மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எழுத்துக்கு அப்பால்...

எழுத்துக்கு அப்பால்...
பிரீமியம் ஸ்டோரி
News
எழுத்துக்கு அப்பால்...

இங்கேயும்... இப்போதும்...வாழ்க்கைதொகுப்பு : கா.பாலமுருகன், விஷ்ணுபுரம் சரவணன்

எழுத்துக்கு அப்பால்...

ப்ரேமா ரேவதி

“என் விருப்பத்தின்பேரில் படிப்பேன், எழுதுவேன். வேறெந்தத் திட்டமும் இருக்காது. ஆனால் வானவில் பள்ளி தொடங்கி, மாணவர்களுடன் பேசி, பழகி, வாழத் தொடங்கியதும் எனக்குள் எத்தனையோ மாற்றங்கள். அதன் தொடர்ச்சியாகவே நான் எழுதியவற்றை பிரசுரிக்கவும் புத்தகமாக்கவும் முடிவுசெய்தேன். குழந்தைகள் மனநிலையைப் பற்றி இதுவரை நான் எழுதியதில்லை, எழுத வேண்டும்.”

கவிதை மற்றும் மொழிபெயர்ப்புகளில் தனித்த அடையாளத்தோடு வலம் வருபவர் ப்ரேமா ரேவதி. இவரது `யாக்கையின் நீலம்’ எனும் கவிதைத் தொகுப்பு குறிப்பிடத்தக்கது. நவீன நாடகங்களில் தொடர்ச்சியாகப் பங்களித்துவருகிறார். நாகப்பட்டினம் அருகே உள்ள சிக்கல் கிராமத்தில், `வானவில்’ எனும் பள்ளியை நடத்தி வருகிறார். சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகள், நரிக்குறவர் மற்றும் பூம்பூம் மாட்டுக்காரர்களின் குழந்தைகளே இங்கு மாணவர்கள்!

பாப்லோ அறிவுக்குயில் 

எழுத்துக்கு அப்பால்...

‘‘எனக்கு முதன்மைத் தொழில், எழுத்து. மீதி நேரங்களில் இயற்கை விவசாயம் செய்கிறேன். என் வீட்டில் 44 நாட்டு நாய்கள் வளர்கின்றன. அவற்றை எங்கள் குழந்தைகளைப்போல பராமரித்துவருகிறோம். ஒவ்வொன்றுக்கும் குறிஞ்சி, முல்லை என தமிழ்ப் பெயர்களைச் சூட்டியுள்ளேன். எனது மனைவி ஆங்கில ஆசிரியை. அவருக்கு ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் மீது ஆர்வம் அதிகம். அதனால், டேவிட், சீஸர் என ஆங்கிலத்தில் பெயர் சூட்டுவார். எங்கள் வீடு தமிழ் - ஆங்கிலம் என இருமொழிக் கொள்கைகொண்டது.’’

இதுவரை ஏழு சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார் பாப்லோ அறிவுக்குயில். `செறுக்க வரகுக்காரனின் சூரி’ சிறுகதைத் தொகுப்பு பரவலான வரவேற்பைப் பெற்றது. இவரது இயற்பெயர், அறிவழகன். ஜெயங்கொண்டம் அருகே வெண்மான் கொண்டான் ஊரைச் சேர்ந்த இவர், தற்போது அரியலூர் மாவட்டம் கீழப்பழூர், கருவிடைச்சேரியில் தோட்டத்தில் வாழ்கிறார், ஒரு விவசாயியாக!       

சுகிர்தராணி

எழுத்துக்கு அப்பால்...

``ஆசிரியர் பணி என்பது பள்ளிநேரத்தோடு முடிந்துவிடுவது இல்லை. தனக்குத் தெரிந்ததை மட்டும் மாணவர்களிடையே இறக்கிவைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால், பாடம் தொடர்பாக புதிய விஷயங்களைத் தேடிச் செல்வேன். சமைத்துக்கொண்டிருக்கும்போதுகூட, அடுத்த நாள் நடத்தவேண்டிய பாடம் பற்றி யோசித்துக்கொண்டிருப்பேன். மாணவர்கள் மூலம் நான் நிறையக் கற்கிறேன். அதை என் எழுத்திலும் பதிவுசெய்கிறேன்.’’

தலித்திய, பெண்ணியக் கவிதைகளில் காத்திரமான குரலுடையவர் சுகிர்தராணி. 15 ஆண்டுகளாக படைப்புத்தளத்திலும் செயல்பாட்டு வெளியிலும் தீவிரமாக இயங்கிவருபவர். வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர்!

ம.காமுத்துரை

எழுத்துக்கு அப்பால்...

‘‘எழுத்துக்கு முதல் இடம் தருவதுதான் என் விருப்பம். ஆனால், பொருளாதாரச் சூழல் அப்படி இருக்கவிடுவதே இல்லை. முழுநேர எழுத்துக்கான வாழ்க்கைச்சூழலை எண்ணி ஏங்கிக்கொண்டிருக்கிறேன்.’’

தேனி - அல்லிநகரத்தில் வசிக்கிறார் ம.காமுத்துரை. மூன்று நாவல்களும், 10 சிறுகதைத் தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார். தேனி வட்டாரமொழியை அநாயசமாகத் தன் எழுத்தில் பதிவுசெய்பவர். விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை, கிராமக் குழந்தைகளின் உலகை பிரதிபலிப்பது இவருடைய படைப்புகளின் சிறப்பம்சம். பஞ்சாலைத் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கியவர், பத்துக்கும் மேற்பட்ட தொழில்களை முயற்சித்துப் பார்த்துவிட்டு, சமையல் பாத்திரங்கள் வாடகைக்கும்விடும் தொழிலைச் செய்துவருகிறார்! 

சந்திரா

எழுத்துக்கு அப்பால்...

“சினிமா தொடர்பான வேலை என்றாலே பரபரப்பானதுதான். அதிலும் உதவி இயக்குநர் என்றால், பரபரப்பு ரெண்டு மடங்கா கூடிடும். அப்படியான நாட்களிலும் பல இரவுகள் தூங்காமல் கதைகளைத்தான் எழுதிக்கொண்டிருப்பேன். படப்பிடிப்புத் தளங்களில் நடக்கிற பல சம்பவங்கள் எனக்கு நல்ல கதைகளைத் தந்திருக்கு. ‘கட் சொன்ன பிறகும் கேமரா ஓடிக்கொண்டிருக்கிறது’ நான் எழுதியவற்றில் எனக்கு ரொம்பவும் பிடித்த கதை.”

சந்திராவின் சொந்த ஊர் தேனி மாவட்டத்திலுள்ள கூடலூர். மூன்று சிறுகதைத் தொகுப்புகளும், இரண்டு கவிதைத் தொகுப்புகளும் எழுதியுள்ளார். சமூகச் செயல்பாட்டுத்தளத்தில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திவருபவர். இயக்குநர்கள் அமீர், ராம் இருவரிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். தற்போது, கரு.பழனியப்பன் நாயகனாக நடிக்கும் ‘கள்ளன்’ திரைப்படத்தின் இயக்குநர்.

சரவணன் சந்திரன்

எழுத்துக்கு அப்பால்...

‘‘பொருளாதாரரீதியான சுதந்திரம் மன அழுத்தமில்லாத எழுத்துக்கு உத்தரவாதம் தருகிறது. அதனால், மீன் வியாபாரத்தில் கவனம் செலுத்துகிறேன். பெரும்பாலும் என் கதைகளை கடையில் வைத்துத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.’’

ஒரு வருட காலத்தில் மூன்று நூல்களை எழுதி அசாதாரணமான உழைப்பைத் தந்திருக்கிறார் சரவணன் சந்திரன். இவரது சொந்த ஊர், கோவில்பட்டி. பல்வேறு ஊடகங்களில் பணியாற்றியவர். திமோர், சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் இவருக்கு ஏற்பட்ட வர்த்தக அனுபவங்களின் பின்னணியில் இவர் எழுதிய நாவலான ‘ஐந்து முதலைகளின் கதை’ பரவலாகப் பேசப்பட்டது. எளிய மனிதர்களின் வாழ்வியல் சிக்கல்களைப் பேசுகிற படைப்பாளி. புதிய புதிய களங்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் இவரின் கடைக்கு பல அரசியல், சினிமா நட்சத்திரங்கள் வாடிக்கையாளர்கள். இப்போது விவசாயத் துறையிலும் தன் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்!