
படம்: ஸ்டில் ராபர்ட்
`பொல்லாதவன்' ரிலீஸுக்கு முன்னரே படத்தின் மீது வியாபார ரீதியிலான ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு முக்கியக் காரணம், எனக்குப் பிடிக்காத `பொல்லாதவன்' டைட்டில்.
அடுத்த காரணம், ரிலீஸுக்கு முன்னர் வந்த விளம்பரங்கள். `பொல்லாதவன்' இசை வெளியீட்டின்போதுதான், 20 செகண்ட் டீஸர் தமிழ் சினிமாவுக்கு முதன் முதலாக அறிமுகமானது. கே டி.வி., சன் மியூஸிக் சேனல்களில் தினமும் 40 முறை விளம்பரப்படுத்தப்பட்டது.
ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவின் அந்த ஐடியா, படத்துக்கு நல்ல ரீச் கொடுத்தது. `பொல்லாதவ'னையும் என்னை ஓர் இயக்குநராகவும் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் சன் டி.வி-க்கும் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவுக்கும் மிகப் பெரிய பங்களிப்பு உண்டு. `ஆடுகளம்' படத்தை, ஒரு வணிகப்படம் அளவுக்குப் பெரிய அளவில் மார்க்கெட் செய்தது சன் டி.வி-யின் பலம். `விசாரணை'யின் சர்வதேச அங்கீகாரத்தை மக்களிடம் முதலில் எடுத்துச் சென்றதும் சன் டி.விதான்.
ஸ்டில் ராபர்ட், பாலு மகேந்திரா சாரிடம் வேலைசெய்தவர். அவரே ராமின் முதல் படத்திலும், `பொல்லாதவ'னிலும் ஸ்டில் போட்டோகிராஃபராக வேலைசெய்தார். `பொல்லாதவன்' ரிலீஸுக்கு முதல் நாள் இரவு நான் லேபில் இருந்தேன். அப்போது நண்பர் ஒருவர் வந்து, ஏவி.எம் ராஜேஸ்வரி தியேட்டர் வாசலில் 30X40 அடி அளவில் ராபர்ட் ஒரு பேனர் வைத்திருப்பதாகச் சொன்னார். நான் பதற்றத்துடன் அங்கே சென்றேன். `முதல் அடியே அழுத்தமாக எடுத்து வைக்கும் நண்பர் வெற்றி மாறனுக்கு வாழ்த்துகள்' என பேனரில் எழுதி யிருந்தது.

உடனே ராபர்ட்டிடம் `படம் எடுக்கிறதுதான் நம்ம வேலை. இது கிடையாது. உடனே இதை எடுங்க’ என்றேன். ராபர்ட், ஏதேதோ காரணங்கள் சொல்லி, எடுக்க மறுத்தார். நான் பிடிவாதமாக அதை அகற்றச் சொன்னேன். அவருக்கு அதில் வருத்தம். இருந்தாலும் ‘இப்பதான் சொல்ல முடியும். அடுத்தடுத்த படத்துக்கு எல்லாரும் வைப்பாங்க. அப்போ என்ன செய்றீங்கனு பார்க்கலாம்’ என்றபடி பேனரை எடுத்து விட்டார். எங்கள் டீமில் எல்லோருக்கும் `பொல்லாதவன்' ஒரு வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், அதை முடிவு செய்யவேண்டியது மக்கள்தான் என்பதால், அவர்களின் முடிவுக்காகக் காத்திருந்தோம்.
`பொல்லாதவன்' ரிலீஸ் ஆனது. அன்று உதவி இயக்குநர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊருக்குச் சென்றிருந்தனர். மணி, மனைவியுடன் திருப்பதிக்குச் சென்றிருந்தான். கார்த்தி மட்டும் என்னுடன் சென்னையில் இருந்தான். நான், வேல்ராஜ், கார்த்தி, பவன், நாராயணன், பிரித்வி ஆகியோர் சென்னை காசி தியேட்டரில் படம் பார்க்கச் சென்றோம். நான் பால்கனியில் படம் பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கே நல்ல ரெஸ்பான்ஸ். ஆனால் கீழே படம் பார்த்த `பொல்லாதவன்' டீம் டென்ஷனில் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தார்கள். தனுஷ் ரசிகர் ஒருவர், `என்ன தலைவன் சண்டையே போட மாட்றான்... என்னய்யா படம் எடுத்திருக்கான்!' எனக் கத்தினார். அதைக் கேட்டுவிட்டு டென்ஷன் ஆகியிருக்கிறார்கள் உடன் வந்தவர்கள். `பொல்லாதவன்' ரிலீஸ் ஆன அன்று சினிமாவில் நான் சில விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.
முதலில் `பொல்லாதவ'னுக்கான ஓப்பனிங் தந்த அந்தத் தலைப்பு மற்றும் விளம்பர உத்திகள். அடுத்து, வி.டி.விஜயன் சார், மக்களின் பல்ஸை எந்த அளவுக்குப் புரிந்துவைத்திருக்கிறார் என்பதைப் பார்த்தேன். `பொல்லாதவ'னில் இரண்டு காட்சிகள். செல்வம் இறந்ததும் அவன் மனைவி அழும் காட்சி மற்றும் தனுஷின் அப்பா அடிபட்ட காலுடன் கீழே விழுந்ததும் பேசும் காட்சி. இரண்டு காட்சிகளின் நீளத்தையும் விஜயன் சார் குறைக்கச் சொன்னார்.
``இல்லை சார். எனக்கு அந்த லெங்த் வேணும்’' எனச் சொன்னதும் ``தியேட்டர்ல ஆடியன்ஸ் ரெஸ்ட்லஸ் ஆகிடுவாங்க'' என்றார். தியேட்டரில் படம் பார்த்தபோது விஜயன் சார் சொன்ன அந்த நொடிக்குப் பிறகு நானே ரெஸ்ட்லஸ் ஆனேன். `எக்ஸ்ட்ராவா இருக்கே... யாராவது கத்திடுவாங்களோ' என பயந்தேன். அப்போது சரியாக ஒருவர் `**** என்னடா டேய்...' எனக் கத்த, எனக்கு திக்கென்றது. `அந்த இடத்தில் ஆடியன்ஸ் கத்திவிட்டால் தப்பாகிவிடுமே' என ஒரு நொடி பயந்தேன். அடுத்த நொடி முன்னால் இருந்து ஒரு குரல் `எவன்டா அவன். *** அவனை வெளியே அனுப்புங்கடா' என்றது. அந்தக் குரலைக் கேட்டதும்தான் எனக்கு நிம்மதியாக இருந்தது.

மதுரையில் இருந்து விக்ரம் சுகுமாரன் அழைத்தார். ``இன்டர்வல் வரைக்கும் முடிஞ்சிருக்கு. ஆடியன்ஸ் நல்லா என்ஜாய் பண்றாங்க’' என்றார். கரூரில் இருந்து செந்தில் அழைத்து, ``காமெடி காட்சிகளில் நல்லா சிரிக்கிறாங்க சார். பாசிட்டிவ்தான்'' என்றார். ஆல்பர்ட் தியேட்டரில் இருந்து நாராயணன் அழைத்தார். ``எங்கேடா இருக்க... உடனே இங்கே கிளம்பி வா'' என உற்சாகமாகச் சொன்னார். `எங்கேயும் எப்போதும்...’ பாடலுக்கு திரைக்கு முன்பு ரசிகர்கள் டான்ஸ் ஆடிக்கொண்டிருப்ப தாகவும் சொன்னார். ரசிகர் ஷோ என்பதால் அப்படித்தான் பார்ப்பார்கள் எனத் தோன்றியது. எனக்கு க்ளைமாக்ஸ் பற்றித்தான் யோசனையாக இருந்தது.
அதுவரை தனுஷ் பற்றிய கிசுகிசுவில்கூட `ஒல்லி நடிகர்' என்றே குறிப்பிடுவார்கள். தனுஷ் சட்டையைக் கழற்றி, சிக்ஸ் பேக்குடன் சண்டை போடும் முடிவை எடுக்கவே எங்களுக்கு வெகுநேரம் ஆனது. `பொல்லாதவன்' மூலம் தனக்கு ஏதாவது ஒரு சேஞ்ச் ஓவர் இருக்கும் என நம்பி, தனுஷ் 10 மாதங்கள் உழைத்து சிக்ஸ் பேக் வைத்திருந்தார். ஆனால், ராம்போ மாஸ்டருக்கு அது வொர்க் அவுட் ஆகுமா என்பதில் சந்தேகம். ``சட்டையைக் கழற்றுவது ரிஸ்க், எமோஷனலாகப் போய்விடலாமே'' என்றார்.
ஒருவித பயத்துடன்தான் அந்தக் காட்சியை வைத்தோம். அதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதைப் பார்த்த பிறகுதான் நான் ரிலாக்ஸ் ஆனேன். ஆர்த்தி, அம்மா, அக்கா மற்றும் பலரும் ஏவி.எம் ராஜேஸ்வரி தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். படம் முடிந்ததும் ஜெகதீஷ், ராம் ஆகியோர் வெளியே வந்தார்கள். ``படம் கன்ஃபர்ம் ஹிட்” என்றார்கள். அதற்குள் ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டு “சார், படம் செம... சூப்பர் சார்!” என்றபடி சென்றார்கள்.
உடன் இருந்த ஸ்டில் ராபர்ட் “இதுக்குத்தான் பேனர் வைக்கலாம்னு சொன்னேன். நீங்கதான் எடுக்கச் சொல்லிட்டீங்க” என்றார். படம் பற்றிய பாசிட்டிவ் தகவல்கள் தொடர்ந்து வர ஆரம்பித்தன. நடிகர் விக்ரம் படம் பார்க்க விரும்பியதால், தயாரிப்பாளர் ஒரு ஷோ ஏற்பாடு செய்தார். படம் அவருக்குப் பிடித்திருந்தது. ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் அளவுக்கு படத்தை நுணுக்கமாக அவர் கவனித்திருந்தார். ``கதை ஏதாவது இருந்தா சொல்லுங்க’' என்றார். பெரிய கேன்வாஸில் அப்போது ஒரு கதை இருந்தது. அதைச் சொன்னேன். ஆனால், அந்தக் கதை அப்போது இருந்த விக்ரமின் இமேஜுக்குப் பொருந்துமா என்ற சந்தேகம் இருந்தது. அதனால், ``அந்தக் கதையை ரீவொர்க் பண்ணிட்டு சொல்றேன்'' என்றேன்.
“நோ பிராப்ளம். முடிச்சுட்டுச் சொல்லுங்க. சேர்ந்து பண்ணுவோம்” என்றார் விக்ரம். திரும்பும் வழியில் கார்த்தி `` `சினிமா ஒரே நாள்ல எல்லாத்தையும் மாத்திடும்'னு சொல்வாங்க. என் அளவுக்கு அதை யாரும் ஃபீல் பண்ணியிருக்க மாட்டாங்க சார்” என்றான். ரிலீஸுக்கு இரண்டு நாள் முன்னர், நாங்கள் வழக்கமாக டீ குடிக்கும் கடையின் ஓனர், கார்த்தியிடம் `படம் எல்லாம் ரிலீஸ் பண்றீங்க. என் பாக்கி 1,400 ரூபாய் அப்படியே இருக்கே’ எனக் கேட்டிருக்கிறார். இரண்டு நாட்கள் கழித்து விக்ரமுடன் 18 கோடி ரூபாய் செலவில் ஒரு படம் எடுப்பது பற்றி பேசிக்கொண்டிருந்தோம். “இதை நான் ஃபீல் பண்ற அளவுக்கு உங்களாலகூட ஃபீல் பண்ண முடியாது சார்” என்றான் கார்த்தி. உண்மைதான்.

2007-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான `அழகிய தமிழ்மகன்', `வேல்' படங்களின் ஓப்பனிங் பெரியதாக இருந்தது. அந்த லிஸ்ட்டில் `பொல்லாதவன்'தான் கடைசி. ரிலீஸ் அன்று இரவுக்காட்சியில் இருந்தே மவுத் டாக் பரவி கூட்டம் வர ஆரம்பித்தது. `சனிக்கிழமை வந்த மூன்று படங்களில் `பொல்லாதவன்'தான் பெஸ்ட்' என்றார்கள். சனிக்கிழமை இரவு `படம் ஹிட்' என டிக்ளேர் செய்தார்கள். அப்போது தனுஷ் `யாரடி நீ மோகினி' படத்துக்காக வெளியூர் படப்பிடிப்பில் இருந்தார். சனிக்கிழமை இரவு ஸ்பாட்டிலே “எனக்கு இன்னைக்குத்தான் தீபாவளி” என்று பட்டாசு வெடித்தார் தனுஷ்.
ஓர் உதவி இயக்குநரின் மீது நம்பிக்கை வைத்து, நான்கு வருடங்கள் அந்தக் கதையை பலரிடம் கொண்டுசென்று, உடன் இருந்த பலரும் `பண்ண வேண்டாம்' என்ற பிறகும் `பொல்லாதவ'னில் அவர் நடித்திருந்தார். அந்தப் படம் வெற்றி பெற்றதில் தனுஷுக்கு அதிக சந்தோஷம். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பி, ஆல்பர்ட் தியேட்டரில் குடும்பத்துடன் படம் பார்த்தார். படம் முடிந்ததும் தனுஷின் அக்கா “சூப்பர் சார். என் தம்பிய வேற மாதிரி காமிச் சுட்டீங்க” என்றார். தனுஷ் எதுவும் பேசாமல் பின்னால் சென்றுவிட்டார். எமோஷனலாக இருந்தார். பின், என்னை கட்டி அணைத்தவர் நீண்ட நேரம் எதுவும் பேசாமல் இருந்தார். அவரின் கண்கள் கலங்கியிருந்தன. ``சூப்பர் சார்... அந்த ஹாஸ்பிட்டல் சீன் இவ்ளோ நல்லா வொர்க் அவுட் ஆகும்னு நினைக்கலை. தெரிஞ்சிருந்தா, இன்னும் நல்லா பண்ணியிருப்பேன்” என்றார். “இல்ல தனுஷ். இப்ப பண்ணதே சரியா இருக்கு. அதனாலதான் வொர்க் அவுட் ஆகியிருக்கு” என்றேன்.
தனுஷ் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்பதைத் தாண்டி, திறமைகளைக் கண்டுபிடிப்பதில் தேர்ந்தவர். அவருடன் முதல் படம் பண்ண எல்லா இயக்குநர்களும் வெற்றியைக் கொடுத்திருக் கிறார்கள். அனிருத்துக்கு 14 வயதிருக்கும்போதே என்னிடம் `அனிருத், ஒரு மியூஸிக்கல் ஜீனியஸ். பெரிய ஆளா வருவான் சார்' எனச் சொல்லியிருக் கிறார். அதேபோல, தனுஷ் `3' படம் நடித்துக் கொண்டிருக்கும்போது ``உங்க அசிஸ்டென்ட் யார்கிட்டயாவது நல்ல ஃபன் ஸ்டோரி இருந்தா சொல்லுங்க” என்றார். ``உங்களுக்கு எதுக்கு இப்ப காமெடி?” என்றதும், “எனக்கு இல்லை சார்.

சிவகார்த்திகேயனுக்கு. ஒரு பெரிய ஸ்டார் ஆகிறதுக்கு தேவையான எல்லாமே அவர்கிட்ட இருக்கு” என்றார். என் மீது அவர் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றியதில் எனக்கும் சந்தோஷம். அடுத்த சில நாட்களில் ரஜினி சார் படம் பார்த்தார். அவருக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது. இயக்குநர் ஷங்கரும் சிரஞ்சீவியும் படம் பார்க்க, அவரே ஏற்பாடு செய்தார். அவர்களுடன் அமர்ந்து பாலு மகேந்திரா சார் படம் பார்க்க வேண்டும் என விரும்பி, அந்த ஷோவுக்கு சாரை அழைத் திருந்தேன். ஷோ முடிந்ததும் எல்லோரும் நன்றாக இருப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
சாருக்காகக் காத்திருந்தேன். “உனக்குள்ள இவ்ளோ வயலன்ஸ் இருக்கும்னு நினைக்கலைடா. வெரி வயலன்ட் மூவி” எனச் சொல்லிவிட்டுச் சென்றார். அவருக்கு படம் பிடிக்கவில்லை எனப் புரிந்தது. நாராயணன்தான் சாரை அழைத்து வந்திருந்தார். திரும்பிச் செல்லும் வழியில் `இந்தப் படத்தை வேற எங்கே பார்த்திருந்தாலும் இவ்ளோ சந்தோஷப் பட்டிருக்க மாட்டேன். எல்லோரும் கமர்ஷியல் படம் எடுக்குறாங்க. என் பையன் ஒரு கமர்ஷியல் படம் எடுத்திருக்கான். அவங்க எல்லோரையும் இதுக்கு பதில் சொல்ல சொல்லுடா' என்று சொன்னாராம். அதை சார் என்னிடம் சொல்லவே இல்லை. சாருக்கு கமர்ஷியல் படங்கள் பிடிக்காது.
ஆனால், அவரது உதவியாளர்கள் வணிகரீதியிலான வெற்றிப் படங்கள் கொடுப்பதன் மூலம் நிலைத்து நின்று, வாய்ப்பு கிடைக்கும்போது நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என விரும்பினார். `பொல்லாதவன்' வெற்றி மூலம் ஒரு நல்ல படம் எடுப்பதற்கான வாய்ப்பு எனக்கு வரும் என அவர் நம்பினார். `பொல்லாதவன்' பண்ணும்போதே இதே டீம் இணைந்து இன்னொரு படம் எடுக்க வேண்டும் என முடிவுசெய்திருந்தோம். படத்தின் வெற்றிக்குப் பிறகு அதைப் பண்ணவேண்டும் என்பதில் நான் தீவிரமாக இருந்தேன். ஆனால், அதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்தன.
- பயணிப்பேன்...
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!
Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan