மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200  ராமமூர்த்தி

ரிட்டையர்ட் லைஃப்... வெறும் ஓய்வுக் காலம் அல்ல!

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நடந்த என் தம்பி மகனின் திருமணத்துக்குச் சென்ற நான் அங்கு சில காட்சிகளைக் கண்டு மிகவும் ஆச்சர்யப்பட்டேன். வேலையிலிருந்து ஓய்வுபெற்ற ஆண்கள், பெண்கள் அனைவரும் வீட்டு வேலைகள் செய்வது, தோட்டப் பராமரிப்பு, சமையல் செய்வது என பல விதங்களில் தங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்கிறார்கள். மேலும் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் பொது நூலகம் சென்று வசதியற்றவர்கள், முதியோர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கிறார்கள். அங்கு வரும் வசதியற்ற குழந்தைகளுக்கு புத்தகங்கள் படித்துக்காட்டி, தேவையான விளக்கங்கள் கொடுக்கிறார்கள். தங்களிடம் உள்ள புத்தகங்களையும் இலவசமாக லைப்ரரிக்கு கொடுத்து உதவுகிறார்கள்.

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒரு காலத்தில் நம் நாட்டிலும் சீனியர்கள் இப்படித்தான் இருந்தார்கள். இப்போதோ பெரும்பாலானவர்கள் பார்க், பீச் என்றே நேரத்தைக் கழிப்பதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர். அனைவருமே பழையபடி மாறலாமே!

- மாலதி நாராயணன், பெங்களூரு

கலங்கவைத்த கண்டக்டர்!

நாங்கள் குடும்பத்துடன் பேருந்தில் பயணம் செய்தோம். பேருந்தில் ஏறுவதற்கு வயதான பாட்டி ஒருவரும், கர்ப்பிணிப் பெண் ஒருவரும் முயற்சித்தபோது கண்டக்டர் ``நேரமாயிடுச்சு... அடுத்த பஸ் பின்னாடி ஃப்ரீயா வருது. அதுல வாங்க’’ எனக் கூறி, பஸ்ஸை எடுக்க விசில் அடித்துவிட்டார். இவரைப் போலவே பின்னால் வரும் பேருந்துகளை நடத்திச் செல்பவர்களும் ஏற்றிச் செல்லவில்லை எனில் அவர்கள்  பாடுதான் என்ன? என் மனது மிகவும் சங்கடப்பட்டது.

அனுபவங்கள் பேசுகின்றன!

பணம் செலவழித்து காரில் செல்ல வசதியில்லாதவர்களை, நடப்பதற்கே சிரமப்படுபவர்களை இப்படி அலட்சியமாக நடத்துவது மனிதநேயத்துக்கு எதிரானது அல்லவா?! சம்பந்தப்பட்டவர்கள் கட்டாயம் திருந்த வேண்டும்!

- என்.லக்ஷ்மி, திருச்சி

நோட் பண்ணினால்... நோ டென்ஷன்!

சமீபத்தில் என் தோழியின் வீட்டுக்கு சென்றிருந்தேன். தேநீர் தயாரிக்க சமையலறைக்குச் சென்றாள். நானும் பேசிக்கொண்டே சமையலறையில் நின்றுகொண்டிருந்தேன். அங்கே ஒரு ஆணியில் மாட்டியிருந்த குட்டி நோட்புக்கில் ஏதோ எழுதினாள். ‘’என்ன எழுதுகிறாய்?” என்று கேட்டேன். ‘’சமையற்கட்டில் உள்ள பலசரக்குப் பொருட்களில் ஏதாவது தீர்ந்துவிட்டால், உடனே இதில் தேதியிட்டு எழுதிவிடுவேன். பின்னர் வெளியில் செல்லும்போது அந்த பேப்பரைக் கிழித்து எடுத்துச் சென்று அதில் குறிப்பிட்டுள்ள பொருட்களை வாங்கி வந்து விடுவேன். இதனால் சமைக்கும்போது தேவையான பொருள் இல்லாத டென்ஷன் ஏற்படாது”  என்று விளக்கம் கொடுத்தாள்.

அனுபவங்கள் பேசுகின்றன!

இப்போது நானும் அந்த முறையை பின்பற்ற ஆரம்பித்துவிட்டேன்.

- வளர்மதி, போளூர்

பரிகாரம்... உபத்திரவமாக வேண்டாமே!

வெள்ளிக்கிழமை இரவானால் பெரும்பாலான கடைகளை மூடுவதற்கு முன் திருஷ்டி நீங்குவதற்காக, சூடம் கொளுத்தி வைப்பது வழக்கம். பெரிய நகைக்கடைகள், பலசரக்குக் கடைகள், ஜவுளி கடைகளில் இதையும் பெரிய விதமாக செய்ய நினைத்து, பனை ஓலைப் பெட்டிகளில்... சூடத்தோடு உப்பு, மிளகாய் வற்றல் போன்றவற்றையும் சேர்த்து எரிக்கிறார்கள். மிளகாய் நெடி, வீதியில் செல்பவர்களை துன்புறுத்துவதோடு, சுற்றுப்புறச் சூழலையும் மாசுபடுத்துகிறது. அதோடு ஓலைப் பெட்டி எரிந்து, நீறுபூத்த நெருப்பாக இருப்பது தெரியாமல், மிதிப்பவர்களின் கால்களையும், காலணிகளை மீறி பதம் பார்க்கிறது.

அனுபவங்கள் பேசுகின்றன!

கடைக்கார சகோதரர்களே... தயவுசெய்து எளிய முறையில் திருஷ்டிப் பரிகாரம் செய்து, மற்றவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுவதை தவிருங்களேன்!

- என்.சாந்தினி, மதுரை