சினிமா
Published:Updated:

முக்குளி வாத்துகளின் கதை : சிறுகதை

முக்குளி வாத்துகளின் கதை : சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
முக்குளி வாத்துகளின் கதை : சிறுகதை

23.06.2013 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை...

சின்ன முட்டிகளின் மீது நெற்றியை வைத்துக்கொண்டு ஒரு நத்தை ஊர்வதைப் போல மெள்ள நகர்ந்துகொண்டிருக்கும் இந்தத் தினங்களின்மீது, குட்டி முயல் பார்வைகொண்ட தேவதையாகக் காத்திருக்கும் என் பரிபூரணமான ஸ்ரீ குட்டியே...

நீ என் வேர்களுக்கு இடையேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். நம் மண் எத்தனை செழிப்பானது என்பதற்கு, நம் முற்றத்தில் திடீரென முளைத்திருக்கும் இந்த மாமரமே சாட்சி.

நீ கொஞ்சம் அப்படியே இரு. அதோ மெள்ள ஊர்ந்துபோகும் அந்த நத்தையைப் பார்த்துக்கொண்டே இரு. அது தன் கூடு அடைவதற்குள், நான் உனக்கு ஒரு கதை சொல்ல வேண்டும். பதற்றப்படாதே... கதை என்றதும் நான் உனக்கு அடிக்கடி சொல்லும் கரப்பான்பூச்சிகளின் கதைகளை நினைத்துச் சோர்ந்துவிடாதே. இந்தக் கதை இதுவரை நீ கேட்காத முக்குளி வாத்துகளின் கதை. வேண்டுமானால் என் மடியில் உன் தலையைச் சாய்த்துக்கொள். என் உடலை வளைத்து, உன் நீள நதிக் கூந்தலுக்குள் முகம்புதைத்து, குளிர்ந்தபடிகூட இந்தக் கதையை என்னால் சொல்ல முடியும். அப்படித்தான் இந்தக் கதையை நான் உனக்குச் சொல்ல வேண்டும்; அப்படித்தான் நீ இந்தக் கதையைக் கேட்கவும் வேண்டும். இன்னும் பத்து தினங்களில் நீ என் மனைவி ஆகப்போகிறாய். என் எல்லாமும் ஆகப்போகிறாய். என் கதைகளின் தனித்த நாயகி ஆகப்போகிறாய். என் எல்லாக் கதைகளையும் நீ தெரிந்திருக்க வேண்டும்.

முக்குளி வாத்துகளின் கதை : சிறுகதை
முக்குளி வாத்துகளின் கதை : சிறுகதை

ஒரே ஒரு செவ்வாய்க்கிழமையின் கதையைத் தவிர என் எல்லாக் கிழமைகளின் கதைகளையும் நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். நான் சொல்லத் தயங்கிய அந்தச் செவ்வாய்க்கிழமை கதையையும் நீ இன்று கேட்டுவிடு. ஆமாம்... எந்த எடையுமற்று உன்னுடன் நான் சீக்கிரமாகப் பறக்க வேண்டும்.

கேட்கிறாயா... கண்களை மூடிக்கொள்; கதையைக் கேள்; உறக்கம் வந்தால் உறங்கியபடிகூட நீ கேள். இது என் கதை. நான் உன்னிடம் அந்த நத்தையைப்போல மெள்ள ஊர்ந்துவந்து, பத்திரமாகச் சேர்ந்த கதை. உன் இதயத்திடமே நான் நேரிடையாகச் சொல்லவேண்டிய கதை. முக்குளி வாத்துகளின் கதை.

ஒரு செவ்வாய்க்கிழமை இரவில், எப்போதும் ரயிலின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் ஓர் ஊரில், ஒரே ஒரு மின்குமிழின் மஞ்சள் வெளிச்சம் மட்டுமே நிரம்பியிருக்கும் ஒரு சின்ன அறைக்குள், நான் அன்று பெரும் காதல்வயப்பட்ட வனாக இருந்தேன். அப்போது என்னோடு அவளும் இருந்தாள். அவள் பெயர் ஜோ.

ஜோ எனப் பெயர் சொன்னதும், நீயாக உனக்குத் தெரிந்த ஏதேனும் ஒரு பெண்ணின் முகத்தை நினைத்துக்கொள்ளாதே. அவளுடைய முகத்தில் இன்னொரு பெண், இந்த உலகத்தில் நிச்சயம் இல்லை என்றுதான் நான் நம்பிக்கொண் டிருக்கிறேன். அந்த நம்பிக்கை அப்படியே இருப்பதுதான் எனக்கும் உனக்கும் நல்லது.

நான் கல்லூரியில் சேர்ந்த மூன்றாம் நாள். நதியில் குதித்து வேகமாக அக்கரைக்கு நீந்திச் செல்லும் வழியில், தப்பிய ஒரு மான்குட்டிபோல நான் அவளை நேருக்குநேர் சந்தித்தேன்.

நான் அவசரமாக வகுப்புக்குள் நுழைந்தபோது, அவள் அவசரமாக வகுப்பில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தாள். சினிமாவில் நடப்பதைப்போல நாங்கள் ஒருவரையொருவர் இடித்துக்கொள்ள வில்லை. அவளின் சிவப்பு நிற ஆடையில், அவளுக்குத் தெரியாமல் எழும்பிநின்ற வெளிர் நிற சிறு நூல் மட்டும் என் பெருவிரல் உரச அவள் விலகிப்போனாள். பின்னர் அவள் திரும்பி வரும்வரை, நான் அதே திசையை நோக்கி அதே பார்வையில் இருந்தேன். எங்கோ போய்  தண்ணீர் குடித்துவிட்டு உதடுகள் மட்டும் நனைந்திருந்த முகத்தோடு, அவள் திரும்பிவந்து அவளது இருக்கையில் மூச்சிரைக்க அமர்ந்தபோதுதான் நான் கொஞ்சம் இளைப்பாறிக்கொண்டேன். அப்படி ஒரு பரிபூரணமான முகம் அவளுக்கு.

சொன்னால் நம்பமாட்டாய் ஸ்ரீ! அவளிடம் முதன்முதலில் நான் பேசிய வார்த்தைகள் எதுவும் எனக்கு நினைவில் இல்லை. என்ன பேசியிருப்பேன்? உனக்கு அதை எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று, என் மண்டையை உடைத்து, நொறுக்கி, பிளந்து பார்த்துவிட்டேன். எதுவும் சிக்கவில்லை. மற்ற தோழிகளிடம் பேசியதைப்போல மிகச் சாதாரணமான வார்த்தைகளைத் தான் அவளிடமும் பேசியிருப்பேன் போல. ஆனால், அவள் என்னிடம் பேசிய முதல் வார்த்தைகள் இன்னமும் இருக்கின்றன. அதே பரவசத்தோடு குளிர்ந்தபடியே அந்த வார்த்தைகள் இன்னும் என்னிடத்தில் இருக்கின்றன. அது மட்டும் எப்படி என்று கண்களை உருட்டிக்கொண்டு யோசிக்கிறாயா? அவள் பேசிய வார்த்தைகள் அப்படியொன்றும் அவ்வளவு பிரத்யேகமானது அல்ல... ஆனால் விநோதமானது.
``உங்கள் வீடு கடலுக்குப் பக்கத்துலயா இருக்கு?’’

``இல்லையே... ஏன்?’’

``இல்ல... சுனாமி இங்கேயும் வந்துகிட்டு இருக்காம். எல்லாரும் சொல்றாங்க. அதான் கேட்டேன்.’’

சுனாமி எனும் சொல் பெரும்சூறாவளிபோல நம் மனிதர்களைச் சுழற்றியடித்த அன்றுதான், அவளாகவே என்னிடம் வந்து பேசினாள். அவள் பேச்சின் ஒவ்வொரு வார்த்தையிலும், உயிர் மீதான கருணை நிரம்பியிருந்தது . சுனாமியைப் பற்றி, அது திடீரென எழுப்பிக்கொண்டுவருகிற பெரிய அலைகளைப் பற்றி, கடவுள் இயேசு பிறந்த நாள் அன்றே மனிதர்களைக் கொல்லவருகிற அதன் துணிச்சல் பற்றி, அதன் அழிவுகளைப் பற்றி நாங்கள் நிறையப் பேசினோம். எங்களைப்போலவே அதுவரை பேசாதவர்கள்கூட அன்றைக்குப் பேசினார்கள். அதுமட்டும் அல்ல... அன்று அலைகளைவிட வேகமாக கடலுக்குள் இருந்து எழுந்துவந்த வதந்திகளைக் கேட்டு, வகுப்பறைக்குள் கண்ணீர்விட்டு அழுத என் நிறையத் தோழிகளில் அவளும் ஒருத்தி.

`அழத் தெரிந்தவர்களிடம் உடனே நெருக்கமாகி விடுவது, உன் ஆகச் சிறந்த கெட்ட பழக்கங்களில் ஒன்று’ என்று நீயே ஒருமுறை சொல்லியிருக்கிறாய் தானே? ஆனால், அந்தக் கெட்ட பழக்கத்தால்தான் நாங்கள் நெருக்கம் ஆனோம். புளியம்பட்டி தேவாலயத்தில் இருந்து ஆசீர்வதிக்கப்பட்ட அப்பத்தைக் கொண்டுவந்து எனக்கு மட்டும் தரும் அளவுக்கு, ஜோ என் ப்ரியப்பட்ட தோழி ஆனாள்.  அதுவரை எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்காத எங்கள் பசுமாட்டின் சீம்பாலைக்கூட, அம்மாவை வற்புறுத்திக் கடும்புசெய்து அதைக்  கூட்டாளிகள் யாருக்கும் தெரியாமல் கொண்டுபோய், ஜோவின் உள்ளங்கைகளில் கொட்டி, அப்படியே லபக்கென நாக்கைச் சுழற்றி, தின்னச் சொல்கிற அளவுக்கு நானும் அவளுக்கு நல்ல தோழனாகிப்போனேன். என்னைத் தேடுகிறவர்கள் அவளிடம் போய், நான் ஒளிந்திருக்கிற எல்லா முட்டுச் சந்துகளையும் கேட்டுத் தெரிந்துகொள்வதும்... அவளைத் தேடுகிறவர்கள் என்னிடம் வந்து அவளின் எல்லாப் பாதைகளையும் கேட்டுத் தெரிந்துகொள்கிற அளவுக்கும், நாங்கள் நல்ல நண்பர்களாக எங்கள் கல்லூரியில் கொண்டாடப் பட்டோம்.

அவள் கல்லூரிக்கு வராத நாளில் எந்த வாய்க்காலிலும் நீந்த விரும்பாத என் முக்குளி வாத்துகளை விரட்டிக்கொண்டுபோய், கல்லூரியில் இருக்கும் கல்வெட்டான் குழிக்குள் நான் நீந்தவிட்ட கதையையும்,  நான் கல்லூரிக்குப் போகாத நாளில் அவள் போய் தெற்கு பஜார் தேவாலயத்தில் உருகும் மெழுகுவத்திகளோடு இன்னொரு மெழுகுவத்தியாக உருகி நின்ற கதையையும், நண்பர்கள் வேடிக்கையாகச் சொன்னபோதுதான் எங்களின் ப்ரியம்  எங்களை நிறுத்திவைத்திருக்கும் மிகப்பெரிய ஆலமரத்தின் நிழலை நாங்கள் உணரத் தொடங்கினோம்;

அந்த நிழலில் நின்றுதான் தைரியமாக நாங்கள் எல்லாவற்றையும் பேசத் தொடங்கினோம்... எங்களுக்குள் இருக்கும் எல்லாவற்றையும்.

``உனக்கு எப்படி என் மீது இவ்வளவு ப்ரியம்?’’

``நான் திரும்பிப் பார்க்கிறப்பலாம் சிரிச்சிக் கிட்டிருக்கிற பெண்ணாவோ, அழுதுகிட்டிருக்கிற பெண்ணாவோ நீ தெரிஞ்ச. அதனாலகூட இருக்கலாம்.’’

``என்னை முதல்முதல்ல கல்லூரியில பார்த்தப்போ நீ என்ன நினைச்ச? மறைக்காம உண்மையைச் சொல்லு.’’

``அட... இங்க பாருடா, நம்ம காமாட்சி மாதிரியே இந்த காலேஜ்ல ஒரு பொண்ணு படிக்குதுனு நினைச்சேன்.’’

``அது யாரு காமாட்சி... உங்க மாமா பொண்ணா?’’

``ஐயோ... அது எங்க வீட்டு கன்னுகுட்டி.’’

``கன்னுக்குட்டியா... கொன்னுடுவேன். உங்க கன்னுக்குட்டிக்கும் எனக்கும் அப்படி என்ன அவ்வளவு ஒற்றுமை?’’

``இரண்டு பேரையும் பார்த்துக்கிட்டே இருக்கலாம்.’’

``ஓ... உங்க காமாட்சி. என்னை மாதிரி இவ்வளவு அழகா இருக்குமா?’’

``வேணும்னா ஒருநாள் எங்க வீட்டுக்கு வந்து பாரேன். அப்போதான் உனக்குத் தெரியும்... உன் தங்கச்சி எங்க வீட்ல இருக்கானு.’’

``நீ சொல்றதைப் பார்த்தா, என்னைப் பார்த்த அன்னைக்கே என்னைக் காதலிக்க ஆரம்பிச்சிருப்பபோல இருக்கே?!’’

``பார்த்த அன்னைக்கானு தெரியல... ஆனா, காமாட்சியைப் பார்த்த அன்னைக்கே நான் காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்.’’

``நானும் காமாட்சியும் ஒண்ணுன்னு சொன்ன. அப்புறம் என் மேல மட்டும் காதல் வரலையா?’’

``காமாட்சிக்கிட்ட நான் மட்டும்தான் பேசுவேன். அது தலையை மட்டும் ஆட்டும். அதனால பயப்படாம உண்மையைச் சொல்லிட்டேன். ஆனா, நீ இங்க நல்லா உதட்டைச் சுழிச்சிச் சுழிச்சிப் பேசுறீயே... அதான் பயமா இருக்கு.’’

``என்ன பயம்... என்கிட்ட காதலைச் சொல்றதுக்கா?’’

``நீ `என்னைக் காதலிக்கிறியா?’னு கேட்கிறதுக்கு.’’

``இந்தக் கேள்வியைக் கேட்கிறதுக்கு உனக்கு நாலு வருஷம் ஆகியிருக்கு... போடா லூஸு.’’

எங்களுக்குத் தெரியாமல் எங்களுக்குள் இருந்த காதலை யாரையும் துன்புறுத்தாத ஒரு மாலைப்பொழுதில், இப்படித்தான் நாங்கள் வெளிக்கொண்டுவந்தோம். இனி எல்லா நாட்களும் இப்படியேதான். எங்கள் சூரியன் சிவப்பும் மஞ்சளும் கலந்த ஓர் ஆரஞ்சுமிட்டாயின் ஒளியைக் கொடுத்தபடியே இருக்கும் என்ற நம்பிக்கையில், நாங்கள் அன்று முதன்முறையாக முத்தமிட்டுக்கொண்டோம். ஆனால், அவ்வளவு சீக்கிரமாக எங்கள் ஆரஞ்சுமிட்டாய் சூரியன் எங்கோ வழிதவறி, மலைக் குன்றுகளுக்குள் விழுந்து, உடைந்து, நொறுங்கி, எதுவுமாக  இல்லாமல்போகும் என நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை ஸ்ரீ.

முக்குளி வாத்துகளின் கதை : சிறுகதை
முக்குளி வாத்துகளின் கதை : சிறுகதை

அன்று நல்ல மழை வரும் என எல்லாரும் நம்பியிருந்தார்கள். தெருவில் சிறுவர்கள்கூட ஒரு மழைப்பாடலைச் சத்தம்போட்டுப் பாடியபடி விளையாடிக்கொண்டிருந்தார்கள். என் அறையில் நானும்கூட மழைக்காக ஜன்னல் அருகே வெகுநேரம் காத்திருந்தேன். ஆனால், ஆவேசமாக அழுத கண்களோடு அப்போது ஜோதான் வந்துசேர்ந்தாள். ஒருமுறை வயலில் இறங்கியதற்காக சுப்பிரமணியன் என்கிற குடிகார முட்டாள் ஒருவன், எங்கள் காமாட்சிக் கன்னுக்குட்டியை, புளியம் விளாரால் அடித்து விரட்டிக்கொண்டு வந்தபோது, அதன் கொழுத்த முதுகில் தெரிந்த வார் தடம் அத்தனையும், ஜோவின் கன்னத்தில் அன்று அப்பட்டமாகத் தெரிந்தது எனக்கு. வந்த மழை எங்கோ போய்விட்டது.

``என்னாச்சு ஜோ... இவ்வளவு நேரத்துக்கு இங்க வந்திருக்க?’’

``நான் உன்னைக் காதலிக்கிறது... எங்க வீட்டுக்குத் தெரிஞ்சுபோச்சு. உன் போட்டோ, லெட்டர் எல்லாத்தையும் எங்க அப்பா பார்த்துட்டார்.’’

``அதை விடு... உன்னை அடிச்சாங்களா?’’

``இல்ல... எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க. எங்க மாமா பையன். இங்க டவுன்லதான் பாலிடெக்னிக்ல படிச்சிக்கிட்டிருக்கான்.’’

``சரி... அதுக்கு உடனே இந்த நேரத்துல வீட்டைவிட்டுக் கிளம்பிவந்திட்டியா... லூஸா நீ?’’

``ஆமாம் லூஸுதான். நாளைக்கு எனக்குக் கல்யாணம்... சாலைகுமாரசாமி கோயில்லவெச்சு. அதான் உங்கிட்ட சொல்லிட்டுப்போகலாம்னு வந்தேன்.’’

``நாளைக்கேவா... இப்போ என்ன பண்றது?’’

``உனக்கு என்ன தோணுதோ அதைப் பண்ணு. ஆனா, அதை உடனே இப்பவே பண்ணு. இனி நான் உன்னவிட்டு எங்கேயும் போகமாட்டேன்.’’

அவ்வளவுதான்... அன்று இரவே நாங்கள் அந்த நகரத்தில் இருந்து வெளியேறிவிட்டோம். எங்கே போவது எனத் தெரியவில்லை. எல்லா வீட்டின் கதவுகளும் அன்று ஒருநாள் மட்டும் அடைக்கப் பட்டிருந்தன. பாவம், எல்லோருமே கதவை உள்பக்கமாக அடைத்துகொண்டு சாவியைத் தூக்கி ஜன்னலின் வழி சாக்கடையில் வீசிவிட்டார்கள் என நினைத்துக் கொண்டேன். ஆனாலும் நாங்கள், எங்கள் நதியில் வலை தப்பிக் கரையேறுகிற கெண்டை மீன்களைப்போல திரும்பி நீந்திக்கொண்டிருந்தோம். அதுவரை ஆலமரத்தின் நிழலில் நின்று கேட்காத சில கேள்விகளை அப்போதுதான் ஜோ என்னிடம் கேட்கத் தொடங்கினாள்.

``நீ என்ன சாதி?’’

``ஏன் இந்தக் கேள்வியை இப்போ கேட்கிற?’’

``எங்கிட்ட கேட்டு என்னை அடிச்சாங்க. `எனக்குத் தெரியலை’னு சொன்னேன். யாரும் நம்பலை. அப்புறம் யாருக்கோ போன் பண்ணிக் கேட்டுட்டு வந்து இன்னும் வேகமா அடிச்சாங்க. அதான் இப்போ கேட்கிறேன்...

நீ என்ன சாதி?’’

``நான் உங்க சாதி இல்ல. அவ்வளவுதான் சொல்ல முடியும்.’’

``அப்போ எங்களைவிட கீழ் சாதியா?’’

``அப்படி எல்லாம் கிடையாது. நீ வாயை மூடு. இன்னொரு முறை இதைப் பத்தி நீ கேட்டேன்னா பஸ்ல இருந்து குதிச்சிடுவேன்... பராவாயில்லையா?’’

``சரி... எதுவாவும் இருந்துட்டுப் போ. ஆனா என்கூடவே இரு. ஆமா... இப்போ என்னை எங்க கூட்டிட்டுப் போற. ஏன் உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலை?’’

``எங்களோடது குடிசை வீடு. யாராவது பீடி குடிச்சிட்டு ஊதி அணைச்ச தீக்குச்சியைத் தூக்கிப்போட்டாலும், உடனே எரிஞ்சு சாம்பலா போயிடும். உங்க அப்பா அடிக்கடி சுருட்டு குடிப்பார்னு நீதானே சொல்லிருக்கே.’’

``அப்போ நாம எங்கேதான் போகப்போறோம்?’’

``தெரியலை... திருச்சியில ஒரே ஒரு ஃப்ரெண்ட் இருக்கான். அவனை நம்பிப் போறோம். அவன் இதுவரை என்னைப் பார்த்து ஒருமுறைகூட முறைச்சது கிடையாது. எப்பவும் சிரிக்கிறவன். அதனால பயப்படாத.’’

திருச்சிக்கு நாங்கள் வந்துசேர்ந்தபோது, துயரமான செவ்வாய்க் கிழமை தொடங்கிவிட்டது ஸ்ரீ. நல்லவேளை நான் பயந்து கொண்டிருந்த மாதிரி இல்லை. அந்தச் சின்ன வீட்டில் நண்பன் கணேஷ் எங்கேயும் போய்விடாமல் இருந்தான். அவன் எனது பள்ளி நண்பன். அந்த நேரத்தில் ஒரு பெண்ணுடன் என்னைப் பார்த்ததும் பயத்தில் பதறுவான் என நினைத்தேன். ஆனால், அவனோ விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டான். நான் சின்ன வயதில், என்னுடன் ஆடு மேய்த்த கவிதாவை இப்படி ஒருநாள் இழுத்துக்கொண்டு ஓடிவருவேன் என அவன் நம்பியிருந்தானாம். அப்புறம் ஜோ யார் என்றும், அவள் என்ன சாதி என்றும், அவளது அப்பா யார் என்றும் நான் சொல்லி முடித்ததும் பாவம் அவனும் அடங்கிப்போய்விட்டான்.

``மச்சான் எனக்கென்னமோ இது சரியாப்படலை. அவனுங்க வெறிபிடிச்சவனுங்க. பார்த்து யோசிச்சுக்கோ. இந்நேரம் கண்டிப்பா உங்க வீடு புகுந்து தேட ஆரம்பிச்சிருப்பானுங்க. உங்க அம்மா அப்பாவுக்கு என்னாச்சோ.’’

``அதெல்லாம் ஒண்ணும் ஆகாது... நாங்க அங்க இல்லாதப்போ அவங்களை யாரும் ஒண்ணும் செய்ய முடியாது. நம்ம ஊர்க்காரங்க விட்ருவாங்களா என்ன? அதை விடு. என்னை நம்பிவந்துருக்கா. என்ன பண்ணலாம் அதைச் சொல்லு?’’

``தெரியலை மச்சான். எங்க அம்மா அப்பா நாளைக்குச் சாயங்காலம் வந்துடுவாங்க. அதுவரைக்கும் இங்க இருங்க. அதுக்கு அப்புறம் கொஞ்சம் பணம் புரட்டித்தர்றேன்... வேற எங்கேயாவது தூரமாப் போய் இருந்துக்கங்க.’’

கதையின் தொடக்கத்தில் சொன்னேனே...

ஒரே ஒரு மின்குமிழின் மஞ்சள் வெளிச்சம் மட்டும் நிரம்பிய ஒரு சின்ன அறை. அந்த அறைக்குள் இருவரும் இப்போது வந்துவிட்டோம் ஸ்ரீ.

அவள் அந்த அறையையும் அதற்குள் பரவியிருந்த வெப்பத்தையும் பார்த்து ரொம்பவே பயந்தாள். நான் பயந்துவிடக் கூடாது என அதுவரை காட்டாமல் இருந்த அவள் முதுகை அப்போதுதான் எனக்குக் காட்டினாள். நான் நிஜமாகவே அதைப் பார்த்ததும் ஒடுங்கிப்போய்விட்டேன் ஸ்ரீ.  தீமூட்டிக் குழலை வைத்து, கண்களை இறுக மூடிக்கொண்டு, அவள் முதுகில் ஓங்கி அடித்திருப்பார்கள்போல ரத்தம் கட்டி வீங்கிப்போயிருந்தது. அவள் வலியைக் குறைப்பதற்காக நான் என்ன செய்தாலும் அவள் அழுதுகொண்டே இருந்தாள்.

முக்குளி வாத்துகளின் கதை : சிறுகதை
முக்குளி வாத்துகளின் கதை : சிறுகதை

``என் அப்பா என்னை இப்படி அடிச்சிருந்தா எனக்கு இவ்வளவு வலிக்காதுடா. ஆனா யார்னே தெரியாத கட்சிக்காரன் ஒருத்தன்கிட்ட தீமூட்டிக் குழலைக் கொடுத்து அடிக்கச் சொன்னாங்க பார்... அதான் ரொம்ப வலிக்குது” - அவள் சொன்னபோது நானும் அழுதுவிட்டேன் ஸ்ரீ.

``நான் கூப்பிட்டவுடனே அப்படியே வந்துட்டியே... இப்போ என்ன பண்ணலாம்?’’

``தெரியலை... நீ சொல்லேன்.’’

``நாம ஏதாவது ஒரு கோயில்ல போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு, உங்க வீட்டுக்குப் போனா உங்க அம்மா - அப்பா ஏத்துக்குவாங்களா?’’

``கொஞ்சம் அழுவாங்க; பயப்படுவாங்க; ஆனா ஏத்துக்குவாங்க.’’

``அப்போ நாம அங்க போகலாம்.’’

``போகலாம்... ஏத்துக்குவாங்க. ஆனா உங்க அப்பாக்கிட்டே இருந்து, அவங்களால நம்மளைக் காப்பாத்த முடியாது.’’

``வேற எங்கேயாவது போய் யாருக்கும் தெரியாம சந்தோஷமா வாழ முடியாதா?’’

``உங்க அப்பா கட்சிக்காரங்க எல்லா ஊர்லயும் இருப்பாங்க. எப்படியும் கண்டுபிடிச்சுடுவாங்க.’’

``இப்போ என்னதான் பண்றது? நான் போய் அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டு பிறக்கிற முதல் பிள்ளைக்கு உன் பேரைவெச்சு தாலாட்டட்டுமா... சொல்லு?’’

``எதுனாலும் நீதான் சொல்லணும்.’’

``ஏன்...  நான் என்ன சொன்னாலும் கேட்பியா நீ...’’

``சொல்லேன்... இன்னைக்குக் கேட்கிறேன்.’’

``செத்துப்போயிடலாமா?’’

``ம்ம் சரி...’’

``ஏய்... நான் விளையாட்டுக்குச் சொல்லலை. நிஜமா சொல்றேன். என் முதுகில ஒருத்தன் ஓங்கி ஓங்கி அடிச்சப்போ, எங்க அப்பாவும் அம்மாவும் என்னைப் பார்த்த பார்வையை நினைச்சா எனக்கு உடனே செத்துப்போகணும்னு தோணுது. ஆனா, அதுவும் உன்கூடச் சேர்ந்து சாகணும்னு தோணுது. அதான் சீரியஸா கேட்கிறேன்.’’

 ``நானும் சீரியஸாத்தான் சொல்றேன். உனக்கு அதுதான் ஆசைனா செத்தேபோயிடலாம்.’’

``எப்போ... எப்படி?’’

``நாளைக்கு எங்கேயாவது போய் எப்படினாலும்...’’

``நிஜமா என் கண்ணைப் பார்த்துச் சொல்லு... செத்துப்போயிடலாமா?’’

``நிஜமா உன் முதுகைப் பார்த்துச் சொல்றேன்... செத்துப்போயிடலாம்.’’

``அப்போ சரி... நீ உன் வீட்டுக்கு ஒரு லெட்டர் எழுது... உங்க அம்மா அப்பா பாவம். நான் என் வீட்டுக்கு ஒரு லெட்டர் எழுதுறேன்... என் காதல் எவ்வளவு பெருசுனு.’’
 
தற்கொலைக் கடிதம்.

ஆமாம் ஸ்ரீ... ஒரு பெரிய நோட்டின் தாள்களைக் கிழித்து, தற்கொலைக் கடிதங்களை நாங்கள் அக்கறையுடன் எழுதத் தொடங்கினோம். அவள் சீக்கிரமாகவே எழுதிமுடித்துவிட்டாள். நான்தான் ரொம்பத் தாமதமாக எழுதிமுடித்தேன். ஆனால், பாவம்... அவள் அதற்குள் உறங்கிப்போய்விட்டாள்.  அவளை நான் எழுப்பவில்லை. உறங்குவதற்கு முன்பாக ஒரே ஒரு பக்கத்தில் அவள் எழுதியிருந்த...

`நீங்கள் என்னை நேசிப்பதைக் காட்டிலும் நான் அவனை அதிகமாக நேசிக்கிறேன். அவனோடு வாழ்வதைத்தான் உங்களால் தடுக்க முடியும். அவனோடு இறப்பதை யாராலும் தடுக்க முடியாது. எங்கள் சாவுக்கு உங்கள் சாதியைத் தவிர வேறு யாரும் காரணம் அல்ல.

இப்படிக்கு

உங்கள் அன்பு மகளல்ல மகள்

  ஜோ.’

என்கிற வரிகளை வாசித்து முடித்ததும் அழ வேண்டும் எனத் தோன்றவில்லை. மாறாக அவளை முத்தமிட வேண்டும்போல் இருந்தது... முத்த மிட்டேன். அப்படியே அவளின் உள்ளங்கையை இறுகப் பற்றிக்கொண்டு, அங்கேயே அவளுக்கு அருகிலேயே உறங்கிப்போனேன்.

புதன்கிழமை விடிந்தது. செவ்வாய்க்கிழமை முழுவதும் காணாமல்போன எங்கள் ஆரஞ்சுமிட்டாய் சூரியன், எங்கிருந்தோ தப்பிப் பிழைத்து எங்கள் அறைக்குள் வந்ததைப்போல் இருந்தது. நான் எழுவதற்கு முன்னரே எழுந்த ஜோ குளித்து முடித்து, கல்லூரிக்குக் கிளம்பப் போகிறவளாக உற்சாகமாக இருந்தாள். அவள் கையில் என் கடிதம் இருந்தது. என்னையும் சீக்கிரமாகக் கிளம்பச் சொன்னாள். நான்  குளிக்கும்போது வெளியே அவள் ஒரு பாடல்கூடப் பாடியதைப்போல் இருந்தது. மரணத்தின் கரங்களைப் பற்றிக்கொள்வதற்காக ஜோ ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறாள் என நினைத்துக்கொண்டேன். என் தலையை நீர் நனைக்கத்தொடங்கியதும் நானும் சாவுக்கு ஆயத்தமானேன். நண்பனிடம் கொஞ்சம் பணத்தை வாங்கிக்கொண்டு, நாங்கள் இருவரும் கிளம்பி, பேருந்து நிலையத்துக்கு வந்துவிட்டோம். அவள்தான் முதலில் பேசினாள்.

``திருநெல்வேலி போற பஸ் எங்கே நிற்கும்னு பாரு...’’

``திருநெல்வேலிக்கா... எதுக்கு அங்கே போய் சாகணுமா என்ன?’’

``நாம சாகலை. நான் என் வீட்டுக்குப் போகப்போறேன்.’’

``என்ன சொல்ற நீ... வீட்டுக்குப் போகப்போறியா? என்னாச்சு உனக்கு... அப்போ நான்?’’

``நீ எங்கே வேணாலும் போ... உனக்குப் பிடிச்சது எல்லாத்தையும் செய். காலேஜ்ல போய் படி. பெரிய ஆளாகு. அம்மா அப்பாவைச் சந்தோஷமா வெச்சுக்கோ.’’

``ஏய்... என்ன ஆச்சு உனக்கு? பைத்தியம் மாதிரி பேசுற. நீதானே `ஒண்ணா வாழணும் இல்லைனா ஒண்ணா சாகணும்’னு சொன்ன அப்புறம் என்ன?’’

``ம்ம்... இப்போ தனித் தனியா வாழுவோம். எங்கே இருந்தாலும் நீ வாழணும்... சரியா?’’

``ஏன் இப்படிப் பேசுற?’’

``என் லெட்டரை நீ படிச்சியா?’’

``ஆமா... படிச்சேன்.’’

``என்ன தோணுச்சு உனக்கு?’’

``உன்கூட சாகணும்னு தோணுச்சு.’’

``நான் உன் லெட்டரைப் படிச்சேன். எனக்கு சாகணும்னு தோணல. எங்கேயாவது ஒரு மூலையில இந்த உலகத்துல நீ உயிரோடு வாழ்ந்தே ஆகணும்னு தோணுச்சு. ஆமாம்டா நீ ஏன் சாகணும்?
நீ எழுதியிருக்கிறதை யார் படிச்சாலும் உன்னைக் காதலிப்பாங்கடா. அதைப் படிச்சுப் பார்த்ததுக்கு அப்புறம்தான் என்னைவிட உன்னை இன்னும் அதிகமா காதலிக்க நிறையப் பேர் வருவாங்கனு தோணுது. உனக்காக, உன் கொள்ளை வரிகளுக்காக, எவ்வளவோ பேர் எங்கேயோ காத்துக்கிட்டிருக்கிற மாதிரி தோணுது. உன்னை எதுக்குடா நான் சாகடிக்கணும். கொஞ்சம்கூட இரக்கம் இல்லாதவங்களுக்காக நல்ல இதயம் இருக்கிற நாம ஏன்டா சாகணும்? இனிமேல் உருவாகப்போற ஏதோ ஒரு தேசத்துக்கு நீ ராஜாவாகப் போற மாதிரி எனக்குத் தோணுது. நான் போறேன்டா. நீ கவலைப்படாதே. எனக்கு எதுவும் ஆகாது. நான் களிமண் மாதிரி வாழ்றதுதான் அவங்களுக்குக் கௌரவம். நான் போய் களிமண்ணாவே வாழுறேன். என்னை அவங்க என்ன வேணும்னாலும் செஞ்சுக்கிடட்டும்.’’
``ஏய்... லூஸு மாதிரி பேசாத. சரி சாகவேண்டாம். வா எங்கேயாவது போய் வாழலாம்.’’

``சத்தியமா முடியாதுடா. நம்மளைப் பிச்சை எடுக்கக்கூட விடமாட்டாங்க. நான் சொன்னா கேட்பதானே?’’

``ஆமாம்.’’

``அப்படின்னா எதுவும் யோசிக்காம சென்னைக்குப் போ. உன்னை இங்கேயும் இருக்கவிட மாட்டாங்க. நீ என்கிட்ட சொன்ன உன் எல்லாக் கனவுகளையும் அடைய முயற்சி செய்... உன்னால முடியும். ஆனா ஒண்ணு...

நீ எப்போ கல்யாணம் பண்ணினாலும் என்னை மாதிரி இல்லாம, உன்னைத் தூக்கிக்கிட்டு எல்லாரும் அண்ணாந்துபார்க்கிற மாதிரி துணிச்சலாப் பறக்க முடிஞ்ச ஒரு பெண்ணைத் தேடி லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ணிக்கணும். இது என் மேல சத்தியம். சரியா..?’’

என்ன மாதிரியான பெண் ஸ்ரீ இவள். ஒரு மின்னல் மாதிரி பெரிய வெளிச்சத்தையும் பெரிய இருட்டையும் ஒரு நொடியில் காட்டிட்டு, ஒரு சொட்டுக் கண்ணீர்கூட கொட்டிடாம, எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருப்பாளே... அப்படியே சிரிச்சுக்கிட்டே போய்ட்டா. பாரேன்... அவள் சத்தியம் பண்ணிச் சொன்ன மாதிரி என்னை உயரமாகத் தூக்கிக்கொண்டு பறக்கிற ஒரு மீன்கொத்திப் பறவை மாதிரி நீ எனக்குக் கிடைத்திருக்கிறாய். ஆச்சர்யமாக இருக்கிறது... ஒருவன் எழுதிய தற்கொலைக் கடிதம் அவனுக்கு உயிர்ப்பிச்சை போட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தை இப்போது உனக்கு வாசித்துக்காட்ட வேண்டும்போல் இருக்கிறது. ஆனால், அதை ஜோ கையோடு கொண்டுபோய்விட்டாள். அவளுக்கு அது வேண்டுமாம். ஆனாலும்  நான் எழுதிய முதல் தற்கொலைக் கடிதம் மட்டும் அல்ல... அது என் கடைசிக் கடிதமும்கூட என்பதால், அந்தக் கடிதத்தின் வரிகள் கொஞ்சமே கொஞ்சம் ஞாபகத்தில் இருக்கிறது... கேட்கிறாயா?

`அன்புள்ள அம்மா அப்பாவுக்கு...

இந்தக் கடிதத்தை நீங்கள் வாசிக்கும்போது நான் சொர்க்கத்துக்குச் சென்றுசேர்ந்திருப்பேன். எனக்காக நீங்கள் நிறைய அழுது, என்னை நரகத்துக்கு இடம் மாற்றிவிடாதீர்கள்.
அப்பா... எல்லாரும் சொல்வார்கள் `உன் பையன் யாரோ ஒரு பெண்ணுக்காகச் செத்துப்போய்ட்டான்’ என... நீங்கள் அதை அவமானமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அவள் யாரோ ஒரு பெண் அல்ல. உங்கள் மகனின் இதயம் முழுக்கப் பரவியிருக்கிற பெண். அப்பா இன்னும் உங்களுக்குப் புரிகிறமாதிரி சொல்ல வேண்டும் எனில், நம் காமாட்சி அப்பா அவள். காமாட்சியை அந்த அடிமுட்டாள் சுப்பிரமணியன் அடித்துவிரட்டிய அன்று, நீங்கள் சொன்ன வார்த்தைகள் நினைவிருக்கிறதா?

`பிள்ள கண்ணுல கண்ணீர் வடியிறதைப் பார்க்கப் பார்க்க, கத்தி எடுத்து அந்தப் பயலைக் குத்திக்கொன்னுட்டு ஜெயிலுக்குப் போயிரலாம்போல இருக்கு’ என்று சொன்னீர்கள்தானே. அதுபோலத்தான் அப்பா இவளுக்காக எதுவும் செய்யலாம். எல்லாரையும் உதறிவிட்டு என்னைத் தேடி, என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, இதோ என்னோடு இறந்துகிடக்கிறாள். இவளுக்காக இறந்துபோகவேண்டும் என நினைத்தபோது எனக்குத் துளி பயம்கூட வரவில்லை. ஆமாம் அப்பா... வருத்தப்படாதீர்கள். நான் சின்ன வலிகூட இல்லாமல்தான் மரித்துப்போகிறேன். அம்மாவிடம் சொல்லுங்கள்... கேட்டால் எல்லாரிடமும். காமாட்சியிடமும்கூட சொல்லுங்கள். நான் எங்கும் போய்விடவில்லை. சீக்கிரமாகத் திரும்பிவருவேன்.

உங்களுக்கு என காற்று வீசுகிறபோது

உங்களுக்கு என மழை பெய்கிறபோது

உங்களுக்கு என தாகம் எடுக்கிறபோது

உங்களுக்கு என ஒரு தீபம் எரிகிறபோது

உங்களுக்கு என ஓர் இசை கேட்கிறபோது

நான் எல்லாமுமாகத் திரும்பி வருவேன். வரும்போது நான் இந்தப் பெண் ஜோவையும் கூட்டிக்கொண்டு வருவேன். நீங்களாவது சாதி பார்க்காமல், மதம் பார்க்காமல் அவள் குத்துவிளைக்கை அவளே ஏற்றிக்கொள்ள அனுமதியுங்கள் அப்பா. 

நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? இதோ இன்னொரு முறை என் முகத்தை உற்றுப்பாருங்கள். இடது பக்க என் உதடு சரிந்து, சின்னச் சிரிப்போடே இருக்கிறேன்தானே.

என் மரணமும் அப்படி ஒரு புன்னகைக்குச் சமமானதுதான். நம்பிக்கையோடு இருங்கள் அப்பா.

நம் தூய நிலத்தின் நடுவில், நிச்சயம் நாங்கள் இருவரும் யுகத்தின் சுவையூறிய கனிகளையுடைய பேரற்புதமான ஒரு மரமாக முளைத்து எழுவோம் அப்பா.

இப்படிக்கு

உங்கள் விதை.’

முக்குளி வாத்துகளின் கதை : சிறுகதை
முக்குளி வாத்துகளின் கதை : சிறுகதை

இப்படித்தான் அந்தக் கடிதத்தில் நான் ஏதேதோ எழுதியதாக என் நினைவில் இருக்கிறது ஸ்ரீ. இந்த எழுத்துதான், இந்த வார்த்தைகள்தான், இந்த மனம்தான், இந்தக் காதல்தான் என் கல்லறைக் கற்களைப் புரட்டிபோட்டு,  உன்னை நோக்கி இழுத்துக்கொண்டுவந்து உன் கைகளில் என்னைக் கொடுத்திருக்கிறது ஸ்ரீ.அதற்காக உன்னை முத்தமிடும்போது நான் ஜோவை நினைத்துக்கொள்வேன் என அச்சப்படாதே... அதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால், நம் குழந்தைகளை முத்தமிடும்போது நான் அவளை நினைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் என் மரணத்தை ஒரு  குழந்தையாக்கி   என் அருகிலே  வைத்திருப்பதைப்போல, ஜோவையும் ஒரு குழந்தையாக்கித்தான் என் புத்திக்குள் பத்திரப்படுத்திவைத்திருக்கிறேன்; வைத்திருப்பேன்.

நான் இப்போது உன் உள்ளங்கைகளுக்குள் பத்திரமாக இருக்கிறேன். அந்தத் தைரியத்தில் சொல்கிறேன். என் சிரிப்பு என்பது நிறையக் கண்ணீர் கலந்த உப்புச் சுவை கூடியது. அந்தச் சிரிப்பு அவளுக்கும் இந்த நேரத்தில் வாய்த்திருக்க வேண்டும் என்ற ஒற்றைப் பிரார்த்தனையோடு இந்தக் கதையை முடிக்கிறேன்.

கண்ணீர் கசிந்தால் நீயும் பிரார்த்தனை செய்...காதலிப்பவர்கள் அத்தனை பேருக்கும் இனி இந்தச் சிரிப்பு வாய்க்கட்டும் என்று.

நம்மை வாழ்த்த வருகிறவர்களும் பிரார்த்தனை செய்யட்டும்!

- மாரி செல்வராஜ்,

ஓவியங்கள்: ஸ்யாம்

(23.06.2016 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)