மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200ஓவியம்: ராமமூர்த்தி

கடுப்பைக் கிளப்பிய கணினி சர்வீஸ்!

அனுபவங்கள் பேசுகின்றன!

சில நாட்களுக்கு முன் என் லேப்டாப் ரிப்பேரானது. அதை சர்வீஸ் சென்டருக்கு எடுத்துப் போய் தந்தேன். சரிசெய்து தந்தார்கள். பத்து நாட்களுக்கு பிறகு தற்செயலாக லேப்டாப்பை சோதித்து பார்த்ததில் அதிலிருந்த `4 ஜிபி ராம்’ எடுக்கப்பட்டு பதிலுக்கு `2 ஜிபி ராம்’ பொருத்தப்பட்டிருந்ததை கண்டு அதிர்ந்தேன். சர்வீஸ் சென்டர் சென்று முறையிட்டேன். அவர்களோ, ‘’நாங்கள் எடுக்கவில்லை. பத்து நாட்கள் சும்மா இருந்துவிட்டு, இப்போ வந்து எங்கள் மீது பழிபோடாதீர்கள்!” என கூறி என்னைத் திருப்பி அனுப்பிவிட்டனர்.

லேப்டாப்பை சர்வீஸுக்கு தரும்போது `என்னென்ன முக்கியமான பாகங்கள்’, `எத்தனை ஜிபி ராம்’ என ஒரு பேப்பரில் குறித்துகொண்டு சர்வீஸ் சென்டரில் அவற்றை காட்டி ஒப்புதல் பெற்ற பிறகே தர வேண்டும். ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் நான் கற்றுக்கொண்ட பாடம் இது!

- ஏ.சௌம்யா, சேலம்

விபரீதத்தை விதைக்காதீர்கள்!

அனுபவங்கள் பேசுகின்றன!

சமீபத்தில் என் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது பூ விற்கும் பெண் வந்தாள். அவளிடம் இரண்டு முழம் பூ வாங்கி, அதை முழுவதும் தன் மகளின் தலையில் வைத்துவிட்டு, ``நீ இங்க இருக்கற வரைக்கும்தான் சந்தோஷமா இருக்க முடியும். என்ன வேணும்னாலும் கேட்டு வாங்கி, நல்லா அனுபவிச்சுக்கோ. நாளைக்கு போற இடத்துல விருப்பப்பட்டது எல்லாம் கிடைக்குமோ என்னவோ...’’ என்று மகளிடம் கூறினாள் தோழி. இது எனக்கு வருத்தத்தை அளித்தது.

திருமணம் ஆன பெண்கள் எல்லோருமே கஷ்டப்படுவதை போலவும், புகுந்த வீட்டுக்குச் சென்றால் சந்தோஷம் இருக்காது என்பது போலவும் பேசி,  பெண் குழந்தையை வளர்ப்பது தவறு. அதன் விளைவாக... அவள், `கணவன் என்றால் கொடுமைக்காரன், மாமியார் வீடென்றால் நரகம், திருமணம் சந்தோஷத்துக்கு கேடு’ என்ற ரீதியில் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால், அவளது எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாகும் என்பதை யோசிக்க வேண்டாமா?

பெண்களைப் பெற்றவர்கள், புகுந்த வீடு பற்றிய தவறான கருத்துகளை குழந்தைகள் மனதில் பதியவைப்பதைத் தவிருங்கள்... ப்ளீஸ்!

- பி.ரமணி, சேலம்

இதுக்கெல்லாம் நாள் பார்க்கலாமா..?

அனுபவங்கள் பேசுகின்றன!

உறவினர் வீட்டுக்கு நான் சென்றிருந்தபோது, அங்கு வந்த ஏழைப் பெண்மணி ஒருவர், தான் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏதேனும் துணிமணிகள் இருந்தால் கொடுத்து உதவுமாறும் கேட்டார். அதற்கு என் உறவினரின் துணைவியார், ‘’தேடிப் பார்க்க வேண்டும். நாளை வாருங்கள்” என்றார். அதற்கு அப்பெண், ‘’நாளைக்கு வருவது சிரமம்” என்று சொல்லிவிட்டு சோகத்துடன் சென்றுவிட்டார். இதைப் பார்க்க எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. காரணம், உறவினரின் துணைவியார் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அவரிடமே இதுபற்றிக் கேட்டபோது, ‘’இன்று செவ்வாய்க்கிழமை... பழைய துணிமணிகளைக் கொடுக்கக் கூடாது. அதனால்தான் நாளைக்கு வரச் சொன்னேன்” என்றார்.

`உதவி என்பதை அவசரம், ஆபத்து நேரத்தில் செய்ய வேண்டும்... நாள், நட்சத்திரம் பார்த்தல்ல’ என்பதை அவருக்குப் புரியவைத்தேன். இது அனைவருக்கும் புரிய வேண்டியது அவசியம்!

- ஆர்.வசந்தி, போளூர்

`தத்துவச் செம்மல்’களே...

இதையும் கொஞ்சம் யோசிங்க!

அனுபவங்கள் பேசுகின்றன!

சமீபத்தில் தோழியுடன் கோயிலுக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பும்போது ஆட்டோவை நிறுத்த கைகாட்டினேன். அது எங்களுக்கு முன் சென்று நின்றது. அதன் பின்னால், ‘மண்ணை நம்பினால் ஒரு கோடி... பெண்ணை நம்பினால் தெருக் கோடி’ என எழுதப்பட்டிருந்ததைக் கண்டு எனக்கு வருத்தமும் கோபமும் ஏற்பட்டது. ஆட்டோ டிரைவரிடம் என் வருத்தத்தை நான் தெரிவித்ததும், `அந்த வாசகத்தை அழித்துவிடுகிறேன்’ என்று கூறினார்.

ஆட்டோக்களின் பின்புறத்தில் மட்டுமல்ல... ஃபேஸ்ஃபுக், ட்விட்டர், பத்திரிகைகள் என பல ஊடகங்களிலும் பெண்களைப் பற்றி `தத்துவ’ மழை பொழிபவர்கள் புற்றீசல் போல பெருகிவிட்டார்கள். அவர்கள் மீது அன்பு செலுத்தும், அவர்கள் வாழ்க்கையை சௌகரியமாக வாழ உதவும் அம்மா, சகோதரி, மனைவி, மகள் எல்லோருமே பெண்கள்தானே..? இந்தக் கோணத்தில் யோசித்தால், பெண்களை இழிவுபடுத்தும் சிந்தனையை அவர்கள் மூட்டைக்கட்டி தூர வைத்துவிடுவார்கள்!

- கலா செல்வம், காகிதப்பட்டறை