Published:Updated:

மைல்ஸ் டு கோ - 19

மைல்ஸ் டு கோ
பிரீமியம் ஸ்டோரி
News
மைல்ஸ் டு கோ

படம்: ஸ்டில் ராபர்ட்

`பொல்லாதவன்' டீம் இணைந்து அடுத்த படம் எடுக்கத் தயாரானோம். தனுஷும் தயாரிப்பாளர் கதிரேசனும் சந்தித்துப் பேசினார்கள். சன் டி.வி தயாரிப்பில் அடுத்த படம் எடுக்கலாம் என முடிவானது.

`பொல்லாதவன்' டீமில் வேல்ராஜ், ஜி.வி.பிரகாஷ் குமார், எடிட்டர் கிஷோர் என எல்லோரோடும் மீண்டும் இணைவது எனக்கு சந்தோஷமாக இருந்தது. முதல் படத்தில் கலை இயக்குநராக வேலைசெய்திருக்கவேண்டிய ஜாக்கி, `ஆடுகளம்' படத்தில் எங்களுடன் இணைந்தார். உற்சாகத்துடன் வேலைகளைத் தொடங்கினோம்.

நிறையக் கதைகள் பேசினோம். அதில் ஒன்று, சென்னையைச் சேர்ந்த கிக் பாக்ஸர், அமெரிக்காவில் வாழும் ஒரு பெண், மதுரையைச் சேர்ந்த ஒரு விவசாயி, பெங்களூரில் இருக்கும் ஒரு நடிகை என ஐந்து வெவ்வேறு கதாபாத்திரங்களின் கதை. அந்த ஐந்து களங்களும் எப்படி ஒரே கதையாக மாறுகிறது என, ஒரு ஸ்கிரிப்ட் எழுதியிருந்தேன். முதல் பாதி முழுவதும் இந்தியாவிலும், இரண்டாம் பாதி அமெரிக்கா, தாய்லாந்து, கம்போடியா, லாவோ, துருக்கி போன்ற பல நாடுகளிலும் ஷூட் செய்ய வேண்டிய கதை அது.

`பொல்லாதவன்' கதையை தயாரிப்பாளரும் ஹீரோவும் ஓ.கே செய்ததற்கும், ஷூட்டிங் செல்வதற்கும் இடைப்பட்ட காலத்தில் ‘ரூட்ஸ்’ நாவலின் இன்ஸ்பிரேஷனில் சேவல் சண்டையை மையமாகக்கொண்ட கதை ஒன்றை யோசித்திருந்தோம். அடுத்து, எழுத்தாளர் வேல ராமமூர்த்தியின் `கூட்டாஞ்சோறு' நாவலைப் படமாக்க நினைத்து, நானும் விக்ரம் சுகுமாரனும் மணியும் அவரை மதுரைக்குச் சென்று பார்த்துப் பேசினோம். இந்த மூன்று கதைகள் குறித்தும் பல நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். தங்கவேலவனுக்கும் பிரித்விக்கும் சேவல் கதை சுவாரஸ்யமாக இருந்தது.

டைரக்‌ஷன் டீமில் இருந்தவர்களும் அதையே எடுக்கலாம் என்றார்கள். அந்தக் கதைக்கு `சேவல்' எனத் தலைப்பிட்டு ஸ்கிரிப்ட் வேலைகளைத் தொடங்கினோம். முதலில் ‘சண்டைச் சேவல்' என்றுதான் தலைப்பு இருந்தது. ஆனால், `சண்டக்கோழி' என்ற பெயரில் ஒரு படம் வந்துவிட்டதால் `சேவல்’ என மாற்றினோம். படத்துக்கான கிரவுண்ட்வொர்க் தொடங்கியது. என் நண்பர் சுந்தரின் உறவினர் ஜான்சன்தான் `பொல்லாதவன்' படத்தில் ‘செல்வம்’ வீடு இருந்த லொக்கேஷனுக்கு ஷூட்டிங் பெர்மிஷன் வாங்கித் தந்தார்.

மைல்ஸ் டு கோ - 19

அவருக்கு வண்ணாரப்பேட்டையில் சண்டைச் சேவல் வளர்க்கும் பல நண்பர்கள் இருந்தார்கள். அதில் துளசி என்பவர், சேவல் சண்டையில் மிகப் பெரிய வல்லுநர். ஜான்சன், அவரிடம் எங்களை அழைத்துச் சென்றார். துளசி வீட்டையும் அவரது சேவல் கூண்டுகளையும் ரெஃபரன்ஸாக வைத்துதான் `ஆடுகளம்' படத்தில் பேட்டைக்காரன் வீட்டை நாங்கள் அமைத்திருந்தோம். அவர் எங்களுக்கு சேவல் சண்டை பற்றி பல தகவல்களைச் சொன்னார். (`ஆடுகளம்' படத்தில் தனுஷின் சேவல்களாக நடித்திருந்த மூன்று சேவல்களுமே துளசியுடையதுதான்.) தமிழ்நாட்டில் சேவல் சண்டையில் அதிகம் பணம் புரள்வது சென்னையில்தான்.

ஏதாவது பிரச்னை என்றால், ஆந்திரா பார்டர் தாண்டி ஆர்.கே.பேட்டை என்ற இடத்தில் சண்டைவிடுவார்கள். சண்டை நடக்கும் இடம், மெயின் ரோட்டில் இருந்து சில கிலோமீட்டர் தள்ளி இருக்கும். அதிகாலை மூன்று, நான்கு மணிக்கு ஆட்கள் கூடிவிடுவார்கள். சண்டை நடக்கும் நாட்களில் அதிகாலை ஆறு மணிக்கே பிரியாணி ஸ்பாட்டுக்கு வந்துவிடும். நாங்கள் எல்லா சேவல் சண்டைகளுக்கும் சென்றோம். `ஆடுகளம்' கதையை முதலில் சென்னையில் நடப்பதாகவே எழுதலாம் என நினைத்தேன். ஆனால், ` `பொல்லாதவன்' படமும் சென்னை, அடுத்த படமும் சென்னையை மையப்படுத்தியே இருக்க வேண்டுமா?' என்ற எண்ணமும் எனக்கு வந்தது. ஸ்கிரிப்ட் எழுத எழுத, அந்தக் கதாபாத்திரங்கள் சென்னைத் தன்மையில் இருந்து விலகி இருப்பதாகத் தோன்றியது.

விக்ரம் சுகுமாரன் மதுரையைச் சேர்ந்தவர். அவருக்கு அந்தக் கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் டிபிக்கல் மதுரைக்காரர்களாகத் தெரிவதாகச் சொன்னார். எனக்கு மதுரையைப் பற்றி அதிகம் தெரியாது. ஆனால், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், விக்ரம் சுகுமாரன் என எங்கள் டீமில் பலர் மதுரையைச் சேர்ந்தவர்கள். அதனால் கதைக்களத்தை மதுரைக்கு மாற்றும் தைரியம் வந்தது.

வேல்ராஜின் உறவினர் வீரமணி (`ஆடுகளம்' படத்தில் தனுஷுக்கு எதிர் டீமில் சேவல் விடுபவர்) என்பவர் மதுரையில் நிறையச் சேவல்களை வளர்த்துக்கொண்டிருந்தார். அவரைச் சந்தித்தோம். அவர் நண்பர்கள் பலரைச் சந்தித்து, அந்த ஊர் இளைஞர்களின் பாடி லாங்வேஜைக் கவனித்தோம். மதுரையில் இருக்கும் ஆங்கிலோ இந்தியன் குடும்பங்களைச் சந்தித்தோம். இப்படி மதுரையில் பலரைச் சந்தித்துவிட்டு சென்னைக்குத் திரும்பி, ஸ்க்ரிப்டை மாற்றி எழுதத் தொடங்கினோம். எனக்கு மதுரையைப் பற்றி நிறையத் தெரிந்தால்தான் படம் நன்றாக வரும் என நினைத்தேன்.

எனவே, `ஆடுகளம்' ஆபீஸை மதுரையிலேயே போடலாம் என முடிவுசெய்து தயாரிப்பாளர் தரப்பிடம் சொன்னேன். அவர்கள் முதலில் தயங்கினாலும், அதில் இருக்கும் வசதிகளைப் புரிந்துக்கொண்டார்கள். மதுரையில் ஒரு நல்ல அப்பார்ட்மென்ட் பிடித்து, ஆபீஸ் போட்டார்கள். அப்போது எங்களுக்குத் திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் கழிந்து, ஆர்த்தி கன்சீவ் ஆகியிருந்தார். நான், அவருடன் இருக்க முடியாமல் மதுரைக்குச் சென்றுவிட்டேன். மதுரைவாசிகளின் மதுரை பற்றிய பார்வைக்கும், மதுரைக்கு வரும் வெளியூர்க்காரர்களின் பார்வைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. மதுரை,  ஒரு பக்கம் ஆனைமலை, இன்னொரு பக்கம் திருப்பரங்குன்றம் என மலைகள் சூழ்ந்த ஊராக எனக்குத் தெரிந்தது.

மைல்ஸ் டு கோ - 19
`ஆடுகளம்' படத்தில் எல்லா வொய்டு ஷாட்டின் பின்னணியிலும் மலை இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். பல லொக்கேஷன்கள் பார்த்துவிட்டு, திருப்பரங்குன்றம் சரியாக இருக்கும் எனத் தோன்றியது.

பேட்டைக்காரன், மனதளவில் மற்ற எல்லோரையும்விட தன்னை உயரமான ஒருவராக நினைக்கும் கதாபாத்திரம். அவரது வீடும் ஒரு மேட்டில் இருக்க வேண்டும் என நினைத்தேன். அவர் நிற்கும் இடம் மற்றவர்கள் நிற்கும் இடத்தைவிட உயரமாக இருக்கும். பேட்டைக்காரனை எல்லோரும் தலையை உயர்த்தித்தான் பார்ப்பார்கள். ஜியாகிராஃபிக்கலாக, அது அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை ஆடியன்ஸுக்குக் கடத்தும் எனத் தோன்றியது. அப்படி ஓர் இடம் அங்கு கிடைத்தது. அடுத்து, காஸ்டிங் ஆரம்பித்தோம். பேட்டைக்காரனுக்கு முதலில் நடிகர் பார்த்திபனிடம் கேட்டேன்.

அப்போது அவர் `ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். தன்னுடைய 100 சதவிகிதத்தை அந்தப் படத்துக்கு அவர் தர விரும்பியதால் அவரால் `ஆடுகளம்' படத்தில் நடிக்கமுடியாமல்போனது. அப்போது ஈழத்தைச் சேர்ந்த நண்பர் ஹசீன் (`ஆடுகளம்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்)வ.ஐ.ச. ஜெயபாலனை நினைவுப்படுத்தினார். நான் பாலுமகேந்திரா சார் அலுவலகத்தில் ஒருமுறை அவரைப் பார்த்திருக்கிறேன். ஹசீன், அவரை அழைத்துவந்தார். பிரெஞ்சு பியர்ட், ஜீன்ஸ் என ரொம்பவே மாடர்னாக வந்தார். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேல் நார்வேயில் வாழ்ந்ததால் வெஸ்டர்னாக இருந்தார். ஆனால், அவர் முகத்தில் ஒரு டிரைபல் தன்மை இருந்தது. அவரிடம் `நடிக்கிறீர்களா?' எனக் கேட்டேன்.

`என் வாழ்க்கையே ஒரு அட்வெஞ்சர்தான். அதேபோல ஒரு அட்வெஞ்சரா இதைச் சந்திக்க நான் தயார். உங்களால என்னைச் சமாளிக்க முடியும்னா, என்னை வெச்சு படம் எடுங்க' என்றார். அவரிடம் ஒரு சிச்சுவேஷனைச் சொல்லி, நடிக்கச் சொன்னேன். அவர் ஒரு தேர்ந்த நடிகர் இல்லை. ஆனால், நல்ல கவிஞர். அவர் மனதில் உணர்வது முகத்தில் பிரதிபலித்தது. எனக்கு அது போதும் எனத் தோன்றியது. அவரை தாடி வளர்க்கச் சொல்லிவிட்டேன். பேட்டைக்காரன் கேரக்டருக்கு கிஷோரையும் ஆடிஷன் செய்துவைத்திருந்தோம். `ஆரண்ய காண்டம்' படத்தில் சோமசுந்தரம் நடித்த ஜமீன் கேரக்டரில் நடிக்க கிஷோரைக் கேட்டிருந்தார்கள். அதுவும் சேவல் சண்டை தொடர்புடையது என்பதால், கிஷோர் அதில் நடிக்கவில்லை.

கிஷோர் சென்னை வந்தபோது ஜெயபாலன் போட்டோ காண்பித்து, இவர் பேட்டைக்காரன் கதாபாத்திரத்துக்குச் சரியாக இருப்பார் எனத் தோன்றியதைச் சொன்னேன். அவரும் போட்டோவைப் பார்த்துவிட்டு `சூப்பர். இவர்தான் பொருத்தமா இருப்பார். நான் நடிச்சாலும் இந்த வயசுக்கு மேக்கப்தான் போட்டிருக்கணும்' என்றார். அடுத்து, துரை கேரக்டர். கிஷோர், துரை கேரக்டருக்கு செட் ஆவார் எனத் தோன்றியது. ஆனால், அதில் இரண்டு நெருக்கடிகள் இருந்தன. அதற்கு முதலில் விக்ரம் சுகுமாரனை நடிக்க முடியுமா எனக் கேட்டு, அவரும் `சரி' எனச் சொல்லியிருந்தார். கிஷோரிடம் பேட்டைக்காரனுக்குக் கேட்டுவிட்டு, பின்னர் மாற்றியிருந்தேன். அதனால் அவரிடம் மீண்டும் கேட்க ஒரு தயக்கம் இருந்தது.

மைல்ஸ் டு கோ - 19

ஆனால், துரை கதாபாத்திரத்துக்கு கிஷோர்தான் சரி எனப்பட, இருவரிடம் பேசினேன். இரண்டு பேருமே ஏற்றுக்கொண்டார்கள். துரை கொஞ்சம் இளமையாக இருக்க வேண்டும் என நினைத்தேன். `பொல்லாதவன்' படத்தில் கிஷோர் அவர் இயல்பான தோற்றத்தில் நடித்திருந்தார். `ஆடுகளம்' படத்தில் அவருக்கு விக் வைத்து, கொஞ்சம் இளமையாகக் காட்டினோம். ரத்தினசாமி கேரக்டருக்கு மட்டும் நடிகர் ஃபிக்ஸ் ஆகாமல் இருந்தது. அதற்கு யார் பொருத்தமாக இருப்பார் என எல்லோரும் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். படப்பிடிப்புக்கு பத்து நாட்கள் முன்னர் நாராயணன் (`ஆடுகளம்’ நரேன்) கேட்க, அவரையே நடிக்கச் சொன்னேன். `சரியா வருமா?' என்றார். `சரியாக வரும்' என எனக்குத் தோன்றியதால், அவரை மீசை வளர்க்கச் சொல்லிவிட்டேன்.

`ஆடுகளம்' படத்துக்கு மதுரை ஸ்லாங் வசனம் மிகவும் முக்கியம். எனக்கு அது தெரியாது என்பதால், விக்ரம் சுகுமாரன் நான் எழுதிய வசனத்தை அந்த வட்டார மொழிக்கு மாற்றி எழுதினார்.

அப்போதும் `சரியாக இருக்கிறதா?' என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அந்தச் சந்தேகத்துடனேயே படப்பிடிப்பைத் தொடங்கினோம். `பொல்லாதவன்', 2007 பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கினோம்; `ஆடுகளம்', 2009 பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கினோம். `சேவல்' என்ற தலைப்பு, அப்போது இயக்குநர் ஹரியிடம் இருந்தது.

அவரிடம் பேசிப்பார்த்தோம். நாங்கள் அவரைச் சந்தித்த முன்தினம்தான் அவர் படத்துக்குப் பூஜை போட்டார்.  அதனால் தலைப்பே இல்லாமல் படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டோம். தலைப்பு வைக்கும்வரை `சேவல் கதை' என்றுதான் குறிப்பிடுவோம். பின்னர், பல தலைப்புகளை யோசித்தோம். அதில் `ஆடுகளம்' என்பது சேவல் சண்டைக்கும் பொருந்தியது. அந்தக் களத்தில் பேட்டைக்காரன் எப்படி ஆடுகிறார் என்பதையும் குறிப்பிட்டது. தயாரிப்பாளர் தரப்பில் அதற்கு ஓ.கே சொல்வார்களா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், அவர்களும் `சரி' என்றனர்.

மைல்ஸ் டு கோ - 19

`ஆடுகளம்' படத்தின் ஆரம்பத்தில் ஒரு சேவல் சண்டை நடக்கும். பேட்டைக்காரன் சேவல் ஜெயிக்கும் நேரத்தில் போலீஸ் ரெய்டு வந்துவிடும். அந்தப் பிரச்னைக்காக ஒரு பஞ்சாயத்து நடக்கும். அந்தக் காட்சியைத்தான் முதலில் ஷூட் செய்துக்கொண்டிருந்தோம். ஷூட் தொடங்கிய இரண்டாவது நாளிலேயே ஜெயபாலனுடன் பிரச்னை தொடங்கியது. சினிமா யதார்த்தம் என்பது, நிஜ யதார்த்தத்தில் இருந்து முற்றிலும் வேறானது. இரண்டு வெவ்வேறு தெருக்களில், வெவ்வேறு ஆங்கிள்களில் படம்பிடித்து அதை ஒரே தெருபோல காட்டுவது சினிமா. அது அவருக்குப் புரியவில்லை.

ஒரே காட்சியை இரண்டு வேறு இடங்களில் எடுத்ததால், அவருக்குக் குழப்பம். `நடிகருக்கு அதெல்லாம் தேவை இல்லை. சொல்றதைக் கேட்டு நடிங்க’ என்றேன். `அப்படி எல்லாம் என்னால புரியாம நடிக்க முடியாது’ என்றார். ஆந்த்ரபாலஜிஸ்ட் (மனித இன இயல்) ஆன அவருக்கு, சினிமாவின் இமேஜினரி லைன் பற்றி சொல்லித்தர, போதிய அவகாசம் இல்லாமல்போனது எங்களின் தவறுதான். முதல் ஷெட்யூல் 16 நாட்கள் முடிந்திருந்தபோது, தனுஷ் அவசரமாக சென்னை வரவேண்டியிருந்தது.

அவர் இல்லாமல் நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். அதோடு அந்த ஷெட்யூலை நிறுத்திவிட்டு எடுத்தவரை எடிட் செய்ய ஆரம்பித்தோம். `பொல்லாதவன்' படத்தில் அசோசியேட்டாக இருந்த கிஷோர்தான் `ஆடுகளம்' படத்தின் எடிட்டர். எடிட் செய்து பார்த்ததில் பஞ்சாயத்து சீன் மட்டும் 29 நிமிஷம். 20 நாட்கள் எடுத்த மொத்த ஃபுட்டேஜ் 45 நிமிடங்கள் வந்திருந்தது. எடுத்தவரை போட்டுப் பார்த்தோம். என்னுடன் ரஃப் கட் பார்த்தவர்கள் எல்லோரும் வெளியே சென்றுவிட்டார்கள்.

நான் மட்டும் உள்ளே, தனியே யோசித்துக்கொண்டி ருந்தேன். `பொல்லாதவன்' மூலமா ஓர் அங்கீகாரம் கிடைச்சிருக்கு. அதைவெச்சு என்னைக்காவது ஒரு நல்ல சினிமா எடுத்திடலாம்னு நினைச்சிட்டு இருந்தோம். இந்தப் படம் இப்படி நம்ம கை மீறி போயிடுச்சே. ஒரு நொடிகூட கனெக்ட் பண்ணிக்க முடியாம ஏதோ ஒண்ணா இருக்கே' எனத் தோன்றியது. வாழ்க்கையே முழுவதுமாக என் கையைவிட்டுத் தொலைந்துபோனதுபோல் உணர்ந்தேன்!.

- பயணிப்பேன்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan