மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 44

கலைடாஸ்கோப் - 44
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - 44

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 44

``சொல்லுங்க டாக்டர்” என்ற குமார், எதிர் அறையில் இருந்து வெளியே வந்த தன் மகனையும் டாக்டரையும் பதற்றமாகப் பார்த்தார்.

ஃபேமிலி டாக்டர் சுந்தரம், ``பொறுமையாக இருங்க” என்றபடி ஸீட்டில் அமர்ந்தார். பையன், டாக்டரைப் பார்த்துப் புன்னகைத்தான்.

டாக்டர் சுந்தரம், தொண்டையைக் கனைத்தபடி குரலை ட்யூன் செய்துகொண்டு பேச ஆரம்பித்தார்.

“ஸீ மிஸ்டர் குமார்... பையனுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஹி இஸ் ஆல்ரைட். நத்திங் டு வொரி.”

“ஆனா டாக்டர், அவன் எதைப் பார்த்தாலும் ஜெராக்ஸ் பண்ணின மாதிரி அப்படியே காப்பி எடுத்துடுறான்.”

“அவன்கிட்ட நல்லா பேசிட்டேன். `நல்லா படிக்கிற பையன்'னு நீங்கதான் சொன்னீங்க. அந்த மாதிரி எந்தப் பிரச்னையும் இல்லை. நீங்கதான் தேவை இல்லாமக் குழப்புறீங்க” என்றார் டாக்டர்.
``அய்யோ டாக்டர், பேங்க் பாஸ்புக்ல இருந்து கரன்ட் பில் வரைக்கும் எல்லாத்தையும் அப்படியே நகல் எடுத்துடுறான்.”

“என்னோட நாப்பது வருஷ எக்ஸ்பீரியன்ஸ்ல இந்த மாதிரி எந்த கேஸும் பார்த்தது இல்லை. சிக்மண்ட் ஃப்ராய்டின் சைக்கோ அனாலிசஸ்லகூட இப்படி எதுவும் இல்லை” என்றார் பிடிவாதமாக.
“ஹி இஸ் பெர்ஃபெக்ட்லி நார்மல். ரிப்போர்ட்ல டீட்டெய்லா எழுதியிருக்கேன். வீட்டுக்குப் போய் பொறுமையாப் படிங்க. ஒரு சின்ன வேண்டுகோள், முடிஞ்சா ஸ்கூலை மாத்துங்க” என்று ஃபைலை கையில் திணித்தார் டாக்டர்.

கலைடாஸ்கோப் - 44

வீட்டுக்கு வந்த குமார், சாவகாசமாக தேநீர் அருந்திவிட்டு ஃபைலைப் பிரித்தார். பையன் புன்னகைத்தான்.

ரிப்போர்ட்டின் இன்னொரு காப்பியும் இருந்தது!

கலைடாஸ்கோப் - 44

எனது பால்ய நண்பன் பிஜு, பள்ளிக் காலத்திலேயே எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களைப் பிரித்துமேய்ந்துவிடுவான். சர்க்யூட் போர்டைக் கழற்றி எல்.இ.டி., ரெஸிஸ்டர்ஸ், கெப்பாசிடர் என அவன் தீவிரமாக ஆராய்ந்துகொண்டிருக்கும் போது, எனக்கு அது சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைகளில் வரும் சின்ன எலெக்ட்ரானிக் சிட்டிபோல தோன்றும். அவனவனுக்கு வாய்த்த பார்வை.
லென்னி மற்றும் மெரில் ஆகியோர் பிரிட்டனைச் சேர்ந்த தம்பதி. எலெக்ட்ரானிக் நுண்பொருட்களான எல்.இ.டி., ரெஸிஸ்டர்ஸ், கெப்பாசிடர், மின்கம்பிகளைக்கொண்டு விதவிதமான உருவங்களைச் செய்கிறார்கள். குட்டிக் குட்டிக் கற்பனை ரோபோக்கள் போல இருக்கும் அவற்றுக்கு, `Sparebots' எனச் செல்லமாகப் பெயர் சூட்டினார்கள். சில சென்டிமீட்டர்களே உயரம் இருக்கும் அவற்றைச் செய்வது நுட்பமான சவால்.

கலைடாஸ்கோப் - 44

ஸ்கேட்டிங் செய்வது, வொயர் பாம்புக்கு மகுடி ஊதுவது, ஜிம்மில் தண்டால் எடுப்பது... என விதவிதமாக இந்த `ஸ்பேர்போட்’ஸ்களை கதாபாத்திரங்கள்போல நகைச்சுவையாகச் சித்தரித்திருக்கும் விதம், பார்க்கும் நமக்குள் ஸ்மைலி பல்பை எரியவிடுகிறது!

கலைடாஸ்கோப் - 44

கோலிசோடாவைப் பார்க்கும்போது சிறுவயதில் ஒரு மேஜிக்போல தோன்றும். கடையில் அண்ணாச்சிகள் பெருவிரலால் பந்தாவாக சோடாவை உடைத்துத் தரும்போது கோலி, பாட்டிலின் வாயை அடைக்காமல் குடிப்பது சிறுவயது விளையாட்டு. லேசாகத் திசைமாறினால் கோலி பாட்டிலின் பிரத்யேக இடுக்கில் இருந்து, உருண்டுவந்து பாட்டிலின் வாயை அடைத்துக்கொள்ளும். இந்தியச் சந்தையில் கோலாக்கள் நுழையாத அப்போது எல்லாம், நம் மக்களுக்கு கோலிசோடாதான் உள்ளம் கேட்குமே மோராக இருந்தது.

கோலிசோடா ஐடியாவும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதியானதுதான். `Codd-neck bottle' என ஆங்கிலத்தில் சொல்வார்கள். Hiram Codd என்கிற பிரிட்டிஷ்காரர் 1872 -ம் ஆண்டிலேயே கோலிசோடா பாட்டிலை வடிவமைத்திருக்கிறார். இதன் வடிவம் 20 -ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்து ஜப்பான் வரையில் பிரபலமாக இருந்தது. பிற்காலத்தில் தகர மூடிகள்கொண்ட பாட்டில்கள் சந்தையில் வரவே மெள்ள மெள்ள இந்த வடிவம் காணாமல்போய்விட்டது.

ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் 90 -களின் கடைசிவரை உபயோகத்தில் இருந்தது. அரசியல்வாதிகளின் பொறிபறக்கும் பேச்சுக்குப் பிறகு, சோடா குடிப்பது... ஆயுதமாகப் பயன்படுத்துவது என நமது அரசியல் பண்பாட்டில் பிரிக்க முடியாத அம்சமாக இருந்த கோலிசோடா, இன்று நல்ல அரசியல்வாதிபோல அரிய பொருளாகிவிட்டது.

கலைடாஸ்கோப் - 44

`ஊசியில் ஒட்டகத்தைக்கூட நுழைத்துவிடலாம்போல, இந்த நூலை கோப்பது ரொம்பக் கஷ்டம்' என்ற மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, ஃபீல் பண்ணி ஊசியையும் நூலையும் சிறுசுகளிடம் நீட்டுவார்கள் பெரியவர்கள். அதை ஒரு சாகச உணர்வுடன் சிறுசுகளும் நிறைவேற்றுவார்கள். அப்போது எல்லாம் தீபாவளிக்கும் பொங்கலுக்கும்தான் துணி எடுப்பார்கள். இன்று, கிழிந்த துணியை யாரும் தைப்பது இல்லை. எடைக்குப் போட்டு பாத்திரம் வாங்கிக்கொள்கிறார்கள். ஊசிகளும் அதைக் கோக்க பெருசுகளும் இன்று இல்லை.

ஊசிக்கு உள்ளூரிலேயே இவ்வளவு ஹிஸ்டரி இருக்கும்போது அதன் உலக ஹிஸ்டரிக்குள் நூலைப்போல நுழைந்து தேடினேன். 28,000 வருடங்களுக்கு முன்னரே மத்திய ஆசியாவில் மனிதர்கள் எலும்பினால் செய்த ஊசிகளை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். விலங்குகளின் தோல்களைத் தைத்து ஆடைகளாக உபயோகிக்க ஆரம்பித்த காலம். 7,000் வருடங்களுக்கு முன்னரே அர்மேனியாவில் செம்பினால் ஊசிகளைப் பயன்படுத்தினர். 2,500 வருடங்களுக்கு முன்னர் வெண்கல ஊசியைப் பயன்படுத்தினர் என ஆரம்பிக்கும் வரலாறு, கி.பி 1,200 -களில் சீனாவில் தையல் ஊசிகளை விளம்பரப்படுத்துவது வழியாக 1496 -ம் ஆண்டில் லியோனார்டோ டாவின்சி ஊசிகளைக்கொண்டும் தைக்கும் இயந்திரத்தை வடிவமைக்கும் முயற்சி, 1845 -ம் ஆண்டில் Elias Howe & Singer ஊசிகளைப் பயன்படுத்தி தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தது வரை தொடர்கிறது.

தோல்களை இணைக்கும் தொழில்நுட்பமாக ஆரம்பித்து, பிற்காலத்தில் `காதல்கோட்டை' க்ளைமாக்ஸில் இரு மனங்களையும் இணைக்கும் எம்ப்ராய்டரி கலை வரை வளர்ந்து வந்தது, தம்மாத்துண்டு ஊசிகளின் வரலாறு!

கலைடாஸ்கோப் - 44

அலுவலக நண்பன் ஒருவனிடம் பேசிக்கொண்டிருந்த போது, `வாசிப்பில் அட்சரசுத்தமாக ஆர்வம் இல்லை' என்றான். 80 -களின் கடைசியில் பிறந்து, 90 -களில் சாட்டிலைட் சேனல்களின் பாதிப்பில் வளர்ந்தவன். `அறிவும் பொழுதுபோக்கும் டி.வி வழியாகக் கிடைக்கின்றனவே!' எனத் தர்க்கித்தான். இத்தனைக்கும் ஆள் ஓவியன். வாசிப்பின் பலாபலன்களைப் பற்றி அவனுக்குப் பாடம் எடுக்கலாம் என ஆரம்பித்தேன்.

உதாரணத்துக்கு, ஜிம் கார்பெட்டின் குமாயுன் புலிகளை எடுத்துக்கொண்டு விளக்கினேன். ஜிம் கார்பெட், பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் இருந்த ஓர் அதிகாரி. மனிதர்களைக் கொல்ல ஆரம்பிக்கும் ஆட்கொல்லிப் புலிகளை, கிராமத்து மக்களின் அழைப்பின் பேரில் சென்று வேட்டையாடியவர். தன் அனுபவங்களை, பல புத்தகங்களாக எழுதியிருக்கிறார். `வாசிப்பின் அனுகூலங்கள் என்ன?' என்பதைப் பட்டியலிட்டேன். பிரிட்டிஷ் ஆட்சியின் இந்திய கிராமங்களுக்கு ஒரு காலப் பயணம். புலி வேட்டையை கூடவே இருந்து பார்க்கும் திக்திக் அனுபவம், காடுகள், புல்வெளிகள் என நிலவியல் சார்ந்து மனதில் விரியும் சித்திரம், அந்தக் கால இந்திய மக்களின் வாழ்க்கைச்சூழல், ஜிம் கார்பெட் என்ற ஆளுமையின் செயல்கள் வழியாக நமக்குள் இறங்கும் அதன் தாக்கம். நம்மால் நம் தனிப்பட்ட வாழ்வில் ஒருபோதும் அடைய முடியாத அனுபவங்களை ஒரு புத்தகம் வழியாக அடைவதற்கான வாய்ப்பு.

புலி வேட்டை ஆடும் ஒருவனைப் பற்றி, விஷுவல் மீடியாவில் / சேனல்களில் அவர்கள் என்ன காட்டுகிறார்களோ அதை மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள் அல்லது கேட்கிறீர்கள். ஆனால், வாசிப்பில் உங்கள் சொந்த கற்பனை மனம் வேலை செய்ய ஆரம்பிக்கிறது. ஜிம் கார்பெட்டின் முகமும் அதில் வரும் நிலக்காட்சிகளும் வாசிக்கும் ஒவ்வொருவருடைய கற்பனைக்கு ஏற்ப விரிகிறது. வாசிப்பது ஒரே வரியாக இருந்தாலும், எனது கற்பனையில் வரும் புலி வேட்டையும் உங்கள் கற்பனையில் வரும் புலி வேட்டையும் வேறு வேறாக இருக்கும்.

`இன்று அனைத்தும் காட்சி ஊடகமாகி வருகிறது' எனப் பேசுகிறோம். குழந்தை களுக்குக்கூட படம் காட்டி பாடம் நடத்து கிறோம். புரிவதற்கு எளிமையானது காட்சி. ஆனால், நம் மனதுக்குள் மொழி சென்றடையும் இடம் ஆழமானது.  `வலிமையானது' என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். காட்சி, ஒரு ஃப்ரேமுக்குள் உங்களைக் குவிக்கும்; மொழி, ஒரு ஃப்ரேமைத் தாண்டி உங்களை விரிக்கும்.
இளம் நண்பன் கடைசியில் `ஜிம் கார்பெட் பற்றி ஏதாவது டாக்குமென்டரி வந்திருக்கிறதா, லிங்க் கிடைக்குமா?' என்றான். தொட்டில் பழக்கம் இன்டெர்நெட் வரைக்கும் என நினைத்துக்கொண்டேன்!