மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 12

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

கொஞ்ச நேரத்தில் சொத்தென்று மண்ணில் விரித்த கோணியில் வந்து விழும் கன்னுக்குட்டி.

''என்னடா... அந்தக் கன்னுக்குட்டிக்குப் பேரு யோசிச்சிட்டியா..?''- இருட்டுக் கருக்கலில், வெட்டாத்தங்கரைப் படித்துறையில் ஒரு சித்திரம்போல் கை கழுவியபடியே எத்தனை முறை இப்படிக் கேட்டிருப்பார் அப்பா.

 பனிக்குடம் தொபுக்கென்று உடைய, உடம்பு முழுக்கக் கோழையோடு, சொளசொளவென மண்ணில் விழுந்து காது மடல் அசையும் ஒரு கன்னுக்குட்டிக்குப் பெயர் யோசித்துக்கொண்டு இருந்த அந்த அதிகாலைகள்தான் என் வாழ்க்கையின் ஆசீர்வதிக்கப்பட்ட தருணங்கள். என் அப்பா, கால்நடை மருத்துவர். ஊர்ப் பக்கம் சொன்னால், மாட்டு டாக்டர். தஞ்சைக் கிராமங்களில் ஆடு மாடுகள் என்பது எங்களில் பாதி. அதுவும் அப்பா கைராசிக்காரர் என பப்ளிக்குட்டி ஆனதில், எங்கள் வீடு எப்போதும் கலெக்டர் ஆபீஸைவிடப் பரபரப்பாக இருக்கும்.

அப்பா வீட்டுக்குள் நுழையும்போது எல்லாம் மாடுகளின் தோலில் புதைந்திருக்கும் உண்ணி வாசனைதான் முதலில் வரும். ஆத்துக்குப் போய்க் குளித்துவிட்டு வரும்போதும் நாய்க்குட்டிகளின் பால் வாசனையையோ, கோழி இறக்கைகளையோ கொண்டுவருவார். கூட்டக் கூட்ட, ஆட்டுப் புழுக்கை வாசத்தில்தான் கிடக்கும் திண்ணை. பத்தாயத்தில் கூடு கட்டிக்கொண்டு 'கீச்கீச்’ என்று வீட்டுக்குள் அலையும் தவிட்டுக் குருவிகளை விரட்டினால், ''கம்னாட்டிகளா... அது பாட்டுக்குக் கெடந்துட்டுப் போகுது'' எனத் திட்டுவார்!

வட்டியும் முதலும் - 12

அடிக்கடி பின்னிரவுகளில் அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்து யாராவது வந்து அப்பாவை எழுப்புவார்கள். ''செனமாடு முக்கிட்டே கெடக்கு... கன்னு வரலைங்க. சத்தமா சத்தம் போடுது...'' என இருட்டில் நிற்பார்கள். படக்கென்று எழுந்து மருந்துப் பையை எடுத்துக்கொண்டு, என்னையோ குருவையோ எழுப்பி டி.வி.எஸ் - 50யை எடுக்கவைப்பார். கண்கள் காந்தலில் எரிய, பனிக் காற்றில் புளிய மரங்களைக் கடக்கும் அந்தப் பயணம், ஒரு ஜனனத்துக்கானது.

இருட்டுக் கொல்லையில் நாலைந்து பேர் கவலையாக நிற்பார்கள். சாணி தெறிக்க, 'ம்ம்ம்மேஏஏஏ...’ என அலைபாய்ந்துகொண்டு இருக்கும் தாய்ப் பசு. கைலியை வரிந்து கட்டிக்கொண்டு மாட்டை பொத்தேரென்று அடிப்பார். ''ந்தாரு... ந்தாரு... ச்சூ... ச்சூ...'' எனப் பேசி அதை விழவைப்பார். ''எண்ணெய் கொண்டுவாங்க...'' என வாங்கித் தடவிக்கொண்டு, மாட்டுக்கு பின்னால் கையைவிட்டுத் துழாவி, நேக்காக கன்னுக்குட்டி காலைப் பிடித்துவிடும்போது கண்கள் பிரகாசிக்கும். பொசுக்கென்று குட்டிக் கால் குளம்புகள் வெளி நீட்டும். இன்னும் வெளிவர சிரமப்பட்டால், ரத்தமும் கோழையும் கலந்து வடிய, கன்னுக்குட்டி காலில் கயிறு கட்டி, நைஸாக வெளியே இழுப்பார். அந்த வீட்டுக்காரம்மா கொலசாமியைக் கும்பிட்டுக்கொண்டே பதறி நிற்கும். ஆளும் பேருமாய் இழுக்க... அது உயிர் வலிப் போராட்டம்.

கொஞ்ச நேரத்தில் சொத்தென்று மண்ணில் விரித்த கோணியில் வந்து விழும்  கன்னுக்குட்டி. பக்கத்தில் உட்கார்ந்து இரண்டு கைகளாலும் அதன் முகத்தின் ஈரத்தையெல்லாம் வழித்துவிட்டு, அப்படியே அள்ளி காதிலும் மூக்கிலும் உயிர்க் காற்று ஊதுவார். கொஞ்ச நேரத்தில் கன்னுக்குட்டி காது மடல் அசைய, உடல் துள்ளும். வீட்டுக்காரம்மா ஓடி வந்து காளக் கன்னா, பசுவா எனப் பார்க்கும். மாடு தழைந்து தழைந்து வந்து கன்றை நக்கிவிடும்போது, பொலபொலவென விடியும் அந்த நாள். நாங்கள் வெட்டாத்தங்கரைப் படித்துறையில் கை கழுவிக்கொண்டு இருக்கும்போது, ஆலமரத்திலோ இலுப்பை மரத்திலோ நஞ்சு கட்ட வருகிறவர்கள் அங்கிருந்து, ''ஐயா... வூட்டுக்கு சீம்பாலு குடுத்துவிட்றேங்க..!'' எனக் கத்துவார்கள். மறுபடி எப்பவாவது அந்த வீட்டுக்கு ஊசி போடப் போகும்போது, அந்தக் கன்னுக்குட்டி திமிறிக்கொண்டு திரிவதைப் பார்க்கலாம். அப்போதுதான் அப்பாவை ரொம்பப் பிடிக்கும்!

டாக்டர் கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி ஜெயமோகன் எழுதிய 'யானை டாக்டர்’ படிக்கும்போது எனக்கு அப்பா ஞாபகம்தான் வந்தது. அப்பா, பிராணிகளுக்கு வாழ்க்கைப்பட்டு இருந்தார். அவற்றோடு பேச சங்கேத மொழிகள் வைத்திருந்தார். வாயில்லா ஜீவன்கள் அவரைப் பார்த்ததும் கட்டுண்டு இருந்தன. ''இந்த உசுருங்க தெய்வத்துக்குச் சமம்...'' என்பார் அடிக்கடி.

கால்நடை மருத்துவம் அவருக்குத் தொழில் இல்லை. அது அவரது ஆத்மார்த்தமான விருப்பம். மாமாவின் நெல்லு மில்லில் வேலை பார்த்துச் சேர்த்த காசில் அவர் தேர்ந்தெடுத்தது இந்தப் படிப்பைத்தான். அவர் ராமநாதபுரத்தில் வேலை பார்த்தபோது, வீட்டைச் சுற்றிலும் மயில்கள் மேயும். வேலை முடிந்து வரும்போது மயில்களுக்கும் இரை வாங்கி வருவார். ஒரு முறை அவரது ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தபோது, எங்கோ அடிபட்ட ஒரு மயிலைக் கொண்டுவந்தார்கள். காலில் சீழ் வடிய, மயங்கிக்கிடந்தது அது. ''அப்பனே முருகா... புழுவெச்சுப் போச்சுரா...'' என்றபடி சீழ்வைத்த இடத்தை அறுத்து மருந்து போட்டுத் துணி கட்டினார். கொண்டு போன சாப்பாட்டைச் சாப்பிடாமல் அப்படியே உட்கார்ந்து இருந்தார். கொஞ்ச நேரம் கழித்து நாகராஜன் மாமாவிடம், ''அது செத்துப்போயிரும்... ப்ச்ச்... முருகன் வாகனம்...'' என்றவர் அட்டென்டரைக் கூப்பிட்டு, ''இந்தச் சாப்பாட்டை யாருக்காவது குடுத்துருங்கப்பா'' என்றார்.

சாயங்காலம் வீட்டுக்கு வந்தவர் இரவோடு இரவாக எங்களை திருச்செந் தூர் கோயிலுக்கு அழைத்துப் போய், விடியலில் சாமி கும்பிட்டுவிட்டுத்தான் திரும்பினார்!

'சீக்கு சீஸன்’ வந்தால் ஊர் முழுக்க கோழிகள் கிறங்கி நிற்கும். பொத்துப் பொத்தென செத்து விழும். அந்த ஒண்ணு ரெண்டு மாதங்களும் எங்கள் வீட்டில் கூட்டம் தள்ளும். கோழி பின்னால் விரல் விட்டு சூடு பார்த்து ஊசி போடுவார். ஆஸ்பத்திரியில் இருந்து தடுப்பு மருந்து கொண்டுவந்து இலவசமாகப் போட்டுவிடுவார்.

தெருவில் கலர் கோழிகள் விற்றுப் போகிறவனை எப்போது பார்த்தாலும் உக்கிரமாகிவிடுவார். ''யாரும் கலர் கோழி வாங்காதீங்கய்யா... அது மீன் தொட்டி மீன் மாதிரிப்பா...'' என்பார்.

ஒரு நாள் சித்தார்த்தன் அண்ணணே ஏழெட்டு கலர் குஞ்சுகள் வாங்கி வந்துவிட்டான். அந்தக் குஞ்சுகளை கலர்வாரியாக ஆளுக்கு ரெண்டாகப் பிரித்து வளர்ப்பதில் எங்களுக்குப் போட்டி. 'ஆரஞ்சுதான் சச்சின்... ப்ளூ கலர் கங்குலி’. சாயங்காலம் அப்பா வீட்டுக்கு வந்தபோது பஞ்சாரத்தில் இருந்து 'கொக்கொக் கொக்’ என ஆரஞ்சும் பச்சையுமாக குஞ்சுகள் இறங்கி வந்தன.

''சித்தார்த்தன் பய வேலதான இது... சீக்கு கீக்குனு அம்மாவும் புள்ளையும் வந்தீங்கன்னா பிச்சுப்புடுவேன்'' என்றார் அப்பா கோபமாக.

அடுத்த வாரமே மூன்று குஞ்சுகள் செத்துப்போய்விட்டன. சாயங்காலம் வீட்டுக்கு வந்த அப்பா கொந்தளிப்பாக எங்களைத் துரத்தினார். நாங்கள் தெறித்து ஓட, சம்பவத்துக்குச் சம்பந்தமே இல்லாத குரு சிக்கி அப்பாவிடம் தர்ம அடி வாங்கினான்.

வட்டியும் முதலும் - 12

ஒரு முறை தொழுவத்தில் கட்டிக்கிடந்த பசு மாட்டை, நள்ளிரவில் கன்னம் வைத்து அரசு மாமா ஓட்டிக்கொண்டு போய்விட்டார். தம்பிதான் இதைச் செய்தது எனத் தெரியவந்தபோது, அம்மா அழுதது. அப்பா பூஜை ரூமில் நின்று சொன்னார், ''முருகா... மாட அவனே வெச்சுக்கட்டும். செல்வாக்கா வளந்துருச்சு... அதை அடிமாட்டுக்கு மட்டும் விக்க வுட்ராதடா!''

மதுரையில் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளனாக இருந்தபோது, லீலாக்கா பழக்கம். எல்லீஸ் நகரில் இருந்தவர், வீட்டிலேயே 30, 40 தெரு நாய்களை எடுத்து வளர்த்து வந்தார். சாயலில் மேதா பட்கர் தங்கச்சி மாதிரி இருக்கிற லீலாக்கா, கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லை. வீட்டில் இருந்து பிரித்து வாங்கி வந்த கொஞ்சம் சொத்துக்களை வைத்துக்கொண்டு, முழு நேரச் சமூக சேவகியாக, தனியாக வாழ்ந்தார். வீட்டுக்குப் போனால் எங்கெங்கும் நாய்களாக இருக்கும். பின்னால், அவற்றுக்கென்று தனி இடம் அமைத்து இருந்தார். அவற்றுக்குச் சாப்பாடு போட்டுக்கொண்டு, குளிப்பாட்டிக்கொண்டு, மருந்து போட்டுக்கொண்டு... எப்போது பார்த்தாலும் அவற்றோடுதான் இருப்பார். எல்லா நாய்களுக்கும் பெயர் வைத்திருந்தார். நம்மிடம் பேசிக்கொண்டு இருக்கும்போதே, நாலைந்து நாய்கள் அவரை மோந்து, மேலே ஏறி தொற்றிக்கொண்டே நிற்கும்.

ஒரு முறை அந்த நாய்களில் ஒன்று விபத்தில் செத்துப்போனபோது, அப்படி அழுதார். போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் மோதிய வண்டிக்காரன்பற்றிப் புகார் கொடுத்து, ஒரு வாரம் அலைந்து திரிந்தார். ஓர் அதிகாலை அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது இதுபற்றிக் கேட்டேன், ''இதுல என்ன ஆச்சர்யம் இருக்கு. இதுங்களும் உயிருங்கதானே...'' என்றவர், கொஞ்சம் மௌனத்துக்குப் பிறகு சொன்னார், ''எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான் மனுஷங்களோட பெரிய பிரச்னை. நம்பிக்கை, அன்பு எல்லாம் பொய்யாப் போறப்பதானே எல்லாம் கசந்துபோகுது. இதுங்ககிட்ட அது எதுவும் இல்ல... இதுங்க அன்புல எந்த அப்பழுக்கும் இல்ல.'' உண்மையில் இந்த மனநிலையை பிராணிகளுடன் வாழும் பலரிடம் நான் பார்த்திருக்கிறேன். நம்பிக்கை இன்மை நிறைந்த மனித உறவு களை மனதளவில் துரத்தியவர் கள், பிராணிகளின் பேசா அன்பை நிழலாக்கிக்கொள்கிறார்கள்!

வாலை ஆட்டும் ஒரு நாய்க்குள், பெயர் சிணுங்கும் கிளிக்குள், கூட உறங்கும் முயலுக்குள்... ஒரு காதலை, பிரிவை மீட்டெடுக்கிறான் மனிதன். நள்ளிரவுகளில் சாலையோரத்து நாய்களைக் கட்டிப் பிடித்து கிஸ்ஸடித்துக் கொஞ்சிப் பேசிக்கொண்டு இருக்கும் குடிகார அண்ணன்களை அன்பு மிருகங்கள் என்று அழைக்கலாமா? காலம் முழுக்க ஜல்லிக்கட்டுக் காளைகளைத் தயார் செய்வதிலேயே வாழ்க்கையைத் தொலைத்தவர்கள், பறவைகளுக்கான ஆராய்ச்சிக்காகவே தன்னை அர்ப்பணித்தவர்கள், பாம்புகளின் புதிர்களைத் தெரிந்துகொள்வதையே பயணமாக்கிக்கொண்டவர்கள்... ஓர் அதிசயம்போல் நம்மைக் கடந்துகொண்டே இருக்கிறார்கள். மூளைக்குழாயில் ரத்தக் கசிவு ஏற்பட்டு லீலாக்கா செத்துப்போனது சென்னையில் இருந்த எனக்குத் தெரியாது. வெகு நாட்களுக்குப் பிறகு, அவரைத் தேடிப் போனபோது, அந்த வீட்டில் வேறு யாரோ இருந்தார்கள். வெறுமையாகக்கிடந்த வீட்டில் இருந்து வெளியே வரும்போது, 'முலைக் காம்பு தேடி, வாய் குவித்துத் தடுமாறும் கண் திறக்காத நாய்க் குட்டிகளை பிரித்துப் போடும் மனமா உனக்கு’ என்ற வைத்தீஸ்வரனின் கவிதை நினைவில் இடறியது!

இப்போது பிராணிகளுக்கும் நமது பிள்ளைகளுக்குமான ஜீவார்த்தம் அனிமல் பிளானெட்டுகளிலும் டிஸ்கவரியிலும் இருக்கிறது.  'பிச்சை எடுக்கும் யானையின் கண்களில் அசைகிறது பிறந்த பெருவனம்’ என்ற மலயாளக் கவிஞர் அய்யப்பனின் கவிதையைப் படித்து இருக்கிறீர்களா? காடுகளுக்குச் சுற்றுலா போகும் மனிதர்கள் குடித்துவிட்டு வீசிப்போகும் பீர் பாட்டில் கள் காலில் குத்திச் சீழ் வைத்து யானைகள் செத்துப்போகின்றன. கல் மண்டபத்துக் கிளிகள் பனகல் பார்க் வாசலில் சீட்டெடுத்துக் கொடுத்து நம்மைச் சபிக்கின்றன. சிங்கமும் சிறுத்தையும் அலவன்ஸ் சாப்பாடு சாப்பிட்டுக் கூடாரங்களில் கண் ணைக் கசக்கிக்கொண்டு இருக் கின்றன. 'புலியைக் காப்போம்’ என மவுன்ட் ரோட்டில் ஸ்பான்ஸர் பிடித்துப் பேனர் வைக்கிறார்கள். ஆனால், பன்னாட்டு நிறுவனங்களிடம் நமது காடுகளையும் உயிர்களையும் விலை பேசி விற்றுக்கொண்டு இருக்கிறோம்.

10, 20 வருடங்களுக்கு முன்பு வரை வெளியில் பேசிக்கொண்டு இருந்தால் ஏதேனும் குருவிச் சத்தங்கள் நம்மைக் கடந்துபோகும். செல்போன் டவர்கள் முளைத்துக்கிடக்கும் மண்ணில், இப்போது ஒரு சிட்டுக்குருவியைப் பார்க்க முடிகிறதா? மண்ணில் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கிற விஷத்தன்மையில் பருந்து களும் பலவிதமான பறவைகளும் அழிந்து கொண்டே இருக்கின்றன என்றெல்லாம் 'பசுமை விகடன்’ நண்பர் ஒருவர் சொன்ன போது 'யானை டாக்டர்’ கதையில் ஜெயமோகன் எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது... 'மனுஷன் என்னமோ அவனைப் பெரிய புடுங்கினு நினைச்சுக்கிறான். மிருகங்களுக்கு ஆத்மா கிடையாது... பகுத்தறிவு கிடையாதுனு. அவனோட எசப்புத்தியில ஒரு சொர்க்கத்தையும் கடவுளையும் உண்டு பண்ணிவெச்சுருக்கானே... அதுல மிருகங்களுக்கு இடம் கிடையாதாம்... நான்சென்ஸ்!’

நான் என் அப்பா அளவுக்கு இல்லை. இதுவரை ஆர்வமாக ஒரு நாய்க் குட்டிகூட வளர்த்தது கிடையாது. ஆசையாக முயல் குட்டிகளையோ, வாத்துகளையோ தூக்கிப் பார்த்தது இல்லை. திருச்சி சுப்ரமணியபுரத்தில் இருந்தபோது, கார்ப்பரேஷன் ஆளுங்களோடு பன்னி வேட்டைக்குப் போன பாதகன். அய்யனார் கோயில் மரத்தில் கோவப்பழம் மாட்டி வலை விரித்துக் கிளி பிடித்தது, டயர் கொளுத்தி வெட்டாத்தில் மீன் வெட்டியது, ஓணானுக்கு பொகையிலை போட்டு, நாய் வாலில் பட்டாசு கட்டியவர் களோடு கூட்டணி சேர்ந்தது... எனப் பின்னிருப்பது பிளாக் ஹிஸ்டரிதான்.

சென்னை வந்த பிறகு, ஒரு கிறிஸ்துவப் பெண்ணைக் காதலித்தேன். ஒரு முறை அவளுக்குப் பரிசளிப்பதற்காக மூர் மார்க்கெட்டில் தேடி அலைந்து ஒரு ஜோடி கிளிகள் வாங்கினேன். அதைக் கொண்டுபோய்க் கொடுத்தபோது அவள் மறுத்துவிட்டாள். ''எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கினேன் தெரியுமா...'' என்றதற்கு அவள் சொன்னாள், ''இல்ல... இதை வீட்ல வளர்க்கிறது கஷ்டம். எங்க வீட்ல எல்லாரும் வேலைக்கு வேற போறோமா... இது செத்துக்கித்துப் போயிட்டா மனசு கஷ்டமாகிரும். எடுத்துட்டுப் போயிருப்பா...''

துயரத்தோடு வந்து காசி தியேட்டர் பக்கம் கூண்டைத் திறந்துவிட்டேன். அந்தப் பறவைகள் தாய் நிலம் மீண்ட பிள்ளைகள்போல் பறந்தன. இப்போது சொல்கிறேன்... கிளிகளை வாங்க மறுத்தவளே...  எங்கிருந்தாலும் வாழ்க!

(போட்டு வாங்குவோம்)

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan