சினிமா
Published:Updated:

முதல் படிக்கட்டு!

முதல் படிக்கட்டு!
பிரீமியம் ஸ்டோரி
News
முதல் படிக்கட்டு!

முதல் படிக்கட்டு!

முதல் படிக்கட்டு!

500 டாஸ்மாக் கடைகளை மூடும் முதல்கட்ட நடவடிக்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறது தமிழக அரசு. வாழ்த்துகிறோம்... வரவேற்கிறோம்!

அனைத்து டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூடுவது என்ற தனது அறிவிப்பின் முழுமையை நோக்கி, விரைந்து நகர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம். உண்மையில், அரசின் வேறு எந்த வாக்குறுதி நிறைவேற்றத்தைக் காட்டிலும், மதுக்கடைகளை மூடுவதுதான் தமிழகக் குடும்பங்களில் ஒளியேற்றும் நிகழ்வு. தமிழகக் குடும்பங்களில் மெதுவாகச் சுடர்விடுகிறது நம்பிக்கையின் ஒளி.

தற்போது தமிழக அரசு மூடியுள்ளவற்றில் பெரும்பாலான கடைகள் வருமானம் குறைவானவை என்றும், அதனால்தான் அவற்றை மூடியுள்ளார்கள் என்றும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

அதன் உண்மைத்தன்மையை நாம் நிராகரிக்க முடியாது என்றபோதிலும், முதல் படியை முழுதாய் ஏறியிருக்கும் வகையில், இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதே. அதேநேரம், மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அருகில் செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடைகள் ஏராளம். இது அடுத்த தலைமுறையையும் சிதைக்கும் அபாயம் என்பதை உணர்ந்து, பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் இயங்கும் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் முதலில் மூடவேண்டும். 

பல கிராமங்களில், அந்த ஊரில் மளிகைக்கடை வருமானத்தைவிடவும் மதுக்கடையின் வருமானம் அதிகமாக இருக்கிறது. இதன் பொருள் என்ன? அவர்கள் உணவைவிட, சாராயத்துக்கு அதிகம் செலவழிக்கின்றனர் என்பதே. ஆம், நம் கிராமப்புறங்களில் கீழ்மையின் சீழ்பிடித்துவிட்டது. நோய் முற்றி, உயிர் வற்றும் இந்தக் கொடும் நிலை போக்க, கிராமங்களில் இருந்து மதுக்கடைகளை அடியோடு அப்புறப்படுத்த வேண்டும்.

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மருத்துவமனைகள் அருகில் இருக்கும் மதுக்கடைகளை மூடுவதற்கும் முன்னுரிமை தரவேண்டும். மக்கள் எந்தெந்தக் கடைகளை மூடச் சொல்கிறார்களோ... அவற்றை முதலில் மூடவேண்டும்.

அடுத்தகட்ட நடவடிக்கையின்போது, அரசு இதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

இத்தனை நாட்களாக மது போதைக்கு அடிமையானவர்கள் திடீரென தங்கள் பகுதியில் இருந்த கடை மூடப்பட்டுவிட்டதால், குடிப்பதைக் கைவிடப்போவது இல்லை. இன்னொரு கடையைத் தேடிச் சென்று குடிப்பதற்கு, அடுத்த கடை வெகுதூரத்திலும் இல்லை. ஏதோ ஒரு திசையில் சில நூறு அடிகள் நடந்தால், இன்னொரு டாஸ்மாக் வந்துவிடும். எனவே, அனைத்து மதுக்கடைகளையும் மூடுவதை நோக்கி நகர்வதற்கான, தெளிவான ஒரு கால அட்டவணையை அரசு உருவாக்க வேண்டும்.

எந்தப் பகுதியில், எப்போது, எத்தனை கடைகளை மூடப்போகிறோம் என்பது குறித்த அனைத்து விவரங்களும் அதில் இருக்க வேண்டும். `தற்போது மூடப்பட்டுள்ள 500 மதுக்கடைகளின் ஊழியர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு வழங்கப்படும்' என அரசு அறிவித்துள்ளது. மீதம் உள்ள சில ஆயிரம் கடைகளை மூடும்போது, அதன் ஊழியர்களுக்கும் இதே சிக்கல் எழும். எனவே, ஊழியர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்தும் கால அட்டவணையில் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

மதுவில்லா தமிழகம் மலரட்டும்... மக்களின் முகங்களில் மகிழ்ச்சி திரும்பட்டும்!