Published:Updated:

தோற்றவர்களின் கதை - 5

தோற்றவர்களின் கதை - 5
பிரீமியம் ஸ்டோரி
News
தோற்றவர்களின் கதை - 5

சுசி திருஞானம்தொடர்

தோற்றவர்களின் கதை - 5

விடாமுயற்சி வெற்றி தரும்!

புதிய உலகம் என்று வர்ணிக்கப்படும் அமெரிக்க கண்டங்களுக்குச் சென்றுவரும் வேட்கையை ஐரோப்பாவில் விதைத்ததன் மூலம் உலக சரித்திரத்தையே மாற்றிய சாகசக் கடல் பயணத் தலைவன் கிறிஸ்டோபர் கொலம்பஸ். வெறும் 500 ஆண்டுகள் வரலாறு கொண்ட அமெரிக்கா இன்று உலகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் முக்கிய நாடாக மாறியிருக்கிறது என்றால், அதற்கான முதல் விதையைப் போட்ட கப்பல் தலைவன் கொலம்பஸ்.

நீண்டதூர கடல் பயணம் என்பது தற்கொலைக்குச் சமமாகக் கருதப்பட்ட 15-ம் நூற்றாண்டில், ஒருமுறை அல்ல... 4 முறை ஸ்பெயின் நாட்டிலிருந்து பாய்மரக் கப்பலில் புறப்பட்டு அமெரிக்க கண்டத் தீவுகளைச் சென்றடைந்து அங்கே மாதக் கணக்கில் தங்கியிருந்து, பின் வெற்றிகரமாகத் திரும்பிய துணிச்சல் மிக்க கப்பல் தலைவன் கொலம்பஸ்.

இந்தச் சாகசப் பயணங்களுக்காகக் கொலம்பஸ் சந்தித்த போராட்டங்கள், அடைந்த படுதோல்விகள், எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் எல்லாம் மர்ம நாவல்களில்கூட பார்க்க முடியாத உண்மைச் சம்பவங்கள்.

இத்தாலி நாட்டின் ஜெனோவா நகரில் 1451-ம் ஆண்டில் ஓர் ஏழைக் குடும்பத்தில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் பிறந்தார். 14 வயதிலேயே ஒரு வணிகக் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தார் கொலம்பஸ். 1476-ம் ஆண்டில் அவர் மேற்கொண்ட ஒரு கடல் பயணம் பெரும் ஆபத்தில் முடிந்தது. அவர் பயணித்த வணிகக் கப்பலைக் கைப்பற்றிய பிரெஞ்சு கப்பல் குழுவினர், கொலம்பஸ் உள்ளிட்ட அனைவரையும் கடலுக்குள் தள்ளி அந்தக் கப்பலைத் தீவைத்துக் கொளுத்தினர். கப்பலின் உடைந்த பாகம் ஒன்றைப் பிடித்தபடி நீந்தித் தப்பித்துக் கரைசேர்ந்தார் கொலம்பஸ்.  
‘ஆபத்தான கப்பல் வேலைக்கு இனிமேல் போகாதே’ என்று பலரும் எச்சரித்தபோதும், ‘அதிலுள்ள சாகச அனுபவம் வேறு எந்த வேலையிலும் கிடைக்காது’ என்று பதிலளித்தார் கொலம்பஸ். கடல் காற்றின் திசை, கப்பலைச் செலுத்தும் முறை போன்றவற்றைத் தீவிர ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார். டாலமி, மார்கோ போலோ போன்ற அறிஞர்களின் பயணப் புத்தகங்களைப் பேரார்வத்துடன் வாசித்தார்.

தங்கமும் வைரமும் கொட்டிக்கிடக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்குக் கப்பல் மூலமாகச் சென்றுவந்து பெரும் செல்வந்தர் ஆகிவிட வேண்டும் என்பது கொலம்பஸின் கனவாக இருந்தது. ரோமானியர்கள் உருவாக்கிய செல்வவளம் மிக்க கான்ஸ்டான்டினோபிள்  நகரம் 1453-ம் ஆண்டில் துருக்கியர்கள் வசமான பின், தரைவழியாகக் கிழக்கு ஆசியா செல்வது ஐரோப்பிய நாடுகளுக்குப் பெரும் சிக்கலாக மாறி இருந்த காலகட்டம் அது. உலகம் உருண்டையானது என்பதால், ஐரோப்பாவிலிருந்து மேற்குநோக்கி கடல்வழியாகப் புறப்பட்டு ஜப்பான், சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்குச் சென்றுவிடலாம் என்ற கருத்தாக்கம் வலுப்பெற்ற நேரம் அது. மேற்கு நோக்கி அட்லான்டிக் கடலில் பயணப்பட்டால் ஜப்பானுக்கு முன்பாக அமெரிக்கக் கண்டங்களின் பெரும் நிலப் பரப்பு உள்ளது என்பதே அப்போது அவர்களுக்குத் தெரியாது.

தோற்றவர்களின் கதை - 5

1485-ம் ஆண்டில் போர்த்துக்கீசிய அரசர் இரண்டாம் ஜானை சென்று சந்தித்த கொலம்பஸ், தனது கடல் பயணத்துக்கு நிதி உதவிகோரினார். இரண்டாம் ஜான், ‘‘வேண்டாம் இந்த விஷப் பரீட்சை’’ என்று கூறிவிட்டார். விடாமுயற்சி வெற்றிதரும் என்று நம்பிய கொலம்பஸ் 3 ஆண்டுகள் காத்திருந்துவிட்டு, மீண்டும் ஒருமுறை இரண்டாம் ஜானை சென்று சந்தித்து தனது திட்டத்துக்கு உதவி கோரினார். ‘‘முடியாது போய்விடு’’ என்று விரட்டிவிட்டார் அரசர். முயற்சியைக் கைவிடுவதாக இல்லை கொலம்பஸ். அடுத்ததாக, ஸ்பெயின் நாட்டு அரசி இசபெல்லாவை 1489-ம் ஆண்டு சந்தித்து தனது திட்டத்தை விளக்கினார். அரசி தனது மந்திரிகளிடம் விவாதிக்கச் சொன்னார். சாமி வரம் கொடுக்க நினைத்தாலும் பூசாரிகள் அனுமதிக்கத் தயாராக இல்லை. ‘‘சாத்தியமே இல்லாத ஏமாற்றுத் திட்டம்’’ என்று முத்திரைகுத்தி அனுப்பிவிட்டனர்.

தோல்வியைக் கண்டு துவண்டுவிடவில்லை கொலம்பஸ். திட்டத்தை விவரிக்கும் முறையை மாற்றினால் அரசியையும் அரசரையும் கவர்ந்துவிடலாம் என்று திட்டமிட்டார். மீண்டும் இரண்டு முறை அவர்களைச் சந்தித்து, ‘‘எனது கடல் பயணத்தை ஆதரித்தால் அண்டை நாடான போர்சுக்கல்லைவிட ஸ்பெயின் நாடு பெரிய பேரரசாக மாறிவிடும்’’ என்று ஆசைகாட்டினார். கொலம்பஸின் விடாமுயற்சிக்கு வெற்றி கிடைத்தது. அரசி இசபெல்லா கொலம்பஸின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார்.

ஸ்பெயின் நாட்டு அரசி, கொலம்பஸின் பயணத்துக்காக 3 கப்பல்களையும், மாலுமிகளையும், ஊழியர்களையும் ஏற்பாடு செய்துதர ஒப்புக்கொண்டதுடன், கொலம்பஸ் கொண்டுவரும் செல்வத்தில் 10 சதவிகிதத்தை அவருக்குப் பரிசாகத் தருவது எனவும், அவர் கண்டுபிடிக்கும் நாடுகளுக்கு அவரையே கவர்னராக நியமிப்பது எனவும் ஒப்புக்கொண்டார்.

நினா, பின்டா, சாந்தா மரியா ஆகிய மூன்று கப்பல்களில் 90 பேர் கொண்ட கொலம்பஸ் குழுவின் சாகசப் பயணம் 1492-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கியது.கொலம்பஸின் பயணம் பற்றி அறிந்த போர்த்துக்கீசிய கடல் கொள்ளையர்கள் கொலம்பஸின் கப்பல்களை வழிமறிக்க காத்திருப்பதாக அந்தத் தீவில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். கடல் காற்றின் திசைவழிகளை நன்கு அறிந்த கொலம்பஸ் தனது 3 கப்பல்களையும் எதிர்பாராத திசையில் செலுத்தி கடல் கொள்ளையர்களிடம் இருந்து தப்பி, தனது நீண்ட கடல் பயணத்தை வழிநடத்தினார்.

அட்லாண்டிக் கடலின் நடுப்பகுதி வழியே சென்றபோது, கப்பல்களின் காம்பஸ் வடக்கு நட்சத்திரத்தை நோக்கித் திரும்பவில்லை. இதனால் கொலம்பஸ் குழுவினர் பீதி அடைந்தனர். நீண்ட கடல் பயணங்களின்போது இப்படி நடக்கும் என கொலம்பஸ் சொன்னதை யாரும் நம்பவில்லை. 15 நாட்களில் புதிய நாட்டில் இறங்கிவிடலாம் என்று தொடக்கத்திலேயே கொலம்பஸ் சொல்லியிருந்தார். 20 நாட்கள் ஆகியும் கரை தட்டுப்படுவதற்கான அறிகுறி எதுவும் இல்லை. உணவு, தண்ணீர் காலியாகிவிடும் அபாயம். குழுவில் இருப்பவர்களுக்கு பயம், அதிருப்தி, கோபம் அனைத்தும் பரவி வந்தன. தங்களை ஏமாற்றி அழைத்துவந்ததாகக் குற்றம்சாட்டி கொலம்பஸை அடித்துக் கொன்றுவிடத் துடித்தனர் சிலர். ‘‘பொறுமையாக இருங்கள், உங்களுக்குப் பொன்னும் பொருளும் நிறையக் கிடைக்கும்’’ என்று சமாதானம் சொல்லிவந்தார் கொலம்பஸ்.   

29-ம் நாளில் கூட்டம் கூட்டமாகப் பறவைகள் பறந்துவந்ததைப் பார்த்த கடல் பயணிகள், அருகில் ஏதோ நாடு இருக்கிறது என எண்ணிப் பெருமூச்சுவிட்டனர். பறவைகள் வந்த திசையில் மேலும் பல நாட்கள் பயணித்தபோது, அக்டோபர் 12-ம் நாள் அதிகாலை வட அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் அமைந்துள்ள பஹாமஸ் தீவினை சென்றடைந்தது கொலம்பஸ் குழு. அங்கே இருந்த மனிதர்கள் கொலம்பஸ் குழுவுக்கு ராஜ வரவேற்பும் மரியாதையும் தந்தனர். அவருடன் வந்தவர்கள் அந்தத் தீவில் இருந்த பல வளங்களைச் சூறையாடியதாகவும் அங்குள்ள மக்களைத் துன்புறுத்தி அடிமைப்படுத்தியதாகவும் விமர்சனங்கள் உள்ளன.

தான் ஆசியா கண்டத்தை அடைந்துவிட்டதாக நம்பினார் கொலம்பஸ். அடுத்த சில நாட்களுக்குப் பின் அங்கிருந்து புறப்பட்டு அருகிலுள்ள கியூபா நாட்டைச் சென்றடைந்தார். அப்போது, தான் சீனாவுக்கு வந்துவிட்டதாக கொலம்பஸ் கருதினார். அதன்பின் ஹைதி தீவுக்குச் சென்றபோது சாந்தா மரியா கப்பல் அங்கு தரை தட்டியது. தன்னுடன் வந்தவர்களில் 39 பேரை அங்கேயே தங்கியிருந்து தனது சார்பில் அந்தப் பகுதியில் ஆட்சி நிர்வாகம் நடத்தும்படி ஏற்பாடு செய்தார்  கொலம்பஸ். அந்தத் தீவில் உள்ள சிலரை தமக்கு அடிமைச் சேவகர்களாக அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்துகொண்டார்.

பின் 1493-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் நினா கப்பலில் ஸ்பெயின் நோக்கித் திரும்பும் பயணத்தைத் தொடங்கினார். பின்டா கப்பல் அவர்களைப் பின்தொடர்ந்தது. நடுக்கடலில் பெரும் புயல் உருவாகி, கப்பல்களைப் பந்தாடியது. பின்டா கப்பல் தனியாகப் பிரிந்து எங்கோ போய்விட்டது. பெரும் போராட்டங்களுக்குப் பின்னர், போர்ச்சுக்கல் அருகில் உள்ள ஒரு தீவை வந்தடைந்தது நினா கப்பல். அவர்களெல்லாம் கடல் கொள்ளையர்கள் என நினைத்தத் தீவுவாசிகள் அவர்களைச் சிறைப்பிடித்தனர். தீவுவாசிகளைப் புரியவைத்து அவர்களிடம் இருந்து தப்பிப் புறப்படவும், பின்டா கப்பலும் வந்து சேர்ந்தது. ஆனால், அடுத்த புயல் உருவாகி அவர்களைப் போர்சுக்கல் நோக்கிக் கொண்டு போய்ச் சேர்த்தது. போர்ச்சுக்கல் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி வந்ததாக அரசர் தரப்பில் கடும் எச்சரிக்கை செய்யப்பட்டது. சாதுர்யமாகப் பேசித் தப்பித்தார் கொலம்பஸ்.

ஒரு வாரத்துக்குப்பின் போர்ச்சுக்கல்லில் இருந்து புறப்பட்டு ஸ்பெயின் சென்றடைந்தார் கொலம்பஸ். அவரது சாகசப் பயணம் பற்றி கேள்விப்பட்டு, பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு நின்று வரவேற்பளித்தனர். ஸ்பெயின் அரசவையில் கொலம்பஸுக்கு அரச மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தான் கொண்டுவந்த பரிசுகள், வாசனைத் திரவியங்கள், செடி கொடிகள், போன்றவற்றையும், அரசர் - அரசி முன்பாக வைத்தார் கொலம்பஸ். உறுதி அளித்தபடி, அவற்றில் ஒரு பகுதி கொலம்பஸுக்கே வழங்கப்பட்டது. அவர் கண்டுபிடித்த பகுதிகளில் அவரே நிர்வாகம் செய்யலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கொலம்பஸும் அவரது தளபதிகளும், தம்முடன் வந்த ஸ்பானியர்களையும் உள்ளூர் மக்களையும் துன்புறுத்தி அடிமைப்படுத்தியதாகக் கடும் சர்ச்சைகள் எழுந்தன. கோலம்பஸுடன் கடல் பயணம் சென்றுவந்த சிலர் ஸ்பெயின் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தனர். முடிவில், பிற ஸ்பானியத் தளபதிகளிடம் பணிந்துசெல்லுமாறு கொலம்பஸுக்கு உத்தரவிடப்பட்டது. 3-வது பயணம் முடித்து 1500-ம் ஆண்டு ஸ்பெயின் திரும்பிய கொலம்பஸ் கைதுசெய்யப்பட்டு, கைவிலங்கிடப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டார்.

தோற்றவர்களின் கதை - 5

சிறையில் இருந்தபடியே நீதிபதி ஒருவருக்கு எழுதிய கடிதத்தில், ‘‘ஸ்பெயின் நாட்டுக்காக நான் பெரும் தியாகங்கள் செய்துள்ளேன். ஏராளமான நிலப்பரப்புகொண்ட தீவுகளையும், நாடுகளையும் ஸ்பெயின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளேன். இதற்காக என்னைக் கௌரவிக்கவேண்டிய அரசு, சில சுயநலம் மிக்கவர்களின் பொய்யான குற்றச்சாட்டுகளை நம்பி சிறையில் அடைத்து இருக்கிறது’’ என்று வாதிட்டுள்ளார்.

6 வாரங்களில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கொலம்பஸ், அடுத்த சில மாதங்களில் தனது 4-வது கடல் பயணத்தை மேற்கொண்டார். முந்தையப் பயணங்களின்போது அமெரிக்காவை ஒட்டிய தீவுகள்வரை மட்டுமே பயணப்பட்ட கொலம்பஸ், இந்த முறை மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுராஸ், நிகரகுவா, கோஸ்டாரிகா, பனாமா ஆகியவற்றைச் சென்றடைந்து தங்கியிருந்து திரும்பினார்.

திரும்பும் வழியில் புயலும், பெருமழையும் அவரது கப்பலைச் சுழற்றி அடித்தன. ‘‘அத்தனை கோபமான கடலை அதற்குமுன் நான் பார்த்ததே இல்லை. 9 நாட்களும் நான் கிட்டத்தட்ட இறந்து விட்டதாகவே உணர்ந்தேன். புயல் கப்பலைப் பந்தாடிக்கொண்டே இருந்தது. ஒவ்வோர் இடியும் எங்கள் மேல் விழுந்ததுபோல் இருந்தது. வானம் உடைந்து ஊற்றியதுபோல் மழை கொட்டியது. இயற்கையின் பயங்கரமான தாக்குதலில் சோர்ந்துபோன என் சகப் பயணிகள், இதைவிட இறந்துவிடுவது நல்லது என்ற மனநிலைக்குப் போய்விட்டனர்’’ என்று தனது நாட்குறிப்பில் எழுதிவைத்துள்ளார் கொலம்பஸ்.

கொலம்பஸ், 1506-ம் ஆண்டில் தனது 54-வது வயதில் காலமானார். அவரது சாகசப் பயணங்களுக்குப் பின்னர்தான் அமெரிக்கக் கண்டங்களை நோக்கி, ஐரோப்பியர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றனர். அமெரிக்கா என்ற நவீன நாடு உருப்பெற்று, இன்று அறிவியல், தொழில் நுட்பம், தொழில் முனைப்பு எனப் பல துறைகளில் கொடிகட்டிப் பறக்கிறது.

தோல்விமேல் தோல்வி கண்டபோதும், மரணத்தின் விளிம்புவரை பலமுறை சென்று வந்தபோதும், தனது குறிக்கோளில் உறுதியாக இருந்த கொலம்பஸ் நமக்குச் சொல்லிச் சென்ற நம்பிக்கை வார்த்தைகள் இவை: ‘‘எத்தனை தடைகள் வந்தாலும், எத்தனை தோல்விகள் வந்தாலும், குறிக்கோளை அடைந்தே தீருவேன் என்று ஒருவன் விடாப்பிடியாக இருந்தால் அவன் நினைத்ததை கட்டாயம் சாதிப்பான்.’’

(இன்னும் வெல்வோம்)