Published:Updated:

மைல்ஸ் டு கோ - 20

மைல்ஸ் டு கோ
பிரீமியம் ஸ்டோரி
News
மைல்ஸ் டு கோ

படம்: ஸ்டில் ராபர்ட்

முதல் ஷெட்யூலை எடிட் செய்து பார்த்ததில் `ஆடுகளம்' எனக்குத் திருப்தியாக இல்லை. படம் என் கட்டுப்பாட்டில் இல்லை என்பதுபோல் உணர்ந்தேன். என்னால் படத்துடன் கனெக்ட் ஆகவே முடியவில்லை. டைரக்‌ஷன் டீமில் இருந்தவர்களாலும் ஜட்ஜ் செய்ய முடியவில்லை.

உடனே, நான் தங்கவேலவனையும் பிரித்வியையும் அழைத்து எடிட் செய்தவரைப் பார்க்கச் சொன்னேன். தங்கவேலவன் படம் பார்த்துவிட்டு `கதாபாத்திரங்களின் யதார்த்தம் கன்வின்ஸிங்கா வந்திருக்கு. இதில் என்ன குழப்பம்?' என்றார். `என்னால் படத்தில் இருக்கும் உணர்வைப் புரிந்துகொள்ள முடியவில்லை' என்றேன். நன்றாக இருப்பதாகவும், எந்தக் குழப்பமும் இல்லாமல் மீதியையும் எடுக்கும்படி சொன்னார். நான் ஒருவிதத் தயக்கத்துடனே மதுரைக்குச் சென்றுவிட்டேன்.

மைல்ஸ் டு கோ - 20

அதன் பிறகு பிரித்வியும் பார்த்தார். எனக்கு போன்செய்து `படம் நல்லாருக்கு சார். உங்களுக்கு கரெக்ட்னு தோண்றதை எடுங்க' என்றார். பிறகு, துரை.செந்தில்குமாரிடம் ` `பொல்லாதவன்' மாதிரி ஒரு படத்தை என்னால எடுத்துட முடியும். ஆனா, `ஆடுகளம்' முடியாது. வாழ்க்கைக்கு மிக நெருக்கமா இருக்கு' எனச் சொல்லியிருக்கிறார். எல்லோருக்கும் பாசிட்டிவாக இருந்தாலும் எனக்கு ஏனோ கான்ஃபிடன்ஸ் வரவில்லை.

`ஆடுகளம்' கதை ஏன் என் கையைவிட்டு விலகியது என யோசித்தேன். `ஆடுகளம்'  கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள், மதுரை வட்டார வழக்கில் இருந்தன. வட்டார வழக்கு என்பது, அந்த மக்களின் மனநிலையை, எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கும். மதுரை மக்களின் சிந்தனை ஓட்டத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதால், `ஆடுகளம்' எனக்கு அந்நியமாகத் தெரிந்திருக்கலாம் எனத் தோன்றியது. அதை சரிசெய்ய, ஒரு காட்சிக்கான வசனத்தை சென்னை மக்களின் வட்டார வழக்கில் எழுதினேன். பிறகு, விக்ரம் சுகுமாரனை அழைத்து அந்த வசனத்தை அப்படியே மதுரை வழக்கிற்கு நேரிடையாக மாற்றாமல், அந்தக் கதாபாத்திரத்தின் சிந்தனை ஓட்டத்தை மெயின்டெயின் செய்யச் சொன்னேன். அதற்கேற்ற மதுரை ஸ்லாங்கைப் பிடிக்கச் சொன்னேன்.

வசனத்தில் இந்த மாற்றம் வந்த பிறகே, படம் ஓரளவுக்கு என் கைக்குள் வந்தது. இன்னொரு சவால், வ.ஐ.ச.ஜெயபாலனின் நடிப்பு. அவருக்கு சினிமா பற்றிய சரியான புரிதல் தராமல் ஷூட்டிங் சென்றதால், நிறையப் பிரச்னைகள் வந்தன. `ஆடுகளம்' ஹீரோ தனுஷ். ஆனால், அந்தக் கதையின் நாயகன் கறுப்பு கிடையாது, பேட்டைக்காரன்தான். அந்தப் பேட்டைக்காரனை ஜெயபாலனால் உள்வாங்கிய அளவுக்கு வெளிப்படுத்த முடியவில்லை என்பது, அப்போது பெரிய நெருக்கடியாக இருந்தது. எங்களுக்குள் பல விவாதங்கள் நடந்தன. `அவரை வைத்து தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த முடியுமா?' எனும் அளவுக்கு யோசித்தோம். ஜெயபாலன் `நான் நடிச்சதைக் காட்டுங்க. அதைப் பார்த்தா எனக்குப் புரியும்' என்றார். எனக்கோ `அவருக்கு நடிப்புப் பயிற்சி தேவை' எனத் தோன்றியது.அப்போது எனக்கு நாராயணன் (`ஆடுகளம்' நரேன்) நினைவுக்கு வந்தார்.

மைல்ஸ் டு கோ - 20

அவர் ஒரு நடிப்புப் பயிற்சியாளர். அவரை ஜெயபாலனுக்குப் பாடம் எடுக்கச் சொன்னேன். ஒரு மாதம் அந்தப் பயிற்சி நடந்தது. அதன் பிறகு, அவருக்கு நான் நடிப்பு பற்றிய இரண்டு புத்தகங்கள் வாங்கித் தந்தேன். ஸ்டேஜ் ஆக்டிங்குக்கும் ஸ்கிரீன் ஆக்டிங்குக்குமான வித்தியாசத்தை அவருக்குப் புரியவைக்க வேண்டியிருந்தது. அவர் ஓரளவுக்கு நடிப்பைப் பற்றித் தெரிந்த பிறகு, அவருக்கு ரஷஸ் போட்டுக் காண்பித்தேன். எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதையும், என்ன வந்திருக்கிறது என்பதையும் அவரிடம் சொன்னேன். அவரும் புரிந்துகொண்டார். அடுத்த ஷெட்யூல் சென்றோம். இந்த முறை அவரிடம் நிறைய மாற்றங்கள். பேட்டைக்காரனை அவரால் சரியாக வெளிப்படுத்த முடிந்தது.

மைல்ஸ் டு கோ - 20

`ஆடுகளம்'  ஐரீன் கேரக்டரில் நடிக்க முதலில் கமிட் ஆனவர் த்ரிஷா. ஆனால், முதல் ஷெட்யூலுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்க எங்கள் தரப்பில் தாமதம் ஆனது. அந்தச் சமயத்தில் அவர் ஒரு இந்திப் படத்தில் ஒப்பந்தம் ஆகியிருந்ததால், விலக நேர்ந்தது. அவருக்குப் பதில் பல நடிகைகளை யோசித்தோம். புதுமுகமாக இருந்தால் நல்லது என நினைத்தோம். அப்போது கதிரேசன் சார், இயக்குநர் மாதேஷ் அவர் படத்துக்காக ஒருவரைப் பார்த்து வைத்திருப்பதாகவும், நன்றாக இருப்பதாகவும் சொன்னார். எனக்கு அவரின் போட்டோ பிடிக்கவில்லை. கதிரேசன் சார் நேரில் பார்க்கலாம் என டெல்லியில் இருந்து வரச் சொல்லிவிட்டார்.

அவர் சென்னை வந்தபோது, நான் வேறு வேலைகளில் இருந்தேன். ஸ்டில் ராபர்ட்டிடம் படங்கள் எடுக்கச் சொல்லிவிட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சில மணி நேரங்கள் கழித்து ராபர்ட் என்னை வரச் சொன்னார். ஒருவித எரிச்சலுடன்தான் சென்றேன். அந்தப் பெண் தன்னை `டாப்சி' என அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரை நேரில் பார்த்ததும் என் மனதில் இருந்த ஐரீனுக்குப் பொருத்தமானவராக இருப்பார் எனத் தோன்றியது. அடுத்த ஷெட்யூலில் இடைவேளைக் காட்சிகள் எடுக்க முடிவு செய்தோம். ` அயூப்  நினைவு கோப்பைக்கு உங்களை வருக வருக என வரவேற்கிறோம்' என்பதில் தொடங்கி இடைவேளை வரைக்குமான ஸ்கிரிப்ட் மட்டும் 137 பக்கங்கள். மொத்தம் 14 நாட்கள் அதற்கு ஷெட்யூல் போட்டோம். அப்போது மணி, அவனது பட வேலைகளுக்காக சென்னை வந்துவிட்டான்.

மைல்ஸ் டு கோ - 20

துரை.செந்தில்குமார்தான் என்னுடன் இருந்தான். 14 நாட்கள் என ஆரம்பித்த ஷெட்யூல், 10-வது நாளை தொட்டபோது 17 ஆகலாம் எனத் தோன்றியது. அடுத்த சில நாட்களில் 20 நாட்கள் ஆகும் என்றானது. தயாரிப்பாளர் டென்ஷன் ஆகிவிட்டார். நாங்கள் எந்த ப்ளானிங்கும் இல்லாமல் படப்பிடிப்பு நடத்துவதாக அவருக்கு வருத்தம். அதைக் கேட்டு செந்தில் டென்ஷன் ஆகிவிட்டான். 137 பக்க ஸ்கிரிப்ட்டையும் அவரிடம் கொடுத்து `இதை நாங்க எடுக்கிற நாட்களைவிட கம்மியா யாராலயும் எடுக்க முடியாது சார். ஓப்பன் சேலஞ்சாவே சொல்றேன்' என்றான். அவரும் `நான் ஒண்ணும் சொல்லலைப்பா. ப்ளான் பண்ணி பண்ணுங்கன்னுதானே சொல்றேன்' என்றார். இப்படியே போய் மொத்தம் 24 நாட்கள் (இரண்டு நாட்கள் பேட்ச் வொர்க்) இடைவேளை சீக்வென்ஸ் மட்டுமே ஷூட் செய்தோம். அவ்வளவு நாட்கள் தேவைப்படும் காட்சி அது. அந்த இடைவேளை சீக்வென்ஸுக்காக மட்டும் மொத்தம் 400 சேவல்கள் வாங்கியிருந்தோம்.

ஒவ்வொரு சேவலுக்கும் தினமும் நான்கு முட்டைகள். பாதாம்பருப்பு, வாரத்துக்கு மூன்று நாட்கள் ஆட்டுக்கறி என அவ்வளவு நன்றாகப் பார்த்துக்கொண்டோம். அத்தனை சேவல்களையும் வீரமணிதான் பார்த்துக்கொண்டார். ஷூட்டிங்கின்போது சேவல்கள் எப்படிப் பராமரிக்கப்பட்டன என்பதைக் காட்ட ஒரு வீடியோ எடுத்திருந்தோம். அதைக் காட்டியதும் அனிமல் வெல்ஃபேர் போர்டு, `படத்தில் எந்த மிருகங்களும் துன்புறுத்தப்படவில்லை' என்ற சான்றிதழும் அளித்தது.

மைல்ஸ் டு கோ - 20

சேவல் சண்டையில் நிறைய கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் செய்யவேண்டியிருந்தது. அதற்கு ஒரு நிறுவனம் ஒப்பந்தம் ஆகியிருந்தார்கள். ஆறு மாதம் வொர்க் பண்ணிவிட்டு, திடீரென ஒருநாள் எந்த அறிவிப்பும் இல்லாமல் அந்த கம்பெனியே மூடப்பட்டது. இன்னொரு புது கம்பெனி வந்தால் இன்னும் ஒன்பது மாதங்கள் ஆகும். நான்கு மாதத்தில் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்திருந்தோம். அப்போதுதான் EFX என்ற நிறுவனத்தில் இருந்து நட்ராஜ், பீட்டர், ஹேமக்குமார், கோதை, சந்திரமோகன் ஆகியோர் அடங்கிய டீம் வந்து, நான்கே மாதங்களில் முடித்துத் தருவதாக கமிட் ஆனார்கள்.

கிராஃபிக்ஸிலேயே சிரமமானது பறவைகளின் சண்டைதான். ஒவ்வோர் இறகும் தனித்தனியே அசைய வேண்டும். 100 சதவிகிதம் சரியாகச் செய்ய வேண்டும் என்றால், மூன்று வருடங்களும் `ஆடுகளம்' படத்தின் மொத்த பட்ஜெட்டும் தேவைப்படும்.

ஆனால், அவர்கள் எங்களின் சிக்கலைப் புரிந்துகொண்டு சொன்ன பட்ஜெட்டிலே சிறப்பான அவுட்புட்டைத் தந்தார்கள். `ஆடுகள'த்தில் அந்த டீமின் பங்களிப்பு மிக முக்கியமானது. படம் சென்சாருக்குச் சென்றது. அன்று தனுஷ், கதிரேசன் சார், ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவுடன் நானும் சென்றிருந்தேன். படம் பார்த்துவிட்டு, பல இடங்களில் கட் பண்ணச் சொல்லியிருந்தார்கள். எனக்கு எல்லா கட்ஸும் ஓ.கே எனத் தோன்றியது. சென்சாருக்குச் செல்லும் முன்னர் நானே பல இடங்களில் ம்யூட் செய்திருந்தேன். எனக்கு அவர்கள் சொன்ன கட்ஸ் பெரிய விஷயமாகத் தோன்றவில்லை.

படத்துக்கு `A' சான்றிதழ் கிடைத்துவிட்டால், வரிவிலக்கு கிடைக்காமல் போய்விடுமே என்ற கவலை. ஆனால், மொத்த சென்சார் குழுவும் `ஆடுகள'த்துக்கு `U'  சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்திருந்தது. இந்த சர்ட்டிஃபிகேஷன் விஷயத்தை எல்லாம் தாண்டி சென்சார் போர்டு உறுப்பினர்களுக்கு `ஆடுகளம்' படம் பிடித்திருந்தது.

மைல்ஸ் டு கோ - 20

சென்சார் முடிந்ததும் படத்தின் ரிலீஸ் தேதியைக் குறித்தோம். முதலில் டிசம்பர் 17 யோசித்து, பிறகு ஒரு லாங் வீக் எண்டில் வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து, 2011-ம் ஆண்டு பொங்கல் அன்று ரிலீஸ் செய்ய முடிவுசெய்தோம். அன்று விஜய்யின் `காவலன்', கார்த்தியின் `சிறுத்தை' போன்ற படங்களும் ரிலீஸ் ஆக இருந்தன.

2008-ம் ஆண்டில் `பொல்லாதவன்' ரிலீஸ் ரேஸில் கடைசியாக இருந்தது. ஆனால், இந்த முறை `ஆடுகளம்' படத்தின் ஓப்பனிங் பெரியதாக இருந்தது. (சில காரணங்களால் `காவலன்' ஓரிரு தினங்கள் கழித்தே ரிலீஸ் ஆனது.) நானும் தனுஷும் `ஆடுகளம்' படத்தின் முதல் நாள் முதல் காட்சியை மதுரையில் பார்க்கச் சென்றிருந்தோம். பல கிராமங்களில் இரண்டாம் பாதி முழுக்க இருட்டாகவே தெரிவதாகவும் சொன்னார்கள். தமிழகம் முழுவதும் ஒரே கருத்தாக `முதல் பாதி சூப்பர். இரண்டாம் பாதி சுமார்' என்றார்கள். தமிழகத்தைத் தாண்டி மற்ற இடங்களில் இரண்டாம் பாதிதான் கொண்டாடப்பட்டது. `ஆடுகள'த்தின் இரண்டாம் பாதியில் கறுப்பு கதாபாத்திரம் சந்திக்கும் நெருக்கடிகள்தான் முக்கியமான கருவாக வைத்திருந்தேன். அந்த இடத்துக்கு வந்து சேர்வதற்கான பிளாட்ஃபார்மாகத்தான் முதல் பாதியை எழுதி இருந்தேன். ஆனால், அந்த முதல் பாதி தனி அத்தியாயமாக மாறி, அதை மக்கள் அதிகம் ரசித்துவிட்டார்கள். அதனால், `ஆடுகளம்' ஃபர்ஸ்ட் ஹாஃப் சூப்பர், செகண்ட் ஹாஃப் சுமார் என்ற கருத்து உருவாகிவிட்டது.

மைல்ஸ் டு கோ - 20

பாலு மகேந்திரா சார் சென்னையில் படம் பார்த்தார். ``ரெண்டு விஷயம்டா. உனக்கு படத்தை எங்கே முடிக்கணும்னே தெரியலை. கதை முடிஞ்ச அப்புறமும் போயிட்டே இருக்கு. அடுத்து, நீ பெரிய வன்முறையாளனா இருக்க. எனக்கு ரொம்பப் பயமா இருந்தது. இவ்ளோ பயத்தை மக்களால தாங்க முடியாது. ஆனா, சரியான தேர்வுக்குழு உட்கார்ந்தா, உன் படத்துக்கு ஏழு தேசிய விருது கிடைக்கும்'' என்றார். `ஆடுகளம்' முதல் வாரத்திலே, மிகப் பெரிய ஓப்பனிங்கால் அதற்கு ஆன செலவில் 70 சதவிகிதத்தை வசூல்செய்தது.

ஆனால், மூன்றாம் வாரத்தில் இருந்து வசூல் குறைந்தது. `சிறுத்தை' இன்னும் பிக்கப் ஆகி, பெரிய அளவில் ஓடியது. `காவலன்', எப்போதும்போல் விஜய் படத்துக்கான வசூலைச் செய்தது. `ஆடுகள'த்தின் இரண்டு பாதிகளுக்குமான பேலன்ஸ் சரியாக இல்லை என்பது முக்கியமான காரணம் என நினைக்கிறேன். ஒரு கதையில் நாம் சொல்ல விரும்பும் விஷயத்துக்கு உதவும்படிதான் அதற்கான பிளாட்ஃபார்மையும் கேரக்டர்களையும் அமைக்க வேண்டும். அப்படி இல்லாமல், சில காட்சிகள் சுவாரஸ்யமாகவே இருந்தாலும் மொத்தமாக அது படத்துக்கு உதவாது என்ற பாடத்தை `ஆடுகளம்' மூலம் நான் கற்றுக்கொண்டேன்.

கமர்ஷியல் வெற்றியை எல்லாம் தாண்டி, `ஆடுகளம்' படம் அடுத்த ஐந்து வருடங்கள் தொடர்ந்து விவாதிக்கப்படப்போகும் படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.நான் நினைத்ததுபோலவே `ஆடுகளம்' பற்றி பல விவாதங்கள் நடந்தன. அந்த விவாதங்களின் உச்சமாக ஒரு விஷயம் நடந்தது. அது...

- பயணிப்பேன்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan