
News
கவிதை: பழநிபாரதி, படம்: மது இந்தியா

அந்த ஆப்பிள் மரம்
உன் பால்யத்தோடு வளர்ந்தது.
வெட்டவெளியில்
அது ஒரு கனவிலிருந்தது.
பனிப்பருவத்தின்
மிகக் குளிர்ந்த அந்த நாளை
அதற்காகக் காத்திருந்ததுபோல
அப்படி நேசித்தது.
கனிந்த வரியோடிய இளஞ்சிவப்பு
உன் விழிகளில் ஒட்டிக்கொள்ள
அவ்வளவு அந்தரங்கமாக
அதன் இனிமையில்
நீ பங்குகொண்டிருந்தாய்.
ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு
சந்தைக்குப் போகும் ஆப்பிள்கள் பற்றி
அவற்றின் மேனியில் படர்ந்திருக்கும்
மெழுகுக்கரைசல் பற்றி
அதன் சீரான வணிக அடுக்கில்
மறைந்திருக்கும் சீர்குலைவு பற்றி
அந்தச் ரத்தச் சிவப்புப் பற்றி
நீங்கள் பேசியிருக்கக்கூடும்.
இன்று வேறோர் அசைவில்
அது உன்னை அழைக்க
மூச்சில் ஆப்பிள் மனம் உருள
நீ பதற்றத்தோடு ஓடோடி வருகிறாய்.
கனவுகள்
கூடைகளில்
அடுக்கிவைக்கப்பட்டுக்கொண்டிருந்தன.