Published:Updated:

மைல்ஸ் டு கோ - 16

மைல்ஸ் டு கோ
பிரீமியம் ஸ்டோரி
News
மைல்ஸ் டு கோ

படம்: ஸ்டில் ராபர்ட்

ஹீரோயின் கோபித்துக்கொண்டு போய்விட்டார். திக்கென்று நிற்கையில், தயாரிப்பாளரிடம் இருந்து போன். ‘என்னம்மா... கோச்சிட்டுப் போயிட்டாங்களா?’ என்றார். `ஆமாம்’ என்றேன்.

‘நீ ஏம்மா ஃபீல் பண்ற..? பேசிப்பார்க்கலாம். இல்லைன்னா, வேற ஹீரோயின் வெச்சுத் திரும்ப எடுத்துரலாம்’ என்றார். கிட்டத்தட்ட ஹீரோயின் போர்ஷன் முழுவதையுமே முடித்திருந்தோம். இன்னும் மூன்றே நாட்கள்தான் திவ்யாவின் கால்ஷீட் தேவை. அந்தச் சமயத்தில் தயாரிப்பாளர் அப்படிச் சொல்வார் என எதிர்பார்க்கவே இல்லை. என் மீது அவருக்கு இருந்த நம்பிக்கைதான் அதற்குக் காரணம்.

சில நாட்கள் கழித்து வி.ஏ.துரை திவ்யாவைச் சமாதானப்படுத்தி ஷூட்டிங்குக்கு அழைத்துவந்தார். நான்தான் அவரிடம் முதலில் சென்று பேச வேண்டும் என்பதுதான் திவ்யாவின் நிபந்தனை. அன்று என் கோபத்தில், நான் ஓவர் ரியாக்ட் செய்துவிட்டேன் என எனக்கு நன்றாகத் தெரியும். அதனால், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திவ்யா வந்ததும் நான் சென்று நேராக சீன் விவரிக்க ஆரம்பித்தேன். பைக் தொலைவதற்கு முன்னர் தனுஷ் தனது முதல் மாதச் சம்பளத்தில் திவ்யாவுக்கு துணி வாங்கச் செல்லும் காட்சிதான், அன்று எடுக்க வேண்டியிருந்தது.

அன்றுதான் இந்தியா டி20 உலகக் கோப்பையை (2007) வென்றது. படத்தில் தனுஷும் திவ்யாவும் சண்டை போட்டுக் கொண்டே நடந்துசெல்லும்போது, கும்பலாக சிலர் அந்த மேட்ச்சைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

எந்தப் பிரச்னையும் இன்றி அன்று ஷூட்டிங் முடிந்தது. திவ்யா அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே மறந்திருந்தார். அவர் அவ்வளவு ஸ்போர்ட்டிவ். அதன் பின் `உதயம் NH4’ ஷூட்டிங் பெங்களூரில் நடந்தபோது அவரே ஸ்பாட்டுக்கு வந்து, படத்தில் ஒரு காட்சியிலும் நடித்துவிட்டுச் சென்றார். முதல் இரண்டு ஷெட்யூல் நல்லபடியாக முடிந்ததும் எடுத்த வரைக்கும் போட்டுப் பார்த்தோம். காமெடி குறைவாக இருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் நினைத்தார்கள். சந்தானத்தையும் கருணாஸையும் வைத்து, இன்னும் ஒருநாள் படப்பிடிப்பு நடத்தச் சொன்னார்கள். தனுஷும், காமெடி இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் உங்களுக்கு ஓ.கேன்னா மட்டும் எடுக்கலாம்’ என்றார். எனக்கு அந்தக் கதைக்குத் தேவையான ரிலீஃப் இருப்பதாகத் தோன்றியது.

பொல்லாதவன் படத்தில்...
பொல்லாதவன் படத்தில்...

மேலும், காமெடிக்கு என, தனியாகக் காட்சிகள் எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அன்று ஜி.வி.பிரகாஷ் ஸ்டூடியோவில் பாடல் ரெக்கார்டிங் நடந்துகொண்டிருந்தது. கருணாஸும் பிரித்வியும் என்னைப் பார்க்க வந்தார்கள். ‘தயாரிப்பாளர் சைடுல காமெடிக்காக இன்னொரு நாள் ஷூட்டிங் நடத்தலாம்னு சொல்றாங்க. எடுத்துக்கலாம். வேணும்னா யூஸ் பண்ணிக்கலாம்’ என்றார் கருணாஸ். நான் ஓ.கே என்றால், அடுத்த நாள் ஷூட்டிங் நடத்த எனக்குத் தெரியாமலே ஏற்பாடு செய்திருந்தார்கள். ஏற்கெனவே காமெடி காட்சி என்ற பெயரில் ஒரு காட்சி எடுத்து வைத்திருந்தோம். எடிட்டர் கிஷோரை அழைத்து, அந்தக் காட்சியையும் ஃபைனல் ரீலில் சேர்க்கச் சொன்னேன்.

மறுநாள் மணி அழைத்து, தயாரிப்பாளர் ஷூட்டிங்கை மதியம் இரண்டு மணிக்குத் தள்ளிவைத்திருப்பதாகத் தகவல் சொன்னான். நான் உடனே கதிரேசன் சாரை அழைத்து புதிதாகச் சேர்த்த காமெடி சீனைக் காட்டினேன். `இதுக்கு மேல சேர்க்கிறதுல எனக்கு உடன்பாடு இல்லை’ என்றேன். அவரும் அதைப் பார்த்துவிட்டு `நன்றாக இருக்கிறது. இதுவே போதும்’ எனச் சொல்லிவிட்டார். அன்று ஷூட்டிங் நடக்கவே இல்லை. `பொல்லாதவன்’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ், தினா, யோகி பி என மூன்று பேர் இசை அமைத்திருந்தார்கள். திருமண ரிசப்ஷனில் வரும் முதல் பாடலை முழுக்க முழுக்க சென்னை கானாவாக எடுக்கத் திட்டமிட்டிருந்தேன்.

பொல்லாதவன் படத்தில்...
பொல்லாதவன் படத்தில்...
அப்போது இருந்த ஜி.வி-யின் மனநிலைக்கு `என்னால் கானா பாடல் இசையமைக்க முடியாது. வேறு கம்போசரை வைத்துகூடச் செய்துகொள் ளுங்கள்’ என்றார்.

தயாரிப்பாளர் கதிரேசன்தான் `தினாவைக் கேட்கலாம்’ என்றார். கபிலன் எழுதிய `படிச்சுப்பார்த்தேன் ஏறவில்லை’ என்ற வரிக்கு தினா ட்யூன் போட்டார். எப்போதும் எனக்கு பாடல் படப்பிடிப்பில் நிறைவு இருப்பது இல்லை. `பொல்லாதவன்’ படத்தில் கடைசியாகப் படம்பிடித்த `மின்னல்கள் கூத்தாடும்’ ஷூட்டிங்குக்கு நான் போகவில்லை. சாந்தி மாஸ்டரும் தனுஷுமே அந்தப் பாடலை எடுத்துவிட்டார்கள்.  உடன் மணி சென்றிருந்தான். நான் டப்பிங் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். டப்பிங்கில் கிஷோரின் குரலுக்கு யாரைப் பேசவைக்கலாம் என்ற குழப்பம் வந்தது. கிஷோரின் தமிழில் கன்னட வாசனை அதிகம் அடித்தது. பல பேரைப் பேசவைத்துப் பார்த்தோம். நான்கூடப் பேசிப்பார்த்தேன்.

அப்போது பிரித்விதான் ‘புதுசா ஒருத்தரை அறிமுகம் பண்றீங்க. நல்ல ஆர்ட்டிஸ்ட். அவர் நல்லா வரணும்னா, அவர் குரல்லயே பேசவைங்க. அதான் அவருக்கு நல்லது’ என்றார். எனக்கும் அது சரி எனப் பட்டது. படத்தில் அவருக்கு மொத்தம் ஆறு சீன்கள்தான். அதற்கு மட்டும் 18 நாட்கள் பேசினார். அவரும் விக்ரம் சுகுமாரனும்தான் டப்பிங்கில் இருந்தார்கள். நான் தினமும் மாலை வந்து திருத்தங்கள் சொல்வேன். இருவரும் சளைக்காமல் வேலைசெய்து, ஓரளவுக்கு நினைத்ததைக் கொண்டுவந்துவிட்டார்கள்.

பொல்லாதவன் படத்தில்...
பொல்லாதவன் படத்தில்...

டப்பிங் முடித்ததும் தனுஷ் முழுப்படத்தையும் பார்த்துவிட்டு சைலன்டாக வெளியே வந்தார். நானும் பிரித்வியும் அவரின் கருத்தைக் கேட்க ஆர்வமாகப் பின்னாடியே வந்தோம்.  பிரித்வியிடம், `ஒரு டூ மினிட்ஸ். கொஞ்சம் தனியா பேசணும்’ என்றார் தனுஷ்.

அவருக்குப் படம்பிடிக்கலையோ என நினைத்தேன். பிரித்வி சென்றதும், `நீங்க சொன்னதைவிட பெட்டரா எடுத்துட்டீங்க சார். படம் ஷ்யூர் ஷாட். எனக்கு இந்த மாதிரி ஃபீலிங் வருவது இதுவே ஃபர்ஸ்ட் டைம். ரொம்ப தேங்க்ஸ்’ என்றார். ஓரளவுக்குக் கரைசேர்ந்துவிட்டதாகத் தோன்றியது. விஜயன் சாரும் படம் பார்த்துவிட்டு என்னிடம், `எல்லாம் சரியா இருக்கு. பொதுவா முதல் படம் பண்ணும்போது, நமக்குத் தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்லணும்னு நினைப்பாங்க. அதுல சில தவறுகள் நடக்கும். அப்படி ஒண்ணு இந்தப் படத்துல இருக்குனு தோணுது’ என்றார். `என்ன தவறு சார்?’ எனக் கேட்டேன். `ரெண்டு பேரு கதை சொல்றது எனக்குப் புரியலை. அது தேவை இல்லைனு நினைக்கிறேன்’ என்றார். எப்போதுமே ஒரு ஃப்ளாஷ்பேக் கதையில், கதை சொல்பவரைத் தாண்டி மற்றவர்களின் வாழ்க்கை பற்றிய காட்சிகளும் வரும். அது அவருக்கு எப்படித் தெரியும் என்ற சந்தேகம் வரும். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதைச் சரிசெய்யத்தான் இரண்டு பேர் கதை  சொல்லும் டெக்னிக்கைக் கையாண்டேன். தனுஷுக்கு கால்செய்து விஜயன் சார் சொன்னதைச் சொன்னேன். அவரும் இரண்டு பேர் கதை சொல்வதால் குழப்பம் வரலாம் என்றார்.

பொல்லாதவன் படத்தில்...
பொல்லாதவன் படத்தில்...

`பொல்லாதவன்’ கதையின் தனித்தன்மையாக நான் நினைப்பது ஹீரோ, வில்லன் இரண்டு பேரும் கதை சொல்லும் அந்த உத்தியும், பைக் தொலைந்த பின் ஹீரோ அதைத் தேடி அலையும் காட்சிகளும்தான். ரிலீஸுக்கு சில நாட்கள் முன்னர் ஒருநாள் கருணாஸ் அழைத்தார். இரவு மூன்று மணி இருக்கும். ‘வெற்றி நீங்க சொன்னீங்கனு எந்த கேள்வியும் கேட்காம நடிச்சிட்டேன். உண்மையிலே எனக்கு படத்துல ஸ்கோப் இருக்கா?’ என்றார். `நான் எல்லா கேரக்டர் களையும் சரியா ட்ரீட் பண்ணணும்னு நினைக்கிறவன். உண்மையா நல்லா வந்திருக்கு’ என்றேன். நாங்கள் நினைத்ததுபோல் வந்திருக்கிறதா என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது. அவரது கரியரில் `ஆட்டோ குமார்’ முக்கியமான கேரக்டராக இருக்கும் என்றேன்.

`அப்படி வந்தா சந்தோஷம் வெற்றி’ என்றார். `பொல்லாதவன்’ படத்தில் நடித்த பலருக்குமே இந்த மாதிரியான சந்தேகங்கள் வந்தன. `அவுட்’ கேரக்டரில் நடித்த பவனை, நான் `திமிரு’ படத்தில்தான் கவனித்தேன். அவரிடம் பேசியபோது, `வில்லன் டீம்ல ஒரு ரோல். கூடவே இருப்பீங்க. ‘சொல்லுண்ணா’னுதான் நீங்க அடிக்கடி பேசுற வசனம். ஆனா இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்’ என்றேன். `வொர்க் அவுட் ஆகுமா?’ என்ற சந்தேகம் அவருக்கு. படப்பிடிப்பிலும் `சரியா வருமா?’ எனக் கேட்டுக்கொண்டே இருந்தார். கருணாஸ், பவன் இருவருக்குமே `பொல்லாதவன்’ முக்கியப் படமாக அமைந்ததில் எனக்கு சந்தோஷம்.

`பொல்லாதவன்’ பட சமயத்தில் என் கோபத்தை அதிகம் தாங்கிக்கொண்டது டைரக்‌ஷன் டீம்தான். மணி எனது நீண்டகால நண்பன். விக்ரம் சுகுமாரன், தர்மன், செந்தில் ஆகியோர் என்னுடன் பாலுமகேந்திரா சாரிடம் வேலைசெய்தவர்கள். கார்த்திகேயன், பசுபதி, சுந்தரமூர்த்தி மற்றும் ஹரிகேஷ் ஆகியோர் அந்தப் படத்தில்தான் என்னிடம் சேர்ந்திருந்தார்கள். என் ஆற்றாமைகள், இயலாமைகள் அனைத்தையும் இவர்களிடம்தான் காட்டுவேன். குறிப்பாக கார்த்தி... சில சமயம் நானே, `எப்படி என்னிடம் திட்டுவாங்கிவிட்டு அடுத்த நிமிடமே மலர்ச்சியோடு பேசுகிறான்’ என நினைப்பேன். அந்த அளவுக்கு என் டீம் என்னைப் புரிந்துகொண்டு என்னோடு அனுசரணையாக இருந்தார்கள். எப்போதுமே எனக்கு அப்படி ஒரு டீம் அமையும். அதனால்தான் படங்களும் நல்லபடியாக அமைகின்றன.

ரிலீஸூக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் படத்தின் டபுள் பாசிட்டிவ் தயாரானது. மொத்தப் படக் குழுவும் படம் பார்த்தோம். நான் கதிரேசன் சாரிடம் `படம் பார்க்கிறவங்க, நல்லா  இல்லைனு சொல்ல மாட்டாங்க சார். மூணு வாரம் கண்டிப்பா ஓடும்’ என்றேன். `ரெண்டு வாரம் ஓடினா போதும்ப்பா... தப்பிச்சுடுவேன்.விஜய், சூர்யா படம்லாம் வருது. போராடி தியேட்டர் போட்டிருக்கேன்’ என்றார்.

நவம்பர் 8. 2007. `அழகிய தமிழ் மகன்’, `வேல்’ போன்ற படங்களுடன் `பொல்லாதவன்’ படமும் ரிலீஸ் ஆனது. மணியின் மனைவி படம் வெற்றி பெற வேண்டிக்கொண்டு அன்று திருப்பதிக்குச் சென்றுவிட்டார். விக்ரம் சுமாரனின் அம்மாவும் வேண்டிக்கொண்டார். ஸ்டன்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமாரின் மனைவி சாய்பாபா கோயிலிலே அன்று முழுவதும் இருந்தார். என் அம்மா கேரளாவில் ஒரு கோயிலுக்கு சென்றிருந்தார். எனக்கு நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பது வேறு. ஆனால், என்னைச் சுற்றியிருந்த அனைவரும் `பொல்லாதவன்’ வெற்றிக்காக வேண்டிக்கொண்டு காத்திருந்தார்கள்.

மைல்ஸ் டு கோ - 16

`பொல்லாதவன்’ ஆரம்பித்த புள்ளியில் இருந்து ரிலீஸ் வரை என்னுடன் இருந்த மிகப் பெரிய பலம் மணி. இந்தப் பயணத்தில் நான் சந்தித்த பல நெருக்கடிகளை நாகரிகம் கருதி சொல்லாமல் விட்டிருக்கிறேன். அவ்வளவு நெருக்கடிகளையும் மிக எளிமையாகச் சமாளித்து, நான் மீண்டு வரக் காரணமாக இருந்தவன் மணி. மணி இல்லாமல் அந்த இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால், `பொல்லாதவன்’ 12 நாட்கள் ஷூட்டிங்கோடு நின்றுபோயிருக்கும்.

- பயணிப்பேன்

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan