Published:Updated:

மைல்ஸ் டு கோ - 18

மைல்ஸ் டு கோ
பிரீமியம் ஸ்டோரி
News
மைல்ஸ் டு கோ

நண்பர்களுக்குக் கடன் வாங்கி கொடுத்து, அந்த நண்பர்கள் எஸ்கேப் ஆகிவிடுவார்கள். கடன் வாங்கித் தந்தவன் மாட்டிக்கொள்வான். அந்த கேரக்டர் நிஜத்தில் மணிதான்.

`பொல்லாதவன்' டீம் இணைந்து அடுத்த படம் எடுக்கலாம் என, ரிலீஸுக்கு முன்னரே முடிவுசெய்திருந்தோம். ஆனால், `பொல்லாதவன்' வெற்றிக்குப் பிறகு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு இடங்களில் இருந்து ஆஃபர்கள் வந்தன.

எல்லோரின் முக்கியத்துவமும் அப்போது மாறியிருந்தது. ஆனால் எனக்கு, எப்படியாவது அதே டீமுடன் மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் தீவிரமானது. `பொல்லாதவன்' படத்தை முடிப்பதில் முக்கியப் பங்காற்றிய மணி, `ஆடுகளம்' படத்துக்காக அந்த டீமை மீண்டும் இணைப்பதிலும் முக்கியப் பங்காற்றினான். மணி, என் பள்ளித்தோழன்.

நான் ஏழாம் வகுப்பு வரை வேலூர், ஹோலிகிராஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்தேன். ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்தேன். எனக்குப் புதிதாக இருந்த அரசுப் பள்ளிச் சூழலில் மணி, ஐசக், பீட்டர் எனக்கு  நண்பர்கள் ஆனார்கள். (எனக்கு அப்போது சேவல் சண்டைதான் மிகப் பெரிய பொழுதுபோக்கு. ஹமீது என்பவர்தான் எனக்கு சேவல்களைக் கொடுப்பார். அவர் இப்போது, ராணிப்பேட்டையில் ஓர் அரசியல்  பிரமுகர்.) மணி நன்றாக கிரிக்கெட் ஆடுவான்.

எட்டாம் வகுப்பிலேயே யமஹா ஆர்.எக்ஸ் பைக்கில்தான் வருவான். இன் செய்த சட்டை, செயின், பைக் என ஒரு மாதிரியான கெட்டப்தான் அப்போது மணியின் ஸ்பெஷல். அப்போது எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை வெள்ளைச் சட்டை, காக்கி டிராயர். ப்ளஸ் ஒன் வகுப்பில் இருந்து வெள்ளைச் சட்டை, நீலநிற பேன்ட். அந்த பேன்ட்டைப் போட்டாலே ஒரு கெத்து வந்துவிடும். ஒன்பதாம் வகுப்பு தொடங்கிய புதிதில் ஒருநாள், எங்கள் டீம் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தது. அந்த இடத்தை விட்டுத்தரச் சொல்லி, சீனியர்கள் எங்கள் ஸ்டம்ப்பைப் பிடுங்க வந்தார்கள்.

மணி விக்கெட் கீப்பராக இருந்தான். அவனிடம்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருகட்டத்தில் சீனியரில் ஒருவன் மணியைத் தள்ளிவிட, கோபப்பட்ட மணி, அவர்களை தனியாளாக அடித்து ஓடவிட்டான். எந்தச் சூழலிலும் பயமோ, பதற்றமோ இருக்காது. அவனுக்கு `சரி' எனப் பட்டால், சண்டையிடவும் தயங்க மாட்டான். மணி பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, பள்ளிக்கூடத்தில் இருந்து நின்று, தனித்தேர்வு எழுத முடிவுசெய்தான். அதன் பிறகு, எங்கேயாவது பார்த்தால் பேசிக்கொள்வோம். நான் சென்னை ஒய்.எம்.சி.ஏ-வில் ப்ளஸ் ஒன் படித்தேன். அப்போது `டேஷிங் லெவன்’ என்ற பெயரில் ஒரு கிரிக்கெட் அணி அமைத்து, வீக் எண்டில் ராணிப்பேட்டைக்குச் சென்று கிரிக்கெட் விளையாடுவோம்.

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

அந்த டீமில் ஐயப்பன், கரியப்பன், காமராஜ், ஃப்ரான்ஸிஸ் உள்பட இன்னும் சில நண்பர்கள் இருந்தனர். மணியின் கிரிக்கெட் டீம் பெயர் ‘தமிழ்ச் சங்கம்’. சில சமயங்களில், எங்கள் டீம் விளையாடும் மேட்ச்களுக்கும் மணி விளையாடுவான். நாங்கள் ஒன்றாக கிரிக்கெட் விளையாடினாலும் மணி எனக்கு அவ்வளவு நெருக்கம் இல்லை. அந்த நெருக்கம் உண்டானது கல்லூரி நாட்களில்தான். பலருக்கும் நான் லவ் லெட்டர் எழுதித் தருவேன். நான் எழுதித் தந்தால் அந்தக் காதல் ஓ.கே ஆகிவிடும் என்பது, அப்போது எங்கள் நண்பர்கள் மத்தியில் பிரபலமான சென்டிமென்ட். நான் லெட்டர் எழுதுவதற்கு முன்னர் அவர்களுக்கு இடையில் நடந்த எல்லா சம்பவங்களையும் கேட்டு, அதை மனதில் ஓட்டிக்கொள்வேன். அதைவைத்தே அந்தப் பெண்ணுக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா என்பது தெரிந்துவிடும். அதன் பிறகு, நடந்த சம்பவங்களைவைத்து லெட்டர் எழுதித் தந்தால், நிச்சயம் ஓ.கே ஆகிவிடும்.

அப்படி ஒருதடவை தன் நண்பன் விவேக்குக்கு ஒரு லெட்டர் எழுத வேண்டும் என்றான் மணி. எழுதித் தந்தேன். அந்த லவ்வும் வொர்க்அவுட் ஆகிவிட்டது. சில மாதங்கள் கழித்து, ஒரு சனிக்கிழமை காலையில் சென்னையில் உள்ள என் ரூமுக்கு வந்தான் மணி. அப்போது நானும் சக்தியும் பேர்ன்பேட்டையில் தங்கியிருந்தோம். “என்னடா காலையிலயே... வேற விஷயமா வந்தியா?” என்றேன். “இல்லை. உன்னைப் பார்க்கத்தான் சென்னை வந்தேன்” என்றான். அப்போது ராணிப்பேட்டையில் இருந்து சென்னை வர, நான்கு மணி நேரம் ஆகும். மணி ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அவன் காதலைச் சொல்ல ஒரு லெட்டர் வேண்டும் என்றும் சொன்னான். ``டீ சாப்பிட்டுட்டு வந்து தொடங்கலாம்'' என்றேன். வந்ததும், அவர்களுக்கு இடையே நடந்த சம்பவங்களை மணி சொல்ல ஆரம்பித்தான்.

சொல்லி முடிக்கவே மாலையாகிவிட்டது. அன்று நானும் சக்தியும் படம் பார்க்கலாம் என ஏற்கெனவே முடிவுசெய்திருந்ததால், படம் பார்க்கச் சென்றுவிட்டோம். படம் முடிந்ததும், இரவு சாப்பிட்டுவிட்டு அறைக்குத் திரும்பினோம். ``காலையில ஃப்ரெஷ்ஷா எழுதலாம்டா'' என நான் சொன்னதும், மணி தூங்கிவிட்டான். நானும் சக்தியும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்குத்தான் நானும் சக்தியும் எழுந்தோம். மணி முன்னரே எழுந்து, குளித்துவிட்டு எங்களுக்காகக் காத்திருந்தான். அவன் லெட்டரை எழுதி வாங்கிக்கொண்டு ராணிப்பேட்டைக்குச் செல்ல வேண்டும். நான் எழுந்ததும், லெட்டர் எழுதத் தயாரானேன். பெண்களை அன்போடு அழைக்கும் சில ஆங்கில வார்த்தைகளைப் போட்டு, அவர் பெயரையும் எழுதச் சொன்னேன்.

நான் சொல்லச் சொல்ல, மணிதான் எழுதிக் கொண்டிருந்தான். இரண்டு வரிகள் முடிந்ததும், எனக்கு அவர்கள் இரண்டு பேரைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும் எனத் தோன்றியது. மீண்டும், நடந்த சம்பவங்களை மணி சொன்னான். அது முடியவே மதியம் ஆகிவிட்டது. ``மறுபடியும் யோசிச்சு, சாயங்காலம் எழுதலாம்டா'' என்றேன். மாலை ஆனதும் ``நாளைக்கு எழுதலாம்டா. இப்ப மூடு இல்லை'' எனச் சொன்னேன். எனது 100 சதவிகித சக்சஸ் சென்டிமென்ட்டை மனதில்வைத்து, மணி எதுவும் சொல்லாமல் பொறுமையாக இருந்தான். அடுத்த நாள் அவனுக்கு காலேஜ். அதனால் லெட்டர் எழுதாமலேயே `அடுத்த வாரம் வர்றேன். அப்ப எழுதிக்கலாம்டா' எனச் சொல்லிவிட்டு ஊருக்குக் கிளம்பினான். இப்படியே பல வாரங்கள் போராடி, ஒரு வழியாக லெட்டர் எழுதி முடித்தோம். லெட்டரை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு வருவதாகச் சென்றான். பஸ்ஸில் அந்தப் பெண்ணின் கைகளில் லெட்டரைத் திணித்துவிட்டு வந்துவிட்டான். லவ் விஷயத்தில் மணியின் தைரியம் அவ்வளவுதான். இருவரும் தினமும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டாலும் பேசிக்கொண்டது இல்லை.

அடுத்த நாள், மணியை ஸ்டேஷனுக்கு அருகில் சந்திக்க வரச் சொன்னார் அந்தப் பெண். மணி, அங்கே போகாமல் சென்னை வந்துவிட்டான். நான் ``என்னடா மச்சான்..?'' எனக் கேட்க, ``இல்லைடா... அந்த லெட்டர் படிச்சுதான் இம்ப்ரஸ் ஆகியிருப்பா. அதை நான் எழுதலையே. நான் போறது சரியா இருக்காதுடா. வேணாம்!'' என்றான். அதற்குப் பிறகு அந்தப் பெண்ணை மணி சந்திக்கவே இல்லை. எனக்கு இன்று வரை மணியின் அந்த முடிவு ஆச்சர்யமாகவே இருக்கிறது. சில காலம் மணியோடு டச்சில் இல்லை. நான் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது, மணி என் அறைக்கு வந்தான். பார்க்கவே கொஞ்சம் டல்லாக இருந்தான். வழக்கமாக நாங்கள் பார்க்கும் மணி இல்லை. சென்னைக்கு வந்துவிட்டதாகவும், பெரியப்பா நண்பர் ஒருவரின் கன்ஸ்ட்ரக்‌ஷன் சைட்டில் சூப்பர்வைசராக வேலைசெய்வதாகவும் சொன்னான். “காலேஜ் என்னடா ஆச்சு?” என்றேன்.

மைல்ஸ் டு கோ - 18

``ஒரு பிரச்னைடா” என்றான். மணி இயக்கி, ஜெய் நடித்த ‘புகழ்’ படத்தில் ஒரு சீக்வென்ஸ் வரும்.

நண்பர்களுக்குக் கடன் வாங்கி கொடுத்து, அந்த நண்பர்கள் எஸ்கேப் ஆகிவிடுவார்கள். கடன் வாங்கித் தந்தவன் மாட்டிக்கொள்வான். அந்த கேரக்டர் நிஜத்தில் மணிதான்.

தன் நண்பர்களுக்கு மணி அவன் அப்பா பார்ட்னராக இருந்த ஃபைனான்ஸில் கடன் வாங்கிக் கொடுத்திருந்தான். கடன் வாங்கியவர்கள் திருப்பித் தராததால் வந்த பிரச்னையை அவனால் சமாளிக்க முடியாமல் சென்னைக்கு வந்து தங்கிவிட்டான். எங்கள் அறைக்கு அடிக்கடி வர ஆரம்பித்து, எனக்கும் சக்திக்கும் இன்னும் நெருக்கமானான். அப்போது சக்தி உதவி இயக்குநராக வேண்டும் எனத் தீர்மானித்திருந்தான். நானும் சினிமாவில் சேரலாம் என்ற நினைப்பில் இருந்தேன். நாங்கள் சினிமா பற்றியே பேசுவதைப் பார்த்த மணி, “எனக்கு அசோசியேட் டைரக்டர் ஒருத்தர் தெரியும்டா” என்றான். “அசோசியேட்னா சினிமாவுல பெரிய பதவிடா” என்றேன். அவர் பெயர் குருநாத், இயக்குநர் குருதனபாலின் இணை இயக்குநர். அப்போது அவர் `மோனாலிசா' என்ற படத் துக்காக ‘தாமரை’ படத்தின் இயக்குநர் ராஜ்சிற்பியுடன் டிஸ்கஷனில் இருந்தார்.

`டிஸ்கஷன்ல உட்காரவைக்கிறேன். திறமை இருந்தா அப்படியே பிக்கப் பண்ணிக்கட்டும்' எனச் சொல்லியிருக்கிறார். அசோக்பில்லர் பக்கத்தில் ஒரு முகவரிக்கு மாலை 5 மணிக்கு வரச் சொல்லிவிட்டார். நாங்கள் 4:30 மணிக்கே அந்தப் பகுதிக்குச் சென்றுவிட்டோம். ஒரு கடையில் டீ குடித்துவிட்டு அந்த ஆபீஸை நோக்கி நடந்தோம். மணிக்கு எந்தத் தெருவில் ஆபீஸ் உள்ளது என்பதில் குழப்பம். தேடித்தேடி அலைந்தோம். மணி 8:45 ஆகிவிட்டது. அவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்தும் அது எங்களுக்குப் பயன் இல்லாமல் போய்விடுமோ என்ற கவலை எனக்கு. கடைசியாக, டீ குடித்த கடைக்கே மீண்டும் வந்தோம். அப்போது `மோனாலிசா' டீம் ஆட்கள் அனைவரும் அந்தக் கடைக்கு வந்தார்கள். நாங்கள் முதலில் சென்ற தெருவில்தான் ஆபீஸ். மணி வழி மறந்துவிட்டான்.

ஒருவழியாக நானும் சக்தியும் டிஸ்கஷனில் பங்குகொண்டோம். தரை முழுவதும் வெள்ளைப் படுக்கை. சுற்றி ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். சினிமா டிஸ்கஷன் எங்களுக்கு புதிது என்பதால், நானும் சக்தியும் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தோம். அந்த டிஸ்கஷனில் அதிகம் பங்களித்துக் கொண்டிருந்தது இரண்டு பேர். ஒருவர் எஸ்.ஏ.சி-யின் உதவியாளர் நாகராஜ், இயக்குநர் ஷங்கருடன் வேலைசெய்தவர். இன்னொருவர் பாபுசிவன், `வேட்டைக்காரன்' படத்தின் இயக்குநர். சினிமா ஆர்வத்தில் இருந்த எங்களை சினிமாவுக்குள் முதல் அடி எடுத்துவைக்க சினிமா மீது ஆர்வமே இல்லாத மணிதான் உதவினான். அந்த டிஸ்கஷனில் நாங்கள் கலந்து கொள்ளாமல்போயிருந்தால் நாங்கள் இப்போது வேறு மாதிரி ஆகியிருக்கலாம்.

மணியிடம் ஒரு விஷயம் சொன்னால், நாம் சொன்னதை நாமே சரியாகப் புரிந்துகொள்ள உதவுவான். `உன்னோட பவுன்ஸிங் வால் நல்லா இருந்தால்தான், நீ அடிக்கிற பந்து கரெக்ட்டா திரும்ப உன்னிடம் வரும். அந்த மாதிரி உன் வேவ்லெங்த்துக்கு செட் ஆகுற ஆள்கிட்ட உன் கதையைப் பகிர்ந்துக்கிட்டாதான், ஒரு நல்ல கதையை வளத்தெடுக்க முடியும்'னு பாலு மகேந்திரா சார் அடிக்கடி சொல்வார். அப்படி என் எல்லா கதை களையும் நான் வளர்த்தெடுத்த விளைநிலமாக மணி இருந்திருக்கிறான்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் என்னுடைய எண்ண ஓட்டம் என்னவாக இருக்கிறதோ,  அதற்குப் பொருந்திப்போகிற ஒரு நண்பன் மணி. நான் என்ன சொன்னாலும் அமைதியாகக் கேட்டு, அவனது விமர்சனங் களைக்கூட நம்மை டிஸ்கரேஜ் செய்யாதபடிதான் சொல்வான். அவனுடைய பிரசன்ஸ் எனக்கு எந்தவிதத்திலும் பிரச்னையாக இல்லாமல், பலமாக மட்டுமே இருக்கும்படி பார்த்துக் கொள்வான். நான் மணியுடன் சென்று கதை சொன்னால், அதைக் கேட்பவர்கள் உற்சாகத் தோடு இருப்பதை நான் கவனித்திருக்கிறேன். பள்ளி, கல்லூரி நாட்களில், `எந்தக் காரியம் செய்தாலும் அவன் என்னைவிட நல்லா செய்து முடிக்கிறானே!' என எனக்குத் தோன்றும். மணிக்கும் என்னைப் பார்த்தால் அப்படித் தோன்றும் என்பான். அது இன்று வரை தொடர்கிறது.

மைல்ஸ் டு கோ - 18

2001-ம் ஆண்டு. ஒருநாள் மணி “மச்சான்.. நானும் சினிமாவுக்கு வரலாம்னு இருக்கேன்” என்றான். எனக்கும் சக்திக்கும் ஆச்சர்யம். “பாலாஜிக்கு நடந்ததைவெச்சு ஒரு கதை பண்ணிருக்கேன்” என்றான். பாலாஜி, மணியின் நண்பன். ஒரு அரசியல்வாதியுடன் நடந்த பிரச்னையில் அவனை அடையாளம் தெரியாத சிலர் வெட்டிவிட்டுத் தப்பித்துவிட்டார்கள். பாலாஜி பிழைத்துக்கொண்டாலும், அந்தச் சம்பவம் மணியையும் அவன் நண்பர்களையும் பாதித்திருந்தது. அந்தப் பாதிப்பைவைத்து மணி ஒரு கதை எழுந்தியிருந்தான். அந்தக் கதை நன்றாக இருந்தது.

``என்னால கதை எழுத முடியுமானு பயமா இருந்துச்சு. இப்ப தைரியம் வந்துடுச்சு. நானும் சினிமாவுக்கு வர்றேன்டா” என்றான். மணி ஒரு முடிவை அவ்வளவு எளிதில் எடுத்துவிட மாட்டான். நன்றாக யோசித்துதான் அந்த முடிவுக்கு வந்திருப்பான் என்பது புரிந்தது. முடிவெடுத்த உடனே, இயக்குநர் சிவராஜ் (இப்போது ஷாகுல் ஹமீது) தொடங்கிய `நீ கிடைத்தால் போதும்' என்ற படத்தில் உதவி இயக்குராகச் சேர்ந்து படப்பிடிப்புக்கும் சென்றுவிட்டான். மணி அப்போது சொன்ன அந்தக் கதைதான் பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டு, பல பிரச்னைகளுக்குப் பிறகு ஜெய் நடித்து, ‘புகழ்’ என்ற பெயரில் திரைப்படமாக வந்தது.

- பயணிப்பேன்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan