சினிமா
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

மசால் தோசை போலத்தான்... 

நான்கைந்து மேசைகள் கொண்ட

ரெஸ்ட்டாரன்ட் அல்லது மெஸ் எனப்படுகிற அது

ஹோட்டல் எனவும் மொழியப்படுகிறது.

முதலாளி வருகையறிந்து மூன்றாம் எண் மேசையைக் கவனிக்கச்சொல்லி மெலிந்த உருவுடன்

நாசூக்காக கல்லா நீங்கும் இளைஞன்

விசுவாசத்தின் ஐந்தரையடி குறியீடு.

எதிர்ப்படுகிற எல்லாருக்கும் வணக்கம்வைத்து

அலைபேசியின் மெல்லிய ராகத்தில்

'ஹர ஹர சிவனே அருணாச்சலனே

அண்ணாமலையே போற்றி’யுடன் இருக்கையில்

அமரும் அண்ணாச்சி,

வலப்புற ஒலிப்பெருக்கியில்

'சரக்கு வெச்சுருக்கேன் எறக்கி வெச்சுருக்கேன்’

பாடலைத் தவழவிடுவது

முற்றிலும் வியாபாரத் தந்திரமென்பதில்

சிறிதளவும் ஐயமில்லை.

இடத்திலும் வலத்திலும் மாறி மாறிப் பரவசம்தரும்

மென்கானத்துக்கும் அதிர்கானத்துக்கும் இடையே

மசால் தோசை எனத் துவண்டுகிடக்கும் என்னை

விண்டு விண்டு விழுங்குகிறதே

அதன் பெயர்தான் வாழ்வு. 

 - தர்மராஜ் பெரியசாமி 

குறிப்புதவிப் பிரிவு              

கருத்த மர நாற்காலியில் நூலகர் கண்ணயர்ந்திருக்கிறார்.

தலைநரைத்த ஆராய்ச்சி மாணவர்  

தலையணை அளவு புத்தகம் விரித்து  

குறிப்பெடுத்துக்கொண்டிருக்கிறார்.  

தூசி படிந்த மின்விசிறி  

தன் பாடுகளைப் பாடியபடியே

சுழன்றுகொண்டிருக்கிறது.  

லெகின்ஸ் யுவதியின் கொலுசொலி

வயோதிக வாசகரையும் சிலிர்க்கச்செய்கிறது.

ஒட்டடை படர்ந்த அலமாரியில்

கல்லாய்ச் சமைந்துகிடக்கின்றன புத்தக அகலிகைகள்.  

சாளரம் வழி நுழைந்த அணில்கள் இரண்டு  

அவசர அவசரமாய் வாசிக்கின்றன

முத்தப் புத்தகத்தை.                

 - ஸ்ரீதர்பாரதி   

வெயிலொன்று மழையான கதை

நிழலின் முந்தியைப் பிடித்துக்கொண்டு

பின்தொடரும் வெயில்

அவள் மேனியில் படர்ந்து

கொஞ்சம் கொஞ்சமாகப் போதையேறி

கிறுக்குக்கொள்கிறது.

மூக்குத்தியில் சிணுங்கி கழுத்தில் சறுக்கி

பச்சை நரம்புகளில் முறுக்கேறி மிதந்துசெல்கிறது.

அவள் களைத்து ஒதுங்கி

குணங்குடிதாசன் சர்பத் ஒன்றை

ஆர்டர்செய்து பருகத் தொடங்குகிறாள்.

வெயில் அவள் காலடியில் வால்குழைத்து

அண்ணாந்து பார்த்துக் கிடக்கிறது.

அவள் அதரங்களிலிருந்து

நன்னாரி வாசத்தோடு நழுவுகிறது

ஒரு சொட்டு எச்சில் சர்பத்.

அதைச் சரியாக ஏந்தி

பெருந்தாகம் தணித்துக்கொண்டது வெயில்.

சட்டென

நீலவான் ஓரத்தில் மேகமொன்று

கருக்கத் தொடங்குகிறது.

 - எம்.ஸ்டாலின் சரவணன்