மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ்நதியின் பார்த்தீனியம் - பேரழிவின் மானுட சாட்சியம் - யமுனா ராஜேந்திரன்

தமிழ்நதியின் பார்த்தீனியம் - பேரழிவின் மானுட சாட்சியம் - யமுனா ராஜேந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ்நதியின் பார்த்தீனியம் - பேரழிவின் மானுட சாட்சியம் - யமுனா ராஜேந்திரன்

தமிழ்நதியின் பார்த்தீனியம் - பேரழிவின் மானுட சாட்சியம் - யமுனா ராஜேந்திரன்

தமிழ்நதியின் பார்த்தீனியம் - பேரழிவின் மானுட சாட்சியம் - யமுனா ராஜேந்திரன்

ழப் போராட்டத்தில் இந்திய அமைதிப்படையின் தலையீட்டையும் அது விளைவித்த பேரழிவையும் முன்வைத்து, ஈழத்தவரால் எழுதப்பட்ட முதல் நாவலும் ஒரேயொரு நாவலும், சாந்தனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ‘விர்ல் விண்ட்’. 100 பக்கங்கள் கொண்ட அந்தக் குறுநாவலோடு ஒப்பிட, 500 பக்கங்களுக்கும் மேலாக விரியும் தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்,’ ஒரு விரிந்த மானுட சட்டகத்தையும் காலச்சட்டகத்தையும் கொண்டிருக்கிறது.

ஈழத்தில் இந்திய அமைதிப்படையின் தலையீட்டை இந்தியக் கண்ணோட்டத்தில் இருந்து அணுகிய புனைவுகள் இரண்டு. வாஸந்தியின் நாவலான ‘நிற்க நிழல் வேண்டும்’, இந்தி மொழிப் படமான ‘மெட்ராஸ் கஃபே.’  

வாஸந்தியின் ‘நிற்க நிழல் வேண்டும்’ நாவல், இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகி, கொழும்பில் நடைபெற்ற ராணுவ அணி வகுப்பு மரியாதை ஏற்பின்போது, சிங்கள ராணுவத்தைச் சேர்ந்த ஒருவன்  இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் பின்மண்டையில் துப்பாக்கிக்கட்டையால் அடிக்க யத்தனிக்கும் சம்பவத்துடனும், திலீபனின் மரணம் மற்றும் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 விடுதலைப்புலிகளின் தற்கொலையின் பின் விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் தொடங்கும் மோதல்களுடனும் நாவல் முடிவடைகிறது.

இந்திய அமைதிப்படையின் திட்டங்களைக் குழப்புவதே விடுதலைப்புலிகளின் நோக்கமாக இருந்தது என்பதைச் சுட்டும் வாஸந்தியின் நாவல், ஜெயவர்த்தன அரசு இந்திய அமைதிப்படையின் கட்டுப்பாட்டையும் சுயாதீனச் செயல்பாடுகளையும் இலங்கையில் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டத் தவறியது.

இந்திய அமைதிப்படை ஈழ மக்களின் மீது ஏவிய படுகொலைகளையும் பாலியல் வல்லுறவுகளையும் முதன்முதலாகப் புனைவுவெளியில் முன்வைத்த திரைப்படம், ராஜேஷ் டச்ரிவர் இயக்கிய ஆங்கிலப் படமான `இன் த நேம் ஆஃப் புத்தா.’ இதனையடுத்து இந்தப் பிரச்னையை மிக விரிவாக தனது ‘பார்த்தீனியம்’ நாவலில் இலக்கிய வடிவில் முன்வைத்திருக்கிறார் தமிழ்நதி.

ஈழ விடுதலை இயக்கங்கள்; இந்திய அரசின் அனுசரணையிலான ஆயுதப் பயிற்சிக்காக இந்தியா வருவது;

தமிழ்நதியின் பார்த்தீனியம் - பேரழிவின் மானுட சாட்சியம் - யமுனா ராஜேந்திரன்

இயக்கங்கள் பிளவடைகிற செயல்போக்கு; ஈழத்தினுள் இயக்கங்களுக்கு இடையிலான மோதல்; விடுதலைப்புலிகள் தமது சக இயக்கங்களைத் தடைசெய்தலும் தேடி அழித்தலும்; இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையடுத்து, இந்தியப் படை இலங்கைக்கு வருதல்; திலீபனின் உண்ணாவிரதமும் மரணமும்; இந்தியப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் வடக்கில் இருந்து புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 விடுதலைப்புலிப் போராளிகள் இலங்கைப் படையினரால் கையகப்படுத்தப்படுவதை அடுத்து, சயனைடு அருந்தி தற்கொலை செய்துகொள்ளுதல்; இதனையடுத்து இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் வெடிக்கும் மோதல்; விடுதலைப்புலிகளால் தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் இந்திய அமைதிப்படையுடன் இணைந்து புலிகளை வேட்டையாடுதல்; இந்திய அமைதிப்படை புலிப்போராளிகளையும் வெகுமக்களையும் வித்தியாசப்படுத்தலில் அடையும் தோல்வி; புலிகளைக் காட்டித் தரச்சொல்லி வெகுமக்களின் மீது அமைதிப்படை தொடுக்கும் முழுமையான யுத்தம்; பாரிய பாலியல் வல்லுறவுகள்; உயிருக்குத் தப்பிய மக்களின் இடப்பெயர்வு; இந்த எல்லா நிகழ்வுகளிலும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்பும் அரசியல் மயமாக்கலும் அலைக்கழிவும்; ஜெயவர்த்தனா தோல்வியுற்று பிரேமதாசா தலைமையேற்றதையடுத்து, இந்திய அமைதிப்படை வெளியேறும் நிகழ்வு; அதுவரை இந்திய அமைதிப்படையோடு செயல்பட்ட புலி அல்லாத ஈபிஆர்எல்எஃப் இயக்கம் பலவந்தமாகச் சிறுவர்களைப் பிடித்து உருவாக்கும் தமிழ்த் தேசிய ராணுவம்; அதனது படுகொலைகள்; அதற்கு எதிரான விடுதலைப்புலிகளின் பழிவாங்கும் படுகொலைகள்... என இந்திய அமைதிப்படை வெளியேறும் நாட்களின் பேரவலத்துடனும் பெரும் குழப்பத்துடனும் தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் முடிகிறது.

ஈழ விடுதலை இயக்கங்களில் உள்கட்சிப் போராட்டங்களும் இயக்கப் பிளவுகளும் தோன்றிய காலகட்டத்தின் சித்திரம் கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ எனில், பின் முள்ளிவாய்க்கால் காலத்தின் அரசியல் மறுபரிசீலனையும் கடந்தகால சாகசமும் குணா கவியழகனின் ‘நஞ்சுண்டகாடு,’ ‘விடமேறிய கனவு’ மற்றும் ‘அப்பால் ஒரு நிலம்’ எனும் முப்பெரும் நாவல்கள் எனில், தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ நாவலின் தனித்தன்மை என்பதுதான் என்ன?

`புதியதோர் உலகம்’ நாவலிலும் குணா  கவியழகனின் நாவல்களிலும் போராளிகளின் காதலியர் துணைப் பாத்திரங்காக வருகிறார்கள். அன்னையரும் சகோதரியரும் சிற்சில தருணங்களில் வந்து போகிறார்கள். தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்,’ முழுமையாகப் போராளி ஒருவனின் காதலியின் பார்வையில் சொல்லப்பட்ட நாவல். இதுவரை போர் வாழ்வு பற்றிய ஈழ நாவல்கள், ஆண் மையக் கதை சொல்லல்களாக இருக்க, தமிழ்நதியின் நாவல் முழுமையாகப் பெண்வழிக் கதைசொல்லும் பெண்மைய நாவலாக இருக்கிறது. வானதியினதும் அவளது தாய் தனபாக்கியத்தினதும், இவர்கள் தமது தனி வாழ்விலும் சமூக வாழ்விலும்கொள்ளும் உறவுகளதும் வாழ்வுச் சித்திரம்தான் `பார்த்தீனியம்’ நாவல்.

‘பார்த்தீனியம்’ நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரையிலும் உயிரோட்டமுள்ள உரையாடலைத் தொடர்ந்து முன்வைத்துச் செல்லும் பாத்திரங்கள் நான்கு. பிரதான பாத்திரமான வானதி. அடுத்து, அவரது தாய் தனபாக்கியம். மூன்றாவதாக, விடுதலைப்புலிப் போராளி, பரணி. நான்காவதாக, தனது சகோதரனான ரெலோ, போராளி விடுதலைப்புலிகளால் தன் கண் முன்பாகவே கொல்லப்படுதலைக் கண்ணுறும் தனஞ்செயன்.

வானதிக்கும் பரணிக்குமான உரையாடல்களில் இயக்க வாழ்வு, இயக்கத்தின் லட்சிய வாழ்வுக்கும் நடைமுறை வாழ்வுக்குமான முரண்; போராளி வாழ்வில் காதலின் காத்திருப்பும் பொறுப்பேற்றலும் எனும் தீர்க்கவியலா முரண் அனைத்தும் மேலெழுந்து வருகின்றன. தாய்க்கும் மகளுக்குமான உரையாடலில் தனது குஞ்சைப் பாதுகாக்கும் தாய்க்கோழியின் பரிதவிப்பும், குடும்பத் தலைமையேற்பும், முழு ஈழத்தாய்மாரினது துயரும் ஆன உரையாடல்கள் வருகின்றன. விடுதலைப்புலிப் போராளி பரணியின் காதலியான வானதிக்கும், விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட போராளியினது சகோதரனும் அவளது கல்லூரித் தோழனுமான தனஞ்செயனுக்கும் ஆன உரையாடல், போராளிகளுக்கு இடையிலான படுகொலைகளின் துயரை மீள மீள நாவல் முழுதும் எழுப்பிக்கொண்டே இருக்கிறது. உயிரழிவின் வாதைக்கு எதிரான உரையாடல் இது. அன்பு, வெறுப்பு எனும் இருமை இதனால் நாவல் முழுதும் விரவியிருக்கிறது. கறாரான வெறுப்பு-அழிவு-அழிப்பு, கறாரான நேசம்-காதல்-பிறப்பு என்பதற்கு மாறாக இரண்டுக்கும் இடையில் சதா அல்லாடிக்கொண்டிருக்கிறது பெண்மனம்.

நாவலின் ஆரம்ப 100 பக்கங்கள் பள்ளி-கல்லூரி வாழ்வின் இயல்பான குறுகுறுப்பும் மனதை வெளிப்படுத்துவதிலுள்ள தயக்கத்துக்கு ஒப்ப மிக மெதுவாக மனோரதியமான மொழியில் நகர்கிறது. பரணி, போராளி வாழ்வை மேற்கொள்ளத் தொடங்குதல், இயக்கங்களுக்கு இடையி
லான மோதல், மாத்தய்யாவின் தன்னுணர்வு; செல்வந்தர்கள் பாலான அவரது சலுகையுணர்வு; இது குறித்த மோதல் வரும்போது, போராளிகளைத் திட்டமிட்டுப் பழிவாங்கும் நோக்குடன் அவர், அவர்களை மரணமுனைக்கு அனுப்புவது; இதனால், போராளிகள் துண்டுகொடுத்துவிட்டு இயக்கத்தைவிட்டு வெளியேறுவது; வெளியேற்றத்தின் பின் எந்தப் பாதுகாப்பும் அற்று மரணபயத்துடன் நாட்டைவிட்டு வெளியேற முனைவது... என உக்கிரமான சம்பவங்களுடன் வாசகனைப் பதட்டத்தினுள், கேவலுள், தள்ளிவிடுகிறது.

நாவலின் 200 பக்கங்கள் அளவிலானவை, இந்திய அமைதிப்படை காலப் படுகொலைகளும் வல்லுறவுகளும் குறித்தவை. 12 வயதுப் பெண்குழந்தை முதல் வயது வித்தியாசமற்று இளம்பெண்கள்-முதிய மனுஷிகள் என இந்திய அமைதிப்படையினர் புரிந்த வல்லுறவுகள் பூடகமாகச் சொல்லப்பட்டிருப்பினும் உக்கிரமான சம்பவ விவரிப்பு மொழியில் படைப்பாற்றலுடன் சொல்லப் பட்டிருக்கிறது. தனது கல்லூரி நண்பன் தனஞ்செயனின் வேண்டுகோளை ஏற்று, நான்கு இந்திய அமைதிப்படைச் சிப்பாய்களால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பவித்ரா எனும் இளம் பெண்ணின் அனுபவத்தை, இருளினூடே தகிக்கும் மொழியில் நமது செவியில் தணிந்த குரலில் சொல்கிறாள் வானதி. கைவிடப்பட்ட பாழடைந்த வீட்டில் 13 வயதுச் சிறுமியின் கதறல் அலைந்துகொண்டேயிருக்கிறது. வெடிகுண்டை மார்புகளில் மறைத்து வைத்திருக்கிறார்களா என உடலெங்கும் ஊர்கின்றன படையினரின் விரல்கள்.

நாவலின் கடைசி 125 பக்கங்கள் தசாப்தகால அனுபவங்கள் குறித்த ஆத்ம வேதனையாக, பரிசீலனையாக, வலிமீட்சியாக உக்கிரமான படைப்பு மொழியில் உருவாகியிருக்கிறது. தமிழ் தேசிய ராணுவத்தில் பலவந்தமாகச் சேர்க்கப்பட்ட தலித் சிறுவன் ஒருவனது குழந்தைமையும், ஆயுதம் அவனுக்குத் தரும் அதீத அதிகாரமும், அவன் இறுதியில் படுகொலைக்கு ஆளாவதுமான 53-ம் அத்தியாயம் தனியொரு நாவலுக்கான நெஞ்சை உலுக்கும் களம்.

தனபாக்கியம், தனது மகள் வானதியை இந்திய அமைதிப்படையின் கொடுங்கரங்களில் இருந்து காப்பாற்றிவிட்டாள். தனஞ்செயன், அமைதிப்படையால் வல்லுறவுக்கு உள்ளான பவித்ராவை மணந்துகொள்ளப்போகிறான். பரணி, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் துண்டுகொடுத்து
விட்டு இயக்கத்திலிருந்து வெளியேறி, இந்தியா சென்று மேற்கு நாடு ஒன்றுக்குப் போக முடிவுசெய்கிறான். வானதியைத் தன்னோடு வருமாறு அழைக்கிறான்; வானதி மறுத்துவிடுகிறாள். முழு விடுதலைப் போராட்டம் தொடர்பான பெண்ணிலை நோக்கு விமர்சனமாக வானதியின் இந்த நிலைப்பாட்டைக் கருதுகிறேன்.

இலங்கை ராணுவம், இந்திய அமைதிப்படையின் படுகொலைகள், வல்லுறவுகள் வடக்கு நிலமெங்கிலும் மண்டியிருந்த காலத்தில், தனது காதலனான பரணியைத் தேடி ஓடிச் சென்று பார்த்தவள் வானதி. தான் இயக்கத்துக்குப் போவதை முடிவுசெய்துவிட்டு, அவளிடம் அறிவிக்கிறான் பரணி. இயக்கத்தின் இரண்டாம்நிலைத் தலைவரான மாத்தய்யாவுடன்  முரண்பட்ட நிலையில், தனது வாழ்வுக்கு உத்திரவாதம் இல்லை எனும் நிலையில், அவனது எதிர்காலம் குறித்த நிச்சயமில்லாத நிலையில், இனிமேல் தன்னைப் பார்க்க வர வேண்டாம் என வானதியிடம் சொல்கிறான். இயக்கத்திலிருந்து வெளியேறும் முடிவையும் நாட்டைவிட்டு வெளியேறும் முடிவையும் அவனே எடுக்கிறான்.

அவள், அவனிடமிருந்து எதிர்பார்த்ததெல்லாம் ஒரேயொரு உறுதிமொழியைத்தான். அதைப் பற்றிக்கொண்டு எந்த ஆபத்தினுள்ளும் நடக்கத் தயாராக இருந்தாள்.

‘நான் உனக்காக வாழ ஆசைப்படுகிறேன். என்னோடு நீ வரமாட்டாயா?’ (பக்கம் 510).

இதுதான் அவள் அவனிடம் எதிர்பார்த்த உறுதிமொழி. அவனால் அந்த உறுதிமொழியை அவளுக்குத் தர முடியவில்லை. போர்ச்சூழலில் தனது சொந்த வாழ்வு குறித்த நிச்சயமின்மைகள் அப்படித்தான் அவனை வைத்திருந்தன. அப்படியான மரபான சூழலில்தான் அவன் இருந்தான். நாடுவிட்டுச் செல்லும் நிலையிலும் அவன் அப்படித்தான் இருக்கிறான்; அதற்கு எதிரான குரல்தான் வானதியின் மறுப்பு. இந்த எதிர்ப்பு உயிரழிவுக்கு எதிரான விடாப்பிடியான பெண்மையின் உயிர்தரும் தாய்மையின் குரலன்றி வேறென்ன? ‘பார்த்தீனியம்’ இப்படித்தான் போர் விளைவிக்கும் மானுடப் பிரிவுக்கு, ஆண்-பெண் இடையிலான நிரந்தரத் துயருக்கு எதிரான இலக்கியமாக ஆகியிருக்கிறது.

நாவலிலிருந்து...

‘நான் உனக்காக வாழ ஆசைப்படுகிறேன். என்னோடு நீ வர மாட்டாயா?’

தமிழ்நதியின் பார்த்தீனியம் - பேரழிவின் மானுட சாட்சியம் - யமுனா ராஜேந்திரன்எவ்வளவு எளிமையான வேண்டுகோள். அந்த வேண்டுகோள் அவளுடைய காதலை மீள அழைத்து வந்திருக்கும். காயப்பட்ட சுயத்தைக் குணப்படுத்தியிருக்கும். அகங்காரத்தைத் திருப்திப்படுத்தியிருக்கும். அத்தனை ஆண்டுக்காலப் பிரிவைக்கூட நிரவியிருக்கும்.

அவன் கேட்கவில்லை!

“அப்ப நீங்கள் வர மாட்டீங்கள்?”  அவன் இறுதியிலும் இறுதியாகக் கேட்டான்.

அவள் இல்லையெனத் தலையசைத்தாள். கண்ணீர் சிதறி மேசையில் விழுந்தது.

‘’நான் நாய்க்குட்டிபோல உங்களைத் தேடி வர வர என்னிட்டை இருந்து நீங்கள் விலகி விலகிப் போனீங்கள். இனி இஞ்சை வர வேண்டாம் எண்டு கொஞ்சங்கூட இரக்கமில்லாமச் சொன்னீங்கள். கடைசியா ஈச்சங்குளத்திலை வைச்சு நீங்கள் சொன்னதும் அதைத்தான். ஒரு கட்டத்திலை ஏதோ மனசுக்குள்ள விட்டுப்போச்சு. இப்ப இயக்கத்தை விட்டிட்டு வந்து வாவெண்டு கூப்பிடுறீங்கள். பிறகு இயக்கம் உங்களை வாவெண்டு கூப்பிடேக்கை என்னை விட்டிட்டுப் போவீங்கள். விலகிப்போகவும் நெருங்கி வரவும் உங்களாலை முடியிற மாதிரி என்னாலை முடியேல்லை.”
அவள் நிறுத்தினாள்.

துக்கமும் ஆசுவாசமும் நிராகரிப்பின் வலியும் ஒரே சமயத்தில் தனக்குள் இறங்குவதை அவன் யாரோபோல பார்த்தான். ‘இது நிகழவில்லை. கனவு.’

அவன் தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தான். நிமிர்ந்து பார்த்தால் அழுவது தெரிந்துபோகும். நெஞ்சு பிளந்துவிடுமாப்போல அடிக்கிறது. அன்றைக்கு, காலில் ஏறிய கட்டையை வெளியில் இழுத்தெடுத்தபோது சீறிக் கிளம்பிய சீழைப்போல, அத்தனை துயரமும் சீறிக்கொண்டு வெளியேறும்படி கதறியழுதால் இன்னும் நல்லது. உள்ளோலம் ஊன் செவிகளில் விழாதென்கிறார்கள். ஆனால், அவளுக்கு அவனைத் தெரியும். அவளால் அதைக் கேட்கவியலும்.

மழையில் மதமதவென்று செழித்துக்கிடந்த பின்பக்க வளவை யன்னலினூடே பார்த்தான். இப்படியொரு காலையில்தான் அவளை அவன் முதன்முதலில் கண்டான். சிறிய முகத்தின் பின் முயல்குட்டியின் செவிகளைப்போன்ற பெரிய றிப்பன்கள்... தனக்குள் எதையோ நினைத்துச் சிரித்த சிரிப்பு...

‘கடவுளாலும் கைவிடப்பட்டவன் நான்.’

“என்னை மறந்திடுவீங்களா?”

பிறகும் கேட்கிறாள். இதென்ன கேள்வி? அவன் தலையை நிமிர்த்தவில்லை. இத்தகைய கேள்விகள் எவ்வளவு அபத்தமானவை. உடலில் ஓர் அங்கத்தை இழப்பதைப் போன்றதல்லவா காதலை இழப்பதும்? இல்லை! அதனினும் மோசமான துயரம் அது!

‘ஊமை வெயில் எரிக்கும் இந்தக் காலை நேரத்தை, எதிரும் புதிருமாக நாம் அமர்ந்திருக்கும் இந்த அறையை, யன்னலூடே புகுந்து நம்மைத் தழுவும் மெல்லிய காற்றை, காற்றிலாடி பூக்களை உதிர்த்துக்கொண்டிருக்கிற முருங்கை மரத்தை, பொங்கும் கண்ணீரைக் கொட்டிவிட தனிமையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உன்னுடைய அகன்ற கண்களை, வட்ட முகத்தை நான் வாழ்நாளெல்லாம் நினைத்துக்கொண்டிருப்பேன் வானதி’

“காலமை வெளிக்கிடுறன்”

எழுந்து வாசலை நோக்கி நடந்தான்.

அவள் விறாந்தையில் நின்றபடி, அவன் போவதைப் பார்த்தாள்.