
எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

எலும்புக்கலை
ஃப்ராங்கைஸ் ராபர்ட் (Francois Robert), புகைப்படக்கலைஞர்; டிசைனர். 1990 -ம் ஆண்டில், மிச்சிகனில் பழையபொருட்களை ஏலம் எடுக்கும் ஒரு கடையில் வாங்கிய பழங்கால மேஜையைத் திறந்துபார்த்தால், உள்ளே ஒரு மனித மண்டை ஓடு இவருக்கு ’ஹாய்’ சொல்லி இருக்கிறது. முதலில் அதிர்ச்சியான ராபர்ட், பிறகு அதைவைத்து ஒரு ஆர்ட் டிஸ்ப்ளே செய்திருக்கிறார். அன்று தொடங்கிய மனித எலும்புகளைச் சேகரித்துக் கலையாக்கும் பயணம் இன்றும் தொடர்கிறது.
உலகின் வன்முறை மற்றும் போர்களுக்குக் காரணமானது எனக் கருதும் விஷயங்களை எடுத்துக்கொண்டு, அதை மனித எலும்புகளால் டிசைன் செய்து போட்டோகிராபாக மாற்றி, கண்காட்சியாக வைத்திருக்கிறார். அந்தக் கறுப்பு பின்னணி கொண்ட கொலாஜ் கலைவடிவங்கள் நம்மில் வன்முறையின், யுத்தத்தின் காரணத்தால் நிகழும் மனித இழப்புகளைக் கேள்விகளாக எழுப்புகின்றன.


ஒரு நேர்காணலில் `யுத்தங்களால் அதிகார வேட்கை அடைவது என்ன? கடைசியில் இந்த எலும்புகளைத்தான். போர் குற்றங்களுக்கு எதிரான `ஆயுதமாக’த்தான் எனது கலையை நினைக்கிறேன்' என்னும் ராபர்ட் `மனித எலும்புகள் என் மனதை எப்போதும் தொந்தரவு செய்பவை. நான் சேகரித்துவைத்திருக்கும் எலும்புகளை ஷூட் பண்ணும்போதுகூட அதை மனிதர்களாக மதித்து மரியாதையுடன்தான் கையாள்வேன்' என்று முடிக்கிறார்.
அவருடைய படைப்புகளைப் பார்த்தால், உலக வன்முறையின் எக்ஸ்ரே படம்போல தோன்றுகிறது எனக்கு.

தலையணை
``நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். இந்த மேஜிக் தலையணையை தலைக்குவைத்துப் படுத்துக்கொள்ள வேண்டும்'' என்றான் அவன்.
பார்ப்பதற்கு சாதாரணத் தலையணை போலத்தான் தெரிந்தது அது. சந்தேகமாகப் பார்த்தார் சந்திரன்.
``என்ன சந்தேகம்... விளக்கமாகச் சொல்கிறேன். உங்கள் கனவில் வருகிற எதுவும் காலையில் இந்தத் தலையணைக்குள் இருக்கும். நூறு சதவிகிதம் உண்மை. ஆனால், இந்தத் தலையணை ஒரே ஒரு நாள்தான் வேலை செய்யும்'' என்றான் அவன்.
சந்திரனுக்கு அடிக்கடி கனவில் பணமழை கொட்டும்; தங்கக் கட்டிகள் மின்னும். இந்தத் தலையணை கிடைத்தால்..? நாக்கைச் சப்புகொட்டியபடி சந்திரன் கேட்டான்.
“வேலை செய்யாவிட்டால்?”
“நூறு சதவிகிதம் கியாரன்டி. பணம் ரிட்டர்ன். ஆனால், அதுக்கு அவசியம் இருக்காது” என்றான் அவன்.
சந்திரன் தலையணையுடன் வீட்டுக்கு வந்தான். மனைவியிடம் ``இந்த விஷயம் ரகசியமாக இருக்கட்டும்'' என்றபடி படுக்கைக்குப் போனான். படுத்தபோது தலையணை மெத்தென்று சுகமாக இருந்தது. சீக்கிரத்தில் தூக்கம் வந்தது.

சந்திரன் விழித்தபோது, மனைவி எதிர்பார்ப்புடன் நின்றிருந்தாள்.
நிதானமாக எழுந்த சந்திரன், தொங்கிய முகத்துடன் கட்டிலில் உட்கார்ந்தான்.
மனைவி ஆசையாக தலையணையைப் பார்த்தாள்.
``சீக்கிரம் கிழித்துப் பாருங்கள்'' என்றாள்.
``அதற்குத் தேவை இருக்காது'' என்றான்.
``ஏன்?'' என்று அதிர்ச்சியானாள் மனைவி.
``கனவில் இலவம்பஞ்சாகக் கொட்டிக்கொண்டிருந்தது'' என்றான் சந்திரன்.

கரண்டி
நண்பன் ஒருவன் இட்லியைக்கூட கஷ்டப்பட்டு ஸ்பூனால் வெட்டி, கேக்போல சாப்பிடுவதைப் பார்த்து என் தமிழ் மனம் கொதித்தது. ஏன் என்று வினவினால், ``சின்ன வயதில் இருந்தே ஸ்கூலில் ஸ்பூனால் சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தி வளர்த்ததால், அப்படியே பழகிப்போய்விட்டது'' என்றான். ஒரு பச்சைத்தமிழனின் இட்லி சாப்பிடும் பண்பாட்டையே இப்படிப் பாழாக்கி விட்டார்களே என மேற்கத்திய மோகப் பள்ளியமைப்பின் மீது கோபம் வந்தது. எனது தட்டில் இருந்த இட்லியைப் பிசைந்து சாப்பிட ஆரம்பித்ததும் கோபம் மறைந்து போனது.
இந்த ஸ்பூன் வந்த வரலாற்றை அறிந்துகொள்ளலாம் என்கிற ஆர்வம் பிறந்ததும், வழக்கம்போல கூகுளின் தலையைத் தட்டி, விக்கிபீடியாவின் வாலை முறுக்கி, இணையத்தின் வரலாற்று வெளிகளில் திரிந்து நான் சேகரித்தவை கீழே...
ஸ்பூனைக் கண்டுபிடித்தது இன்னார்தான் என்று யாரும் உரிமை கொண்டாட முடியாது. `முதல் ஸ்பூன், மனிதர்களின் உள்ளங்கைதான்' என்கிறது ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை. `உள்ளங்கையைக் குவித்து, தண்ணீர் குடிக்கும் மனிதப் பழக்கம்தான் ஸ்பூன் கண்டுபிடிப்பதற்கான அடிப்படை' என லாஜிக் பேசுகிறார்கள். வழக்கம்போல எகிப்தில் வேலைப்பாடுகள் கொண்ட கரண்டிகள் கிடைத்ததாக ஒரு குறிப்பு சொல்கிறது. உணவுக்கு என்பதைவிட மதச் சடங்குகளுக்கு பயன்படுத்திய ஸ்பூனாக அது இருக்கலாம் என்பது நம்பிக்கை. நம்மூரில் `ஸ்வாஹா...' என்று யாகம் வளர்க்கும்போது கரண்டியால் நெய்யைக் கொட்டுவது ஞாபகத்துக்கு வருகிறது.
நியூஜெர்சியில் உலகின் பெரிய ஸ்பூன் மியூஸியம் இருக்கிறதாம்.5,000 -க்கும் மேற்பட்ட கரண்டிகள் அங்கே பார்க்கக் கிடைக்கின்றனவாம். நம்மூரில் முன்பு கொட்டாங்குச்சியால் ஒரு கரண்டி செய்வார்கள். இப்போது காணக்கிடைப்பது அரிதாகிவிட்டது. நியூஜெர்சி மியூஸியத்தில் இருக்குமா தெரியவில்லை.

திண்ணை
நமது பண்பாட்டில் திண்ணை என்பது, கட்டடத்தின் உறுப்புகளில் ஒன்று மட்டுமல்ல; அது சமூக உறவுக்கான உயிருள்ள ஒரு வெளி. அட, திண்ணையைப் பற்றி எழுத ஆரம்பித்தாலே, தத்துவார்த்தமாகத்தான் பேசத் தோன்றுகிறது. காரணம் இருக்கிறது. நமது பாட்டனும் பூட்டனும் தத்துவம், அறிவியல், அரசியல் பேசிய இடம் அது. பிறகு `வெறும் திண்ணைப்பேச்சு' என்ற பதம் எப்படி வந்தது? பிற்காலத்தில் பாட்டன்கள் பொழுதுபோக்கு அரசியல் மட்டுமே பேசி, பொழுதைக் கழிக்கிற மாதிரி நிலைமை வந்தபோது, ஏதேனும் பாட்டிகள் கடுப்பில் கதவிடுக்கு வழியாகப் பார்த்துச் சொன்னதாக இருக்கலாம்.
திண்ணையில் பள்ளிக்கூடம் நடத்தி இருக்கிறார்கள்; தொழில் செய்திருக்கிறார்கள்; ஊர் பிரச்னைகளைப் பேசி முடிவெடுத்திருக்கிறார்கள். தமிழின் முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் எழுத்துகளில் திண்ணைகளின் சித்திரங்கள் நிறைய உண்டு.
எனது சிறுவயதில்கூட வெயிலில் அயர்ந்து திண்ணைகளில் தஞ்சம் தேடும் பாதசாரிகளைப் பார்த்திருக்கிறேன். முகம் தெரியாத அந்த அந்நியர்களுக்கு உப்பிட்ட கஞ்சித் தண்ணீர் போன்றவற்றைக் கொடுத்து உபசரிக்கும் வீட்டார்களைப் பார்த்திருக்கிறேன். அந்நியர்களைப் பார்த்தாலே அந்நியமாகும் நவீன மனநிலை இறக்குமதி ஆகாத காலத்தில், ஊருக்குப் புதியவர்களுக்கு திண்ணை ஒரு புகலிடம்.
பிற மனிதர்களைப் பற்றி அலட்டிக்கொள்ளாத இந்தக் காலத்தில் ஊர்களில்கூட வீடுகளில் திண்ணைகள் இல்லை. மதில் எழுப்பி, இரும்பில் கேட் போட்டு `நாய்கள் ஜாக்கிரதை' என்று போர்டு தொங்கவிடுகிறார்கள். திண்ணை நினைவில் மட்டுமே சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கிறது.

புத்தக அட்டைகள்
நவம்பரின் மழைவெள்ளம், ஜனவரியில் நடக்கவேண்டிய சென்னை புத்தகக் கண்காட்சியை ஜூன் வரைக்கும் அடித்துக்கொண்டு வந்துவிட்டது. இதனால் பெரும்பாலான பதிப்பாளர்கள் கடனால் பாதிப்பாளர்கள் ஆகி, இப்போது வரும் புத்தகக் கண்காட்சியை நினைத்து, கொஞ்சம் ஆசுவாசம்கொள்கிறார்கள்.
10 வருடங்களாக தமிழின் பெரும்பாலான எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு அட்டை வடிவமைத்திருக்கிறேன். எண்ணிக்கை சில நூறு புத்தகங்களைத் தாண்டலாம் என்கிற அனுபவத்தில், தமிழின் புத்தக அட்டைகளின் அழகியலைக் கொஞ்சம் பேசலாம்.
தமிழில் புத்தக அட்டைகள் கலைத்தன்மையோடு வர ஆரம்பித்ததில், சிறுபத்திரிகை இலக்கியவாதிகளின் பங்கு பெரிது. அந்தக் காலத்தில் ஓவியர்கள் ஆதிமூலம், ஆர்.பி.பாஸ்கரன், தட்சிணாமூர்த்தி போன்றவர்களின் ஓவியங்களுடன் வந்த புத்தகங்களை இன்றும் பழுப்பு நிறத்தில் பார்த்தாலும் அதன் தனித்தன்மை தெரிகிறது. டிராட்ஸ்கி மருது ஓவியராக மட்டுமல்லாமல், வடிவமைக்கவும் செய்த புத்தகங்களின் அட்டைகள் அழகியல் உச்சம். இன்றும் ஓவியர் ரோஹிணி, மணிவண்ணன், றஷ்மி போன்றவர்கள் வடிவமைக்கும் அட்டைகள் தனியான அழகுடன் இருக்கின்றன.
நான் மேலே சொன்னதும் சொல்லாததுமான பலர் புத்தக அட்டைகளை ஒரு தனி கலைவடிவம்போல ஆக்கிவிட்டவர்கள். இன்று பதிப்பு தொழில்நுட்பங்கள் பரவலாகிவிட்டன. புத்தகங்களின் தரம் மேலானதாகிவிட்டது. ஆனால், புத்தகக் கண்காட்சிகளில் குவிந்திருக்கும் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் பெரும்பாலும் டவுண்லோடு செய்யப்பட்ட இணையப் புகைப்படங்களின் வண்ணங்களால் நிறைந்துகிடக்கின்றன. புத்தக அட்டைக்கென்று பிரத்யேகமாக புகைப்படங்கள் எடுத்துப் பயன்படுத்துவது என்பதும் குறைவாக இருக்கிறது. இதெல்லாம் சாத்தியப்படுவது பதிப்பாளரின் மனநிலையையும் பணநிலையையும் சார்ந்தது. இந்த நிலை, வாசகர்களின் வாங்கும் திறனைச் சார்ந்தது.
ஆக, வழக்கம்போல லிச்சி ஜூஸும் பம்பாய் அப்பளமும் மட்டுமல்லாது, நிறையப் புத்தகங்களில் வாசகர்களின் மனமும் பதிப்பாளரின் கடனும் கரைந்தால் நல்லது.