண்டு வெவ்வெறு சாதிகளைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்யும்போது, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையின்மீது ஆணின் சாதியே திணிக்கப்படுகிறது. குடும்ப நடவடிக்கைகளிலும் ஆணின் சாதிக் கலாசாரமே பின்பற்றப்படுகிறது. எனவே, சாதிமறுப்புத் திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தையும் சாதியச் சமூகத்தின் ஓர் அங்கமாகிவிடுகிற அவலமே நடக்கிறது.
• `சாதிகளின் கதவடைப்பு பற்றிப் பேசும்போது தலித் சாதிகளுக்குள்ளும் நடக்க வேண்டிய சாதிக் கலப்பு குறித்துப் பேச வேண்டும். ‘பார்ப்பனர்களைப் பார்த்தொழுகுதல்’ பற்றிப் பேசும்போது, பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள வைசியர்கள், சத்திரியர்கள் ஆகிய வர்ணத்தாரிடம் இது அதிகமாக இருக்கிறது. தூரத்தில் உள்ள சாதிகளிடம் குறைவாக இருக்கிறது’ என்றார் அம்பேத்கர். சென்ற நூற்றாண்டில் பார்ப்பனச் சமூகத்தில் விதவைப் பெண்களுக்கு நிலவிய கொடுமைகளையும், அறுத்துக்கட்டுதல், விதவை மறுமணம் ஆகியவை அனுமதிக்கப்பட்ட கள்ளர்கள் போன்ற சாதியினரிடம் தென்பட்ட நெகிழ்வுத்தன்மையையும் ஒப்பிட்டால் இது புரியும். அதேபோல் ‘அகமணமுறையின் மூலம் சாதித் தூய்மையைப் பாதுகாப்பது’ என்பது மேல்சாதிகளிடம் இருக்கும் அளவுக்கு தாழ்த்தப்பட்ட சாதிகளிடம் இறுக்கமாக இல்லை. ஆனாலும் சில இடங்களில் தாழ்த்தப்பட்ட சாதிகளிலும் சாதி மறுப்புத் திருமணங்கள் மோதல்களை உண்டாக்குவதைப் பார்க்கிறோம். எனவே கதவுடைப்பு, சாதிமறுப்புத் திருமணங்கள் ஆகியவை தலித்துகள் உள்ளிட்ட எல்லாச் சாதிகளிலும் நடைபெற வேண்டியது அவசியம்.
• சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதி மறுப்புத் திருமணங்கள் என்பவை குடும்ப அளவிலான பிரச்னைகளாகவும் அதிகபட்சம் போனால் ஊர் அளவு பிரச்னைகளாகவுமே இருந்தன. ஆனால், இப்போது சாதிவெறி அமைப்புகள் அதைக் கைப்பற்றி தமிழக அளவிலான பிரச்னைகளாக மாற்றுகின்றன. ஒட்டுமொத்தமாக தலித் அல்லாத சாதிகளைத் திரட்டுவதற்கு இதை முன்வைக்கிறார்கள். சாதிமறுப்புத் திருமணங்கள் என்பவை இப்போது அரசியல் பிரச்னையாக மாற்றப்பட்டிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
• தொடக்க காலங்களில் நவீன மாற்றங்கள் சாதியை அழித்துவிடும் என்று பலர் நம்பினார்கள். ‘ரயில் வந்தபோதும் தொழிற்சாலைகள் வந்தபோதும் தீண்டாமை ஒழிந்துவிடும், சாதியத்தின் பிடி தளரும்’ என்று தொடக்ககால கம்யூனிஸ்ட்கள் கருதினார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. சாதி எல்லா நவீன மாற்றங்களுக்கும் ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொள்கிறது. இப்போது ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என்று எல்லா நவீன சமூக ஊடகங்கள் வழியாகவும் சாதிவெறி வளர்க்கப்படுகிறது. இயல்பாகவே காதலால் கிளர்ச்சியுற வேண்டிய இளைஞர்கள், ‘என் சாதிப் பெண்ணை யார் கட்டினாலும் வெட்டுவேன்’ என்று ஃபேஸ்புக்கில் அரிவாளோடு போஸ் கொடுக்கிறார்கள். எல்லா சாதிக்காரர்களோடும் நட்பு பாராட்ட சாத்தியம் உள்ள ஃபேஸ்புக்கில், சாதி பார்த்து ஃபேஸ்புக் குழுக்கள் உருவாக்கப்படுகின்றன என்றால், நவீனத்தைச் செரிக்கும் சாதியின் வலிமையைப் புரிந்துகொள்ளலாம்.
• சாதிமறுப்பை முன்வைத்த பெரியாரை முன்னோடியாகச் சொல்லிக்கொள்ளும் திராவிடக் கட்சிகள் பார்ப்பன எதிர்ப்பு, இட ஒதுக்கீடு ஆகியவற்றில்தான் கவனம் செலுத்தின. அதன் விளைவாக ஒருபுறம் இடைநிலைச் சாதிகள் அதிகாரம், தலித்துகளுக்கான கணிசமான வாய்ப்பு, சாதிமறுப்புத் திருமணங்கள், ஆணவக்கொலைகள் ஆகிய பல செயற்பாடுகள் நடக்கின்றன. இவற்றை எதிர்கொள்ள வேண்டியது திராவிடக் கட்சிகளின் கடமை. வெறுமனே ‘சமூகநீதி’ மட்டும் பெரியாரின் கொள்கையல்ல. சாதி ஒழிப்புதான் பெரியாரியத்தின் அடிப்படை. சமூக நல்லிணக்கத்துக்குச் சவாலாக வளர்ந்துள்ள சாதிவெறி அமைப்புகளைத் திராவிடக் கட்சிகள் எப்படி எதிர்கொள்ளப்போகின்றன, ஆணவக்கொலைகளைத் தடுப்பது, சாதிமறுப்புத் திருமணங்கள் செய்தவர்களைப் பாதுகாப்பது ஆகியவற்றுக்கு அவர்களிடம் என்ன செயல்திட்டங்கள் இருக்கின்றன என்பதை விளக்கவேண்டும். ஏனெனில், சாதிவெறி அமைப்புகள் ஏதோ தலித்துகளுக்கும் சாதிமறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கும் மட்டும் எதிரிகள் அல்ல, நாளை திராவிடக் கட்சிகளுக்கும் சவால்விடப்போகிறவை என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
இப்படித் தொடர்ச்சியாக பல உரையாடல்களை வளர்த்தெடுக்க அம்பேத்கரின் ‘இந்தியாவில் சாதிகள்’ புத்தகம் நமக்கு உதவும்.