
எண்ணம், வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

ஸ்
ஆய்வுக்கூடத்தின் பளிங்கு வராண்டாவில் சக்கரக் கால்களால் வழுக்கியபடி சென்றுகொண்டிருந்த கணினியன் சொன்னான், “இந்த 31 -ம் நூற்றாண்டிலும் தொல்லியல் துறை நான் விரும்பி எடுத்துக்கொண்டது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த நம் மூதாதையர்களைப் பற்றிய இந்த ஆய்வு எனக்குப் பிடித்திருக்கிறது.”
மெமரியன் தன் சக்கரக் கால்களின் வேகத்தைக் குறைத்தபடி, “அதிலும், அந்தக் காலத்தில் வாழ்ந்த போராளிகள் பற்றிய உனது ஆய்வு சுவாரஸ்யமாக இருக்கிறது” என்றான்.
“ஆமாம். உலகெங்கும் வாழ்ந்த போராளிகள் பற்றிய ஆய்வு. பல்வேறு தொல்லியல் படிவங்களைச் சேகரித்துவிட்டேன்” - படிவங்கள் இருந்த அறைக்குள் நுழைந்தபடி சொன்னான் கணினியன்.
“க்யூபா, பொலிவியா முதல் கிழக்கு ஆசிய நாடுகள் வரை வாழ்ந்த போராளிகளின் தொல்லியல் சான்றுகள் கிடைத்திருக்கின்றன எனக் கேள்விப்பட்டேன்” என்றான் மெமரியன்.
“ஆமாம் நண்பா. ஆனால், எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை. இதோ பார், தமிழ்நாட்டில் இருந்து கிடைத்த ஏராளமான வலது கை எலும்புகள்.” விரல் எலும்புகள், உள்ளங்கை நோக்கிச் சுருண்ட நூற்றுக்கணக்கான கை எலும்புகள் குவிந்துகிடந்தன.
`` `இவை எல்லாம் போராளிகளுடையவை' என்கிறார்கள். ஆனால், அவர்கள் என்ன புரட்சி செய்தார்கள் என்பதை அறிய முடியவில்லை” என்றான் கணினியன்.
“அந்தக் கால நைந்துபோன குறிப்புகளையும் புரட்டிவிட்டேன். இவர்களை `ஃபே...புக் போராளிகள்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அழிந்துபோன அந்த எழுத்தை அறிய முடியவில்லை” என்றான் கணினியன்.
மெமரியன், அந்தக் கை எலும்புகளைப் பார்த்தபடி நின்றான். அவற்றின் கட்டைவிரல்கள் மட்டும் ஒரு கணம் உயர்ந்து அடங்குவதைக் கண்டான்.

சேட்டைகிராஃபி
விளம்பரத் துறையில், `ஆம்பியன்ட் அட்வர்டைஸிங்’ என்ற ஒரு பதம் உண்டு... சூழலில் இருக்கும் ஒரு விஷயத்தை, மீடியமாகப் பயன்படுத்திக்கொள்வது. ஓவியங்களில் இருந்து கிடைத்த இந்த ஐடியா, இன்று எல்லா கலை வடிவங்களிலும் பிரதிபலிக்கிறது. லண்டன் போட்டோகிராஃபர் ரிச் மெக்கோரின் (Rich McCor) புகைப்படங்கள் ஓர் உதாரணம்.

ஒரு பயண விரும்பியான ரிச், `டிராவல் போட்டோகிராஃபியில் ஏதேனும் புதுமை செய்யலாமே!' என யோசித்ததன் விளைவுதான், இவருடைய அடையாளமாக இன்று அறியப்படும் இந்தப் புகைப்படங்கள்.

பிரபலமான கட்டடங்கள், சிற்பங்கள் போன்றவற்றை தனது பிரத்யேக `ஷில்லவுட் பேப்பர் கட்' ஓவியங்களுடன் புகைப்படம் எடுக்கிறார். அந்த பேப்பர் ஓவியங்கள், பின்னணிகளுடன் இணைந்து புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றன. பெரும்பாலும் சிறுபிள்ளைகளின் குதூகலத்துடன் இவர் செய்யும் இந்த போட்டோகிராஃபி சேட்டைகளுக்கு, இணையத்தில் கலா ரசிகர்கள் புன்னகைத்தபடி லைக் கொடுக்கிறார்கள்.

தீவிர கலை விமர்சகர்கள் தாடியைச் சொறிந்தபடி இதை எல்லாம் `கண்டுக்காமல்’ இருந்தாலும் இருப்பார்கள். கலையின் இரண்டு முகங்களில் ஒன்று இது. படு சீரியஸான விஷயங்களை எடுத்துக்கொண்டு தீவிரமான படைப்புகளைச் செய்வது ஒரு வகை என்றால், படைப்புகளை இதுபோல ஜாலி கேலியாக நகைச்சுவையும் நக்கலுமாகவும் உருவாக்குவது இன்னொரு வகை. கலைக்கு இரண்டுமே தேவை.

பற்சக்கரம்
பற்சக்கரங்களைப் பார்க்கும்போது சட்டென ஞாபகம்வருவது, `மாடர்ன் டைம்ஸ்' படத்தில் பிரமாண்டப் பற்சக்கரங்களில் சிக்கி, சிரமப்பட்டு வெளியே வரும் சார்லி சாப்ளின்தான். தொழில் புரட்சியின் அதீத இயந்திரமயமாதலை, சாப்ளின் கிண்டலடித்து நடித்த படம். உண்மையில், பற்சக்கரங்கள் தொழில் புரட்சியின் ஒரு குறியீடுபோல. வேகத்தை அதிகரிக்க, திசை மாற்ற என அது இயந்திரவியலுக்கு அளித்த கொடை, காலத்தை முடுக்கியது எனச் சொல்லலாம்.
பற்சக்கரங்கள் இல்லை என்றால், நம்மைச் சுற்றி இருக்கும் பெரும்பாலான இயந்திரங்கள் ஓடாது. சிறிய கைக்கடிகாரம் முதல் உங்கள் பைக் கியர் வரை இந்தப் பற்சக்கரத்தின் கூட்டு இயக்கத்தில்தான் ஓடுகின்றன. இதன் முக்கிய அம்சம், பெரிய சக்கரத்தைச் சுற்றினால் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் சிறிய சக்கரத்தின் சுற்றும் எண்ணிக்கை அதிகமாகும். இது, சுழற்சி வேகத்தைக் (Rotational speed) கூட்டும். இதனால்தான் உங்கள் சைக்கிள் பெடலை ஒரு சுற்று மிதிக்கும்போதும் சைக்கிள் சக்கரங்கள் பல சுற்றுகள் சுழல்கின்றன. பொறியியலின் இயற்பியல் மாயாஜாலம் இது.
மூன்றாம் நூற்றாண்டின்போது கிரேக்கத்தில் `Alexandrian school' எனச் சொல்வார்கள். கலை, இலக்கியம், அறிவியல், கண்டுபிடிப்புகள் என கிரேக்கத்தில் புகழ்பெற்ற இயக்கம். அதில் ஓர் அறிஞரான ஆர்க்கிமிடிஸ் இந்த வகையான பற்சக்கரங்களை உருவாக்கியதாக குறிப்புகள் இருக்கின்றன. நான்காம் நூற்றாண்டில் பற்சக்கரங்களை சீனாவில் பயன்படுத்தியுள்ளனர். இன்றும் சீனாவில் Luoyang மியூசியத்தில் அதன் ஆதி வடிவம் பாதுகாக்கப்படுகிறது. பிற்கால ஐரோப்பாவில் கடிகாரங்களின் வளர்ச்சி, இந்தப் பற்சக்கரங்களைக்கொண்டுதான் வடிவமைக்கப்பட்டது. மனிதகுலத்தை முன்னோக்கிச் செலுத்தியதில் பற்சக்கரங்களின் சுற்றுகளுக்கும் பங்கு இருக்கிறது.

கொட்டாங்குச்சி தராசு
அப்போதெல்லாம் ஊருக்கு ஒரு சின்ன மளிகைக்கடை இருக்கும். அம்மா வாங்கி வரச்சொல்லும் பொருட்களுக்குக் கொடுத்தது போக, மீதி உள்ள சில்லறையில் கடலைமிட்டாய், தேன்மிட்டாய், ஜவ்வுமிட்டாய் என வீட்டுக்குத் திரும்பும் வழியில் வாய் தித்திக்கும். மளிகைக்கடை தராசில் எடை போடுவதை வாயைப் பிளந்து பார்த்திருப்போம். அதன் முள் சரியாக நடுவில் வந்து நின்றால்தான் வைத்த எடைக்கல்லுக்குப் பொருளின் எடை சமமாகப் பொருந்தியிருக்கிறது என்பது இயற்பியல் அறியாத வயதிலும் சுவாரஸ்யம் அளித்தது.
இன்றைய எலெக்ட்ரானிக் தராசுகளின் எல்சிடி டிஸ்பிளேவை இன்றைய குழந்தைகள் அவ்வளவு சுவாரஸ்யமாகப் பார்க்கிறார்களா எனத் தெரியவில்லை. அதைவிட அட்டகாசமான எலெக்ட்ரானிக் ஸ்கிரீன்களை மொபைலிலும் டி.வி-யிலும் பார்த்துப் பழகி ஆச்சர்யப்பட ஏதும் இல்லாமல் ஆகிவிட்டது அவர்களுக்கு.
அப்போது சிறுபிள்ளைகள் மணலில் வீடு வரைந்து, பெரியவர்கள் பாவனையுடன் கஞ்சி, கறி வைப்பது என விளையாடுவார்கள். சிலர், அண்ணாச்சிகளைப்போல கடை வைப்பார்கள். மணல் அரிசியாகும்; காய்ந்த இலைகள் அப்பளமாகும்; உடைந்த செங்கல் மிளகாய்த்தூள் ஆகும்; தண்ணீர் எண்ணெய் ஆகும். பொருட்களை நிறுத்த தராசு வேண்டும் அல்லவா... அதற்குத்தான் இரண்டு கொட்டாங்குச்சிகளை (எங்கள் ஊரில் சிரட்டை) ஒரு குச்சியின் இரு முனைகளிலுமாக கயிற்றில் அல்லது வாழைமர நாரில் கட்டினால் தராசு ரெடி. கருங்கல், ஜல்லிகள்தான் எடைக்கற்கள். பொருள் வாங்க வரும் வீட்டுக் குழந்தைகளுக்கு, கடைக்காரக் குழந்தைகள் அண்ணாச்சி தோரணையுடன் அந்தக் கொட்டாங்குச்சி தராசில் எடைபோட்டுக் கொடுப்பார்கள்.

இன்று மார்க்கெட்டில் குழந்தைகள் விளையாடக்கூட சீனாவில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை கள்ளத்தனமாக இறக்கவேண்டியுள்ளது. அன்று குழந்தைகள் தங்களைச் சுற்றி இருக்கும் பொருட்களைத்தான் தங்களின் விளையாட்டுக் கருவிகளாக்கிக்கொண்டார்கள். இன்று, நாம் வேறு யாருக்கோ கருவிகளாகிவிட்டோம்.

குறியீடு
சில வருடங்களாக தமிழ் சினிமாவையும், பல வருடங்களாக தமிழ் இலக்கியத்தையும் ரவுண்டு கட்டி (இதுவும் ஒரு குறியீடுதானோ!) அடிக்கும் ஒரு வார்த்தை `குறியீடு'. `சிம்பாலிக்கா ஏதோ சொல்ல வர்றான்பா' எனச் சொல்லிக்கொண்டிருந்த அன்றாடத் தமிழர்கள்கூட `குறியீடு' என்று தமிழ்ப்படுத்திப் பேசத் தொடங்கியிருப்பதைப் பார்க்கிறோம்.
நவீன இலக்கியத்தில் இருந்து மெள்ள ஊர்ந்து சினிமாவுக்கு வந்துவிட்ட ஒரு சொல் `குறியீடு'. `பொதுமக்கள் அனைவரும் இந்த வார்த்தையை அறிந்துகொண்டார்களா?' என்றால், இல்லை. ஊரில் ஓர் அண்ணனிடம் ` `குறியீடு’ என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?' என்றபோது, என்னமோ ஏதோ என்கிற மாதிரி பரிதாபமாகப் பார்த்தார். ஆனால், இணையத்தில் தமிழில் வாசிப்பவர்கள், சினிமா இயக்குநர்களின் `நேர்காணல்' கேட்பவர்கள் இதைத் தெரிந்துவைத்து முகநூல் வாலில் திரிகொளுத்துகிறார்கள்.
இலக்கியத்தில் குறியீடு கண்டுபிடிப்பதைவிட, சினிமாவில் கண்டுபிடிப்பது இன்னும் எளிமையாக இருக்கிறது. காரணம், சினிமாவில் பேக்ரவுண்டில் ஓர் ஆயா சிவப்பு கலர் குடம் எடுத்துக்கொண்டு போனால்கூட விமர்சனத்தில் குடத்தின் கலருக்கு குறியீடு சொல்லிக் குதறியெடுக்க முடிகிறது. உண்மையில், புரொடக்ஷன் ஆளுக்கு மஞ்சள் குடம் கிடைக்காமலோ, செட் அசிஸ்டன்ட்டுக்கு சரியான குடம் செட் ஆகாமலோகூட, இந்தச் சிவப்புக் குடம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருக்க வாய்ப்பு உண்டு.
நேரடியாகச் சொல்ல முடியாததை உவமை, உருவகம் என நம் ஊர் புலவர்கள் சுற்றிவளைத்து சொன்ன விஷயம்தான். உலகக் கலை இலக்கியத் திரைப்பட வரலாறுகளைப் பார்த்தால், அரசியல் நிர்பந்தங்களுக்கு, அதீதத் தணிக்கைகளுக்குத் தண்ணிகாட்ட, கலைஞர்களுக்கு இந்தக் குறியீடுகள் தேவைப்பட்டிருக்கலாம். அதுவே ஓர் அழகியலாகவும் மாறியிருக்கலாம். ஆனால், நம் ஊரில் படைப்பாளிகள் குறியீடுகளை வாரிவழங்குவதும் அதை ரசிகர்கள் அள்ளி விளையாடுவதுமாகப் போய்க்கொண்டிருப்பது எதன் குறியீடு?