
எழுத்து மேசை

‘‘புதுமைப்பித்தனை முதலில் எங்கு பார்த்தேன்? 9-ம் வகுப்பு முடிந்து, ஆண்டு விடுமுறையின்போது பொது நூலகத்தில் நான் படித்த முதல் கதையில் பார்த்தேன். `பொன்னகரம்’ கதை என்னைப் புரட்டிப் போட்டது. பள்ளியில் சொல்லிக் கொடுத்ததற்கு மாறாக இருந்ததால், அதிர்ச்சி.
எனது தந்தையாரும் தாத்தா திரைக்கதையாசிரியர் சோலைமலையும் அவரைச் சிலாகித்துச் சொல்வார்கள். `கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ கதை வெளிவந்தபோதே பத்திரிகையில் அதைப் படித்து வியந்ததையும் சொன்னார்கள்.
சென்னை ஓவியக் கல்லூரியில் சேர வரும்போது புதுமைப்பித்தனின் பெரும்பாலான கதைகளைப் படித்துவிட்டு, அவரைக் கொண்டாடித் திரிந்தேன். சென்னையில் புகழுடன் இருந்த சோலை மலைத் தாத்தாவும் `அவரைச் சந்திக்கத்தான் முதன்முதலில் சென்னை வந்தேன்’ எனச் சொல்லி மகிழ்வார். பின் 70-களில் அவர் தயாரித்து, மனோரமா நடித்த நாடகத்துக்கும் `பொன்னகரம்’ என்றே பெயர்சூட்டி மகிழ்ந்தார்.
மந்தைவெளியில்தான் புதுமைப்பித்தன் குடும்பம் வாழ்கிறது என்பதை அவர் மூலமே அப்போது அறிய வந்தும், அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்துவிடவில்லை. பின்பு, அவர் மகள் அறிமுகம் கிடைத்ததும் காலம் கடந்து. 2002-ம் ஆண்டில் டிஜிட்டல் கேமராவும் கையுமாக அலைந்த காலகட்டத்தில் பிரிய நண்பர்களுடன் பேச்சின் ஊடே, `புதுமைப்பித்தன் மகள் இங்கேதான் இருக்கிறார்’ என்றேன். நண்பர்கள் அனைவரும் அந்த விநாடியே அவருடைய இல்லத்துக்குக் கிளம்புவதென முடிவெடுத்தோம்.
அங்கே சென்றிருந்தபோது, புதுமைப்பித்தனின் மகள் தினகரி, ‘இதுதான் அப்பா பயன்படுத்திய எழுத்து மேசை’ என்று காட்டினார். எனக்கு உலகின் மாபெரும் ஓவியர்களின் மூலப்பிரதி முன்பு நின்றபோது ஏற்பட்ட சிலிர்ப்பு. அதிர்ச்சியும் பரவசமும் கலந்த உணர்வில் அந்த மேசையைத் தொட்டுப் பார்த்தேன். என் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த டிஜிட்டல் கேமராவுக்கு இதைவிட பொருத்தமான பெரும்பேறு கிடைக்க வழி இல்லை. அப்போது, ஜன்னல் வழியாக வந்த ஒளிக்கிரணங்கள் பல புகைப்படங்களை மிக அழகாக எடுப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தன. அவருடைய மேசையை முதன்முதலில் படம் எடுத்து வெளி உலகுக்குக் காட்டப்போகிற ஓர் இலக்கியச் சேவையை மனம் லயித்துச் செய்தேன்.
அந்தப் புகைப்படங்கள் முதன்முதலில் விகடனிலும் பின் `கபாடபுரம்’ இணைய இதழிலும் பிரசுரமாயின. இவற்றில் அவருடைய வெற்றிலைச் செல்லம், பேனா ஆகியவற்றையும் வைத்து நான் எடுத்த மற்றொரு புகைப்படமே இது!