இப்பவே சொல்லிடுறோம் மக்களே... சீரியஸாவே இது உண்மைதான். காற்று மாசு ஏற்படுத்தாத பெட்ரோல்/டீசலை 100 சதவிகிதம் பயன்படுத்தும் முதல் நகரமா டெல்லி மாறிப்போச்சு! உலகிலேயே அதிக காற்று மாசு உள்ள இரண்டாவது சிட்டியான டெல்லிதான் இப்போ காற்று மாசு இல்லாத எரிபொருள் பயன்படுத்துது. இது டெல்லிவாசிகளுக்கே தெரியாது பாஸ்!
இந்நேரம் டெல்லியில் ஓடும் டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜின்கள் எல்லாம் ஸ்மூத்தாகவும், புகை அதிகம் வெளியிடாமலும் இருக்கும். இதற்குக் காரணம் டெல்லி முழுவதும் இப்போது பிஎஸ்-6 பெட்ரோல்/டீசல் மட்டுமே கிடைக்கிறது. பிப்ரவரி மாதம் முதல் பெட்ரோல் பம்ப்புகள் கழுவப்பட்டு இப்போது ஒருவழியாக மொத்தமுள்ள 397 பெட்ரோல் பம்ப்புகளும் பிஎஸ்-6 பெட்ரோல்/டீசலை சப்ளை செய்கின்றன. இதற்குக் காரணம் மத்திய அரசு. ஆமாம், உண்மையாவே மத்திய அரசுதான்.
நாம் சென்னையில் பயன்படுத்தும் பிஎஸ்-4 எரிபொருளில் 50 ppm அளவு சல்ஃபரும், 0.005 g/l அளவு ஆபத்தான லெட் அமிலமும் இருக்கின்றன. ஆனால், பிஎஸ்-6 எரிபொருளில் இதே சல்ஃபர் - 10 ppm அளவும் லெட்-0.001 g/l அளவும் மட்டுமே உள்ளன. இதனால் நாம் பயன்படுத்தும் பிஎஸ்-4 பெட்ரோல்/டீசலைவிட பிஎஸ்-6, 80 முதல் 90 சதவிகிதம் வரை காற்று மாசைக் குறைக்கிறது. இப்படிப்பட்ட நல்ல மாற்றத்தை சபதம் எடுத்தெல்லாம் கொண்டுவரவில்லை டெல்லி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள். காற்று மாசு அதிகமானதால், வேறுவழியின்றி ஏப்ரல் 1 முதல் அனைத்து பெட்ரோல்/டீசல் பங்க்கும் பிஎஸ்-6 எரிபொருளை மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என்று விதியை ஜனவரி மாதமே கொண்டுவந்துவிட்டது மத்திய அரசு. மற்ற நகரங்களுக்கு இந்த விதி 2020-ம் ஆண்டுதான் அமலுக்குவருகிறது.
ஏப்ரல் 1-ம் தேதிக்கு ஒரு வாரம் இருக்கிறது, அதற்கு முன்பே வேகமாகச் செயல்பட்ட டெல்லி பெட்ரோல் நிறுவனங்களை சுப்ரீம் கோர்ட்டும் பாராட்டியுள்ளது. வேகமாகச் செயல்படுவதால் இந்த மாற்றத்தை ஏன் மற்ற 13 மெட்ரோ சிட்டியிலும் அடுத்த ஆண்டே கொண்டுவரக் கூடாது என கருத்து கேட்டுள்ளது. எதிர்கால மாற்றங்களை பிறகு பேசுவோம். இப்போது மீண்டும் நிகழ்காலத்துக்கு வருவோம்.
பிஎஸ்-6 எரிபொருள் பயன்படுத்தினாலும், டெல்லிவாசிகளிடம் இன்னும் பிஎஸ்-4 இன்ஜின்தான் இருக்கிறது. மெர்சிடிஸ் தவிர அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தற்போது வரை பிஎஸ்-4 இன்ஜினைதான் விற்பனைசெய்கிறார்கள். பழைய இன்ஜினில் தாராளமாக புதிய பெட்ரோலை/டீசலைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், இது முழு பலனைத் தராது, 50 சதவிகிதப் பலன் மட்டுமே கிடைக்கும். மத்திய அரசின் திட்டப்படி 2020-ம் ஆண்டில் பிஎஸ்-6 இன்ஜின் வரும். அதுவரை பிஎஸ்-4தான். டெல்லியில் உருவாகும் காற்று மாசை 90 சதவிகிதம் குறைக்க, இன்னும் இரண்டு வருடங்கள் தேவை.
முழுப்பலன் இப்போது இல்லை. ஆனால், பிஎஸ்-6 மாற்றத்தால் டெல்லியில் பெட்ரோல்/டீசல் விலை எக்குத்தப்பாக ஏற வாய்ப்புள்ளது. பிஎஸ்-4 எரிபொருள் மாற்றத்தில் 67 ரூபாய் இருந்த பெட்ரோல் விலை சும்மாவே 75 ரூபாய்க்கு வந்துவிட்டது. இப்போது பெட்ரோல்/டீசல் இரண்டுமே புதிய ஸ்டாண்டர்டுக்குப் போய்விட்டது. அதனால் `ஏப்ரல் 1-ம் தேதிக்குமேல் டெல்லியில் எரிபொருள் விலை கூடியது' என எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பு வந்தாலும்வரும். தமிழ்நாட்டிலும் இதுபோல மாற்றங்கள் சீக்கிரமே வரும். தமிழ்நாடும் நச்சுப்புகையை கிளப்பாத பெட்ரோலுக்கு மாறும் அப்போது இங்கும் பெட்ரோல்/டீசல் விலை ஏறும். காய்கறி, பழங்கள், மளிகைப்பொருள்கள் எல்லாம் சேர்ந்தே ஏறும். `நீங்க ஏன் பாஸ் பெட்ரோல்/டீசல் விலையை லாரி ஓட்டுறவங்களுக்கு ஒரு ரேட்டுக்கும், தினமும் கார்/பைக் ஓட்டுறவங்களுக்கு ஒரு ரேட்டுக்கும் கொடுக்கக் கூடாது. அப்போ இந்த வலையேற்றத்தை கம்மி பண்ணலாம்ல!' என்று சுப்ரீம் கோர்ட்டே differential pricing பற்றிக் கேட்டுள்ளது. எந்த அளவுக்கு இது சாத்தியப்படும் என்பது போகப்போகத்தான் தெரியும்.