மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

எந்திரி!

சி.பிரபா, மயிலாடுதுறை.

 சஸ்பென்ஸ் டைரக்டர் ஆல்ஃபிரெட் ஹிட்ச் காக்கும் அவரது படங்களும் இன்றும் பேசப்படும் அளவு அவர் இயக்கிய படங்களின் தனித்தன்மை என்ன?

ஹாய் மதன் கேள்வி - பதில்

திகிலுக்கு ஒரு ஸ்டைல் தந்தவர் ஹிட்ச் காக். எனக்கு விருப்பமான இயக்குநர்களில் ஒருவர். வன்முறை, ரத்தம், கொலை வெறி... அவர் படங்களில் இருக்காது. ஆனால், மனித மனதில் உள்ள இருண்ட பிரதேசங்களைக் காட்டிப் பயமுறுத்தினார். அதை நாம் பதைபதைப்புடன் ஸீட் நுனியில்அமர்ந்து ரசித்தோம். அவருடைய 'வெர்ட்டிகோ’, 'சைக்கோ’ படங்களைப் பல முறை பார்த்தும் ஒவ்வொரு முறையும் புதுப் புது விஷயங்கள் எனக்குத் தென்படுகின்றன!

சிவராமசுப்ரமணியன், தூத்துக்குடி.

அரசியலில் சினிமாக்காரர்கள் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பது உண்மைதானே?

##~##

தவிர்க்க முடியாதவர்கள் என்று யாருமே, எதிலுமே கிடையாது. சினிமாக்காரர்கள் ஒரு முக்கியமான சக்தி என்று வேண்டுமானால் சொல்ல லாம். உலகெங்கும்  ரீகன், அர்னால்டு என்று தொடங்கி, அரசியலில் பெரும் பதவிகள் வகித்த சினிமாக்காரர்கள் உண்டு. அரசியலுக்கும் சினிமாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லாததே இதற்குக் காரணம். அரசியல் தலைவ ராக ஆக என்ன தேவை? நம்பிக்கை தரும் பெர்சனாலிடி, மக்கள் ஆதரவு, கொள்கை எதுவும் இல்லாமல் இருப் பது! இது இரு சாராருக்கும் உண்டு. திரையில் நாம் பார்ப்பது ஒரு மாயத் தோற்றம் - பொய்! அதே மாதிரி அரசியலும் மாயத் தோற்றமே. இது எல்லாம் ஒற்றுமை. வேற்றுமை - சில நடிக, அரசியல் தலைவர் கள் பார்ப்பதற்கு நன்றாக இருப்பார்கள்!

வெ.கா., கடையநல்லூர்.

'சூப்பர் மேன்’ மாதிரி 'சூப்பர் வுமன்’ படம் யாரும் தயாரிக்கவில்லையா?

ஓ! 1984-ல் 'சூப்பர் கேர்ள்’ என்று ஒரு படம் வந்திருக்கிறது. ஹீரோயின் சூப்பர் மேனின் 'கஸின் சிஸ்டர்’. படம் சுமாராகப் போனது. ( 'சூப்பர் கேர்ள்’ என்று காமிக்ஸ் புத்தகமும் உண்டு). இங்குகூட 'எந்திரன்’ வந்துவிட்டது. ஏன், ஒரு ஹீரோயினை மட்டும் வைத்து 'எந்திரி’ என்று ஒரு படத்தை யாராவது எடுக்கக் கூடாது?!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

  இளைஞர் ஒருவருக்குத் திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர் ஆசைப்படுகின்றனர். அந்த இளைஞர் தனக்கு வரும் மனைவி ஹன்சிகா போல், அல்லது ஜெனிலியா போல் இருக்க வேண்டும் என்று நடிகைகளின் படத்தைக் காட்டி பெற்றோருக்கு கண்டி ஷன் போடுகிறார். அவரை சராசரி இளைஞராக்க என்ன வழி?

நண்பரிடம் ஹன்சிகா, ஜெனிலியா போட்டோக்களைக் காட்டி, 'இவங்க அவங்க இல்ல... ஆனா, அதே மாதிரி இருக்காங்கல்ல. இவங்க ஜாதகம் வந்திருக்கு!’ என்று சொல்லவும். நண்பர், 'ஐயோ... ப்ளீஸ்! நான் கட்டிக்கிறேனே!’ என்று எம்பி எம்பிக் குதிப்பார். 'கட்டிக்கலாம்... ஆனா, ஒரே பிரச்னை... மாப்பிள்ளை அஜீத், இல்லாட்டி சூர்யா மாதிரியே இருக்கணும்னு ரெண்டும் அடம் பிடிக்குதுங்களே!’ என்று பெருமூச்சு விடவும். கூடவே, முகம் பார்க்கும் கண்ணாடியை அவர் முன் பிடிக்கவும். ஆமாம்... அந்த இளைஞர் நீங்க இல்லியே?!

ஹாய் மதன் கேள்வி - பதில்

வீ.உதயக்குமாரன், வீரன்வயல்.

  நம் தமிழ் சினிமாவின் பழைய ஃபார்முலாக்கள், வசனங்கள் இன்னும் மாறவில்லையே?

ஃபார்முலா என்பது எப்போதும் நிரந்தரமாக இருக்கும். அதனால்தான் அதை 'ஃபார்முலா’ என்கிறோம். உதாரணமாக, முக்கோணக் காதல் என்பது ஒரு ஃபார்முலா. திரையில் அதை இயக்குநர் எப்படிக் கையாள்கிறார் என்பதில்தான் புதுமை இருக்கிறது. வசனத்தைப் பொறுத்தமட்டில் நிறையவே மாறி இருக்கிறது. அண்மைக் காலத்தில் எந்த தமிழ் சினிமா விலும் ஒரு பெண், தன்னை மோசம் செய்த வில்லனைப் பார்த்து, 'அப்ப என் வயித்துல வளர்ற கருவுக்கு என்ன பதில்?’ என்றோ, அதற்கு வில்லன் எங்கேயோ பார்த்துக்கொண்டு அலட்சியமாக 'கலைச்சுடு’  என்றோ சொல்லி நான் பார்க்கவில்லை!